Thursday, February 28, 2013

இராமாயணம் - இராவணன் மறந்ததும் மறக்காததும்


இராமாயணம் - இராவணன் மறந்ததும் மறக்காததும் 


இராவணனின் காமம் தொடர்கிறது.

சொல்லின் செல்வி சூர்பனகை இட்ட காமத்தீ பற்றி எரிகிறது இராவணனின் நெஞ்சில்.

பார்க்காமலே காதல்.

சூர்பனகை சொல்லிவிட்டு போய்  விட்டாள். இராவணன் எல்லாவற்றையும் மறந்து விட்டான். சீதை மட்டுமே அவன் மனத்தில்.

பாடல்

கரனையும் மறந்தான்; தங்கை மூக்கினைக் கடிந்து நின்றான்
உரனையும் மறந்தான்; உற்ற பழியையும் மறந்தான்; வெற்றி
அரனையும் கொண்ட காமன் அம்பினால், முன்னைப் பெற்ற
வரனையும் மறந்தான்; கேட்ட மங்கையை மறந்திலாதான்

பொருள்






கரனையும் மறந்தான் = கரன் என்ற பலசாலியான அரக்கனை இராம இலக்குவனர்கள் கொன்று விட்டார்கள். இராவணன் அதை மறந்து விட்டான்.

தங்கை மூக்கினைக் = சூர்ப்பனகையின் மூக்கை

கடிந்து நின்றான் = தண்டித்தவன், அறுத்தவன்

உரனையும் மறந்தான் = உரன் என்றால் வலிமை. பயிருக்கு உரம் போடுகிறோம் அல்லவா. உரக்க பேசுகிறான் என்று சொல்லுகிறோம் அல்லவா ? அப்படி சூர்பனகையின் மூக்கை அறிந்தவனின் பலத்தை மறந்தான்.

உற்ற பழியையும் மறந்தான் = மனிதர்களால் அவனுக்கு ஏற்பட்ட பழியை மறந்தான்

வெற்றி அரனையும் = அரன்  என்றால் சிவன். சிவனையும்

கொண்ட காமன் அம்பினால் = காமன் எய்த அம்பினால்

முன்னைப் பெற்ற வரனையும் மறந்தான் = முன்பு சிவனிடம் பெற்ற  வரங்களையும் மறந்தான்

கேட்ட மங்கையை மறந்திலாதான் = கேட்ட மங்கையை மறந்திலாதான்

பார்த்த மங்கை இல்லை. கேட்ட மங்கை. மங்கை என்ற தமிழ் சொல்லுக்கு 12 வயது முதல் 13 வயது வரை உள்ள பெண் என்று பொருள். கம்பர் அப்படி நினைத்து எழுதி இருப்பாரா என்று தெரியவில்லை. இளம் பெண் என்ற அர்த்தத்தில் எழுதி இருக்கலாம்.

காமம் வரும்போது எது எல்லாம் மறந்து போகிறது ?

ஆபத்து, குல மானம், எதிரியின் பலம், தான் பெற்ற புகழ், சம்பாதித்த பெருமை எல்லாம் மறந்து போகிறது.


1 comment:

  1. Beautiful poem. என்ன ஒரு கவிதை! ஒவ்வொரு கவிதையும் ஒரு விருந்து. thanks for your விருந்தோம்பல்!!!

    ReplyDelete