Wednesday, March 31, 2021

திருக்குறள் - அகர முதல - பாகம் 6

திருக்குறள் - அகர முதல - பாகம் 6 


அகரம் முதல, எழுத்து எல்லாம்; ஆதி- 
பகவன் முதற்றே, உலகு.




என்ற குறளில் , எப்படி அகரம் மொழிக்கெல்லாம் முதலாக இருக்கிறதோ அது போல இறைவன் உலகுக்கு முதலாக இருக்கிறான் என்பது பற்றி முந்தைய ப்ளாகுகளில் சிந்தித்தோம். 


இறைவன் முதல் என்றால் யார் அவனை முதலாக நியமித்தது ? அவன் மட்டும் தான் முதல்வனா அல்லது இந்த உலகம் தோன்ற மற்ற காரணங்களும் உண்டா ? இறைவனும் முதல் , அவன் கூட மற்ற ஏதாவது முதலாக இருக்குமா ? சொல்லும் போது தெளிவாக சொல்ல வேண்டும் அல்லவா ?


சில சமயம் பரிசு வழங்கும் போது முதல் பரிசு இரண்டு பேருக்கு கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. அது போல, இறைவன் முதல்வன். அவன் மட்டும்தான் முதல்வனா, அல்லது அவன் கூட வேறு யாராவது உண்டா என்ற கேள்வி வரும் அல்லவா?


இருப்பதோ ஏழே வார்த்தைகள். விரித்தும் சொல்ல முடியாது. அதே சமயம் தெளிவாகவும் சொல்ல வேண்டும்.


வள்ளுவர் எப்படி சொல்லி இருக்கிறார் என்று பார்ப்போம்.


அதற்கு முன் கொஞ்சம் இலக்கணம்.


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/6.html


(click the above link to continue reading)


தமிழ் இலக்கணத்தில் இடைச் சொல் ஒன்று உண்டு.


தனித்து நின்று பொருள் தராது. இரண்டு சொற்களுக்கு இடையில் வந்து அவற்றிற்கு இடையில் உள்ள உறவு, அல்லது அர்த்தத் தெளிவை தரும்.


இடை எனப்படுவ
பெயரொடும் வினையொடும்
நடைபெற்று இயலும் : தமக்கு இயல்பு இலவே


என்பது தொல்காப்பியம்.


இடை எனப்படுவது பெயரோடும் (பெயர் சொல்லோடும் ), வினையோடும் (வினைச் சொல்லோடும் ) சேர்ந்து வரும். தனக்கென்று தனி இயல்பு இல்லாதது என்பது தொல்காப்பியம் தரும் இலக்கணம். 


நிறைய இடைச் சொற்கள் இருக்கின்றன.


அதில் ஏகார (ஏ ) இடைச் சொல்லை மட்டும் பார்ப்போம்.


இந்த ஏகார இடைச் சொல்  7 விதமாக வரும்.


ஏகார வினைச்சொல், தேற்றமும், வினாவும், எண்ணும், பிரிநிலையும் எதிர்மறையும், இசைநிறையும் ஈற்றசைவுமாகிய ஏழு பொருளைத்தரும்.


எப்படி என்று பார்ப்போமா ?


1. தேற்றம் என்றால் உறுதி, தெளிவு.


நான் நேற்று வந்தேன் என்று சொல்லலாம்


நான் நேற்றே வந்தேன் என்றும் சொல்லலாம்.


இரண்டுக்கும் என்ன வேறுபாடு ? நேற்றே வந்தேன் என்பது நேற்று வந்தேன் என்பதே அழுத்தமாக , உறுதியாகச் சொல்கிறது.


நான் இதைச் செய்தேன்
நானே இதைச் செய்தேன்


நான் செய்தேன் என்றால் வேறு யாரோ கூட என்னோடு சேர்ந்து செய்திருக்கலாம்.


நானே செய்தேன் என்பது நான் மட்டும் தான் செய்தேன் என்பதே தெளிவாக்குகிறது அல்லவா.


திருவிளையாடல் படத்தில் தருமி சொல்வதாக ஒரு வசனம் வரும்.


"இந்தப் பாட்டை எழுதியது நீர் தானே?" என்று நக்கீரர் கேட்பார். 


"நான், நான், நானே தான் எழுதினேன்" என்று தருமி சொல்வதாக அந்த வசனம் வரும். அதில் நானே என்ற சொல்லுக்கு அர்த்தம் நான் மட்டும் தான் என்பது. 

2. வினா


வீட்டுக்குப் போகிறாய்
வீட்டுக்குத் தானே போகிறாய் ?


முதலில் உள்ள வாக்கியம் வீட்டுக்குப் போவதை குறிக்கிறது.
இரண்டாவது உள்ள வாக்கியம் வீட்டுக்குப் போகிறாயா அல்லது வேறு எங்காவது போகிறாயா என்ற வினாவை எழுப்புகிறது. "தானே" வில் உள்ள ஏகாரம் அந்த வாக்கியத்தை வினாவாக மாற்றுகிறது.


3. எண்


வீடு, நிலம், நகை
வீடே, நிலமே, நகையே


இரண்டாவது உள்ள வாக்கியம் வீடு, நிலம் , நகை என்ற மூன்று இருக்கிறது என்று எண்ணிக்கையை சொல்ல வருகிறது.


வீடே , நிலமே, நகையே என்று சொல்லும் போது நம்மை அறியாமலேயே நாம் அவற்றை எண்ணத் தொடங்கி விடுகிறோம். சொல்லிப் பாருங்கள்.


4. பிரிநிலை


அனைத்து மாணவர்களில் அவனே சிறந்த மாணவன்


இதில் , அந்த ஒரு மாணவனை பிரித்து காட்டுகிறது.


இராமாயணத்தில் உள்ள பாத்திரங்களில் பரதனே சிறந்த பாத்திரம்.


பரதனை பிரித்துக் காட்டுவதால், இது பிரிநிலை ஏகாரம்.



5. எதிர்மறை


நீயே கொண்டாய் என்ற வாக்கியத்தில் நீயா கொண்டாய் என்ற கேள்வி நிற்கிறது.


6. இசை நிறை


’ஏயே யிவலொருத்தி பேடியோ வென்றார்.’’


இதை இவள் ஒருத்தி என்று ஆரம்பித்து இருக்கலாம். ஏயே என்று ஆரம்பித்தது  இசை நயம் கருதி.


7. ஈற்று அசை


அசைச் சொல் என்றால் அர்த்தம் இல்லாமல், இலக்கணத்தை நிறைவு செய்யும் பொருட்டு  சேர்க்கப்படும் சொற்கள்.  Filler , buffer , மாதிரி.


 என்றுமேத்தித் தொழுவோ மியாமே


என்றும் ஏத்தி தொழுவோம் யாம் என்று நிறுத்தி இருக்கலாம். யாமே என்பதில் உள்ள  ஏ காரம் அர்த்தம் ஏதும் இன்றி நின்றது. அசைச் சொல்.


சரி, இவ்வளவு பெரிய இலக்கணம் எதற்கு ?


அதற்கும் இந்த குறளுக்கும் என்ன சம்பந்தம் ?


"ஆதி பகவன் முதற்றே உலகு "  என்ற வரியில் முதற்றே என்ற சொல்லை கவனியுங்கள்.


ஆதி பகவான் முதற்று உலகு என்று சொல்லி இருக்கலாம் அல்லவா ?


அப்படி சொல்லி இருந்தால், உலகுக்கு இறைவன் முதல் என்று அர்த்தம் வரும். அவன் மட்டும் தான் முதல் என்ற அர்த்தம் வராது.


முதற்றே என்பதில் உள்ள ஏகாரம் தேற்றப் பொருளில் வந்தது. அதாவது உறுதிப் பொருளில் வந்தது.


அவன் மட்டுமே முதல். வேறு யாரும் கிடையாது. மிக உறுதியாக சொல்கிறார் வள்ளுவர்.  


அது மட்டும் அல்ல, அவன் மட்டுமே  என்று சொல்லும் போது அவனுக்கு முன்னால் யாரும் கிடையாது. எனவே அவனை  யாரும் முதல்வனாக நியமிக்கவில்லை. வோட்டு போட்டோ, தேர்ந்து எடுத்தோ அவனை நியமிக்கவில்லை. 


ஒரே ஒரு ஏகாரம், பொருள் எப்படி மாறுகிறது ?


இலக்கணம் தெரியாவிட்டால் இவற்றை சுவைக்க முடியாது அல்லவா.


"முதற்றே உலகு"  என்ற சொற்றொடரில் "உலகு" என்று வருகிறது. உலகு என்றால் என்ன?  


உலகு என்றால் உலகம்.  சரி. உலகம் என்றால் ? இந்த பூமி, சூரியன், நிலா, கோள்கள், நட்சத்திரங்கள் போன்றவையா? 


இல்லை. 


பரிமேலழகர் உரை செய்கிறார். 


"உலகு’ என்றது, ஈண்டு உயிர்கள் மேல் நின்றது. காணப்பட்ட உலகத்தாற் காணப்படாத கடவுட்கு உண்மை கூறவேண்டுதலின், 'ஆதிபகவன் முதற்றே உலகு' என உலகின்மேல் வைத்துக்கூறினார். கூறினாரேனும்,உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க."


"உலகு’ என்றது, ஈண்டு உயிர்கள் மேல் நின்றது." - இங்கே உலகம் என்பது உயிர்களை குறிக்க வந்தது என்கிறார்.  எல்லா உயிர்களுக்கும் அவனே முதல் என்பது அர்த்தம். 


"காணப்பட்ட உலகத்தாற் காணப்படாத கடவுட்கு உண்மை கூறவேண்டுதலின்"


உயிர்கள் எங்கும் இருப்பதைக் காண்கிறோம். இந்த உயிர்களை படைத்தது யார் என்ற கேள்விக்கு விடை, "இறைவன்" என்பது. 


இதை எல்லாம் ஏன் திருவள்ளுவர் சொல்கிறார்  என்ற கேள்விக்கு விடை 


"இப்பாட்டான் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது."


கடவுளது உண்மை அல்லது இயல்பு கூறப்பட்டது என்கிறார் பரிமேலழகர். 


இவற்றை எல்லாம் நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, அது வேறு விஷயம். 


எவ்வளவு ஆழ்ந்து, சிந்தித்து எழுதி இருக்கிறார்கள் என்று பாருங்கள். இவ்வளவு நுண்மையான அறிவு உள்ள ஒருவர், தவறாக சொல்வாரா? எவ்வளவு அறிவு அறிந்தால்,  இப்படி எழுத முடியும். 


இது ஒரு சாதரணமான மனிதனால் முடியக் கூடிய காரியமா? 


அப்பேற்பட்ட அறிவு உள்ள ஒருவரின் எண்ணத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா? அவர் சொல்வது தவறாக இருக்குமா? அவர் பொய் சொல்வாரா? 


மாட்டார் என்பது என் முடிவு. 


திருக்குறளில் தவறு கண்டு பிடிக்கும் அளவுக்கு நமக்கு அறிவுத் திறன் இருக்குமா? என்று சிந்திக்க வேண்டும். 


எனவே, அவர் சொல்லியது அனைத்தையும் உள் வாங்குவோம். முடிந்தவரை கடைபிடிப்போம். 


சரியா?


இனி, அடுத்த குறளுக்கு போவோம்.  உடனே போவோமா அல்லது இரண்டு மூணு நாள் விடுமுறை எடுத்துக் கொள்வோமா? முதல் குறளை முழுவதுமாக உள் வாங்க இரண்டு மூணு நாள் தேவைப்படாதா?





Tuesday, March 30, 2021

திருக்குறள் - அகர முதல - பாகம் 5

திருக்குறள் -  அகர முதல - பாகம் 5 


அகர முதல எழுத்து எல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.


பகவன் என்றால் என்ன?


பகவன் என்றால் பகுத்துத் தருபவன் என்று பொருள். எதை பகுத்துத் தருபவன்?

அதைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால், இந்து சமயத்தின் ஆணி வேரானா கர்மா கொள்கையை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். 


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/5.html


(click the above link to continue reading)


ஒருவன் தான் செய்த வினைக்கு ஏற்ற பலன் அவனை வந்து சேரும். ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு என்பது அடிப்படைத் தத்துவம். ஆனால், வினையும் எதிர் வினையும் உடனே நிகழுமா? அப்படி நிகழ்வது இல்லை. 


நாம் செய்யும் நல்லன தீயன என்பவை 

பாவ புண்ணியங்களாக மாறி 

இன்ப துன்பங்களாக நமக்கு வந்து சேர்கின்றன 


(நல்லன தீயன ), (பாவம் புண்ணியம்), (இன்பம் துன்பம்) 


இதை புரிந்து கொள்ள வேண்டும். 


நாம் செய்யும் வினைகளுக்கு ஏற்ப நம் பாவ புண்ணியங்கள் கூடுகின்றன.


முடிந்தவரை இந்தப் பிறவியிலேயே அவற்றை நாம் அனுபவித்து விடுகிறோம். அனுபவித்து முடிக்காத வினைப் பயன்கள் அடுத்த பிறவியில் தொடரும். 


இப்படி சேமித்து வைத்த வினைகளை சஞ்சித வினை என்பார்கள். இந்த வினையின் தொகுதி பின் வரும் பிறவிகளில் நம்மைத் தொடரும். 


இந்த சஞ்சித வினையின் ஒரு பகுதியை இந்தப் பிறவியில் நாம் அனுபவிக்கிறோம். அதற்கு பிராரப்த  கர்மம் என்று பெயர். 

அப்படி அனுபவிக்கும் போது மேலும் பாவ புண்ணியங்களை சேர்த்துக் கொள்கிறோம். அதற்கு ஆகாமிய கர்மம் என்று பெயர். 


