Sunday, October 28, 2012

அபிராமி அந்தாதி -நெஞ்சத்து அழுக்கை எல்லாம் துடைத்தனை


அபிராமி அந்தாதி -நெஞ்சத்து அழுக்கை எல்லாம் துடைத்தனை


அபிராமி, இந்த பிறவி வஞ்சம்  நிறைந்ததாய் இருக்கிறது. முதலில் நான் வஞ்சகன். நினைப்பது ஒன்று செய்வது ஒன்றாய் இருக்கிறது என் நிலை. என் சுற்றி உள்ளவர்களும் அப்படியே. 

வஞ்சம் நிறைந்த இந்த பிறவி முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நீ அந்த பிறவி தொடரை உடைத்தாய். 

கல்லைப் போன்ற என் கடின நெஞ்சை நீ நெகிழ வைத்தாய். உருக வைத்தாய். உன் அன்பை கண்டு என் உள்ளம் உருகுகிறது.

உன் தாமரை போன்ற பாதங்களை என் தலையின் மேல் சூடும் பாக்கியத்தை நீ தந்தாய். 

என் மனத்தில் எத்தனையோ அழுக்குகள் குவிந்து கிடக்கிறது. அதை கொஞ்சம் தண்ணி விட்டு கழுவ முடியாது என்பதால் உன் அருளாகிய வெள்ளத்தால் அத்தனை அழுக்கையும் அடித்துக்கொண்டு போக வைத்தாய்.

உன் அருளை என்னவென்று சொல்லுவது.

பாடல்

உடைத்தனை வஞ்சப் பிறவியை, உள்ளம் உருகும் அன்பு 
படைத்தனை, பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே 
அடைத்தனை, நெஞ்சத்து அழுக்கையெல்லாம் நின் அருட்புனலால் 
துடைத்தனை,- சுந்தரி - நின் அருள் ஏதென்று சொல்லுவதே.

பொருள் 

உடைத்தனை வஞ்சப் பிறவியை, = வஞ்சமான இந்த பிறவியையை உடைத்தாய்

உள்ளம் உருகும் அன்பு  படைத்தனை, = என் உள்ளம் உருகும் அன்பு கொண்டாய், என் உள்ளம் உருகும் படி அன்பு தந்தாய்

பத்ம பத = தாமரை பாதம்

யுகம் = இந்த யுகம் முழுவதும்

சூடும் பணி = தலையில் சூடும் பணியினை

எனக்கே  அடைத்தனை = நான் அடையும் படி தந்தாய் 

நெஞ்சத்து அழுக்கையெல்லாம் = நெஞ்சில் உள்ள அழுக்கையெல்லாம்

நின் அருட்புனலால் = உன் அருளாகிய வெள்ளத்தால்

துடைத்தனை, = துடைத்து சுத்தமாக்கினாய்

சுந்தரி = சுந்தரி

நின் அருள் = உன்னுடைய அருளை

ஏதென்று சொல்லுவதே. = என்னவென்று சொல்லுவேன்

No comments:

Post a Comment