Saturday, March 2, 2013

திருக்குறள் - ஒளியை மறைக்கும் இருள்

திருக்குறள் - ஒளியை மறைக்கும் இருள் 


எவ்வளவு இருள் இருந்தாலும், எத்தனை காலம் அந்த இருள் கவிந்து இருந்தாலும், ஒரு விளக்கை எடுத்துச் சென்றால் அந்த இருள் விலகி விடும் அல்லவா ?

ஒளியை மழுக்க அடிக்கும் ஒரு இருள், ஒரு மாசு இருக்கிறது என்கிறார் வள்ளுவர்

அது என்ன மாசு ?



குடியென்னுங் குன்றா விளக்க மடியென்னு 
மாசூர மாய்ந்து விடும்

குடிமை என்ற குன்றில் இட்ட விளக்கு மடி என்ற மாசு ஊர மாய்ந்து விடும்

குடிமை என்றால் சுற்றத்தாரோடு ஒன்றாக சிறப்பாக வாழ்வது. சுற்றமும் நட்பும் சூழ வாழ்வது குடிமை.

நல்ல குடி பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும் 
இல்லை என மாட்டார் இசைந்து என்பது நல்வழி கூறும் குடிமை.

நல்ல குடி என்பது குன்றில் மேல் இட்ட விளக்கு போன்றது. சட்டென்று தெரியும். ரொம்ப தூரத்திற்கு தெரியும். வழி காட்டும்.

அப்படிப்பட்ட விளக்குகூட மடி என்ற மாசு ஊர  மாய்ந்து விடும்.

மடி என்றால் சோம்பல். வேலை செய்யாமல் இருப்பது. வேலைகளை தள்ளிப் போடுவது. காலம் தாழ்த்தி செய்வது.

அப்படி பட்ட சோம்பல் என்ற மாசு, குற்றம் வந்து விட்டால், அது அவனை மாட்டோம் அல்ல அவன் குடும்பத்தையே, குடியையே அழித்து விடும். மாய்த்து விடும்.


குன்றா விளக்கம் என்பதை குன்றில் மேல் இட்ட விளக்கு என்றும் கூறலாம்...குறையாத விளக்கு என்றும் கூறலாம். ஒளி குறையாத விளக்கு இந்த மடி என்ற மாசு ஏற ஏற மறைந்தே போகும்.

சோம்பலை துரத்துவோம். சுறு சுறுப்பாய் இருப்போம். குன்றா விளக்கு மேலும் மேலும் ஒளி வீசி ஜொலிக்கட்டும்....

1 comment: