Sunday, February 17, 2013

பிரபந்தம் - கூனியின் மேல் இராமன் ஏன் மண் உருண்டையை அடித்தான்


பிரபந்தம் - கூனியின் மேல் இராமன் ஏன் மண் உருண்டையை அடித்தான் 



சிறு வயதில் இராமன் கூனியின் மேல் மண் உருண்டையை வில்லில் வைத்து அடித்தான் என்று நாம் கேள்விப் பட்டு இருக்கிறோம்.

கருணையே வடிவான இராமன் ஒரு உடல் ஊனமுற்ற வயதான பெண்ணின் மேல் அப்படி அம்பை விடுவானா ?

கொடுமையே வடிவான தாடகை என்ற அரக்கியை கூட பெண் என்பதால் கொல்லத் தயங்கினான் இராமன்.

கூனியை அப்படி துன்பப் படுத்துவானா ? யாருமே இப்படி யோசிக்க வில்லை...

திருமங்கை ஆழ்வார் சிந்தித்து சொல்கிறார்....இராமன் கூனியின் மேல் மண் உருண்டையை அடித்தது அவள் கூன் நிமர வேண்டும் என்று. அவள் கூன் நிமிர்ந்து  எல்லோரையும் போல்அவள் மாற வேண்டும் என்று அப்படி செய்தான்.



பாடல்


குன்றொன்று மத்தா அரவம் அளவிக் குரைமா கடலைக் கடைந்திட்டு, ஒருகால்

நின்றுண்டை கொண்டோட்டி வங்கூன் நிமிர நினைத்த பெருமான் அதுவன் றியும்முன்,

நன்றுண்ட தொல்சீர் மகரக் கடலேழ் மலையே ழுலகே ழொழியா மைநம்பி,

அன்றுண் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால் அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந் தவனே,


கொஞ்சம் சீர் பிரிப்போம்




குன்று ஒன்று மத்தாக, அரவம் அளவி குரை மா கடலை கடைந்திட்டு ஒருகால் 

நின்று உண்டை கொண்டோட்டி வன் கூன் நிமிர நினைத்த பெருமான் அதுவன்றியும் முன் 

நன்று உண்ட தொல் சீர் மகரக் கடல் ஏழ் மலை ஏழ் உலகு ஏழ் ஒழியாமை நம்பி 
அன்று உண்டவன் காண்மின் இன்று ஆய்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்பு உண்டு இருந்தவனே 


பொருள்

குன்று ஒன்று மத்தாக = மேரு மலையை மத்தாக

அரவம் = வாசுகி என்ற பாம்பை கொண்டு

அளவி = கடைந்து

குரை = அலை பாயும்

 மா கடலை = பெரிய கடலை

கடைந்திட்டு = கடைந்து (அமுதத்தை) இட்டு


ஒருகால் = பின்னொரு நாள்


நின்று = நின்று

உண்டை கொண்டோட்டி = (மண்) உருண்டையை வில்லில் கொண்டு ஓட்டி

வன் கூன் நிமிர நினைத்த பெருமான் = வளைந்த கூனை நிமிர்த்த நினைத்த பெருமான்


அதுவன்றியும் = அது மட்டுமல்லாமல்

முன் = முன்னாள் 

நன்று உண்ட = நன்றாக உண்டு

தொல் = பழமையான

சீர் = சிறப்பான


மகரக் கடல் ஏழ் = ஏழு கடலையும்

மலை ஏழ் = ஏழு மலையும்

உலகு ஏழ் = ஏழு உலகையும்

ஒழியாமை = அழியாமல் காப்பாற்றி

நம்பி = நம்பி

அன்று உண்டவன் காண்மின் = அன்று அப்படி உண்டவனை காணுங்கள்

இன்று = இன்று அவனே

ஆய்சியரால் = ஆயர் பாடி பெண்களால்

அளை வெண்ணெய் உண்டு = தயிரை கடைந்து (அளைந்து) எடுத்த வெண்ணையை உண்டு

ஆப்பு உண்டு இருந்தவனே = ஆப்பால் கட்டப்பட்டு இருந்தவனே


என்ன உட்பொருள்

இராமன் நல்லது நினைத்து செய்தான். கூனி அதை தவறாகப் புரிந்து கொண்டாள்.

இறைவனின் செயல்களை நாம் அறிந்து கொள்ள முடிவதில்லை.

