Sunday, February 24, 2013

இராமாயணம் - பள்ளி எழுச்சி


இராமாயணம் - பள்ளி எழுச்சி 


இறைவனை துயில் எழுப்புவது நம் பக்தி இலக்கியங்களில் ஒரு பகுதியாக இருக்கிறது

திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை, சுப்ரபாதம் என்று இறைவனை துயில் எழுப்பும் பாடல்கள் உள்ளன.

அது இறைவனை துயில் எழுப்புவதா அல்லது நமக்குள் உறங்கி கிடக்கும் ஏதோ ஒன்றை துயில் எழுப்புவதா ?

சீதையை கன்னி மாடத்தில் பார்த்தபின் இரவெல்லாம் அவள் நினைவாகவே இராமன் இருக்கிறான்...அந்த நினைவிலேயே தூங்கிப் போகிறான்.

மறு நாள் காலை...

இராமன் உறங்குகிறான்.

கதிரவன் எழுகிறான். தன்னுடைய கிரணங்கள் என்ற கையால் அவன் பாதம் வருடி அவனை எழுப்புகிறான். பெரியவர்களை எழுப்பும் போது அவர்கள் பாதம் தொட்டு எழுப்ப வேண்டும் என்பது மரபு.


பாடல்


கொல் ஆழி நீத்து, அங்கு ஓர் குனி வயிரச் சிலைத் தடக் கைக் கொண்ட கொண்டல்,
எல் ஆழித் தேர் இரவி இளங் கரத்தால் அடி வருடி அனந்தல் தீர்ப்ப,
அல் ஆழிக் கரை கண்டான் - ஆயிர வாய் மணி விளக்கம் அழலும் சேக்கைத்
தொல் ஆழித் துயிலாதே, துயர் ஆழி-நெடுங் கடலுள் துயில்கின்றானே.



பொருள்






கொல் ஆழி நீத்து = ஆழி என்றால் சக்ராயுதம். அந்த சக்ராயுதத்தை விட்டு நீங்கி


அங்கு = அந்த பாற்கடலை விட்டு நீங்கி

ஓர் = ஒரு

குனி = குனிந்த, வளைந்த

வயிரச் சிலைத் = வைரம் போன்ற உறுதியான வில்லை

தடக் கைக் கொண்ட  = பெரிய கைகளில் கொண்ட

கொண்டல் = மேகம். மேகம் போன்ற நிறம் உடையவன். மேகம் நீரை தன்னிடம் கொண்டிருப்பதால் அது கொண்டல் என்று பெயர் பெற்றது.

எல்  ஆழித் தேர் = ஒளி  பொருந்திய ஒற்றை சக்கரத்தை உடைய தேரில் செல்லும்

இரவி = கதிரவன்

இளங் கரத்தால் அடி வருடி = இளமையான கரத்தால் இராமனின் திருவடிகளை வருடி

அனந்தல் தீர்ப்ப = அனந்தல் என்றால் தூக்கம் என்று ஒரு பொருள். மயக்கம் என்று ஒரு பொருளும் உண்டு. சீதையை கண்ட மயக்கத்தில் இருந்த இராமனின் மயக்கம் தீர்க்க என்றும் பொருள் கொள்ளலாம்.

அல் ஆழிக் கரை கண்டான் = அல் என்றால் இரவு. ஆழி என்றால் கடல். (ஆழி சூழ் உலகமெல்லாம் பரதனே ஆள ) கடல் போல் விரிந்து கிடந்த இரவின் கரையை கண்டான். கண்டது யார் ? சூரியானா ? இராமனா ?

ஆயிர வாய் = ஆயிரம் வாயையை உடைய (ஆதி சேஷன் )

மணி விளக்கம் = மணிகளால் செய்யப்பட்ட ஒளி விடும் விளக்குகள் 

அழலும் = அழல் என்றால் பிழம்பு, தீ. அந்த விளக்குகளில் இருந்து தோன்றும் பிழம்பு

சேக்கைத் = சேர்ந்து இருப்பதை

தொல் ஆழித் துயிலாதே = பழைய கடலில் துயிலாமல். அதாவது சக்ராதாயுதம், ஆதி சேஷன் , ஒளி  விடும் விளக்குகள் சேர்ந்த பாற்கடலை துறந்து

துயர் ஆழி-நெடுங் கடலுள் துயில்கின்றானே = துயரம் நிறைந்த இந்த மனித வாழ்க்கை என்ற கடலில் துயில்கின்றானே


ஆழி என்ற சொல் இந்த பாடலில் பல முறை வருகிறது. அப்படி வரும் இன்னொரு பாடல் 

 ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
     ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி,
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
     பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து,
     தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்
     மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

ஆண்டாளின் கொஞ்சு தமிழ் ... திருப்பாவை 




2 comments:

  1. Incredible poem and your explanation too.Thanks for posting Gems from Tamil Literature.

    ReplyDelete
  2. "துயர் ஆழி-நெடுங் கடலுள் துயில்கின்றானே" - இது தூள்!

    ReplyDelete