சஞ்சிதம் - பிரார்பதம்  -  ஆகாமியம் 


கொண்டுவந்தது, அனுபவிப்பது, அனுபவிக்கும் போது மேலும் உண்டாக்குவது. 


நம் சஞ்சித வினை குவிந்து கிடக்கிறது. நிறைய பாவங்களும் உண்டு, நிறைய புண்ணியங்களும் உண்டு. 


சரி, முதலில் இவனின் பாவங்களை தீர்த்து விடுவோம் என்று அடுத்து வரும் பிறவிகளில் துன்பம் மட்டுமே தந்தால் எப்படி இருக்கும்? பிறந்தது முதல் இறக்கும் வரை துன்பம் மட்டும் தான். இன்பமே கிடையாது என்றால் எப்படி இருக்கும். தாங்க முடியாது அல்லவா?


சரி, முதலில் புண்ணியம் மட்டும் தருவோம், என்று இன்பம் மட்டுமே தந்து கொண்டிருந்தால், நன்றாகத்தான் இருக்கும்.ஆனால், பின்னாளில் வெறும் துன்பம் மட்டுமே வரும். சகிக்க முடியாது. 


எனவே, இறைவன் , கருணையோடு நாம் சேர்த்து வைத்த பாவ புண்ணியங்களை  "பகுத்து",  இந்தப் பிறவியில் இவ்வளவு இன்பம், இவ்வளவு துன்பம் என்று தருகிறான்.  கொஞ்சம் துன்பம் வரும், பின் கொஞ்சம் இன்பம் வரும். இரண்டும் மாறி மாறி வரும்படி இறைவன் பகுத்துத் தருகிறான். 


கொஞ்சம் வெயில், கொஞ்சம் மழை, கொஞ்சம் குளிர், என்று வரும்போது நம் உடல் அதற்குப் பழக்கிக் கொள்கிறது. 


இப்படி, உயிர்கள் செய்த நல் வினை, தீ வினைகளை அவற்றிற்கு பகுத்துத் தருவதால் அவன் "பகவன்"  என்று அழைக்கப் படுகிறான். 


சரி, அது "முதற்றே உலகு" ?

Monday, March 29, 2021

திருக்குறள் - அகர முதல - பாகம் 4

திருக்குறள் - அகர முதல - பாகம் 4 


 அகர முதல எழுத்து எல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.


அது என்ன "ஆதி பகவன்" 


அதற்கு முன் கொஞ்சம் இலக்கணம்.


முதலில் ஒலி வடிவம்.


பின் ஒலியைக் குறிக்கும் எழுத்து வடிவங்கள்.


முதலில் எழுத்து.


எழுத்துகள் சேர்ந்து சொற்கள் உருவாகின்றன.


சொற்கள் சேர்ந்து வாக்கியம் உருவாகிறது.


இரண்டு சொற்களை சேர்க்க சில விதி முறைகள், இலக்கணங்கள் உண்டு.


வீடு கட்டும் போது இரண்டு செங்கலை வைத்தால் அவை தானாக ஒட்டிக் கொள்ளாது. அதை சேர்த்து வைக்க சிமெண்ட் அல்லது வேறு ஏதாவது ஒரு கலவை வேண்டும். அப்போதுதான் அது விழுந்து விடாமல் உறுதியாக இருக்கும்.


அது போல


இரண்டு வார்த்தைகளை சேர்க்கும் சிமென்டுக்கு தொகைமொழி என்று பெயர்.


தொகுக்கும் மொழி தொகை மொழி.


புரிகிறது அல்லவா?


தமிழிலே ஆறு வகையான தொகை மொழிகள் இருக்கின்றன.


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/4.html


(please click the above link to continue reading)


1. வேற்றுமைத்தொகை

2. வினைத்தொகை

3. பண்புத்தொகை

4. உவமைத்தொகை

5. உம்மைத்தொகை

6. அன்மொழித்தொகை


இதில் நாம் பண்புத் தொகையை மட்டும் பார்ப்போம் .


ஒரு பொருளை அல்லது செயலை மேலும் விளக்கி கூறுவது பண்புத் தொகை.


உதாரணமாக


பச்சை இலை  என்றால் இலையின் நிறம் பச்சை என்று இலையைப் பற்றி மேலும் விளக்கிக் கூறுகிறது.


உயர்ந்த மரம்


கரிய மலை


இவை எல்லாம் பண்புத் தொகைகள்.


இதில் உள்ள பச்சை, உயர்ந்த, கருப்பு என்பவை பண்புப் பெயர்கள்.


சில சமயம் பண்புப் பெயருக்கு பதிலாக இன்னோர் பெயர்ச் சொல் வரும்.


தாமரைப் பூ

தென்னை மரம்

நாகப் பாம்பு


என்பனவற்றில் தாமரை என்ற சொல் பூவைப் பற்றி மேலும் விளக்குகிறது.


வெறும் மரம் என்று சொன்னால் என்ன மரம் என்ற கேள்வி வரும். அதை விளக்குவது தென்னை என்ற சொல். இங்கே தென்னை என்ற சொல் மரத்தின் பண்பை குறிக்கிறது. தென்னை என்பது பண்புப் பெயர் அல்ல. இருந்தும் அது பண்புப் பெயரின் வேலையைச் செய்கிறது அல்லவா.


தென்னை என்று சொன்னால் போதாதா? தென்னை என்றாலே மரம் தானே. தாமரை என்றாலே பூ தானே. பின் ஏன், தாமரைப் பூ? 


வெறும் தென்னை என்றால் தென்னை ஓலை, தென்னை குருத்து என்று வேறு பல விடயங்களும் வரும். எனவே, தென்னை மரம். 


இதற்கு இரு பெயரொட்டு பண்புத் தொகை என்று பெயர்.


இரண்டு பெயர்கள் சேர்ந்து வந்து, அதில் ஒன்று மற்றொன்றின் பண்பைக் குறிப்பது.


இருபெயரொட்டு பண்புத் தொகையை பிரிக்கக் கூடாது. அவற்றை சேர்த்தே படிக்க வேண்டும்.


சரி, அதற்கும் இந்த குறளுக்கும் என்ன சம்பந்தம் ?


ஆதி பகவன் என்ற சொல்லில், பகவன் என்றாலே ஆதியில் இருந்து இருப்பவன் தான். ஆதி என்றாலே அது இறைவனைத்தான் குறிக்கும்.


ஆதி மூலமே  என்ற அந்த யானை அழைத்தது நினைவு இருக்கிறது அல்லவா.


ஆதி பகவன் என்பது இரு பெயரொட்டு பண்புத் தொகை.


இரண்டும் ஒன்றையே குறிப்பது.


பகவன் என்றால் வேறு  யாரையோ நினைத்துக் கொள்ளக் கூடாது. பலப் பல சமயங்கள் பின் நாளில் தோன்றலாம். ஒவ்வொரு சமயமும் புதுப் புது கடவுள்களை பற்றிக் கூறலாம்.


அவையெல்லாம் கருத்தில் கொள்ளக் கூடாது.


ஆதி பகவன் எவனோ அவனே உலகுக்கு முதல்.


இரு பெயரொட்டு பண்புத் தொகை பற்றி அறிந்தால் இந்த குறளை மேலும் நாம் இரசிக்க முடியும்.


இலக்கியத்தை ஆழ்ந்து அறிய இலக்கணம் அவசியம். 


பகவான் கேள்விப் பட்டு இருக்கிறோம். அது என்ன பகவன்? 


Sunday, March 28, 2021

திருக்குறள் - அகர முதல - பாகம் 3

திருக்குறள் - அகர முதல - பாகம் 3 


 அகர முதல எழுத்து எல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.


எல்லா மொழிகளுக்கும் அகரம் எப்படி முதன்மையாக இருக்கிறதோ அது போல அனைத்து உலகுக்கும் இறைவன் முதலாக இருக்கிறான். அகரம் எப்படி முதன்மை பெற்றது என்பதை முந்தைய ப்ளாகுகளில் சிந்தித்தோம். 


அகரம் மொழிகளுக்கு முதல் அது போல உலகத்துக்கு இறைவன் முதல் என்றால், இறைவன் அந்த எழுது 'அ' போல இருப்பானா என்று கேட்கலாம். 


யாராவது கேட்டு இருப்பார்கள். குதர்க்கவாதிகள் அன்றும் இருந்திருப்பார்கள் போல் இருக்கிறது. புலி என்பது பூனை போல் இருக்கும் என்றால், 'ஆஹா, அப்படி என்றால் புலி பால் குடிக்குமா ?" என்று கேட்கும் அறிவாளிகளைக் கொண்டது இந்த உலகம். 


பரிமேலழகர் அதற்கும் விடை சொல்கிறார். 


"இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டுவமை"


என்று உரை எழுதுகிறார். 


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/blog-post_28.html


(click the above link to continue reading)


இது வடிவம், ஓசை பற்றி வந்தது அல்ல, தலைமை பண்பு பற்றி வந்தது என்கிறார். 


அது கூடவே, "எடுத்துக்காட்டுவமை" என்றும் கூறுகிறார். 


அது என்ன "எடுத்துக்காட்டுவமை"


கொஞ்சம் இலக்கணம் படிப்போம். 


அணி என்றால் அணிகலன். மோதிரம், வளையல், சங்கிலி போன்ற அணிகலன்கள். இவை நமக்கு அழகு செய்பவை. அது போல, பாடலுக்கு அழகு செய்பவை அணி எனப்படும்.


உவமை அணி என்றால், ஒன்றைச் சொல்லி மற்றதை விளங்க வைப்பது.


நிலவு போன்ற முகம், தாமரை போன்ற பாதம் என்று சொல்லும் போது முகத்தை நிலவுக்கு உவமையாக்கி சொல்கிறோம்.


இதில் இரண்டு வகை உண்டு.


உவமை அணி


எடுத்துக்காட்டு உவமை அணி என்று.


நிலவு போல முகம் என்றால் உவமை அணி.


நிலவு முகம் என்றால் எடுத்துக்காட்டு உவமை அணி. 


இதில் "போல" என்ற உவம உருபு இல்லை. அதை நாம் தான் எடுத்துக் காட்ட வேண்டும்.


மதி முகம் என்றால் மதி போன்ற முகம்.


அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு.


என்ற குறளில் 


அகர முதல எழுத்து எல்லாம் 
ஆதி பகவான் முதற்றே உலகு 


என்ற இரண்டு வரிகள் இருக்கின்றன. இரண்டுக்கும் என்ன சம்பந்தம் ?


நடுவில் "போல" என்ற உவம உருபு இல்லை. அகரம் மொழிக்கு முதலாக இருப்பது "போல", இறைவன் உலகுக்கு முதலாக இருக்கிறான் என்று பொருள் கொள்ள வேண்டும். 


இப்போது ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். எடுத்துக்காட்டு உவமை அணி என்று ஒன்று இல்லாவிட்டால், இந்த இரண்டு வரியும் ஒன்றுக்கொன்று எப்படி சம்பந்தப்படும் ? தனித்தனியான இரண்டு வரிகள் இருக்கும். ஒரு பொருளும் இருக்காது. 


போல என்ற அந்த ஒரு சொல்  இந்த குறள் என்ன சொல்ல வந்ததோ அதை நமக்கு  உணர்த்துகிறது அல்லவா ?


உவமைக்கு இரண்டு வேலை இருக்கிறது. 



ஒன்று ஒன்றை உயர்வு படுத்திச் சொல்வது. 



இரண்டாவது, தெரிந்ததை வைத்து தெரியாதை விளங்கச் செய்வது. 


உதாரணமாக,


அவளுடைய முகம் நிலவு போல இருந்தது என்றால் முகமும் தெரியும், நிலவும் தெரியும். எனவே , இங்கே உவமை முகத்தின் அழகை உயர்த்திச் சொல்ல வந்தது. 



புலி இருக்கிறதே அது ஒரு பெரிய பூனை போல இருக்கும் என்று சொல்லும்போது பூனை ஒன்றும் புலியை விட உயர்ந்தது அல்ல. ஆனால் நாம் பூனையை பார்த்து இருப்போம். வீட்டிலேயே இருக்கும். புலியை பாத்து இருக்க மாட்டோம். எனவே, தெரிந்த பூனையை வைத்து தெரியாத புலியை புரிய வைக்க உவமை பயன்படுகிறது. 


இது ஒரு புறம் இருக்கட்டும். 


உவமை சொல்லும் போது , ஒரு படி உவமை என்று ஒன்று உண்டு. அதாவது உவமை சொல்லப்பட்ட பொருளின் ஒரே ஒரு குணம் தான் பொருந்தும். எல்லாவற்றையும் பொருத்திப் பார்த்தால் அர்த்தம் அனர்த்தம் ஆகும். 


உதாரணமாக,


நிலவு போன்ற முகம் என்றால், குளிர்ந்த ஒளி பொருந்திய முகம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.  நிலவில் இருப்பது போல அவளின் முகத்தில் பள்ளம் மேடு இருக்குமா ? அவளும் நிலவு போல வளர்ந்து வளர்ந்து தேய்வாளா என்று கேட்கக்  கூடாது.நிலவின் குளிர்ச்சி மட்டும் தான் இங்கே எடுத்துக் கொள்ள வேண்டும். 


இறைவனைப் பற்றி சொல்ல வருகிறார் வள்ளுவர். 


இறைவனை எதற்கு உதாரணமாகச் சொல்லலாம் ? இறைவனை விட உயர்ந்தது எதுவும் இல்லை. எனவே, உயர்ந்ததைச் சொல்லி இறைவன் அது போல இருப்பான் என்று சொல்ல முடியாது. 


