Friday, March 29, 2013

திருக்குறள் - தீயும் தீயவையும்

திருக்குறள் - தீயும் தீயவையும் 


தீயவை தீய பயத்தலால் தீயவை 
தீயினும் அஞ்சப்  படும் 






தீய செயல்கள் தீமை தருவதால், அவை தீயை விட அஞ்சப் படும்.

இது ஒரு பெரிய விஷயமா ? யாருக்குத்தான் தெரியாது என்று நினைக்கலாம்.

சொல்லுவது வள்ளுவர்.

அது என்ன தீயினும் ? தீயை விட அஞ்சப்படும்.

தீ கெடுதல் மட்டும் அல்ல, நல்லதும் செய்யும். உணவு சமைக்க பயன்படும். குளிரில் இருந்து காக்கும். பண்ட பாத்திரங்களில் இருந்து கிருமிகளை நீக்க பயன்படும்....அப்படி இருக்கும் போது ஏன் வள்ளுவர் தீயை தீய செயல்களுக்கு உதாரணம் காட்டுகிறார். தீயில் கட்டாயம் நன்மை இருக்கிறது. தீய செயலில் அப்படி ஏதேனும் நன்மை இருக்கிறதா ? இல்லவே இல்லை. பின் எப்படி ?

பார்ப்போம்.

தீ ஒரு சின்ன பொறி ஒரு காட்டையே அழித்து விடும். கட்டுப் படுத்தாவிட்டால், ஒரு சிறு பொறி நாட்டையே அழித்து விடும். தீய செயல்களும் அப்படித்தான ஒரு சின்ன தீய பழக்கம், பெரிய அழிவைத் தரும்

தீயை கட்டுப் படுத்த முடியும். கொஞ்சம் கஷ்டம்.. தீய செயல்களை பழக்க வழக்கங்களை கட்டுப் படுத்துவது கடினம். புகை பிடிப்பதை நிறுத்த முடிகிறதா ?

தீ எங்கு எரிகிறதோ அங்குதான் அதன் தாக்கம் இருக்கும். ஓரிடத்தில் தீ எரிந்தால் இன்னொரு இடத்தில் தாக்காது. தீய பழக்கங்கள், தீய செயல்கள் அப்படி அல்ல. அவை நம் கூடவே வரும். எங்கு போனாலும். அதற்கு இட எல்லைகள் கிடையாது. எத்தனையோ கெட்டவர்கள் ஒரு தீய செயலை ஒரு நாட்டில் செய்து விட்டு இன்னொரு நாட்டிற்கு ஓடி விடுகிறார்கள்...அதன் விளைவுகளில் இருந்து தப்பித்து விடலாம் என்று. முடியாது. தீய செயல்களின் கரங்கள்  தீயின் கரங்களை விட நீண்டது. எவ்வளவு தூரம் சென்றாலும் பிடித்துக் கொள்ளும்.

தீ எரியும் கால கட்டத்தில் தான் அதன் தாக்கம் இருக்கும். தீ எரிந்து சில காலம் சென்ற பின்னால் அதன் தாக்கம் இருக்காது. தீயின் அளவை பொறுத்து அதன் தாக்கத்தின் கால அளவு இருக்கும். ஆனால் தீய செயல்கள், தீய பழக்கங்கள் கால காலத்திருக்கும் வரும். ஒரு ஜன்மத்தில் செய்தது அடுத்த ஜனமத்திற்கும் வரும்.

இட எல்லை இல்லை.

கால எல்லை இல்லை.

எந்த வித நன்மையையும் இல்லை.

எனவே தீயவை தீயினும் அஞ்சப் படும்.







1 comment:

  1. அப்பாடி! இதற்கு இவ்வளவு பொருளா?!

    ReplyDelete