Saturday, May 18, 2019

திருக்குறள் - எல்லாம் உடையார்

திருக்குறள் - எல்லாம் உடையார் 


பாடல்

‘அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்’’

பொருள்

‘அறிவுடையார் = அறிவு உள்ளவர்கள்

எல்லாம் உடையார் = எல்லாம் உடையவர்கள்

அறிவிலார் = அறிவு இல்லாதவர்கள்

என்னுடைய ரேனும்  = எவ்வளவுதான் இருந்தாலும்

இலர் = ஒன்றும் இல்லதாவர்களே

இது பொதுவாக சொல்லும் பொருள்.

திருக்குறளை ஒன்றாம் வகுப்பு மாணவனுக்கும் சொல்லலாம். முதுகலை படித்து முடித்து, முனைவர் (doctorate ) படிப்பு படிப்பவர்களுக்கும் சொல்லலாம். எளிமைக்கு எளிமை. ஆழத்துக்கு ஆழம்.

சரி, இதில் என்ன ஆழம் இருக்கிறது.

"அறிவுடையார்" ... கல்வி உடையார், கற்றவர் என்று சொல்லவில்லை. அறிவு உடையார்  என்று சொல்கிறார். கல்வி வேறு, அறிவு வேறு.  அறிவுடைமைக்கும் கல்விக்கும்  இரு வேறு அதிகாரம் எழுதி இருக்கிறார் வள்ளுவர்.

அறிவு என்பது நமக்குள் இருப்பது. அதை வெளியே கொண்டு வருவது கல்வி.

அது என்ன உள்ளே இருப்பது, வெளியே வருவது ?

இதற்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்று நினைத்தார் வள்ளுவர்.

ஆற்றில் நீர் வற்றிய காலங்களில் மக்கள் ஆற்றுப் படுகையை தோண்டுவார்கள். அதில் நீர் ஊற்றெடுத்து வரும்.  அதற்கு மணற்கேணி என்று பெயர். நீர் உள்ளே இருக்கும். கொஞ்சம் தோண்டினால்  நீர் வரும்.

அது போல, அறிவு உள்ளே இருக்கும். கொஞ்சம் தோண்டினால் அது வெளியே வரும்.

‘‘தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு’’

எவ்வளவு தோண்டுகிறோமோ அவ்வளவு நீர் வரும் மணற்கேணியில் இருந்து. அது போல எவ்வளவு கற்கின்றோமோ அவ்வளவு அறிவு வளரும்.

சிலருக்கு லேசாக தோண்டினாலே நீர் வந்து விடும். சிலருக்கு பல அடி ஆழம் தோண்ட வேண்டும்.

சரி, அறிவு புரிகிறது.

அறிவு இருந்தால் எல்லாம் இருக்கும் என்று எப்படி சொல்ல முடியும்? எத்தனையோ அறிவாளிகள்  ஏழையாக இல்லையா? படிக்காத தற்குறிகள் செல்வத்தில்  திளைக்கவில்லையா ?

நாம் ஏழ்மை என்று சொல்லுவது பொன் , பொருள்  இல்லாமல் இருப்பதை. ஒருவனிடம்  நிறைய காசு இருந்தால்  அவனிடம் எல்லாம் இருக்கிறது என்று நாம் நினைக்கிறோம்.

செல்வம் நிலையாதது.

ஒரு அளவுக்கு மேல் செல்வம் இருந்தால் அதனால் ஒரு பயனும் இல்லை. அது மட்டும் அல்ல , அதனால் சிக்கல்களே அதிகம்.

மேலும், இந்த பொருளும், பொன்னும் நாம் இறந்த பின் நம் கூட வருமா ?

வராது.

அறிவு மட்டும் வருமா ?

வரும் என்கிறார் வள்ளுவர்.


ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து

ஒரு பிறவியில் ஒருவன் கற்ற கல்வி, ஏழேழ் பிறவிக்கும் வரும் என்கிறார்.

அப்படி என்றால், நம் வாழ்நாளை இதில் செலவிட வேண்டும் ?

பொன்னும் பொருளும் சேகரிப்பதிலா? அல்லது அறிவை சேகரிப்பதிலா ?

"என்னுடையரேனும் இலர்"

என்ன இருந்தாலும், ஒன்றும் இல்லாதவர்களைப் போலத்தான் இருப்பார்கள் அறிவு இல்லாதவர்கள் என்கிறார்.

அறிவில்லாதவனிடம் நிறைய செல்வம் இருந்தாலும், அவனுக்கு அதை அனுபவிக்கத் தெரியாது.

பிற்காலத்துக்கு வேண்டும் என்று சேர்த்து வைப்பான். பிற்காலம் வரும் முன்னே  இறந்தும் போவான். அந்த செல்வம் அவனிடம் இருந்து என்ன பலன்.  செல்வம் இல்லாதவன் எப்படி ஒன்றையும் அனுபவிக்காமல் இறப்பானோ , அதே போல  இவனும் இருக்கிற பணத்தை எல்லாம் shares, stocks, gold, mutual fund, real estate  என்று வாங்கிப் போட்டுவிட்டு, ஒன்றையும் அனுபவிக்காமல் இறந்து போவான்.

நிறைய பணம் இருக்கும், கண்டதையும் சாப்பிடுவது, சர்க்கரை வியாதி வந்து விடும்.  அரசி சோற்றை நினைத்துக் கூட பார்க்க கூடாது என்று சொல்லிவிடுவார்  வைத்தியர். பணம் இருந்து என்ன பலன்? ஒரு பிச்சைக்காரனுக்கு  கிடைக்கும் இன்பம் கூட இவனுக்கு கிடைக்காது.

செல்வம் நிறைய இருக்கிறதே என்று மது, புகை பிடிப்பது என்று கெட்ட வழக்கங்களை  மேற்கொள்ளுவான். இதய நோய் , காச நோய் , கான்சர் என்று   அவதிப் படுவான்.

என்ன இருந்து என்ன செய்ய ?

அறிவு இல்லை என்றால், மனைவி மக்களோடு பிரச்சனை வரும். குடும்ப உறவுகள் சிக்கலாகும். அது ஒரு சுகமா ?

தீயவர் சகவாசம் வரும். அது மேலும் பல தீமையில் கொண்டு போய் விடும்.

அறிவில்லாதவன் பல செல்வங்களை சேர்த்தாலும், நம்மை விட அவன் அதிகம் சேர்த்து விட்டானே என்று மற்றவர்களைப் பார்த்து  பொறாமை படுவான். அந்த பொறாமை, அவனை, அவனது செல்வங்களை நிம்மதியாக அனுபவிக்க விடாது.


அறிவு இல்லை என்றால், மற்றவை எல்லாம் இருந்தும் ஒன்றுக்கும் பயன் படாது.

கேக்க நல்லாத்தான் இருக்கு.

சரி, இந்த அறிவை எப்படி பெறுவது?

அதற்கு ஏதாவது வழி சொல்லி இருக்கிறார்களா?

https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_60.html

1 comment: