Wednesday, February 6, 2013

திருவாசகம் - கணக்கில்லா திருக்கோலம்


திருவாசகம் - கணக்கில்லா திருக்கோலம் 



திருப்பெருந்துறையிலே குருவாய் வந்து மாணிக்க வாசகரை ஆண்டு கொண்டார் சிவ பெருமான்.

திரு கழுக்குன்றிலே கணக்கிலா வடிவங்கள் காட்டினான் என்று அவரே சொல்கிறார்


தமிழ் தாத்தா உ வே சாமிநாதையர் இறக்கும் தருவாயில் திருவாசகத்தில் இருந்து ஒரு பாடலை பாடும் படி சொல்லக் கேட்டாராம்..அந்தப் பாடலை கேட்ட பின் அவர் உயிர் பிரிந்தது என்று நான் சொல்லக் கேட்டு  இருக்கிறேன்.

அது இந்தப் பாடல்.....



பிணக்கி லாதபெ ருந்து றைப்பெரு
மான்உன் நாமங்கள் பேசுவார்க்
கிணக்கி லாததோர் இன்ப மேவருந்
துன்ப மேதுடைத் தெம்பிரான்
உணக்கி லாததோர் வித்து மேல்விளை
யாமல் என்வினை ஒத்தபின்
கணக்கி லாத்திருக் கோலம் நீவந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே. 

சீர் பிரித்த பின்

பிணக்கிலாத பெருந்துறை பெருமான் 
உன் நாமங்கள் பேசுவார்க்கு 
இணக்கிலாத ஓர் இன்பமே வரும் 
துன்பமே துடைத்து எம்பிரான் 
உணக்கிலாததோர் வித்து மேல் விளையாமல் 
என் வினை ஒத்த பின் 
கணக்கிலா திருக்கோலம் நீ வந்து 
காட்டினாய் கழுக்குன்றிலே 






பொருள்




பிணக்கி லாத = பிணக்குதல் என்றால் கட்டுதல் என்று பொருள். எதனோடும் பிணைப்பு இல்லாத, உயர்ந்தவர், தாழ்ந்தவர் , பணக்காரன், ஏழை என்று யாரையும் பேதம் பார்க்காமல் எல்லோரையும் காக்கும்

பெருந் துறைப் பெருமான் = திருப்பெருந்துறை என்ற இடத்தில் எழுந்து அருளி இருக்கும் பெருமான்

உன் நாமங்கள் = உன்னுடைய திரு நாமங்களை


 பேசுவார்க்கு = பேசுபவர்களுக்கு

இணக்கு இல்லாததோர் = இணையே இல்லாத

இன்ப மேவரும் = இன்பமே வரும்

துன்பமே துடைத்து = துன்பத்தை துடைத்து


தெம்பிரான் = எம்பிரான்

உணக்கி லாததோர் = உலராத

வித்து = விதை

மேல்விளையாமல் = மேல் விளையாமல்

என்வினை = என்னுடைய பழைய வினைகள்

ஒத்தபின் = தீர்ந்த பின்

கணக்கி லாத் = கணக்கிலாத , எண்ணற்ற

திருக் கோலம் = திருக்கோலங்களை

 நீ வந்து காட்டி னாய் = நீயே வந்து காட்டினாய்

கழுக்குன்றிலே = திருகழுக்குன்றிலே


ஒரு விதை மீண்டும் முளைக்க வேண்டுமானால் அது முதலில் உலர வேண்டும். உலர்ந்த விதைதான் மீண்டும் முளைக்கும். 

என்னுடைய வினைகள் என்னை மீண்டும் பற்றாமல், நான் மீண்டும் வந்து பிறவாமல் என்னை ஆண்டு கொண்டாய் என்று அன்பால் உருகுகிறார் மாணிக்க வாசகர்.

திருவாசகத்தில் குரு தரிசனம் என்ற பகுதியில் உள்ள பத்து பாடல்களில் இது முதலாவது பாடல் 

அதில் உள்ள சில பாடல்கள் நெஞ்சை உருக்குபவை...பின்னொரு ப்ளாகில் அவற்றை பற்றியும் சிந்திப்போம் 

அவன் அருள் மாணிக்க வாசகரின் வினை மேல் சென்று முளைக்காமல் தடுத்து ஆட்கொண்டது...அந்த திருவருள் உங்களுக்கும் சித்திக்கட்டும் 





1 comment:

  1. குரு தான் இந்த பிறவி பிணியிலிருந்து நம்மை காக்க முடியும். இங்கே முக்தி தரும் திருப்பெருந்துறை பெருமானை பாடும் பாடல்களுக்கு " குரு தரிசனம்" என்ற தலைப்பு கொடுத்துள்ளார் மாணிக்க வாசக பெருமான் . Wonderful. Thank you very much.

    ReplyDelete