Thursday, May 16, 2019

கம்ப இராமாயணம் வாள் எயிறு இலங்க நக்கான்

கம்ப இராமாயணம்  வாள் எயிறு இலங்க நக்கான் 



உன்னுடைய சகோதரர்கள் வந்து உன்னை எனக்குத் தந்தால் நான் உன்னை ஏற்றுக் கொள்வேன் என்று இராமன் சூர்பனகையிடம் சொன்னான் என்று நேற்று பார்த்தோம்.

அதற்கு சூர்ப்பனகை சொல்கிறாள் "நாம் காதர்வ முறைப் படி திருமணம் செய்து கொள்ளலாம். திருமணம் முடிந்த பின் என் சகோதரர்கள் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். அது மட்டும் அல்ல, நீ சொன்ன படி கேட்டு நடப்பார்கள் " என்று மேலும் பலவும் கூறுகிறாள்.

அதைக் கேட்டு இராமன் ஒரு ஏளன சிரிப்பு சிரிக்கிறான்

"அரக்கர் அருளையும் பெற்றேன். உன்னால் பெரும் செல்வத்தையும் பெற்றேன். உன்னை அடைந்ததால் வரும் இன்பங்களையும் பெற்றேன். இதனால் நான் பெற்ற இன்பங்கள் ஒன்றா இரண்டா? அயோத்தி விட்டு வந்த பின், நான் செய்த தவத்தால் இவை எல்லாம் எனக்குக்  கிடைத்தன " என்று சொல்லி விட்டு, பற்கள் தெரியும் படி சிரித்தான்

பாடல்


''நிருதர்தம் அருளும் பெற்றேன்; நின் 
     நலம் பெற்றேன்; நின்னோடு 
ஒருவ அருஞ் செல்வத்து யாண்டும் உறையவும் 
     பெற்றேன்; ஒன்றோ, 
திரு நகர் தீர்ந்த பின்னர், செய் 
     தவம் பயந்தது?' என்னா, 
வரி சிலை வடித்த தோளான் வாள் 
     எயிறு இலங்க நக்கான்.

பொருள்


''நிருதர்தம் = அரக்கர்களின்

அருளும் பெற்றேன் = அருளைப் பெற்றேன்

நின் = உன்

நலம் பெற்றேன் = நலம் பெற்றேன்

நின்னோடு = உன்னோடு

ஒருவ = நீங்காத

அருஞ் செல்வத்து = அரிய செல்வத்தை

யாண்டும் = எப்போதும்

உறையவும் பெற்றேன் = என்னுடன் இருக்கவும் பெற்றேன்

ஒன்றோ,  = இது மட்டுமா

திரு நகர் = அயோத்தி

 தீர்ந்த பின்னர் = விட்டு வந்த பின்

செய் தவம் பயந்தது?' என்னா, = நான் செய்த தவங்கள் என்ன

வரி சிலை வடித்த தோளான் = வில்லை பிடித்த வடிவான தோள்களை உடைய இராமன்

வாள் எயிறு இலங்க நக்கான். = ஒளி பொருதிய பற்கள் வெளியே தெரியும்படி சிரித்தான்


கிண்டலின் உச்சம்.

சூர்பனகையை பிடிக்கவில்லை என்றால் நேரடியாக சொல்லி இருக்கலாம்.

அவளை பார்த்து கிண்டல் செய்வது சரியா ?

அந்த நேரத்தில் பர்ண சாலையில் இருந்து சீதை வெளியே வருகிறாள்.

என்ன நடந்திருக்கும் ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_16.html

No comments:

Post a Comment