இறைவன் அறிய முடியாதவன். எனவே, அறிந்த ஒன்றை வைத்து அறியாத இறைவனை விளங்கச் செய்ய வேண்டும். 


எனவே, அகரத்தை எடுக்கிறார் வள்ளுவர். 


இங்கே,அகரத்துக்கும் இறைவனுக்கும் எதில் சம்பந்தம் ?


"தலைமை பண்பு பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை " என்கிறார் பரிமேலழகர். 


அதாவது, அகரம் நமக்குத் தெரியும். அது போல இறைவன் தலைமை பண்பு கொண்டவன் என்பதற்காக "தலைமை பண்பு பற்றி வந்த எடுத்துக் காட்டு உவமை" என்றார். 


எப்படி அகரம் எழுத்துக்கு முதலாக இருக்கிறதோ அது போல இறைவன் உலகுக்கு முதலாக இருக்கிறான்.


சரி, ஒருவன் தலைவன் என்றால் அவனை யாரோ தேர்ந்து எடுத்து இருக்க வேண்டும் அல்லவா ? முதல்வரோ, பிரதமந்திரியோ மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டு தலைவராக வருகிறார்கள். 


அப்படி என்றால் இறைவனை மக்கள் தேர்ந்து எடுத்தார்களா ?


எப்படி இறைவன் முதல்வனான் ?


இலக்கணம் அதையும் விளக்குகிறது.


எப்படி என்று மேலும் சிந்திப்போம். 

Saturday, March 27, 2021

திருக்குறள் - கடவுள் வாழ்த்து - அகர முதல - பாகம் 2

திருக்குறள் - கடவுள் வாழ்த்து - அகர முதல - பாகம் 2 




பாடல் 

அகர முதல எழுத்து எல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.


பொருள் 

இதன் முதல் பாகத்தை கீழே உள்ள இணைய தளத்தில் காணலாம். 

https://interestingtamilpoems.blogspot.com/2021/03/1_26.html


இங்கே "அகர முதல" என்பதில் முதல் என்றால் என்ன? முதல் எழுத்தாக இருக்கிறது என்று அர்த்தமா ?


இல்லை. 


"நான் வகுப்பில் முதலாவதாக வருவேன்" என்றால், பத்து மணி வகுப்புக்கு எட்டு மணிக்கே போய் உட்கார்ந்து கொள்வது அல்ல முதலாவதாக வருவது. படிப்பில், விளையாட்டில், திறமையில் முதலாவதாக வருவது. அதாவது முதன்மை பண்பு இருக்க வேண்டும். 


அப்படி இந்த அ என்ற எழுத்துக்கு என்ன முதன்மை பண்பு இருக்கிறது? மற்ற எழுத்துகளுக்கு இல்லாத ஒரு சிறப்பு அகரத்துக்கு என்ன இருக்கிறது? 


அதற்கு முன்னால், இறைவன், கடவுள் பற்றிய தர்க்கம் எழும் போது கடவுளை நம்புபவர்கள் சொல்லுவது "ஒரு பொருள் இருக்கிறது என்றால் அதை செய்த ஒருவன் இருக்க வேண்டும் அல்லவா? அது போல இந்த உலகம் இருக்கிறது என்றால் அதை தோற்றுவித்தவன் ஒருவன் இருக்க வேண்டும் அல்லவா" என்பது அவர்கள் வாதம். 


அதற்கு எதிர் வாதம் செய்பவர்கள் சொல்வது, "எதற்குமே ஒரு காரிய கர்த்தா வேண்டும் என்றால், இறைவனை தோற்றுவித்தவர் யார்" என்று வாதம் செல்லும். இறைவன் தானகவே தோன்றி விட்டான் என்றால் இந்த உலகமும் தானாகவே தோன்றி விட்டது என்று ஏன் சொல்லக் கூடாது என்ற கேள்வி வரும். 


இப்போது அகரத்துக்கு வருவோம். 


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/2_27.html


(click the above link to continue reading)


ஒவ்வொரு எழுத்தையும் எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதற்கு ஒரு இலக்கணம் இருக்கிறது. நினைத்த மாதிரி எல்லாம் உச்சரிக்க முடியாது. அதற்கென்று ஒரு வரை முறை இருக்கிறது. 


ஒலி தோன்ற மூன்று வேண்டும். காற்று வெளிப்பட வேண்டும். அப்புறம் அசையும் உறுப்புகள், அசையா உறுப்புகள் என்ற இரண்டு வேண்டும். 


நாக்கு, உதடு, கீழ் தாடை - அசையும் உறுப்பு. 


பல், மேல் அன்னம் - அசையா உறுப்பு. 


தொண்டையில் இருஇருந்து வரும் காற்றை இந்த உறுப்புகளின் மூலம் நாம் வேறு படுத்தலாம். அப்போது வேறு வேறு ஒலி உண்டாகும். 


வாயைத் திறந்தாலே போதும், அ என்ற ஓசை வந்து விடும் என்கிறது நன்னூல் சூத்திரம். 


அவற்றுள்  

முயற்சியுள் அஆ அங்காப்புடைய (நன்னூல்-76) 


அங்காப்பு என்றால் வாயைத் திறப்பது. 


மற்ற ஒலிகளுக்கு வாயை குவிக்க வேண்டும் (உ) உதட்டை விரிக்க வேண்டும் (ஈ), நாக்கை மடிக்க வேண்டும் (ழ). 


(இ, ஈ, எ, ஏ, ஐ அங்காப்போடு 

அண்பல் முதல்நா விளிம்புற வருமே. (நன்னூல்-77)


உ, ஊ, ஒ, ஓ, ஔ இதழ் குவிவே.(நன்னூல்-78)


என்று ஒவ்வொரு எழுத்தும் எப்படி உச்சரிக்க வேண்டும் என்று இலக்கணம் இருக்கிறது. ஆர்வம் உள்ளவர்கள் மேற்கொண்டு நன்னூலில் காண்க) 


 உறுப்புகளின் உராய்வில் உண்டாவது தான் மற்ற எழுத்துக்கள். ஆனால் அ என்ற ஓசை மட்டும் எந்த உறுப்பும் உராய்வு இல்லாமல் தானே வெளிப்படும். 


எனவே அ என்ற எழுத்துக்கு முதன்மை இடம். அது தானே தோன்றும். 


சரி, தானே தோன்றியது மட்டும் அல்ல,  பிற உறுப்புகளின் துணை கொண்டு ஏனைய எழுத்துகளை உண்டாக்கும். 


எனவே அகரத்துக்கு முதலிடம். 


அந்த அகரம் போல, இறைவன் தானே தோன்றி, மற்றவற்றையும் தோற்றிவிப்பான். 


எனவே, அகரத்தைச் சுட்டி, அதுபோல இறைவன் உலகுக்கு முதலானவன் என்றார். 


இந்த குறளை உற்று நோக்கினால் ஒன்று புரியும் 


முதல் வரிக்கும், இரண்டாவது வரிக்கும் ஒரு ஒரு தொடர்பும் இல்லை. 


அகர முதல எழுத்து எல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.


இப்படி ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாமல் இரண்டு வரியை வள்ளுவர் எழுதுவாரா?


சிந்திப்போம். 

 


திருக்குறள் - நூல் கட்டமைப்பு

 திருக்குறள் - நூல் கட்டமைப்பு 


அறம், பொருள், இன்பம், வீடு என்ற இந்த நான்கில் வீடு என்பதை இலக்கண வகையால் சொல்ல முடியாது என்பதால் அதை நேரடியாக சொல்லவில்லை என்று பார்த்தோம்.

திருக்குறளின் கட்டமைப்பிலே இன்னும் இரண்டு செய்திகள் விடுபட்டுப் போய் விட்டன. அவற்றை இங்கே பார்க்கலாம். 


வாழ்வின் நான்கு கூறுகளான பிரமச்சரியம், இல்லறம், வானப்ரஸ்தம், துறவறம் என்ற நான்கு இருக்கிறதே அதில் வள்ளுவர் இல்லறம் மற்றும் துறவறம் மட்டும் தான் எடுத்துக் கொள்கிறார். 


ஏன்?


மற்ற இரண்டும் கிடையாதா என்றால், 


பிரமச்சரியம் என்பது இல்லறத்தின் ஒரு கூறு, அது போல வானப்ரஸ்தம் என்பது துறவறத்தின் ஒரு கூறு என்பதால், நான்கான அறங்களை இரண்டாக சுருக்கிக் கொள்கிறார் வள்ளுவர். 


அடுத்தது, குறளின் கட்டமைப்பிலே முதலில் பால் என்ற பிரிவு (அறத்துப் பால், பொருட்பால், காமத்துப் பால்) உள்ளது. 


அதற்குக் கீழே, இயல் என்ற பிரிவு இருக்கிறது. அறத்துப் பாலில் இல்லறவியல், துறவறவியல் என்று இரண்டு இயல்கள். 


நூல் தொடங்கிய பின், நூலுக்கு முன்னுரை எழுத வேண்டும். பாயிரம் என்பது மிக முக்கியமான ஒன்று. வள்ளுவர் பாயிரம் எழுதி இருக்கிறாரா?


வள்ளுவர் தனியே பாயிரம் எழுதவில்லை. முதல் நான்கு அதிகாரங்கள் பாயிரவியல் என்று சொல்லிவிட்டார். 


அதாவது, திருக்குறளுக்கு முன்னுரையாக நான்கு அதிகாரங்கள். 


அவையாவன 


- கடவுள் வாழ்த்து 

- வான் சிறப்பு 

- நீத்தார் பெருமை 

- அறன் வலியுறுத்தல் 


என்ற நான்கும். 


இந்த நான்கு அதிகாரங்களும் குறளுக்கு முன்னுரை அல்லது பாயிரம். 


அந்தப் பாயிரவியலில் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்தின் முதல் குறளுக்கு கொஞ்சம் அர்த்தம் நேற்று சிந்தித்தோம். 

மேலும் சிந்திக்க இருக்கிறோம். 


இந்த செய்தி விட்டுப் போய் விட்டதால், நடுவில் இதைக் சொல்ல வேண்டி இருந்தது. 


நாளை, குறளை தொடர்வோம். 



Friday, March 26, 2021

திருக்குறள் - கடவுள் வாழ்த்து - அகர முதல - பாகம் 1

 திருக்குறள் - கடவுள் வாழ்த்து - அகர முதல - பாகம் 1 


இப்போது முதல் குறளுக்குப் போகிறோம். எல்லோரும் அறிந்தது தான். 


பாடல் 

அகர முதல எழுத்து எல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/1_26.html

(click the above link to continue reading)


அகர முதல = அகரத்தை முதலாகக் கொண்டது 

எழுத்து எல்லாம்  = எல்லா எழுத்துக்களும் 

ஆதி பகவன் = ஆதி பகவனை 

முதற்றே உலகு. = முதலாகக் கொண்டது இந்த உலகம். 


இவ்வளவுதான் இந்த குறளுக்கு பொருள். இதற்குள் புதைந்து கிடக்கும் நுட்பம் நம்மை வியக்க வைக்கிறது. 


எழுத்துக்கு அகரம் எப்படி முதலோ அது போல உலகுக்கு இறைவன் முதல். 


இதில் என்ன ஆழம் இருந்து விடப் போகிறது?


இறைவன் என்றால் யார்? அவன் எப்படி இருப்பான் ? அவன் தொழில் என்ன? அவனை எப்படி நாம் அறிந்து கொள்வது? எப்படி அவனைப் பற்றி சிந்திப்பது ? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை தருகிறார் வள்ளுவர். 


தெரியாத ஒன்றை, காணாத ஒன்றை எப்படி விளக்குவது ? தெரிந்த ஒன்றைச் சொல்லி, தெரியாததை விளங்கச் செய்ய வேண்டும். 


உதாரணமாக, ஒரு சிறுவன், புலியை பார்த்ததே இல்லை. புலி எப்படி இருக்கும் என்று கேட்கிறான்.  அவனுக்கு எப்படி சொல்வது?


"நீ பூனை பார்த்து இருக்கிறாய் அல்லவா? புலி என்பது ஒரு பெரிய பூனை மாதிரி இருக்கும்" என்று சொல்லி விளங்கச் செய்வது போல. 


இறைவனின் தன்மை என்ன என்று கேட்டால், மொழிக்கு அகரம் எப்படியோ உலகுக்கு இறைவன்.


மொழிக்கு அகரம் எப்படி என்றால் என்ன அர்த்தம்? அது தெரிந்தால் அல்லவா உலகுக்கு இறைவன் எப்படி என்று அறிந்து கொள்வது.


உலகிலே எத்தனையோ மொழிகள் இருக்கின்றன. மொழி என்பது எழுத்து, சொல், வாக்கியம், இலக்கணம் இவற்றால் புனையப் படுவது. 


மொழிகள் வரி வடிவம், ஒலி வடிவம் என்ற இரண்டு பகுதிகளைக் கொண்டது.  சில மொழிகளுக்கு வரி வடிவம் கிடையாது. ஒலி வடிவம் மட்டும் தான் உண்டு. 


ஒலி தான் ஜீவ நாடி. வரி வடிவம் இல்லாமல் கூடப் போகலாம். அல்லது காலப் போக்கில் மாறியும் போகலாம். இன்று திருவள்ளுவர் நேரில் வந்தால், அவரிடம் திருக்குறளைக் கொடுத்து வாசிக்கச் சொன்னால் அவரால் முடியாது. காரணம், அவர் காலத்தில் இருந்த வரிவடிவம் மாறிப் போய் விட்டது. ஆனால் ஒலி வடிவம் மாறாமல் அப்படியே இருக்கிறது. 


"அகர முதல எழுத்து" என்றால் எல்லா எழுத்தும் (மொழியும்) நம் "அ" வன்னா போல இருக்காது. ஹிந்தியில் உள்ள அகரம் வேறு மாதிரி இருக்கும். ஆங்கிலத்தில் உள்ள 'A" வேறு மாதிரி இருக்கிறது. 


ஆனால், அவற்றின் ஒலி வடிவம் "அ" என்ற சத்ததிலேயே பிறக்கிறது. 


அதை ஆதி நாதம் என்று சொல்லுவார்கள். 


உலகில் உள்ள எல்லா மொழியும் 'அ' என்ற சப்த்தத்தில் இருந்துதான் பிறக்கின்றன. எப்படி உலகில் உள்ள எல்லா மொழிக்கும் அ என்ற சப்த்தம் அடிப்படையாக இருக்கிறதோ, அது போல அனைத்து உலகுக்கும் இறைவன் அடிப்படை என்கிறார். 


அகர முதல எழுத்து "எல்லாம்" 


என்று கூறினார். "எல்லாம்" என்றால் அனைத்து எழுத்துகளுக்கும் அ தான் அடிப்படை. அதில் விதி விலக்கே கிடையாது. 


எழுத்துக்கு அகரம் எப்படி தலைமையோ அது போல உலகுக்கு இறைவன் தலைவன் என்றார். 


அ என்ற சப்தத்தை மட்டும் வைத்துக் கொண்டு அது தான் தலைமை என்று எப்படி சொல்ல முடியும்?


மேலும் சிந்திக்க இருக்கிறோம். 






Thursday, March 25, 2021

திருக்குறள் - கடவுள் வாழ்த்து - அதிகாரப் பாயிரம் - பாகம் 2

 

திருக்குறள் - கடவுள் வாழ்த்து - அதிகாரப் பாயிரம் - பாகம் 2


இப்போது நூலுக்குள் நுழைகிறோம்.  


எடுத்துக் கொண்ட காரியம் இனிதே முடிதற் பொருட்டு இறை வணக்கம் கூறுகிறார் என்று உரைப் பாயிரத்தை முடித்த பரிமேலழகர், இப்போது முதல் அதிகாரமான இறை வணக்கத்தை எடுத்துக் கொள்கிறார். 


உரை 


"அஃதாவது, கவி தான் வழிபடு கடவுளையாதல், எடுத்துக்கொண்ட பொருட்கு ஏற்புடைக் கடவுளையாதல் வாழ்த்துதல். அவற்றுள், இவ்வாழ்த்து ஏற்புடைக் கடவுளை என அறிக. என்னை? சத்துவ முதலிய குணங்களான் மூன்றாகிய உறுதிப்பொருட்கு அவற்றான் மூவராகிய முதற்கடவுளரோடு இயைபுண்டாகலான். அம்மூன்று பொருள்களையும் கூறலுற்றார்க்கு அம் மூவரையும் வாழ்த்துதல் முறைமையாகலின், இவ்வாழ்த்து அம்மூவர்க்கும் பொதுப்படக் கூறினார் என உணர்க."

இதன் முதல் பாகத்தை கீழே உள்ள இணைய தளத்தில் காணலாம். 

https://interestingtamilpoems.blogspot.com/2021/03/1_24.html


இப்போது வள்ளுவர் தான் வழிபடுகின்ற கடவுளுக்கு வாழ்த்துக் கூறினாரா அல்லது எடுத்துக் கொண்ட பொருளுக்கு ஏற்ற கடவுளுக்கு வாழ்த்துக் கூறினாரா என்ற கேள்வியோடு முந்தைய ப்ளாக் நின்றது. 


தொடர்வோம். 


அவற்றுள், இவ்வாழ்த்து ஏற்புடைக் கடவுளை என அறிக. என்னை?


பரிமேலழகர் கூறுகிறார், வள்ளுவர் பாடியது ஏற்புடைய கடவுளை தான் என்கிறார். 


என்று சொன்னது மட்டும் அல்லாமல், "என்னை?" என்று கேள்வியும் எழுப்புகிறார். 


அந்த கேள்விக்கு பதில் தெரியும் முன்னால், நாம் இன்னொன்றை தெரிந்து கொள்ள வேண்டும். 


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/2_25.html


(click the above link to continue reading)


மனித மனம் மூன்று வித நிலைகளால் ஆனது - சாத்வீகம், தாமசம், ராஜசம் என்ற முக்குண கலவை தான் மனித மனம். 


மனித மனம் மட்டும் அல்ல, இந்த உலகம் அனைத்துமே இந்த மூன்று குண கலவைகளால் ஆனது என்கிறார்கள். 


நாம் நினைக்கிறோம் பொருள்களுக்கு குணம் உண்டு என்று. 


மல்லிகை என்ன்றால் வெள்ளையாக இருக்கும், புலி என்றால் பாயும், மீன் என்றால் நீந்தும், வீணை என்றால் நல்ல இசை தரும் என்று நாம் நினைக்கிறோம். 


ஆழமான செய்தி என்ன என்றால், குணங்கள் பொருளில் புதைந்து கிடக்கவில்லை. குணங்களின் தொகுதிதான் பொருள்கள்.  


உதாரணமாக, மல்லிகையில் இருந்து வெண்மை என்ற குணத்தை எடுத்து விடுவோம், மென்மை என்ற குணத்தை எடுத்து விடுவோம், இனிய மணத்தை எடுத்து விடுவோம்,  பச்சை நிறம் என்ற அதன் காம்பின் குணத்தை எடுத்து விடுவோம். பின் என்ன நிற்கும்? எது நின்றாலும், அது மல்லிகையாக இருக்காது அல்லவா?


குணங்களின் தொகுதி தான் பொருள்கள், நீங்கள், நான் மற்றும் இந்த பிரபஞ்சம் அனைத்தும். 


குணங்கள் என்று எடுத்துக் கொண்டால், சுவை என்ற குணம் ஆறு பகுதிகளை கொண்டது. இசை என்ற குணம் ஏழு ஸ்வரங்களை கொண்டது என்று பகுக்கிறோம். 


இவை அனைத்துக்கும் அடிப்படையாக இருப்பது சாத்வீகம், தாமசம், ரஜோ என்ற இந்த மூன்று குணங்கள் தான் என்கிறார்கள். 


இந்த மூன்று குணங்களும் பல்வேறு விதமாக பாதிக்கப் படுகிறது. நாம் உண்கின்ற உணவு, விடும் மூச்சு, அருந்தும் பானங்கள், போன்றவை இந்த மூன்று குணங்களை பாதிக்கின்றன.


இந்த மூன்று குணங்களுக்கும் நிறங்களுக்கும் ஒரு தொடர்பு உண்டு. 


சாத்வீகம் - வெள்ளை நிறம். 

ராஜசம் - சிவப்பு நிறம் 

தாமசம் - கறுப்பு நிறம். 


சரி இந்த கதை எல்லாம் எதுக்கு? அதுக்கும் இந்த குறளுக்கும் என்ன சம்பந்தம்?


சம்பந்தம் இருக்கிறது. 


"சத்துவ முதலிய குணங்களான் மூன்றாகிய உறுதிப்பொருட்கு அவற்றான் மூவராகிய முதற்கடவுளரோடு இயைபுண்டாகலான்."


அதாவது, சத்துவம் (சாத்வீகம்) முதலிய குணங்களால் உறுதிப் பொருள்களுக்கு அவற்றிற்கு தொடர்பு உடைய முதற் கடவுள் இருக்கிறது. 


இதை சற்று விளங்குவோம். 


இந்த மூன்று குணங்களுக்கும் மூன்று கடவுள்களை தொடர்பு படுத்திச் சொல்கிறார்கள். 


சாத்வீகத்திற்கு பிரமன் 

ராஜசத்துக்கு திருமால் 

தாமசத்துக்கு உருத்திரன் 


அது எப்படி சொல்ல முடியும்? எங்க கடவுளை அந்த ஒரு குணத்தோடு எப்படி தொடர்பு படுத்திச் சொல்லலாம். எங்க ஆள் எல்லாத்துக்கும் அவர் தான் தலைவர் என்று ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் கடவுளை பற்றி அப்படித்தான் சொல்வார்கள். 


குணங்கள் என்பது சக்தியின் வெளிப்பாடு. 


இப்போது நம் கடவுள்கள் அணிந்திருக்கும் உடைகளைப் பாருங்கள். அவர்கள் இருக்கும் இடம், அவர்களது வாகனம் முதலியவற்றை பாருங்கள். 


சரஸ்வதி - வெள்ளை ஆடை உடுக்கிறாள். வெண் தாமரை மலரில் இருக்கிறாள். வெண்மையான அன்னத்தின் மேல் இருக்கிறாள். கல்விக்கு அவள் தான் கடவுள். அது சாத்வீக சக்தி. அந்த சக்தியின் துணைவர் பிரமன். 


இலக்குமி - சிவந்த ஆடை உடுத்துகிறாள் -  சிவந்த தாமரை மலரில் வசிக்கிறாள். ஆடை ஆபரணங்கள் என்று இருக்கிறாள்.  செல்வத்தை தருகிறாள். அது ரஜோ குணம். அந்த சக்தியின் துணைவர் திருமால். 


சக்தி - காளி, சூலம் கையில் ஏந்தி நிற்கிறாள். சிம்ம வாகனம். கையில் வெட்டிய தலை. அழிக்கிறாள். அது தமோ குணம். அவளின் துணைவர் உருத்திரன். 


எனவே, மூன்று குணங்களுக்கும் மூன்று முதல் தெய்வங்கள் இருக்கிறார்கள். 


"அம்மூன்று பொருள்களையும் கூறலுற்றார்க்கு"


வள்ளுவர் சொல்லப் புகுந்தது என்ன ? 


அறம், பொருள், இன்பம்


அறம் - சாத்வீக குணம். 

பொருள் = ராஜச குணம். 

இன்பம் = காமம் தாமச குணம்.


எனவே அவர் எடுத்துக் கொண்ட பொருளும் இந்த முக்குண தொடர்பு உடையவை. 


"அம் மூவரையும் வாழ்த்துதல் முறைமையாகலின், இவ்வாழ்த்து அம்மூவர்க்கும் பொதுப்படக் கூறினார் என உணர்க."


எனவே அந்த மூன்று கடவுள்களையும் பொதுவாகக் கூறினார் என்று கொள்க என்று பரிமேலழகர் முடிக்கிறார். 


மீண்டும் ஒரு முறை படியுங்கள் - நிதானமாக - எவ்வளவு ஆழமாக சிந்தித்து இருக்கிறார்கள் என்று புரியும். 


இனி அடுத்த ப்ளாகில் முதல் குறளுக்குள் போவோம். 







கம்ப இராமாயணம் - அறத்தினால் அன்றி

கம்ப இராமாயணம் - அறத்தினால் அன்றி 


வாழ்க்கை என்பதே ஒரு போர் தான். போர் என்றால் கத்தி, துப்பாக்கி எடுத்துக் கொண்டு போர் முனை சென்று போர் செய்வது மட்டும் அல்ல, படித்து நல்ல மதிப்பெண் எடுப்பதும் ஒரு போர் தான், வேலையில் சம்பள உயர்வு பெற, பதவி உயர்வு பெற பாடுபடுவதும் போர் தான், கணவன்/மனைவி மன வேற்றுமைகளை வென்று எடுப்பதும் போர் தான். 


பலர் நினைப்பது உண்டு, நான் நிறைய படித்த அறிவாளி, என்னிடம் செல்வம் இருக்கிறது, ஆள், அம்பு, சேனை, அதிகாரம் எல்லாம் இருக்கிறது, நான் நினைத்தால் எதையும் வெல்வேன் என்று. 


முதல் நாளில் போரில் இராவணன் எல்லாம் இழந்து நிற்கிறான். இராமன் வெற்றி பெற்று விட்டான். 


அப்போது இராமன், இராவணனைப் பார்த்துக் கூறுகிறான் 


"அறம் வழியில் அல்லாது தன் திறமையால், வலிமையால் வெற்றி கொள்வது என்பது தேவர்களாலும் முடியாத ஒன்று. இதை நீ மனதில் வைத்துக் கொள். உன் ஊருக்கு திரும்பிப் போக பறக்கிறாய். போ. நான் நினைத்தால் உன்னை இப்போது கொன்று விட முடியும்.  நான் உன்னை கொல்ல நினைக்கவில்லை. உன்னைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது" 


என்று.


பாடல் 


 'அறத்தினால் அன்றி, அமரர்க்கும் அருஞ் சமம் கடத்தல்

மறத்தினால் அரிது என்பது மனத்திடை வலித்தி;

பறத்தி, நின் நெடும் பதி புகக் கிளையொடும்; பாவி!

இறத்தி; யான் அது நினைக்கிலென், தனிமை கண்டு இரங்கி.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/blog-post_25.html


(click the above link to continue reading)


 'அறத்தினால் அன்றி = அறத்தின் வழி செல்லாமல் 


அமரர்க்கும் = தேவர்களுக்கும் 


அருஞ் சமம் கடத்தல் = பெரிய போர்களை வெல்வது 


மறத்தினால் அரிது = வலிமையால் என்பது கடினம் 


என்பது = என்பதை 


 மனத்திடை வலித்தி; = நீ (இராவணா) மனதில் ஆழ பதிந்து கொள் 


பறத்தி, = பறக்கிறாய் (அவசரப் படுகிறாய்) 


நின் = உன்னுடைய 


நெடும் பதி =பெரிய ஊருக்கு 


புகக் = செல்ல 


கிளையொடும்; = உறவினர்களோடு 


பாவி! = பாவச் செயல்கள் புரிந்தவனே 


இறத்தி; = இப்போது நான் நினைத்தால் நீ இறந்து போவாய் 


யான் அது நினைக்கிலென், = உன்னைக் கொல்வதைப் பற்றி நான் நினைக்கவில்லை 


தனிமை கண்டு இரங்கி. = உன் தனிமையை கண்டு இரக்கப்பட்டு 


இந்தப் பாடலில் உள் புதைந்து கிடக்கும் அர்த்தங்கள் பல. 


முதலாவது,  எப்போவாவது நாம் வெற்றி பெற்றால் என்ன நினைப்போம்? என் திறமை, என் உழைப்பு, என் சாமர்த்தியம் என்று நினைப்போம். தோல்வி அடைந்தால் ? விதி, மற்றவர்களின் சூழ்ச்சி, சதி என்று மற்றவற்றின் மேல் பழி போடுவோம்.  இங்கே இராமன் வென்று நிற்கிறான். அவன் சொல்கிறான், "இது என் வெற்றி அல்ல. அறத்தின் வெற்றி" என்று.  அந்த நிதானம் வேண்டும். 


இரண்டாவது, இராவணன் தோற்றுப் போய் நிற்கிறான். அவனிடம் திறமை இல்லாததால் அவன் தோற்கவில்லை. அவனிடம் ஏராளமான வீரம் இருக்கிறது, படை பலம் இருக்கிறது,  வர பலம் இருக்கிறது. எல்லாம் இருந்தும் தோற்றான். ஏன்?  "பாவி" என்கிறான் இராமன். பாவம் செய்ததால் தோற்றான். பாவம் செய்து வெற்றி பெற முடியாது.


மூன்றாவது, நமக்கு தீமை செய்த ஒருவனுக்கு தீமை நாம் திருப்பி அவனுக்கு ஒரு தீமை செய்யும் வாய்ப்பு கிடைத்தால் தீமை செய்யாமல் விடுவோமா? சந்தோஷமாக செய்வோம் அல்லவா?   இராமன் அவ்வாறு செய்யவில்லை. இராமன் நினைத்து இருந்தால், போர் முதல் நாளிலேயே முடிந்து இருக்கும். "உன்னை கொல்ல நான் நினைக்கவில்லை" என்கிறான். அந்த பகைவனுக்கும் இரங்கும் பண்பு வேண்டும். 


இன்னா செய்தாரை ஒறுத்தல் , அவர் நாண நன்னயம் செய்து விடல் 


என்று கூறிய மாதிரி.


ஒரு நண்பனிடமோ, கணவன்/மனைவியிடமோ ஒரு வாதத்தில் நாம் வென்று விடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம், அதை பெரிதாக்கி, "பார்த்தாயா, நான் சரி, நீ தவறு" என்று மேலும் அவர்களை வெறுப்பு ஏத்தக் கூடாது. சரி தோற்று விட்டாயா, பரவாயில்லை. நாம் அன்போடு இருப்போம் என்று இருக்க வேண்டும். 


இராவணனிடம் இராமன் அவ்வாறு இருந்தான். 


உறவுகளுக்குள் நம்மால் அவ்வாறு இருக்க முடியாதா?


கதை ஒரு புறம்.  கவிதை ஒரு புறம். வாழ்கை தத்துவம் இன்னொரு புறம். எவ்வளவு பெரிய பொக்கிஷம் இராமாயணம். படிப்போம். உயர்வோம். 



Wednesday, March 24, 2021

திருக்குறள் - கடவுள் வாழ்த்து - அதிகாரப் பாயிரம் - பாகம் 1

திருக்குறள் - கடவுள் வாழ்த்து - அதிகாரப் பாயிரம் - பாகம் 1 


இப்போது நூலுக்குள் நுழைகிறோம்.  


எடுத்துக் கொண்ட காரியம் இனிதே முடிதற் பொருட்டு இறை வணக்கம் கூறுகிறார் என்று உரைப் பாயிரத்தை முடித்த பரிமேலழகர், இப்போது முதல் அதிகாரமான இறை வணக்கத்தை எடுத்துக் கொள்கிறார். 


உரை 


"அஃதாவது, கவி தான் வழிபடு கடவுளையாதல், எடுத்துக்கொண்ட பொருட்கு ஏற்புடைக் கடவுளையாதல் வாழ்த்துதல். அவற்றுள், இவ்வாழ்த்து ஏற்புடைக் கடவுளை என அறிக. என்னை? சத்துவ முதலிய குணங்களான் மூன்றாகிய உறுதிப்பொருட்கு அவற்றான் மூவராகிய முதற்கடவுளரோடு இயைபுண்டாகலான். அம்மூன்று பொருள்களையும் கூறலுற்றார்க்கு அம் மூவரையும் வாழ்த்துதல் முறைமையாகலின், இவ்வாழ்த்து அம்மூவர்க்கும் பொதுப்படக் கூறினார் என உணர்க."


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/1_24.html


(click the above link to continue reading)


சொன்னால் நம்பனும். இது தமிழ்தான். 


அந்தக் காலத்துத் தமிழ். கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். 


எளிமைப் படுத்துவோம். 


""அஃதாவது, கவி தான் வழிபடு கடவுளையாதல், எடுத்துக்கொண்ட பொருட்கு ஏற்புடைக் கடவுளையாதல் வாழ்த்துதல்."


கடவுள் வாழ்த்து என்பது இரண்டு வகைப்படும்.  


முதலாவது, கவிஞன் தான் வழிபடுகின்ற கடவுளை வாழ்த்தி கடவுள் வாழ்த்துப் பாடலாம். 


அல்லது 


எடுத்துக் கொண்ட நூலுக்கு ஏற்புடைய கடவுளை வாழ்த்தி கடவுள் வாழ்த்துப் பாடலாம். 



உதாரணமாக, ஒரு எழுத்தாளன் "பணக்காரர் ஆவது எப்படி" என்று நூல் எழுதிறார் என்று வைத்துக் கொள்வோம்.  செல்வத்தின் தெய்வம் இலக்குமி. எனவே, இலக்குமியை வாழ்த்திப் பாடினால் அது "எடுத்துக் கொண்ட பொருளுக்கு ஏற்புடைய தெய்வம்" ஆகும். 



மாறாக, எழுத்தாளனுக்கு பிடித்த கடவுள் அபிராமி என்று வைத்துக் கொள்வோம். அபிராமியை வாழ்த்திப் பாடினால் அது கவி தான் வழிபடுகின்ற தெய்வத்துக்கு சொன்ன துதி என்று ஆகும். 



இங்கே, திருவள்ளுவர் எந்த கடவுளை துதி செய்கிறார் என்ற கேள்வி பிறக்கும். 



தனக்கு ஏற்புடைய கடவுள் என்றால், திருவள்ளுவர் இன்ன மதம், இன்ன ஜாதி என்று அவருக்கு ஒரு அடையாளம் வந்து விடும். மற்ற மதம், ஜாதி சேர்ந்தவர்கள் அவரை படிக்காமல் விட்டு விடலாம். கம்பரை வைணவர் என்று சொல்லி அவரை படிக்காமல் விட்ட கூட்டம் இன்றும் இருக்கிறது. 


திருவள்ளுவர் சைவமா, வைணவமா, சமணமா , புத்த மதமா என்ற சர்ச்சை எழும். 



சரி இஷ்ட தெய்வம் இல்லை, நூலுக்கு ஏற்புடைய தெய்வம் என்று கொண்டால், அது எந்த தெய்வம் என்ற கேள்வி வரும்.  அறத்துக்கு ஏற்ற தெய்வமா, பொருளுக்கு ஏற்ற தெய்வமா, அல்லது இன்பத்துக்கு ஏற்ற தெய்வமா என்ற கேள்வி வரும் ஏன் என்றால், குறளில் மூன்றும் இருக்கிறது.  



எது ஏற்புடைய தெய்வம்.



எந்தப் பக்கம் போனாலும் சிக்கல். 



பேசாமல் கடவுள் வாழ்த்தே சொல்லாமல் விட்டு விட்டால் என்ன என்று கூடத் தோன்றும். 



கடவுள் வாழ்த்தும் சொல்ல வேண்டும். அதே சமயம் அதனால் நூலுக்கு ஒரு சமய, ஜாதி முலாம் பூசப்படக் கூடாது. 



என்ன செய்வது ?

Tuesday, March 23, 2021

திருக்குறள் - அமைப்பு முறை

 திருக்குறள் - அமைப்பு முறை 


எதை ஒன்றைச் செய்யப் போனாலும், சொல்லப் போனாலும், முதலில் எது முக்கியமோ அதை சொல்லில் பின் முக்கியத்வம் குறைந்தவற்றை சொல்ல சொல்லவோ, செய்யவோ வேண்டும். 


ஒரு சபையில் வரவேற்புரை வாசிப்பது என்றால் முதலில் தலைவர், பின் செயலாளர், பொருளாளர், நிர்வாகிகள் என்று என்று ஒரு வரிசைப் படுத்திக் கொண்டு சொல்ல வேண்டும். 


"இங்கே வந்திருக்கும் செக்யூரிட்டி அவர்களே, மைக் செட் போடுபவரே, chair கொண்டு வந்து போட்டவரே, மின் விளக்கு போட்டவரே, peon அவர்களே, தலைமை தாங்க வந்திருக்கும் தலைமை நீதிபதி அவர்களே எல்லோருக்கும் என் பணிவான வணக்கம்" என்று சொல்லலாமா?



திருக்குறளை சொல்ல வந்த வள்ளுவர் ஏன் முதலில் அறத்துப் பாலை வைத்தார்? இன்பத்துப் பாலை வைத்து இருந்தால் ஒரு மகிழ்ச்சியாக இருக்கும் அல்லவா. படிக்க ஒரு ஆர்வம், கிளர்ச்சி தோன்றும் அல்லவா? இரு ஈர்ப்பு இருக்கும் தானே?  அதை அடுத்து பொருள் செய்யும் வழியை சொல்லி இருக்கலாம். "பணக்காராவது எப்படி" என்று சொல்லவந்தால் யார் தான் படிக்க மாட்டார்கள். அதை விட்டு விட்டு ஏன் அறத்துப் பாலில் ஆரம்பிக்கிறார்? 



அதற்கு முன்னால், நம் சமய கோட்பாடுகள், இலக்கியங்களின் நம்பிக்கை பற்றி ஒன்று சொல்ல வேண்டும். 


இந்த சொர்க்கம், தேவந்திர லோகம் என்பதெல்லாம் நம் சமயங்களைப் பொறுத்த வரை நிரந்தரமான இருப்பிடம் அல்ல. செய்த நன்மைக்குத் தகுந்தவாறு கொஞ்ச நாள் இருந்து விட்டு திருப்பியும் பிறக்க வேண்டியது தான். நாயாகவோ, நரியாகவோ, பூனையாகவோ, பூரி கிழங்காவோ வந்து பிறக்க வேண்டியதுதான். 


இந்த சொர்கத்தையும் தாண்டி இருக்கும் இடம் தான் வீடு பேறு என்பது. அது இறைவனோடு இரண்டற கலப்பது என்று ஆகும். 


இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். 


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/blog-post_23.html

(please click the above link to continue reading)

காமம் என்பது இந்த உலகில் நமக்கு கொஞ்சம் சந்தோஷம் தருவது. அதுவும் அவ்வப்போது தரும். ஒரு நாளில், ஒரு சில நிமிடங்கள் இன்பம் தரும். இன்பம் தான். ஆனால், பெரிய இன்பம் என்று சொல்ல முடியாது. 


பொருள் இருக்கிறதே, அது இம்மைக்கும், மறுமைக்கும் இன்பம் தரும். தான தர்மங்கள் செய்து இந்திரர் போன்ற இறையவர் பதங்களை அடையலாம் என்று முன்பு கூறினார் அல்லவா, அங்கு போகலாம். இங்கே பொருள் சுகம் தரும், புகழ் தரும், மறுமைக்கு சுவர்க்கம் போன்ற இன்பங்களைத் தரும். 


அறம் இருக்கிறதே, அது இம்மைக்கும், மறுமைக்கும் வழி செய்வதோடு, வீடு பேறு அடையவும் வழி செய்யும் என்பதால், அதிக நன்மை செய்யும் அறத்துப் பாலை முதலில் வைத்தார். 


இதுவரை படித்த வரை, திருக்குறளின் பின் இருக்கும் தீர்கமான சிந்தனையும், தெளிவும் ஓரளவுக்கு உங்களுக்குப் புரிந்து இருக்கும். இவ்வளவு யோசித்து எழுதியவர்கள்  தவறாக எதையாவது சொல்லி இருப்பார்களா? சுயநலமாக எதையாவது சொல்லி இருப்பார்களா? என்று சிந்திக்க வேண்டும். 


திருக்குறளை வாசிப்பதற்கு முன்னால், அது பற்றிய உங்களின் உயர்ந்த மற்றும் தாழ்ந்த கருத்துகளை சற்று தள்ளி வையுங்கள். அவர் என்ன சொல்ல வருகிறார் என்று கவனியுங்கள். அதை உள்வாங்கிக் கொள்ளுங்கள்.  நல்லது என்று நினைத்தால் கடைப் பிடியுங்கள். இல்லை என்றால் விட்டு விடுங்கள். 


வள்ளுவர் மோசமானவர். ஆணாதிக்க சிந்தனை உள்ளவர். கடவுள் நம்பிக்கை கொண்ட மூட மதியாளர், பகுத்தறிவு இல்லாதவர் என்று நம் மேதா விலாசம் கொண்டு அவரை எடை போட்டு நிந்திப்பதால் அவருக்கு ஒன்றும் நட்டம் இல்லை. நட்டம் நமக்குத் தான். 


உயர்ந்த நூல்களை படிக்கும் போது, அவற்றின் மூலம் நம்மை உயர்த்திக் கொள்வது எப்படி என்று சிந்திக்க வேண்டுமே அல்லாது, அதை எப்படி நம் நிலைக்கு கீழே கொண்டு வரலாம் என்று சிந்திக்கக் கூடாது. 


"சிறியன சிந்தியாதான்" என்று கம்பர் சொன்னது போல, சிறியனவற்றை சிந்திக்கக் கூட கூடாது. 


ஒரு திறந்த மனத்தோடு திருக்குறளைப் படிப்போம். 


Monday, March 22, 2021

திருக்குறள் - அமைப்பு முறை - பாகம் 1

 திருக்குறள் - அமைப்பு முறை  - பாகம்  1 


திருக்குறளுக்குள் போவதற்கு முன்னால், அந்தப் புத்தகம் எப்படி அமைக்கப் பட்டு இருக்கிறது என்று தெரிந்து கொள்வோம். 

ஒரு பிறந்த நாள் விழாவில் கேக்கும், மெழுகும் இருக்கும். மெழுகை ஊதி அணைத்து விட்டு, அந்த கேக்கை அப்படியே எடுத்து உண்ண முடியுமா?


முடியாது அல்லவா?


அதை நீள வாக்கில் வெட்டி, பின் குறுக்கு வாக்கில் வெட்டி, பின் அதை சிறு சிறு துண்டுகளாக்கித் தானே உண்ண முடியும். 


அது போல அறம் சொல்ல வந்த வள்ளுவர், தன் நூலை நம்மால் ஜீரணிக்கக் கூடிய அளவில் சிறு சிறு துண்டுகளாக வெட்டி நமக்கு ஊட்டி விடுகிறார். 


முதலில், குறளை மூன்றாகப் பிரிக்கிறார்.  அந்தப் பிரிவுகளுக்கு பால் என்று பெயர்.  

https://interestingtamilpoems.blogspot.com/2021/03/1_22.html


(click the above link to continue)

அவை, அறத்துப் பால், பொருட்பால், இன்பத்துப் பால் என்ற மூன்றும் ஆகும். 


சரி, மூன்றாக பிரித்தால் போதுமா, என்றால் முடியாது. இப்பவும் பெரிசாக இருக்கும். இன்னும், சின்ன துண்டாக வேண்டும். 


எனவே பாலை, இயல்களாகப் பிரிக்கிறார். 


அறத்துப் பாலை நான்கு இயல்களாகப் பிரிக்கிறார். 


பாயிர இயல்

இல்லற இயல்

துறவற இயல் 

ஊழியில் 


என்று நான்கு இயல்களாகப் பிரிக்கிறார். 


சரி, போதுமா என்றால், இல்லை, இன்னும் சின்னதாக வேண்டும்.


ஒவ்வொரு இயலையும் அதிகாரமாக பிரிக்கிறார். 

பாயிரவியலை நான்கு அதிகாரமாக பிரிக்கிறார். 


கடவுள் வாழ்த்து 

வான் சிறப்பு

நீத்தார் பெருமை

அறன் வலியுறுத்தல் 


என்ற நான்கு அதிகாரமாக பிரிக்கிறார். 


சரி,போதுமா, இல்லை, இன்னும் சின்னதாக வேண்டும். 


ஒரு அதிகாரத்தை பத்து பாடலாக பிரிக்கிறார். 


குறள் > பால்> இயல் > அதிகாரம் > குறள் 


என்று நூலை வகுத்துக் கொள்கிறார்.


இனி, எதை முதலில் சொல்வது, எதை பின்னால் சொல்வது என்ற சிக்கல் எழும். 


அதற்கும் காரணம் இருக்கிறது. 


எவ்வளவு தூரம் யோசித்து நூல் செய்திருக்கிறார்கள் என்று பாருங்கள். 


இப்படி ஒரு ஒழுங்கு கிடைக்குமா?


அறம், பொருள், இன்பம், வீடு

அறம் என்பது ஒழுக்கம், வழக்கு , தண்டம் 

ஒழுக்கம் மட்டுமே அறம் அது இல்லறம், துறவறம் என்று இரண்டு.


இப்படி எல்லாவற்றையும் பகுதி பகுதியாக பிரித்து தந்து இருக்கிறார்கள். 


நாம் அதை படித்து அதன் படி நடக்க வேண்டியது மட்டும் தான் பாக்கி. 



Sunday, March 21, 2021

திருக்குறள் - பரிமேலழகர் உரைப்பாயிரம் - இறுதிப் பாகம்

திருக்குறள் - பரிமேலழகர் உரைப்பாயிரம் -  இறுதிப் பாகம் 


பரிமேலழகரின் உரைப் பாயிரம் எப்படி ஒரு அழகான நீரோடை போல் செல்கிறது என்று பாருங்கள். 


வாழ்கைக்குத் தேவையான நான்கு  - அறம், பொருள், இன்பம், வீடு 

அதில் வீட்டினை நேரே சொல்லி விளக்க முடியாது என்பதால், அதை சொல்லாமல், அறம் , பொருள், இன்பம் பற்றி மட்டும் கூற எடுத்துக் கொள்கிறார்.


அதில், அறம் என்பது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தாலும், விலக்கியன ஒழித்தலும் என்றார். 


அவ்வறமானது , ஒழுக்கம், வழக்கு, தண்டம் என்ற மூன்று கூறுகளை கொண்டது என்றார். 

இதில் வழக்கு, தண்டம் என்பது பற்றி முந்தைய ப்ளாகில் பார்த்தோம். 


இப்போது மேலே செல்வோம். 


"இவற்றுள் வழக்குந் தண்டமும் உலகநெறி நிறுத்துதற் பயத்தவாவதுஅல்லது ஒழுக்கம் போல மக்களுயிர்க்கு உறுதி பயத்தற் சிறப்பிலவாகலானும், அவைதாம் நூலானேயன்றி உணர்வுமிகுதியானுந் தேயவியற்கையானும் அறியப்படுதலானும், அவற்றை ஒழித்து, ஈண்டுத் தெய்வப்புலமைத் திருவள்ளுவராற் சிறப்புடைய ஒழுக்கமே அறமென எடுத்துக்கொள்ளப்பட்டது."


ஒரே வரியில் சொல்லி விட்டுப் போய்விட்டார். 

நாம் பிரித்து பொருள் கொள்வோம். 


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/blog-post_21.html

(please click the above link to continue reading)

என்ன சொல்ல வருகிறார் என்றால், இந்த மூன்றில் , வழக்கையும் தண்டத்தையும் பற்றி வள்ளுவர் கூறவில்லை.  ஏன் கூறவில்லை என்பதற்கு பரிமேலழகர் விளக்கம் கூறுகிறார். 

முதற் காரணம்: 

"இவற்றுள் வழக்குந் தண்டமும் உலகநெறி நிறுத்துதற் பயத்தவாவது அல்லது "


இந்த மூன்றில் (ஒழுக்கம், வழக்கு, தண்டம் என்ற மூன்றில்) வழக்கும், தண்டமும் இந்த உலகில் நம்மை நெறிப் படுத்த உதவும். அவ்வளவுதான். அதைத் தவிர வேறு ஒன்றும் செய்யாது .

அதாவது, இம்மைக்கும், மறுமைக்கும் அவை உதவி செய்யாது. ஒருவர் மேல் வழக்கு போடுகிறோம். அதை வெல்கிறோம். மற்றவனுக்கு தண்டனை கிடைக்கிறது. இதனால், நமக்கு இந்த உலகில், வாழ்வில் ஒரு சிறு நன்மை கிடைக்கலாம். ஆனால், அது நமக்கு வீடு பேறு அடையவோ, இறைவன் அடி சேரவோ உதவாது. அது முதல் காரணம். 

இரண்டாவது காரணம். 

"ஒழுக்கம் போல மக்களுயிர்க்கு உறுதி பயத்தற் சிறப்பிலவாகலானும்"

வழக்கும் தண்டமும், ஒழுக்கத்தைப் போல மக்களுடைய உயிர்க்கு உறுதி பயக்காது. உறுதி என்றால் நன்மை. அந்த சிறப்பு கிடையாது அவற்றிற்கு. 


"அவைதாம் நூலானேயன்றி உணர்வுமிகுதியானுந் தேயவியற்கையானும் அறியப்படுதலானும்"


மேலும், வழக்கு தண்டம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. ஒரு வழக்கு என்று வருகிறது என்றால், தவறு செய்தவனுக்குத் தெரியும் அல்லவா, தான் தவறு செய்து விட்டான் என்பது. 


உணர்வு மிகுதியால் தவறு அவனுக்கே தெரியும் என்கிறார். ஒருவன் பொய் சொல்கிறான் என்றால், அவனுக்கு நல்ல உணர்சிகள் இருந்தால், அவன் மனமே அவனுக்குச் சொல்லும், அது தவறு என்று.  அதைத்தான் "உணர்வு மிகுதியான்" என்றார். அதுவே பழகிப் போய் விட்டால், பின் தோன்றாது. 


மேலும் 


"தேய இயற்கையானும்" தெரியும் என்கிறார். கொலை செய்தால் தண்டனை உண்டு என்று  யாருக்கும் சொல்லித் தர தேவை இல்லை.  ஒருவன் இயற்கையாகவே அதை அறிந்து கொள்வான். சிறு வயது முதல், அவன் கேட்கும் செய்திகள், பேச்சுகள், செய்தித் தாள்கள் போன்றவை அவனுக்கு அதைச் சொல்லித் தரும். 

"அவற்றை ஒழித்து" - அதை விட்டு விட்டு . எதை விட்டு விட்டு ? வழக்கு தண்டம் என்ற அந்த இரண்டையும் விட்டுவிட்டு. 


"ஈண்டுத்" = இங்கு 

தெய்வப்புலமைத் திருவள்ளுவராற் = தெய்வ அருள் பெற்ற திருவள்ளுவரால் 


சிறப்புடைய ஒழுக்கமே = சிறந்ததான ஒழுக்கமே 


அறமென எடுத்துக்கொள்ளப்பட்டது." = அறம் என்று எடுத்துக் கொள்ளப் பட்டது. (மற்ற இரண்டையும் விட்டு விட்டார்) 


சரி, ஒழுக்கத்தை மட்டுமே அறம் என்று எடுத்துக் கொண்டதற்கு காரணம் சொன்னார். 


"அதுதான் நால்வகை நிலைத்தாய் வருணந்தோறும் வேறுபாடுடைமையின், சிறுபான்மையாகிய அச்சிறப்பியல்புகள் ஒழித்து, எல்லார்க்கும் ஒத்தலிற் பெரும்பான்மையாகிய பொதுவியல்பு பற்றி இல்லறம் துறவறம் என இருவகை நிலையால் கூறப்பட்டது."



அந்த ஒழுக்கத்திலும் வர்ணத்துக்கு வர்ணம் மாறும், பிரமச்சரியம் போன்ற நிலைக்கு நிலை மாறும் ஒழுக்கத்தை விட்டு விட்டு, எல்லோருக்கும் பொதுவான அறத்தை மட்டும் சொல்ல நினைக்கிறார். 

" அதுதான் நால்வகை நிலைத்தாய் வருணந்தோறும் வேறுபாடுடைமையின்,"

இந்த ஒழுக்கம்  வர்ணாசிரம தகுதிக்கு ஏற்ப மாறும் இயல்பு உடையது. உதாரணமாக, ஒரு தவறை ஒரு சிறுவன் செய்தால் அவனுக்கு ஒரு தண்டனை, அதே தவறை ஒரு பெரிய ஆள் செய்தால் அவனுக்கு வேறு தண்டனை. தவறு ஒன்று தான், தண்டனை வேறு. முன்பு இருந்த சட்ட திட்டங்களில், ஒரே தவறுக்கு, ஒத்த வயதுடைய ஆட்களுக்கு , அவர்கள் சார்ந்த வர்ணம் பற்றி தண்டனை வழங்கப் பட்டது. 


உதாரணமாக, ஒரு பிராமணனை கொன்றால் பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கும். ஒரு சூத்திரனை கொன்றால் சூத்திர ஹத்தி தோஷம் என்று ஒன்று கிடையாது. 

அது பற்றி சொல்லப் போனால், பிராமண, பிரமசாரிக்கு உள்ள ஒழுக்கம் என்ன, ஷத்ரிய பிரமசாரிக்கு உள்ள ஒழுக்கம் என்ன என்று மிக விரிவாக சொல்ல வேண்டும். 



"சிறுபான்மையாகிய அச்சிறப்பியல்புகள் ஒழித்து,"


எனவே, அந்த அளவுக்கு உள்ளே போகாமல், 


"எல்லார்க்கும் ஒத்தலிற் பெரும்பான்மையாகிய பொதுவியல்பு பற்றி இல்லறம் துறவறம் என இருவகை நிலையால் கூறப்பட்டது."


எனவே, எல்லோருக்கும் பொதுவாக உள்ள இயல்புகள் பற்றி மட்டும் கூற வேண்டும் என்று  நினைத்து, அந்த பொது இயல்பான அறத்தை இரு கூறுகளாக பிரித்து இல்லறம், துறவறம் (இல்லம் + அறம், துறவு + அறம்). 


"அவற்றுள் இல்லறமாவது, இல்வாழ்க்கை நிலைக்குச் சொல்லுகின்ற நெறிக்கண் நின்று அதற்குத் துணையாகிய கற்புடைமனைவியோடும் செய்யப்படுவது ஆகலின், அதனை முதற்கண் கூறுவான் தொடங்கி,எடுத்துக்கொண்ட இலக்கியம் இனிது முடிதற் பொருட்டுக் கடவுள் வாழ்த்துக் கூறுகின்றார்."



