திருவாசகம் - புறத்தார்க்குச் சேயோன்
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க
"புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க"
புறம் என்றால் வெளியே
சேய்மை என்றால் தூரத்தில் என்று அர்த்தம். அண்மை என்றால் பக்கத்தில் என்று அர்த்தம்.
புறத்தில் உள்ளவர்களுக்கு தூரமானவன். அவனுடைய மலர் போன்ற பாதங்கள் வெல்க.
அது என்ன புறத்தில் உள்ளவர்களுக்கு தூரமானவன்?
இறைவன் எங்கிருக்கிறான் என்று மனிதன் தேடி அலைகிறான். காடு மேடெல்லாம் ஓடுகிறான். மலை ஏறுகிறான். புண்ணிய தலங்கள் தோறும் செல்கிறான். இங்கெல்லாம் இல்லை என்று கைலாயம், வைகுண்டம் என்று கற்பனை செய்து கொண்டு, இந்த வாழ்வில் அல்ல, இறந்த பின் அங்கே போய்ச் சேர்வேன் என்று நினைக்கிறான்.
ஆனால், இறைவவன் அவனுக்குள்ளேயே இருப்பதை அவன் அறிந்தானில்லை. உள்ளே இருக்கும் இறைவனை விட்டு விட்டு எங்கெங்கோ தொலை தூரத்திற்கு சென்று விடுகிறான்.
இறைவன் அவனை விட்டு விட்டு தூர போவதில்லை. மனிதன் இறைவனை விட்டு விட்டு எங்கெங்கோ போய் விடுகிறான். எனவே, உள்ளே இருக்கும் இறைவனை விட்டு விட்டு வெளியே வெகு தூரம் போய் விட்டவர்களுக்கு அவன் தூரத்தில் தான் இருப்பான்.
அது மட்டும் அல்ல, இறைவன் அவனுக்குள் இருக்கிறான் என்று அறிந்தால், அதே இறைவன் எல்லா உயிர்களுக்குள்ளும் இருப்பான் என்று அறிவான். தனக்குள் இறைவன் இருப்பதை அறியாதவன் மற்ற உயிர்களுக்குள்ளும் இறைவன் உறைவதை அறிய மாட்டான்.
தனக்குள் இறைவனை கண்டவன் எங்கும் இறைவனைக் காண்பான். தனக்குள் இறைவனை காணாதவன் எங்கும் காண மாட்டான். தனக்குள் இல்லாதது போல் எதற்குள்ளும் இறைவன் இருக்க மாட்டான் என்று நினைப்பான். எனவே, இங்கு உள்ளதை எல்லாம் விட்டு விட்டு வைகுண்டம், கைலாயம், பரமபதம் என்று இறைவனைத் தள்ளி வைக்கிறான்.
இறைவன் தள்ளிப் போவதில்லை. மனிதன் இறைவனை தள்ளி வைக்கிறான்.
புறத்தார்க்கு சேயோன்.
அகத்தாற்கு அண்மையோன்.
"
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க"
இறைவனை எங்கும் காண்பவன் எல்லாவற்றையும் வணங்குவான். இந்த உலகமே போற்றுதலுக்கும், வணக்கத்துக்கும் உரியதாக நினைப்பான். எல்லாமே இறைவன்தான் என்று அறிவான். எல்லாம் சிவமயம் என்பது புலப்படும். எதிரில் உள்ளவர்களை பார்த்தால் கரம் குவித்து வணங்குவான். அப்படி வணங்குவது ஏதோ பயத்தினாலோ அல்லது பணிவினாலோ அல்ல. எங்கும் நிறைந்த அந்த சக்தியை அறிந்ததனால். அந்த அறிவினால் பிறந்த ஆனந்தத்தால்.
அந்தத் தரிசனம் பெற்ற அபிராமி பட்டார் கூறுவார் "களி நின்ற வெள்ளம் கரை கண்டது இல்லை " என்று ஆனந்த வெள்ளத்தில் திளைக்கிறார்.
வெளிநின்ற நின்திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டது, இல்லை, கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது, என்ன திருவுளமோ?-
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.
விஸ்வரூபம் என்று சொல்கிறார்களே அது என்ன.
ஏதோ ஒருவர் விண்ணுக்கும் மண்ணுக்குமாக ஒரு நொடியில் வளர்ந்து நிற்பது அல்ல.
இந்த உலகம் முழுவதும் பரந்து விரிந்து கிடக்கும் , அனைத்து உயிர்களுக்குள்ளும் உறையும் இறையை தரிசித்தவர் சொல்வதுதான் அந்த உருவம்.
அத்தனை உயிர்களும் ஒன்று சேர்ந்த ஒரு உருவம் ....எத்தனை கைகள், எத்தனை கால்கள், எத்தனை தலைகள், எத்தனை உருவம்...எல்லாம் சேர்ந்த ஒன்று தான் விஸ்வ ரூபம். அந்தத் தரிசனம் எல்லோருக்கும் கிடைப்பது இல்லை. அறிவு வேண்டுமானால் அதை ஏற்றுக் கொள்ளும். அந்த அனுபவம் எல்லோருக்கும் கிடைப்பது இல்லை.
நானும், நீங்களும், இந்த உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் ஒன்று தான் என்ற வேற்றுமை அற்ற தரிசனமே விஸ்வரூப தரிசனம்.
காக்கை குருவி எங்கள் ஜாதி, காடு மலை எங்கள் கூட்டம் என்று அனைத்தையும் ஒன்றாக கண்டான் பாரதி. அது விஸ்வ ரூப தரிசனம்.
