Saturday, May 25, 2019

கம்ப இராமாயணம் - உளைவன இயற்றல்

கம்ப இராமாயணம் - உளைவன இயற்றல் 


இராமனோடு சூர்ப்பணகை பேசிக் கொண்டிருக்கும் போது, சீதை அங்கு வந்தாள். முதலில் அவளைப் பார்த்து வியந்த சூர்ப்பணகை , பின் அவள் மேல் கோபம் கொள்ளுகிறாள். சீதையை அரக்கி என்று இராமனிடம் கூறுகிறாள். சீதையை நம்பாதே என்றும் சொல்லி வைக்கிறாள். அவள் சொல்வதைக் கேட்டு சீதை அஞ்சி, இராமன் பின் ஒடுங்கி நின்று கொள்கிறாள்.

விளையாடியது போதும் என்று நினைத்த இராமன், சூர்பனகையை விரட்டுகிறான்.

"கோரை பற்களை கொண்ட அரக்கர்களோடு விளையாடினாலும் தீமையே வரும் என்று உணர்ந்து, மனம் வருந்தும் படியான செய்லகளை செய்யாதே. சீக்கிரம் இந்த இடத்தை விட்டு சென்று விடு. என் இளையவன் இலக்குவன் உன்னைப் பார்த்தால் கோபப் படுவான் "

என்று கூறி அவளை விரட்ட முனைகிறான்.

பாடல்

'வளை எயிற்றவர்களோடு வரும் 
     விளையாட்டு என்றாலும், 
விளைவன தீமையே ஆம்' என்பதை 
     உணர்ந்து, வீரன், 
'உளைவன இயற்றல்; ஒல்லை உன் 
     நிலை உணருமாகில், 
இளையவன் முனியும்; நங்கை! ஏகுதி 
     விரைவில்' என்றான்.


பொருள்


'வளை  = வளைந்த

எயிற்றவர்களோடு = பற்களை கொண்டவர்களோடு (அரக்கர்கள்)

வரும் விளையாட்டு என்றாலும் = விளையாட்டு என்றாலும்

விளைவன தீமையே ஆம்'  = அதில் தீமையே விளையும்

என்பதை  = என்பதை

உணர்ந்து, = உணர்ந்த

வீரன் = வீரனாகிய இராமன்

'உளைவன இயற்றல்;  = மனதுக்கு துன்பம் தருபவனவற்றை செய்யாதே

ஒல்லை  = சீக்கிரம்

உன்  நிலை உணருமாகில்,  = உன் நிலையை அறிந்தால் (நீ அரக்கி என்று அறிந்தால்)

இளையவன் முனியும்; = இளையவனான இலக்குவன் கோபம் கொள்வான்

நங்கை!  = நங்கை,

ஏகுதி  விரைவில்' என்றான். = போய்விடு சீக்கிரம் என்று கூறினான்

இராமன் வாக்கு மூலம் தருகிறான். "நான் இதுவரை அவளோடு விளையாடினேன் " என்று.

ஒரு பெண்ணின் காதலோடு, காமத்தோடு விளையாடுவது சரியா ?


அவள் செய்தது தவறாகவே இருந்து விட்டுப் போகட்டும்.

அவளோடு இப்படி விளையாட்டாக பேசியது மட்டும் சரியா ?

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன என்றால், அர்க்கியோடு (தீயவளோடு) இராமன் விளையாடினான். அது  எவ்வளவு பெரிய ஆபத்தில் கொண்டு போய்  விட்டது.

தீயவர்களின் சகவாசமே கூடாது.

விளையாட்டுக்குக் கூட அவர்களோடு உறவாடக் கூடாது

நாம் ஏதோ   கிண்டல், நையாண்டி என்று நினைத்து பேசி இருப்போம். ஆனால், அவர்கள் மனதில் அதை வைத்து இருந்து, தக்க நேரத்தில் நம்மை பழி தீர்த்து விடுவார்கள்.


கூனி அப்படி செய்தாள் .

சூர்பனகையும் அப்படிச் செய்வாள் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை.

விபரீதம் நிகழவே செய்தது.

"தீயவர் தம் கண்ணில் படாத தூரத்து நீங்குவதே நல்ல நெறி


இராமன் போ என்று சொல்லிவிட்டான்.

போனாளா? அல்லது வேறு எதுவும் செய்தாளா?


https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_25.html

1 comment:

  1. ஒரு வழியாக இராமனுக்கு "இப்படி விளையாட்டாக கூடாது" என்ற அறிவு வந்ததா?

    ReplyDelete