திருக்குறள் - நீண்ட நாள் வாழ
நீண்ட நாள் வாழ யாருக்குத்தான் ஆசை இருக்காது ?
ஆனால் எப்படி நீண்ட நாள் வாழ்வது ?
வள்ளுவர் அதற்க்கு வழி காட்டுகிறார்..
பொறிவாயி லைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்
அதாவது,
பொறிவாயில் ஐந்து அவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறி நின்றார் நீடு வாழ்வார்.
பொறி வாயில் ஐந்து அவித்தான் = மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும்
பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது;
பொய் தீர் ஒழுக்க நெறி நின்றார் = மெய்யான ஒழுக்க நெறியின்கண் வழுவாது நின்றார்;
நீடு வாழ்வார் = பிறப்பின்றி எக்காலத்தும் ஒருதன்மையராய் வாழ்வார்.
என்பது பரிமேலழகர் உரை.
எனக்கென்னமோ திருவள்ளுவர் ஒரு உரைக்குள் அடங்குபவர் அல்ல என்று தோன்றுகிறது.
இன்னும் கொஞ்சம் ஆழமாக சிந்திப்போம்.
நாக்கை எடுத்துக் கொள்வோம். உடம்புக்கு சர்க்கரை வியாதி. இனிப்பு சாப்பிடக் கூடாது என்று மருத்துவர் சொல்லி விட்டார். எனவே இனிப்பு சாப்பிடுவது இல்லை. இருந்தாலும் இனிப்பு வேண்டும் என்கிறது நாக்கு. அறிவு சொல்கிறது சாப்பிடாதே என்று. மனம் சொல்கிறது, "ஒரே ஒரு லட்டு தானே,சாப்பிடு பரவா இல்லை, மாத்திரை போட்டுக் கொள்ளலாம்...இதை எல்லாம் சாப்பிடாமல் இருந்து என்ன பயன் " என்று.
யாரும் பார்க்க வில்லை. ஒரு லட்டு சாப்பிட்டால் ஒண்ணும் குடி முழுகி போய் விடாது. இன்னைக்கு மட்டும் சாப்பிடலாம் என்று சாப்பிட்டு விடுகிறோம்.
ஒழுக்கமாகத்தான் இருக்கிறோம். இருந்தாலும், நடுவில் ஒரு கள்ளத்தனம்.
உன்னது அல்ல. தொடாதே என்று அறிவு சொல்கிறது. ஒரு முறை தானே என்று மனம் உந்துகிறது. நமக்கு நாமே உண்மையாக இல்லை. பொய் கொஞ்சம் இருக்கிறது. பொய் தீர வேண்டும்.
அதைத் தான் வள்ளுவர் " பொய் தீர் ஒழுக்க நெறி" என்கிறார்.
அது என்ன பொறி வாயில் ஐந்து அவித்தான் ? கடலை பொரியா? இல்லை.
பொறி என்றால் கூண்டு. எலிப் பொறி என்கிறோம் அல்லவா. இந்த ஐந்து புலன்களும் நம்மை பொறியில் சிக்க வைக்கப் பார்க்கின்றன. எப்படி வடையின் வாசனையால் பொறியில் எலி அகப்பட்டுக் கொள்கிறதோ அது போல், இந்த ஐந்து புலன்களும் நம்மை சிக்கலில் மாட்டி விடுகின்றன. வாழ் நாளை குறைக்கின்றன.
வீட்டைப் பார்த்தால் வாங்க வேண்டும், நகையை பார்த்தால் வாங்க வேண்டும், புது கார், புது செல் போன் என்று அலைகிறது.
கடைத் தெருவில் உள்ள ஒவ்வொரு கடையும் ஒரு எலிப் பொறி மாதிரி..மனிதப் பொறிகள். மந்தை மந்தையாகப் போய் மாட்டிக் கொள்கிறார்கள்.
பொறி வாயில் அகப்பட்டுக் கொள்ளாதீர்கள்.
சரி அதுக்காக ஆசையே படமால் இருக்க முடியுமா ? ஒண்ணுமே வேண்டாம் என்றால் எப்படி உயிர் வாழ்வது ?
ஐந்து அவித்தான் என்றார். அவித்தல் என்றால் என்ன ?
நீராவியால் வைத்து வேக வைப்பதற்கு அவித்தல் என்று பெயர். அவித்தால் பொருள் மென்மையாக மாறும். அவித்த பொருள் உடலுக்கு நன்மை செய்யும். அவிக்காத அரிசி, காய் கிழங்கு, மாமிசம் போன்றவை உடலுக்கு தீங்கு செய்யும். அவித்த பின் அதுவே உடலுக்கு உரம் செய்யும்.
மென்மையான ஆசைகள், தேவையான ஆசைகள், அளவான ஆசைகள் நமக்கு நன்மை செய்யும்.
ஐம்புலன்கள் வழியே செல்லும் ஆசைகளை அப்படியே பச்சையாக அனுப்பாமல் அவற்றை பிடித்து கொஞ்சம் அவித்து பக்குவப் படுத்தி அனுப்ப வேண்டும்.
நிற்றல் என்றால் நிலைத்து நிற்றல் என்று பொருள் . இன்னைக்கு ஒரு நாள் மட்டும் என்று தண்ணி அடிப்பது, புகை பிடிப்பது, இனிப்பு சாப்பிடுவது போன்றவை கூடாது. பொய் தீர் ஒழுக்க நெறியில் நிலைத்து நிற்க வேண்டும்.
அது நீண்ட நாள் வாழும் வழி.
வள்ளுவர் வழி காட்டி விட்டார். போவது உங்கள் விருப்பம்.