"அவற்றுள்" அந்த இல்லறம், துறவறம் என்ற இரண்டனுள் 


 "இல்லறமாவது" = இல்லறம் என்றால் என்ன என்றால் 


"இல்வாழ்க்கை நிலைக்குச் " = இல்வாழ்கை நிலை 


"சொல்லுகின்ற நெறிக்கண் நின்று" = என்று சொல்லப்பட்டும் அந்த வழியில் நின்று 


அதற்குத் = எதற்கு? அந்த வழியில் செல்வதற்கு 


துணையாகிய = துணையாகிய 


கற்புடைமனைவியோடும் செய்யப்படுவது = கற்புடைய மனைவியோடு சேர்ந்து செய்யப்படும் என்பதால் 


ஆகலின், = ஆகவே 


அதனை முதற்கண் கூறுவான் தொடங்கி = அதை முதலில் கூற வேண்டும் என்று நினைத்து 


எடுத்துக்கொண்ட இலக்கியம் இனிது முடிதற் பொருட்டுக் =இந்த அறம் சொல்ல எடுத்துக் கொண்ட இலக்கியம் நல்லபடியாக பாடி முடிக்க வேண்டுமே என்று நினைத்து 


கடவுள் வாழ்த்துக் கூறுகின்றார். = கடவுள் வாழ்த்தினை கூறத் தொடங்குகின்றார்.


எப்படி வந்து சேர்ந்து விட்டார் பார்த்தீர்களா?

இனி,மொத்தமாக படித்துப் பாருங்கள் உரை புரியும்.


"இந்திரன் முதலிய இறையவர் பதங்களும், அந்தமில் இன்பத்து அழிவில் வீடும், நெறியறிந்து எய்துதற்குரிய மாந்தர்க்கு உறுதியென உயர்ந்தோரான் எடுக்கப்பட்ட பொருள் நான்கு. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன. அவற்றுள் வீடென்பது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து ஆகலின், துறவறமாகிய காரணவகையாற் கூறப்படுவதல்லது இலக்கணவகையாற் கூறப்படாமையின், நூல்களாற் கூறப்படுவன ஏனை மூன்றுமேயாம்.

அவற்றுள், அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழிதலுமாம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும்.

அவற்றுள் ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரிய முதலிய நிலைகளினின்று அவ்வவற்றிற்கு ஓதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்.

வழக்காவது ஒருபொருளைத் தனித்தனியே எனது எனது என்றிருப்பார் அதுகாரணமாகத் தம்முள் மாறுபட்டு அப்பொருள்மேற் செல்வது. அது கடன்கோடன் முதற் பதினெட்டுப் பதத்ததாம்.

தண்டமாவது அவ்வொழுக்கநெறியினும் வழக்குநெறியினும் வழீஇயினாரை அந்நெறி நிறுத்துதற் பொருட்டு ஒப்பநாடி அதற்குத்தக ஒறுத்தல்.

இவற்றுள் வழக்குந் தண்டமும் உலகநெறி நிறுத்துதற் பயத்தவாவதுஅல்லது ஒழுக்கம் போல மக்களுயிர்க்கு உறுதி பயத்தற் சிறப்பிலவாகலானும், அவைதாம் நூலானேயன்றி உணர்வுமிகுதியானுந் தேயவியற்கையானும் அறியப்படுதலானும், அவற்றை ஒழித்து, ஈண்டுத் தெய்வப்புலமைத் திருவள்ளுவராற் சிறப்புடைய ஒழுக்கமே அறமென எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதுதான் நால்வகை நிலைத்தாய் வருணந்தோறும் வேறுபாடுடைமையின், சிறுபான்மையாகிய அச்சிறப்பியல்புகள் ஒழித்து, எல்லார்க்கும் ஒத்தலிற் பெரும்பான்மையாகிய பொதுவியல்பு பற்றி இல்லறம் துறவறம் என இருவகை நிலையால் கூறப்பட்டது.

அவற்றுள் இல்லறமாவது, இல்வாழ்க்கை நிலைக்குச் சொல்லுகின்ற நெறிக்கண் நின்று அதற்குத் துணையாகிய கற்புடைமனைவியோடும் செய்யப்படுவது ஆகலின், அதனை முதற்கண் கூறுவான் தொடங்கி,எடுத்துக்கொண்ட இலக்கியம் இனிது முடிதற் பொருட்டுக் கடவுள் வாழ்த்துக் கூறுகின்றார்."


திருக்குறள் பற்றி இவ்வளவு தெளிவாக இதற்கு முன் எங்காவது கேட்டது உண்டா? பிரமிக்க வைக்கும் முன்னுரை. 


இனி, நூலுக்குள் செல்வோம். 




Saturday, March 20, 2021

திருக்குறள் - பரிமேலழகர் உரைப்பாயிரம் - ஒழுக்கம்

 திருக்குறள் - பரிமேலழகர் உரைப்பாயிரம் - ஒழுக்கம் 



அவற்றுள், அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழிதலுமாம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும்.


அவற்றுள் ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரிய முதலிய நிலைகளினின்று அவ்வவற்றிற்கு ஓதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்.


அறம் என்பது மூன்று கூறுகளை உடையது - ஒழுக்கம், வழக்கு, தண்டம் என்பன. 


ஒழுக்கம் என்றால் என்ன என்று முந்தைய ப்ளாகில் பார்த்தோம். 


அடுத்தது, வழக்கு என்றால் என்ன என்று சொல்ல வருகிறார். 


"வழக்காவது ஒருபொருளைத் தனித்தனியே எனது எனது என்றிருப்பார் அதுகாரணமாகத் தம்முள் மாறுபட்டு அப்பொருள்மேற் செல்வது. அது கடன்கோடன் முதற் பதினெட்டுப் பதத்ததாம்."


அதாவது, ஒரு பொருளை இரண்டு பேர் அது தங்களுடையது என்று சண்டையிட்டு கொள்ளுவது.  சில சமயம், சில பேர் ஒழுக்கக் குறைவு உடையவர்களாக இருப்பார்கள். அதனால் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் மாறுபட்டு கருத்து உருவாகும். இதை வழக்கு என்பார்கள். 


வழக்கு வரும். வந்தால் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும். தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும். 


எனவே, அடுத்து "தண்டம்" பற்றி கூறுகிறார். 


பரிமேலழகர் என்ன சொல்கிறார் என்று பார்பதற்கு முன்னால், ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். 


தண்டனை என்றால் என்ன? அது எப்படி இருக்க வேண்டும்? அதன் நோக்கம் என்ன ? என்றெல்லாம் சிந்தித்துப் பாருங்கள். 


ஒரே வரியில் பரிமேலழகர் சொல்கிறார். 


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/blog-post_20.html


(click the above link to continue reading)


"தண்டமாவது அவ்வொழுக்கநெறியினும் வழக்குநெறியினும் வழீஇயினாரை அந்நெறி நிறுத்துதற் பொருட்டு ஒப்பநாடி அதற்குத்தக ஒறுத்தல்."


தண்டனை என்பது அந்த ஒழுக்க நெறியில் இருந்து விலகியவர்களை, அந்த நெறியில் நிறுத்த, அதற்காக தண்டித்தல்.


அதாவது, தண்டனை என்பது ஒருவனை ஒழுக்க நெறியில் நிறுத்த உதவ வேண்டும்.  அவனை பயமுறுத்தவோ, அல்லது மற்றவர்களுக்கு ஒரு உதாரணம் போல் காட்டவோ அல்ல.  தவறு செய்தவனை திருத்த மட்டுமே தண்டனை உதவ வேண்டும்.


எனவே, ஒழுக்கம், வழக்கு, தண்டம் பற்றி பரிமேலழகர் கூறியதை புரிந்து கொண்டோம். 


அடுத்து என்ன என்பதை அடுத்த ப்ளாகில் பார்க்க இருக்கிறோம். 




Friday, March 19, 2021

திருக்குறள் - பரிமேலழகர் உரைப்பாயிரம் - ஒழுக்கம்

திருக்குறள் - பரிமேலழகர் உரைப்பாயிரம் - ஒழுக்கம் 


அவற்றுள் "ஒழுக்கமாவது", அந்தணர் முதலிய வருணத்தார், தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரியம் முதலிய நிலைகளில் நின்று, அவ்வவற்றிற்கு ஓதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்.


ஒழுக்கம் என்றால் என்ன? 

ஒழுக்கம் என்பது வர்ணத்துக்கும், நிலைக்கும் சொல்லப்பட்ட விதி முறைகள். 

ஒரு சமுதயாத்தை எப்படி பிரிக்கலாம் என்று சிந்தித்த நம் முன்னோர், சமுதாயத்தின் வேலை என்ன? அதன் அடிப்படையில் பிரிக்கலாம் என்று நினைத்தார்கள். 

எந்த ஒரு சமுதாயத்துக்கும் அடிப்படை உற்பத்தி. அது தமிழ் நாடாக இருக்கட்டும், இந்தியாவாக இருக்கட்டும், அமெரிக்காவாக இருக்கட்டும். எந்த நாட்டுக்கும், எந்த சமுதாயத்துக்கும் அடிப்படை உற்பத்தி.

உற்பத்தி என்றால் பொருள் (goods )மற்றும் சேவை (service). GST என்று வரி போடுகிறார்கள் அல்லவா? 

விவசாயி,சட்டி பானை செய்பவன், முடி திருத்துபவன், மருத்துவன், பொறியாளர் (engineer), விமானம் ஒட்டுபவன், இசை அமைப்பவன், வண்டி ஓட்டுபவன் என்று யாராக இருந்தாலும் இந்த உற்பத்தி என்ற துறைக்குள் வந்து விடுவான்.  உற்பத்தி அல்லது production . இது முதல் படி.  

சரி, உற்பத்தி செய்தாகி விட்டது. அடுத்து என்ன? ஒரு இடத்தில் உற்பத்தி செய்ததை அது தேவைப் படும் இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.  இது வியாபாரம் அல்லது distribution என்று  சொல்லப் படும்.இது இரண்டாவது படி. 

சரி உற்பத்தி செய்தாகிவிட்டது, விநியோகமும் செய்தாகி விட்டது. இரண்டு பிரிவு போதுமா என்றால் போதாது.   உற்பத்தி செய்வதில், விநியோகம் செய்வதில் நடை முறை சிக்கல்கள் வரும். சண்டை சச்சரவு வரும். போட்டி வரும். இவற்றை ஒழுங்கு படுத்த வேண்டும். அதற்கு மேலாண்மை அல்லது administration என்று பெயர். சட்டம், ஒழுங்கு, நெறிப் படுத்துதல், சமரசம் செய்தல் என்று  பல இருக்கிறது. 

சரி,  production, distribution, and administration வந்தாகி விட்டது. போதுமா என்றால் போதாது. 

இந்த மூன்றையும் செம்மை படுத்தி, அவற்றை மேம்படுத்த வேண்டும். அதற்கு research and development என்று பெயர். 

இந்த நான்கையும் தான் வர்ணம் என்று குறிப்பிட்டார்கள். 

உற்பத்தி செய்பவன் - சூத்திரன் - அவன் தான் மூல காரணம். 
விநியோகம் செய்பவன் - வைசியன் 
மேலாண்மை செய்பவன் - சத்ரியன் 
சிந்தித்து, படித்து, மேம்பட்ட, உயர்ந்த வழிகளை ஆராய்பவன் - பிராமணன் என்று வைத்தார்கள். 

இது பிறப்பின் அடிப்படையில் வருவது அல்ல. செய்யும் தொழிலின் அடிப்படையில் வருவது. 

சரி, சமுதயாத்தை பிரித்தாகி விட்டது. 

தனி மனிதனை என்ன செய்வது?


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/blog-post_19.html

(click the above link to continue reading)

தனி மனித வாழ்க்கையை நான்கு பகுதிகளாக பிரித்தார்கள். 

பிரமச்சரியம் - கற்கும் பருவம். மாணவப் பருவம். 
இல்லறம் - திருமணம் முடிந்து குடும்ப வாழ்க்கை 
வனப்ரஸ்தம் - இல்லறத்தில் இருந்து கொண்டு பற்றற்று இருப்பது 
சன்யாசம் - காட்டுக்குச் சென்று தவம் செய்வது 

இதைத்தான் நிலை என்கிறார் பரிமேலழகர். 



ஒரு graph ஷீட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் X axis க்கு பதில் வருணம் என்று போட்டுக் கொள்ளுங்கள்.

அதில் Y axis க்கு பதில் ஆச்சிரமம் என்று போட்டுக் கொள்ளுங்கள்.

இப்போது வருணம் என்ற கோட்டை நான்காகப் பிரியுங்கள். அந்தணன், வைசியன், சத்ரியன் மற்றும் சூத்திரன் என்றும்.

ஆசிரமம் என்ற கோட்டை நான்காகப் பிரியுங்கள் - பிரமச்சாரியம், கிரகச்சாரம், வானப்ரஸ்தம் மற்றும் துறவறம்

ஒவ்வொரு மனிதனும் இந்த 4 x 4 கட்டத்திருக்குள் ஏதோ ஒரு கட்டத்தில் இருந்தே ஆக வேண்டும்.

ஒவ்வொரு கட்டத்திற்கும் ஒரு கடமை உண்டு.

தனி மனிதனாக அவனுக்கு சில கடமைகள் உண்டு.

ஒரு சமுதாயத்தின் அங்கமாக அவனுக்கு சில கடமைகள் உண்டு.

