Sunday, May 12, 2019

கம்ப இராமாயணம் - அரக்கர் தம்மில் மானுடர் மணத்தல்

கம்ப இராமாயணம் - அரக்கர் தம்மில் மானுடர் மணத்தல் 


தன்னை மணந்து கொள்ளும் படி வேண்டிய சூர்பனகையிடம், நமக்குள்ள குல வேறுபாடு இருக்கிறது எனவே மணந்து கொள்ள முடியாது என்றான் இராமன்.

அதற்கு, "நான் தாய் வழியில் அரச குலத்தை சேர்ந்தவள்...எனவே நீ என்னை மணந்து கொள்ளத் தடை ஒன்றும் இல்லை" என்றால் சூர்ப்பனகை.

அதற்கு இராமன்

"நீயோ அரக்கர் குலத்தில் வந்தவள். இராவணன் உன் தமையன். அரக்கர்களும், மனிதர்களும் மணந்து கொள்வது முறை அல்ல" என்கிறான்.

அவள் எப்படியாக இருந்தாலும் இராமன் அவளை மணக்கப் போவது இல்லை. பின் எதற்கு ஒவ்வொரு காரணமாகச் சொல்லி, இந்த பேச்சை நீட்டிக்க வேண்டும் ?

பாடல்

அருத்தியள் அனைய கூற,
    அகத்து உறு நகையின் வெள்ளைக்
குருத்து எழுகின்ற நீலக் கொண்டல்
    உண்டாட்டம் கொண்டான்,
“‘வருத்தம் நீங்கு அரக்கர் தம்மில்
    மானுடர் மணத்தல், நங்கை!
பொருத்தம் அன்று ‘‘ என்று சாலப்
    புலமையோர் புகல்வர் ‘என்றான்.


பொருள் 

அருத்தியள் = ஆசை மிகக் கொண்டவள்

அனைய கூற, = அவ்வாறு கூற

அகத்து = உள்ளத்தில்

உறு = உண்டாகிய

நகையின் = சிரிப்பின்

வெள்ளைக் குருத்து = வெள்ளை குருத்து போல

எழுகின்ற = எழும்பி வர

நீலக் = நீல நிறம் கொண்ட

கொண்டல் =  மேகம்

உண்டாட்டம் கொண்டான், = ஒரு விளையாட்டை கொண்டான்

“‘வருத்தம் நீங்கு = வருத்தம் இல்லாத

அரக்கர் தம்மில் = அரக்கர் குலத்தோடு

மானுடர் மணத்தல்,  = மனிதர்கள் மணந்து கொள்வது

நங்கை! = பெண்ணே

பொருத்தம் அன்று  = பொருத்தமானது அல்ல

என்று = என்று

சாலப் = பெரிய

புலமையோர் = அறிவாளிகள்

புகல்வர்  = சொல்வார்கள்

என்றான். = என்றான்

இராசனுக்குத் தெரிகிறது அவள் அரக்கி என்று. மேலும், அவள் யாராக இருந்தாலும் அவளை  மணந்து கொள்ளப் போவது இல்லை என்றும் தெரியும்.

தெரிந்தும், அவளிடம் விளையாடுகிறான் என்றே கம்பன் பதிவு செய்கிறான்.

"உண்டாட்டம் கொண்டான்" என்கிறான்.

பெண்ணின் உணர்ச்சிகளோடு  விளையாடுவது சரியான செயலா?

அவள் ஆசையைத் தூண்டும்படி பேசிவிட்டு பின்னால் அவளை அவமானப் படுத்தி அனுப்பியது சரியா ?

அதற்கு சூர்ப்பனகை என்ன சொல்லி இருப்பாள் ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_12.html

1 comment:

  1. காரணம் தெரியவில்லையே. சூர்ப்பனகையின் பதிலை எதிர்பார்ப்போம்.

    ReplyDelete