Thursday, May 23, 2019

கம்ப இராமாயணம் - விலக்குதி வீர

கம்ப இராமாயணம் - விலக்குதி வீர 


இராமனுக்கும் சூர்பனகைக்கும் உரையாடல் நடந்து கொண்டிருந்த போது , சீதை பர்ணசாலையில் இருந்து வெளியே வந்தாள் என்று பார்த்தோம்.

சீதையின் அழகைக் கண்ட சூர்ப்பனகை திகைத்துப் போய் விட்டாள்.

சீதையின் அழகில் சூர்பனகை வியந்ததை கம்பன் சொல்லிக் கொண்டே போகிறான். அவற்றை எல்லாம் விட்டு விடுவோம்.

கடைசியில், சூர்ப்பனகை சொல்கிறாள்

"இராமா, இவள் (சீதை) மாயா ஜாலங்களில் வல்லவள். வஞ்சனையான அரக்கி. நல்ல மனம் கொண்டவள் இல்லை. எதையும் ஆராய்ந்து செய்பவனே, இந்தப் பெண்ணின் உண்மையான உருவம் இது அல்ல. இவள் மாமிசம் சாப்பிடும் அரக்கி. இவளை விட்டு நீ விலகு"

சூர்பனகை, சீதையை அரக்கி என்கிறாள்.


பாடல்

வரும் இவள், மாயம் வல்லள்;
    வஞ்சனை அரக்கி; நெஞ்சம்
தரெிவு இலம்; தேறும் தன்மை,
    சீரியோய்! செயல் இது அன்றால்,
உரு இது மெய்யது அன்றால்;
    ஊன் நுகர் வாழ்க்கையாளை
வெருவினென்; எய்திடாமல்
    விலக்குதி, வீர! என்றாள்.



பொருள் 


வரும் இவள் = இங்கே வந்து நிற்கும் இவள்

மாயம் வல்லள் = மாயா ஜாலங்களில் வல்லவள்

வஞ்சனை அரக்கி = வஞ்ச மனம் கொண்ட அரக்கி

நெஞ்சம்  தெரிவு இலம் = இவள் மனதில் உள்ளதை அறிந்து கொள்ள முடியாது

தேறும் தன்மை  சீரியோய்!    -  காரியங்களை தேர்ந்து எடுத்து செய்பவனே

செயல் இது அன்றால் = நீ செய்ய வேண்டிய செயல் என்ன என்றால்
,
உரு இது மெய்யது அன்றால் = இவளின் உருவம் மெய்யானது அல்ல

ஊன் நுகர் வாழ்க்கையாளை = மாமிசம் சாப்பிடும் இவளை

வெருவினென் = இவளை பார்த்தால் எனக்கே பயமாக இருக்கிறது

எய்திடாமல் = இவளை அடையாமல்

விலக்குதி, வீர! என்றாள். = அவளை விலக்கிவிடு என்றாள்

இது எப்படி இருக்கு ?

சூர்ப்பனகை, சீதையை அரக்கி என்கிறாள்.

அது போகட்டும். சூர்ப்பனகை சீதையை என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும்.

நமக்கு இதில் இருந்து கிடைக்கும் பாடம் என்ன?

தீயவர்கள் (அரக்கர்கள்), தங்களது தீய குணத்தை நம் மேல் ஏத்தி மற்றவர்களிடம் சொல்லுவார்கள்.  சீதையை சூர்ப்பனகை சொன்ன மாதிரி...அவள்  உருவம் மெய்யானது அல்ல (சூர்ப்பனகை மாறு வேடத்தில் வந்து இருக்கிறாள் ), சீதை வஞ்ச மனம் கொண்ட அரக்கி, சீதை புலால் உண்பவள் என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போகிறாள்.  தீயவர்களிடம்  நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களது தீய குணங்களை நம்மிடம் உள்ள தீய குணங்கள் போல  ஊராரிடம் சொல்லி கதை கட்டி விடுவார்கள்.

இரண்டாவது, சீதைக்கும் சூர்பனகைக்கும் ஒரு பகையும் கிடையாது. இருவரும் முன்ன பின்ன சந்தித்தது கூட இல்லை.  பார்த்த உடனேயே, சீதையைப் பற்றி  இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி வைக்கிறாள். எனவே தான், தீயவர்கள் கண்ணுக்கு படாமல் நீங்குவதே நல்ல நெறி  என்று சொல்லி  வைத்தார்கள். அவர்கள் பார்வையிலேயே படக் கூடாது. "பட்டால் என்ன  ஆகும். இப்படி தீயவர்களை கண்டு பயந்து ஒளிந்து கொண்டே இருக்க முடியுமா ?" என்று விதண்டாவாதம் பண்ணினால் , இராமனுக்கும் சீதைக்கும் என்ன ஆயிற்று   என்று பார்த்து தெரிந்து கொள்ள வேண்டியதுதான். அவர்களுக்கே அந்த கதி என்றால்.....


மூன்றாவது, தீயவர்கள், தங்களுக்கு ஒன்று வேண்டும் என்றால், என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.  இங்கே, சூர்ப்பனகை, கணவன் மனைவியை பிரிக்க  வழி தேடுகிறாள். அவளுக்கு இராமன் வேண்டும். எனவே, சீதையை இராமனிடம் இருந்து பிரிக்க வழி தேடுகிறாள்.

நான்காவது, தீயவர்கள் சொல்வதை நாம் அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடாது. இராமனுக்கு சீதையைப் பற்றி நன்கு தெரியும். எனவே, அவன் சூர்ப்பனகை சொன்னதை ஏற்றுக் கொள்ளவில்லை.  இல்லை என்றால் யோசித்துப் பாருங்கள். சந்தேகத்தின் விதை விழுந்து விடும் அல்லவா?

அம்மாவைப் பற்றி மகனிடம், மகனைப் பற்றி அம்மாவிடம்,  இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி  குடும்பத்தை பிரித்து, அதை சிதற அடித்த பெண்கள் பற்றி நாம்  நிறைய கேட்டு இருக்கிறோம் அல்லவா?

நண்பர்களை பிரித்து விடுவது, அம்மா மகன், அப்பா மகன் உறவை துண்டித்து விடுவது  என்று எவ்வளவோ நடக்கிறது.

இறுதியாக, தீயவர்கள், எப்போதும் நம்மை தனிமைப் படுத்தி, அவர்களோடு சேர்த்துக் கொள்ளவார்கள்.

யார் நம்மை தனிமை படுத்த நினைக்கிறார்களோ அவர்கள் தீயவர்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

கதை படிக்கும் போது, கொஞ்சம் கருத்தையும் படித்துக் கொள்வோம்.


1 comment: