Tuesday, February 5, 2013

இராமானுஜர் நூற்றந்தாதி - நான் யார் உன்னைப் புகழ


இராமானுஜர் நூற்றந்தாதி - நான் யார் உன்னைப் புகழ 

உணர்ச்சி வெள்ளம் பொங்கி வரும்போது வார்த்தைகள் பயனற்று போய்  விடும். 

எவ்வளவோ பேச வேண்டும் என்று நாள் கணக்காக திட்டமிட்டு போவான்...காதலியை பார்த்தவுடன் வார்த்தை ஒன்றும் வெளியே வராது ... ஏன் ? உணர்ச்சி மிகுதியால் வார்த்தை தடுமாறும், நாக்கு குழறும்...

கண்ணோடு கண்ணினை நோக்கின் வாய் சொற்கள் என்ன பயனும் இல என்பார் வள்ளுவர். சொற்களால் ஒரு பயனும் இல்லை. 

இராமானுஜரை புகழ்ந்து பாட வேண்டும் என்று நினைக்கிறார். என்ன பாடினாலும் திருப்தி இல்லை. 

மனதில் உள்ள அத்தனை பக்தியும், அன்பும் பாடலில் வர வில்லை. மத்தவங்க எல்லாம் எவ்வளவு அழகாகப் பாடி இருக்கிறார்கள் . .... என்    பாட்டும் இருக்கிறதே ...கத்து குட்டி எழுதின பாட்டு மாதிரி என்று தன்  பாடல்களைப் பற்றி தானே நொந்து கொள்கிறார்...

வார்த்தைகளுக்கு எட்டாத அன்பு, மரியாதை பக்தி ....

பாடல் 


இயலும் பொருளும் இசையத் தொடுத்து, ஈன் கவிகளன்பால்
மயல்கொண்டு வாழ்த்தும் இராமா னுசனை,மதியின்மையால்
பயிலும் கவிகளில் பத்தியில் லாதவென் பாவிநெஞ்சால்
முயல்கின் றனன் அவன் றன்பெருங் கீர்த்தி மொழிந்திடவே


பொருள் 

இயலும் பொருளும் = வார்த்தைகளின் சப்தமும், அவற்றின் பொருளம் ( சொல்லும் பொருளும் என நடமாடும் என்பார் அபிராமி பட்டார். சொல்லையும், அதன் பொருளையும் பிரிக்கவே முடியாது)

 இசையத் = ஒன்றாக இனைந்து வர 

 தொடுத்து = மலர போல் அப்படிப்பட்ட சொற்களை தொடுத்து 

ஈன் கவிகளன்பால் = ஈன் கவிகள் அன்பால் என்று பதம் பிரிக்க வேண்டும். சிறந்த கவிஞர்கள் அன்பால் 
 

மயல்கொண்டு = மயக்கம் கொண்டு 

வாழ்த்தும் இராமா னுசனை, = வாழ்த்தும் இராமானுசனை 


மதியின்மையால் = என்னுனடைய மதி இல்லாமையால் 

பயிலும் கவிகளில் = கத்துக்குட்டிகள் போல இப்போது தான் படிக்கும் கவிதையில் 

பத்தியில் லாதவென் = பக்தி இல்லாத என்   

பாவிநெஞ்சால் = பாவி நெஞ்சால்

முயல்கின் றனன் = முயற்சி செய்கிறேன். எதுக்கு முயற்சி ?

அவன் றன்பெருங் கீர்த்தி மொழிந்திடவே = அவனுடைய பெரிய புகழைப் பாடுவதற்கு 

அந்தாதியில் அபிராமி பட்டர் கூறுவார், உன்னுடைய திருவடிகளில் என் நாவில் இருந்து வந்த புன்மையான மொழிகள் ஏறியது நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.....

மணம் நாறும் நின்தாள் இணைக்கு என்
நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடத்தே

சிறந்த உணர்ச்சிகள் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. அவற்றை சொல்லி விளங்க வைக்க முடியாது. 


2 comments:

  1. Shortage of words to appreciate your introduction.Incredible.Thank you very very much.

    ReplyDelete
  2. என்ன ஒரு மதிப்பு இராமானுஜர் பால்! என்ன ஒரு தன்னடக்கம்! இப்படிச் செய்யுள் எழுதத் தெரிந்த கவிஞருக்கே இப்படித் தோன்றினால், நாமெல்லாம் எம்மாத்திரம்? நம் செருக்கை அடக்க வைக்கும் பாடல் இது.

    தந்ததற்கு மிக்க நன்றி.

    ReplyDelete