நன்றே செய்வாய், பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே என்பார் மணிவாசகர்.

இறைவன் நம் மேல் அன்பு கொண்டிருக்கிறான் என்ற நம்பிக்கை கூனிக்கு இல்லை.


பண்டைநாள் இராகவன் பாணி வில்லுமிழ்
உண்டை உண்டதனைத் தன் உள்ளத்து உள்ளுவாள்.

என்றான் கம்பன். கூனி, இராமன் எறிந்த மண் உருண்டையையை மறக்க வில்லை. இராகவன் வில் உமிழ்ந்த அந்த அம்புகளை உண்டதாக நினைத்தாள் கூனி. எச்சிலை உண்டதாக நினைப்பு அவளுக்கு.

அந்த காலத்தில் ஏதாவது இரண சிகிச்சை (operation) செய்ய வேண்டும் என்றால் மயக்க மருந்து எல்லாம் கிடையாது. நேரே கத்தியால் அறுத்து, அது புரையோடிப் (sceptic ) போகாமல் இருக்க பழுக்க காய்ச்சிய இரும்பால் சூடு போடுவார்கள். 

அப்படி அவ்வளவு கஷ்டம்  தந்தாலும் மருத்துவனை எந்த நோயாளியும் வெறுப்பது இல்லை. 

வாளால் அறுத்துச் சுடினும் மாளாத காதல் நோயாளன் போல் என்றார் திரு மங்கை ஆழ்வார். 

இறைவன் நமக்கு எவ்வளவு துன்பம் தந்தாலும் அது கருணையின் வெளிப்பாடு என்றே கொள்ள வேண்டும். ஏதோ ஒரு காரணத்திற்காக இந்த துன்பங்கள் நமக்கு தரப் பட்டிருக்கிறது என்று எண்ண வேண்டும்.. 

உலகமே நினைத்தது இராமன் விளையாட்டாக மண் உருண்டை அடித்தான் என்று. 

திரு மங்கை மட்டும் தான் அறிந்தார் அவன் திரு விளையாடலை.

தோல்விகளும் துன்பங்களும் அவன் தந்த பிரசாதம் என்று நினைக்கும் பக்குவம் வர வேண்டும். 

பிரபந்தம் படியுங்கள். அந்த மனோ நிலை உங்களுக்கும் வர ஆழ்வார்களின் ஆசி கிடைக்கும். 

4 comments:

  1. வாளால் அறுத்துச் சுடினும் மாளாத காதல் நோயாளன் போ-----
    இது கோழியர் கோன்குலசேகர ஆழ்வாரின் ஆழ்வாரின் பெரிய திருமொழியில் செய்யப்பட அருளி ச்செயல் ;திருமங்கை ஆழ்வார் அல்ல என்பது அடியேனின் தாழ்மையான கருத்து

    ReplyDelete
    Replies
    1. தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி. திருத்திக் கொள்கிறேன்.

      பிழை தவிர வேறு ஏதேனும் சொல்லும்படி இருக்கிறதா இந்த ப்ளாக்-ல் ?

      Delete
  2. இராமன் இறைவன் என்பது கூனிக்கு எப்படித் தெரிய முடியும்? சும்மா இந்தச் சிறுவன் வில்லால் அடிக்கிறான் என்ற கூனி எண்ணியிருக்க வேண்டும் அல்லவா?

    அதேபோல், தெருவில் போகும்போது யாராவது அறைந்தால், இறைவன் அடிப்பதாகவா கொள்ள முடியும்?!?!?

    ReplyDelete
  3. எல்லாமே இறைவன் செயல் என்று கொள்வதில் இன்னொரு பிரச்சனை இருக்கிறது.

    கூனியை வில்லால் அடித்து, கோபம் வரவழைத்தது யார்? இராமன்தானே? அப்புறம், கூனி நல்லவள் / கெட்டவள் என்று சொல்வதில் என்ன பொருள் இருக்கிறது?

    இராவணனை சீதையைக் கடத்த வைத்ததும் இறைவன்தானா?! அப்படியானால், இராவணனைக் கெட்டவன் என்று எப்படிச் சொல்லலாம்?!

    கொலையாளியைக் கொலை செய்ய வைத்ததும் இறைவன்தானா? அப்பொழுது, அஜ்மல் கசாப்புக்கும், அப்சல் குருவுக்கும் எப்படித் தூக்கு தண்டனை தர முடியும்?

    ReplyDelete