நான் வேறு, நீ வேறு என்று இனம் பிரித்துச் சொல்லும் புத்தி உருகி, பெருகி தத்திக் கரை புரளும் பரமானந்த சாகரம் என்பார் அருணகிரி.
பத்தித் திருமுகம் ஆறுடன் பன்னிரு தோள்களுமாய்த்
தித்தித்து இருக்கும் அமுது கண்டேன் செயல் மாண்டு அடங்கப்
புத்திக் கமலத்து உருகிப் பெருகிப் புவனம் எற்றித்
தத்திக் கரை புரளும் பரமானந்த சாகரத்தே.
எல்லோரும் ஒன்றென்று உணரும் போது பிறக்கும் மகிழ்ச்சி. பேதங்கள், பிரிவினைகள் மறையும் போது பிறக்கும் ஆனந்தம்.
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க.
அருகில் உள்ளவர்களை கை கூப்பி வணங்கி விடலாம். அவர்களும் அதை பார்க்க முடியும்.
தள்ளி இருப்பவர்களை, இந்த உலகம் அனைத்தையும் எப்படி வணங்குவது.
கைகளை தலைக்கு மேலே உயர்த்தி எல்லோருக்கும் வணக்கம் என்று சொல்லலாம். அது எல்லோருக்கும் தெரியாது தான். இருந்தும் நம் மனதுக்குத் தெரியுமே. இந்த உலகம் முழுவதும் ஒரு சக்தியின் வெளிப்பாடு என்று.
அது யாராக இருந்தால் என்ன? எங்கிருந்தால் என்ன? என்ன நிறம், ஜாதி, குலமாக இருந்தால் என்ன. எல்லாம் ஒன்றுதான்.
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க.
அப்படி பட்ட ஞானம் பெற்றவர்களை மேலும் சிறப்படைய செய்யும் சீரோன் கழல்கள் வெல்க என்கிறார்.
இறை தரிசனத்தின் வெளிப்பாடு.
இது சரிதானா ? இல்லை வலிந்து பொருள் சொல்லும் உத்தியா என்று என்னை நானே கேட்டுப் பார்த்தேன்.
பொருள்களும் , சக்தியும் ஒன்றுதான். வேறு இல்லை என்று நவீன இயற்பியல் கூறுகிறது.
பொருளை சக்தியாக மாற்றலாம். சக்தியை பொருளாக மாற்றலாம். பொருள் என்று சொன்னால் எல்லா பொருளும் தான். நான், நீங்கள், இந்த கணிப்பொறி, கண்ணாடி, மேஜை,நாற்காலி, காக்கை, குருவி, மேகம், சூரியன், என்று அனைத்தும் சக்தியின் வெளிப்பாடு அல்லது மறு உருவம் என்கிறது நவீன இயற்பியல்.
E = M C^2 = M x C x C
என்பது ஐன்ஸ்டினின் மிக பிரபலமான கோட்பாடு.
E என்பது சக்தி, energy
M என்பது பொருள்
C என்பது ஒரு எண் (ஒளியின் வேகம்).
மாணிக்க வாசகருக்கு நவீன இயற்பியல் தெரியும் என்று சொல்ல வரவில்லை.
அனைத்தும் ஒரு சக்தியின் வடிவம் என்று அவர் சொல்கிறார். நவீன அறிவியலும் சொல்கிறது.
அந்த சக்தியை அவர் வழிபட்டார். நாம் அந்த சக்தியை பல விதங்களில் பயன் படுத்துகிறோம்.
அது ஒரு பார்வை, ஒரு perspective என்ற முறையில் சிந்தித்துப் பார்ப்போமே.
வலிந்து பொருள் சொல்லவில்லை. இப்படியும் இருக்கலாம் என்று சொல்ல வருகிறேன்.
அதில் ஒரு சுகம் இருக்கிறது. ஒரு ஆனந்தம் இருக்கிறது.
பிரிவினை குறையும் போது மகிழ்ச்சி வருகிறது தானே.
காதலியோடு, மனைவியோடு அன்பு மேலிடும் போது , அவள் வேறு தான் வேறு என்ற பேதம் மறைந்து, இரண்டும் ஒன்றாகும் போது மகிழ்ச்சி வருகிறதா இல்லையா. ஆனால், அது சிறிது நேரம் இருந்து விட்டுப் போய் விடும்.
பிள்ளைகள் கட்டி அணைக்கும் போது உயிர் உருகுகிறதா இல்லையா ?
பேரப் பிள்ளைகள் மேலே வந்து விழும் போது, ஈருயிர் ஓருயிராகிறதா இல்லையா? அப்போது எவ்வளவு சந்தோஷம் பிறக்கிறது.
நீண்ட நாட்களுக்குப் பின் உடன் பிறப்புகளை பார்க்கும் போது, அவரக்ளை கட்டி அணைத்துக் கொள்ளும் போது ஒன்றிப் போகிறோமா இல்லையா? அதில் ஒரு ஆனந்தம் பிறக்கிறதா இல்லையா ?
இந்த உலகமே நம் துணை, பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் என்று தோன்றினால் எவ்வளவு இன்பம் பிறக்கும்.
அந்த இன்பம் மறையவே மறையாது. எங்கெங்கு பார்த்தாலும் என் துணை, என் உடன் பிறப்பு, என் பிள்ளைகள், என் பேரப் பிள்ளைகள் என்றால் அந்த ஆனந்தத்துக்கு அளவு ஏது.
அதுவே பேரின்பம்.
http://interestingtamilpoems.blogspot.com/2018/04/blog-post_10.html