Sunday, May 12, 2019

குறுந்தொகை - நாணும் சிறிதே

குறுந்தொகை - நாணும் சிறிதே 


பெண்ணுக்கு நாணம் வரும். எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.

ஆணுக்கு நாணம் வருமா? வந்தால் எப்படி இருக்கும்? வெட்கப்படும் ஆண் மகனை பார்த்து இருக்கிறீர்களா?

குறுந்தொகை அப்படி ஒரு ஆண் மகனை, அவன் வாயிலாகவே காட்டுகிறது.

அவனுக்கு அவள் மேல் காதல். அவள் வீட்டில் அந்த காதலுக்கு தடை விதிக்கிறார்கள்.  அவனுக்கோ அவள் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்றாகி விட்டது.

என்ன செய்வது ?

அந்தக் காலத்தில் மடல் ஏறுதல் என்று ஒன்று உண்டு.

ஒரு பெண்ணின் மேல் காதல் கொண்ட ஆண் மகன், ஒரு துணியில் அந்தப் பெண்ணின் படத்தையும், தன் படத்தையும் வரைந்து, கொடி போல் பிடித்துக் கொண்டு, பனை மரக் கட்டையில் செய்த ஒரு குதிரை போன்ற ஒரு உருவத்தின் மேல் அமர்ந்து கொண்டு, ஊரில் உள்ள சின்ன பையன்களை அந்த குதிரையை இழுத்துக் கொண்டு செல்லச் சொல்லி, அந்த பெண்ணின் வீட்டின் முன்னால் அமர்ந்து கொள்வான். அதைப் பார்த்து ஊரில் உள்ளவர்கள், பெண் வீட்டாரிடம் பேசி, திருமணம் முடித்து வைத்து வைப்பார்கள்.

இதற்கு மடல் ஏறுதல் என்று பெயர்.

அந்தப் பையன் சொல்கிறான். இப்படி எல்லாம் அழிச்சாட்டியம் பண்ணி அவளை திருமணம் செய்து கொள்வேன்.  அவள் மிக நல்லவள். எனக்குத் தெரியும்.

திருமணத்திற்கு பின், நாங்கள் இனிமையாக வாழ்வோம். எனக்கும் வயதாகிவிடும். அப்பா ஆகி, தாத்தா ஆகி விடுவேன்.  அப்போது நான் ஊருக்குள் போதும் போது, என் காது பட சொல்லுவார்கள் "இந்தா போறாரே பெரிய மனுஷன்...அவர் அந்தக் காலத்தில், அவருடைய காதலியை மணக்க என்னவெல்லாம் பண்ணார் தெரியுமா " என்று. அதை கேட்கும் போது எனக்கே கொஞ்சம் நாணம் வரும் என்கிறான்.



பாடல்

அமிழ்துபொதி செந்நா வஞ்ச வந்த 
வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி யரிவையைப் 
பெறுகதில் லம்ம யானே பெற்றாங் 
கறிகதில் லம்மவிவ் வூரே மறுகில் 
நல்லோள் கணவ னிவனெனப் 
பல்லோர் கூறயா நாணுகஞ் சிறிதே.்  

பொருள்

அமிழ்துபொதி = அமுதத்தை பொதிந்து வைத்த

செந்நா = சிவந்த நாக்கு

அஞ்ச = = அஞ்சும்படி

வந்த = முளைத்த

வார்ந்திலங்கு = வார்த்து எடுத்தது போல நேராக விளங்குகின்ற

வையெயிற்றுச் = கூர்மையான பற்களையும்

சின்மொழி = சிறிய மொழி

யரிவையைப்  = அரிவையை , பெண்ணை, மனைவியை

பெறுகதில் = பெறுவேனாக

அம்ம = அம்ம

யானே = யானே

பெற்றாங்கு = பெற்ற பின்

அறிகதில் = அறிவார்களாக

அம்ம  இவ்வூர் = இந்த ஊரில் உள்ளவர்கள்

மறுகில்  = வீதியில்

நல்லோள்  = நல்லவளான  அவளின்

கணவ னிவனெனப்  = கணவன் இவன் என

பல்லோர் = பலர்

கூற = கூற

யா  = நான்

நாணுகஞ் சிறிதே.்   = சிறிது நாணம் கொள்வேன்

யார் யாரெல்லாம், என்ன எல்லாம் கூத்து அடித்தார்களோ அவர்கள் இளமை காலத்தில். யோசித்துப் பார்த்தால், இதழோரம் ஒரு புன்னகை அரும்பாமலா போகும்?

நாணுகஞ் சிறிதே....

https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_83.html


No comments:

Post a Comment