Friday, March 1, 2013

இராமானுசர் நூற்றந்தாதி - தமிழ்த் தலைவன்


இராமானுசர் நூற்றந்தாதி - தமிழ்த் தலைவன் 


இதற்கு முந்தைய இரண்டு பாசுரங்களில் பொய்கை ஆழ்வாரும், பூதத்தாழ்வாரும் மறையோடு தமிழ் சேர்த்து திருவிளக்கை ஏற்றினார்கள் என்று பார்த்தோம்.

ஞான விளக்கை ஏற்றிய பின் அஞ்ஞான இருள் விலகி ஓட வேண்டியதுதானே.

அந்த ஞான விளக்கில் திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன் என்று பாடினார் பேயாழ்வார்.




அப்படி கண்ட பேயாழ்வாரை "தமிழ்த் தலைவன்" என்று பட்டம் தந்து கொண்டாடுகிறார் திருவரங்கத்து அமுதனார்.

அப்படிப்பட்ட பேயாழ்வாரின் திருவடிகளைப் போற்றும் இராமானுசரிடம் அன்பு பூண்டவர்களின்  திருவடிகளை தலையில் சூடுபவர்கள் என்றும் சிறப்பு உடையவர்கள்.

பாடல்


மன்னிய பேரிருள் மாண்டபின் கோவலுள் மாமலராள்
தன்னொடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த்தலைவன்
பொன்னடி போற்றும் இராமா னுசற்கன்பு பூண்டவர்தாள்
சென்னியிற் சூடும் திருவுடை யாரென்றும் சீரியரே.

பொருள்






மன்னிய பேரிருள் = மன்னியது என்றால் எப்போது இருப்பது. காலம் காலமாய் இருந்த பேரிருள்.


சென்னியது, உன் பொன் திருவடித் தாமரை. சிந்தையுள்ளே 
மன்னியது, உன் திரு மந்திரம்,- சிந்துர வண்ணப் பெண்ணே.- 
முன்னியநின் அடியாருடன் கூடி, முறை முறையே 
பன்னியது, என்றும் உந்தன் பரமாகம பத்ததியே.

என்பார் அபிராமி பட்டர். அவர் மனத்தில் அபிராமியின் பெயர் (அவருக்கு திருமந்திரம் அது தான்) எப்போதும் இருக்கிறதாம்.


ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் 
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

என்பது வள்ளுவர் வாக்கு 




மாண்டபின் = அந்த இருள் மாண்டது. மறையவில்லை இறந்தே போய் விட்டது

கோவலுள் = திருக்கோவலூரில்

மாமலராள் = திருமகள்

தன்னொடு = அவளோடு

மாயனைக் = திருமாலை

கண்டமை காட்டும் தமிழ்த்தலைவன் = கண்டதை காட்டிய தமிழ் தலைவன்.


திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்  திகழு
மருக்கனணிநிறமுங் கண்டேன்  செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கங் கைக்கண்டேன் 
என்னாழி வண்ணன்பா லின்று

என்பது பேயாழ்வார் பாசுரம். எங்கே ஒரு தரம் சொன்னால் சரியாகப் பார்க்கவில்லையோ , அல்லது வேறு எதையாவது பார்த்து விட்டு திருமாலை பார்த்ததாகச் சொல்கிறாரோ என்று யாரவது சந்தேகப் படலாம் அல்லவா...எனவே ஐந்து முறை கண்டேன் கண்டேன் என்று சாதிக்கிறார். 



பொன்னடி போற்றும் = பெயாழ்வாரின் பொன்னடிகளைப் போற்றும்

இராமா னுசற்கன்பு பூண்டவர்தாள் = இராமானுசருக்கு அன்பு பூண்டவர்களின் திருவடிகளை

சென்னியிற் = தலையில்

சூடும் = சூடிக்கொள்ளும்

திருவுடை யாரென்றும் சீரியரே = திருவுடையவர்கள் எப்போதும் சிறந்தவரே



2 comments:

  1. Quotes from Abhirami Andhadhi and Thirukural makes it more interesting to read.Thanks.

    ReplyDelete
  2. ஒரு பெரிய வரிசையே இந்தப் பாடலில் இருக்கிறது:

    திருமால் - திருமாலைக் கண்டவர் பெரியாழ்வார் - பெயாழ்வாரின் அடி போற்றியவர் இராமானுசர் - இராமனுசரின் அன்பர்கள் - அன்பரின் திருவடிகளைச் சூடுபவர்!

    "தொண்டரடிப்பொடி" என்பது போல!

    ReplyDelete