சமுதாயக் கடமை - சூத்திரனாகவோ, வைசியனாகவோ,  கஷத்ரியனாகவோ,அந்தனனாகவோ அவனுக்கு சில கடமைகள் உண்டு.

அது போல தனி மனிதனாக பிரமச்சாரியாக, இல்லறத்தில் , வான பிரச்த்தத்தில், துறவறத்தில் அவனுக்கு சில கடமைகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த இரண்டு கூறுகளைத்தான் பரிமேல் அழகர் இங்கே கூறுகிறார்:


அந்தணர் முதலிய வருணத்தார், - இது சமுதாயக் கடமை 

தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரியம் முதலிய நிலைகளில் நின்று = இது தனி மனிதக் கடமை 

அவ்வவற்றிற்கு ஓதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல். = அவரவர்க்கு ஓதிய அறங்கள் என்று கூறவில்லை. அவ்வவற்றிற்கு என்று கூறுகிறார். ஏன் ? மேலே கூறிய 4 x 4 கட்டத்திற்கு என்று வகுத்த அறங்கள். எனவே  அவ்வவற்றிற்கு என்று கூறினார். 

இது ஒழுக்கம்.

இதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் இதை ஏற்றுக் கொள்கிறீர்களோ இல்லையோ, அது வேறு விஷயம். இது வள்ளுவர் வகுத்துக் கொண்ட வழி. இந்த வழியில் தான் பின்னால் வரும் குறள்கள் நிற்கும். 

அறத்தின் முதல் கூறு ஒழுக்கம். 

அடுத்து என்ன ? 

Thursday, March 18, 2021

தேவாரம் - அவ்வினைக்கு இவ்வினை

 தேவாரம் - அவ்வினைக்கு இவ்வினை 


எல்லாம் வினைப் பயன் என்று நாம் நினைக்கிறோம். நல்லதோ, கெட்டதோ எல்லாம் விதிப்படித்தான் நடக்கும். நல்லது செய்து இருந்தால் நல்லது வரும். அல்லது செய்து இருந்தால் துன்பம் வரும். இதில் நம் கையில் என்ன இருக்கிறது. விதியை நம்மால் மீற முடியுமா? 


ஊழிற் பெருந்தக்க யாவுள என்பார் வள்ளுவர்.


நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மை, மைந்த விதியின் பிழை என்பார் கம்பர். 


அப்படி என்றால் நம் கையில் ஒன்றும் இல்லையா. நாம் சும்மா இருக்க வேண்டியது தானா. ஒரு முயற்சியும் செய்ய வேண்டாமா? 


திருஞான சம்பந்தர் சொல்கிறார். "அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. வினையை மாற்றலாம்" என்று கூறுவதோடு நில்லாமல், அதற்கு வழியும் காட்டுகிறார். 


"முன்பு செய்த வினைகளுக்கு ஏற்ப இப்போது நமக்கு இன்ப துன்பமாகிய வினைகள் வருகிறது என்று சொல்லிக் கொண்டு சும்மா இருக்கிறீர்களே. இது உங்களுக்கு ஒரு ஊனம் இல்லையா. இறைவனை வழிபடுங்கள். அப்படி செய்தால் நாம் முன் செய்த வினைகள் நம்மை தீண்டாது. இது திருநீலகண்டத்தின் மீது ஆணை" என்று சத்தியமிட்டு கூறுகிறார். 


பாடல் 


அவ்வினைக்கு இவ்வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர்!

உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம் அன்றே?

கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம்

செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்.!


பொருள் 



click the above link to continue reading

அவ்வினைக்கு = முன்பு செய்த வினைகளுக்கு 


இவ்வினை ஆம் = இப்போது நடக்கும் வினைகள் (இன்ப துன்பங்கள்) 


என்று சொல்லும் அஃது அறிவீர்! = என்று சொல்லக் கேட்டு இருகிறீர்கள் 


உய்வினை = இதில் இருந்து தப்பிக்கும் வழியினை 


நாடாது இருப்பதும் = கண்டு பிடிக்காமல் இருப்பதும் 


உம்தமக்கு = உங்களுக்கு 


 ஊனம் அன்றே? = ஒரு குறை இல்லையா ?


கைவினை செய்து = கைகளால் தொழுது 


எம்பிரான் = எம்மை விட்டு எப்போதும் பிரியாதவன் 


கழல் போற்றுதும் = திருவடிகளை போற்றுங்கள் 


நாம் அடியோம் = நாம் இறை அடியவர்கள் 


செய்வினை = செய்த வினை 


வந்து = நம்மிடம் வந்து 


எமைத் தீண்டப்பெறா = நம்மை தீண்டாது 


திருநீலகண்டம்.! = திருநீலகண்டத்தின் மேல் ஆணை 


திருஞான சம்பந்தர் ஞானப் பால் உண்டு ஞானம் பெற்றவர். இறைவன் மேல் ஆணையிட்டு சொல்கிறார். 


பழைய வினைகள் தீர வேண்டும் என்ன்றால் என்ன செய்ய வேண்டும் என்று. 


(இப்படி பத்துப் பாடல்கள் இருக்கின்றன. விரைந்து அவை அனைத்தையும் படித்து விடுங்கள்) 

இதையே மணிவாசகரும் "பழ வினைகள் பாறும் வண்ணம்" என்பார். பழைய வினைகள் அற்றுப் போகும் படி அவன் எனக்கு அருளினான் என்கிறார். 


முத்திநெறி அறியாத

    மூர்க்கரொடு முயல்வேனைப்

பத்திநெறி அறிவித்துப்

    பழவினைகள் பாறும்வண்ணஞ்

சித்தமலம் அறுவித்துச்

    சிவமாக்கி எனை ஆண்ட

அத்தன்எனக் கருளியவா

    றார்பெறுவார் அச்சோவே


எனவே, விதி என்று சோர்ந்து இருந்து விடாதீர்கள். 


பழைய வினைகளை சுட்டெரிக்க ஞான சம்பந்தரும், மணி வாசகரும் வழி சொல்லித் தந்து இருக்கிறார்கள். 


திருக்குறள் - பரிமேலழகர் உரைப்பாயிரம் - வர்ணமும், நிலையும் - பாகம் 1

திருக்குறள் - பரிமேலழகர் உரைப்பாயிரம் - வர்ணமும், நிலையும்  -  பாகம் 1 


அவற்றுள் ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரிய முதலிய நிலைகளினின்று அவ்வவற்றிற்கு ஓதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்.


இதில் "அந்தணர் முதலிய வர்ணத்தார்" என்றும் "பிரமச்சரிய முதலிய நிலகைளில் இருந்தும்" என்று பரிமேலழகர் எழுதுகிறார். 


அவர் முதலிய என்று கூறியதால், வேறு பலவும் இருக்கின்றன என்று நமக்குப் புலனாகிறது. அவை என்னென்ன என்று சிந்திப்போம். 


ஒரு சமுதயாத்தில் பல தரப்பட்ட மக்கள் இருக்கிறார்கள். ஆண், பெண், குழந்தைகள், பெரியவர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள், அரசியல்வாதிகள், மாணவர்கள், திருமணம் ஆனவர்கள், ஆகாதவர்கள், உடல் ஊனமுற்றோர் என்று பலவிதமான மக்கள் இருக்கிறார்கள். 


ஒரு சமுதாயம் சீராக செயல் பட வேண்டும் என்றால் அதற்கு சில சட்ட திட்டங்கள் வேண்டும், ஒழுங்கு முறை வேண்டும். யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று விட்டு விட்டால், அது நாடாக இருக்காது. காடாகி விடும். 


சட்டம் இயற்றுவது என்றால், மக்களை தொகுக்க வேண்டும். ஒன்று பட்ட ஒரு குழுவுக்கு ஒரு    சட்டம் சொல்லலாம். எல்லாருக்கும் ஒரு சட்டம் என்று போட முடியாது. 


ஏன் முடியாது? அப்படி போட்டால் என்ன? எதற்காக மக்களை பிரிக்க வேண்டும் என்ற கேள்வி எழும். 


சரி, சில சட்டங்களை அப்படி போட்டுப் பார்ப்போம்.


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/1_18.html

(click the above link to read further)


"எல்லோரும் உழைத்து சாப்பிட வேண்டும் " என்று ஒரு சட்டம் போடுவோம். 

அது சரிதானே?


அப்படி என்றால் சிறு பிள்ளைகள் என்ன செய்யும்? வீட்டைப் பார்த்துக் கொள்ளும் பெண்கள் என்ன செய்வார்கள், வயதானவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களை விலக்க வேண்டும். 


சரி, எத்தனை பேரை விலக்குவது? அப்படி விலக்குவது என்று வந்து விட்டால், அவர்களை ஒரு குழுவாக செய்ய வேண்டும். எனவே, இந்தச் சட்டம் எல்லோருக்கும் பொருந்தாது, ஒரு சிலருக்கு மட்டும் தான் பொருந்தும். 


சரி, இன்னொரு சட்டம் போடுவோம். 


"எல்லோரும் திருமணம் செய்து கொண்டு தான் வாழ வேண்டும்"


சரி. நல்ல சட்டம் தான். நான்கு வயது பையன் எனக்கும் திருமணம் செய்து வை என்று கேட்டால் என்ன செய்வது?


"கொலை செய்வதும், அதை தூண்டுவதும் குற்றம்" என்று ஒரு சட்டம் போட்டால்,  நீதிபதிகள் தூக்கு தண்டனை விதிக்கிறார்கள். கொலை செய்யச் சொல்லி ஆணை இடுகிறார்கள். அவர்களை என்ன செய்வது? மருத்துவர் சிகிச்சை பலன் இன்றி நோயாளி இறந்து போகிறான். மருத்துவர் நோயாளியை கொன்று விட்டார் என்று சொல்ல முடியுமா? 


எனவே, விதி செய்வது என்றால் ஒரு குறிப்பிட்ட குழுவுக்கு, தொகுதிக்குத் தான் விதி செய்ய முடியும். 


எப்படி இந்த சமுதயாத்தை பிரிப்பது? எப்படி பிரித்தால், சரியான படி சட்ட திட்டங்களை வகுக்க முடியும் என்று ஆராய்ந்து உண்டாகியது தான் வர்ணமும், நிலையும் . இதை வட மொழியில் வர்ணாசிரம தர்மம் என்று கூறுவார்கள். 


அது என்ன தர்மம்?



Wednesday, March 17, 2021

கம்ப இராமாயணம் - விதியின் வண்ணமே

கம்ப இராமாயணம் - விதியின் வண்ணமே 


திரும்பிப் பார்க்கிறோம். நாம் சாதித்தது எத்தனை. எவ்வளவு செல்வம் சேர்த்து இருக்கிறோம். எவ்வளவு படித்து இருக்கிறோம். எத்தனை காரியங்களை சாதித்து இருக்கிறோம். நம் அறிவின் மேல், நம் முயற்சியின் மேல், நமக்கு ஒரு பெருமை உண்டாகிறது. நான் எவ்வளவு திறமைசாலி, அறிவுள்ளவன், ஆற்றல் உள்ளவன் என்று பெருமிதத்தில் நெஞ்சு நிறைகிறது.


அது சரிதானா?


எல்லாம் நம் திறமை தானா? நம் அறிவுதானா? இப்படியே இன்னும் மீதி நாட்களும் போகும் என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியுமா? 


நம்மை விட பெரிய அறிவாளிகள், திறமை சாலிகள் எல்லாம் மண்ணைக் கவ்வி இருக்கிறார்கள். வாழ்க்கை எவ்வளவோ பெரிய பெரிய ஆட்களை எல்லாம் சும்மா சருகு போல் தூக்கி வீசி விட்டுப் போய் இருக்கிறது. 


இராவணன் எவ்வளவு பெரிய ஆள். அறிவு, வீரம், பக்தி, பராகிரமம், ஆளுமை, என்று அனைத்திலும் உயர்ந்து நின்றவன். நீண்ட நெடிய ஆயுள். முன்னே எதிர் நிற்க பகை இல்லை.  அளவற்ற செல்வம். 


என்ன ஆயிற்று?


எது அவனைப் புரட்டிப் போட்டது? 


அவனுக்குத் தெரியாத அறமா? மாற்றான் மனைவியை நினைப்பது குற்றம் என்று அவனுக்குத் தெரியாதா? அவனுக்கு எவ்வளவு பேர் அறிவுரை சொன்னார்கள். கேட்டானா? இல்லையே. ஏன்?


எது அவன் அறிவை மறைத்தது? 


விதி. 


நம் தமிழ் இலக்கியம் விதியை ஆழமாக நம்பியது. நம் மதங்களும் விதியை நம்பின. 


இராவணன் கும்ப கர்ணனை எழுப்பி போருக்குப் போகச் சொல்கிறான். கும்பகர்ணனுக்கு தூக்க கலக்கம். எதுக்கு போர்? யாருடன் போர் என்று கேட்கிறான். 


எல்லாம் சொன்னவுடன், கும்பகர்ணன் வருந்திச் சொல்கிறான். 


"இராவணா, போர் வந்து விட்டதா? அதுவும் பொன் போன்ற சீதையை முன்னிட்டா இந்தப் போர்? கண்ணில் விஷம் கொண்ட பாம்பை போன்ற சீதையை நீ இன்னும் விடவில்லையா ? இது விதியின் செயல் அன்றி வேறு என்ன " என்கிறான். 


பாடல் 



 ‘கிட்டியதோ செரு? கிளர் பொன் சீதையைச்

சுட்டியதோ? முனம் சொன்ன சொற்களால்

திட்டியின் விடம் அன்ன கற்பின் செல்வியை

விட்டிலையோ? இது விதியின் வண்ணமே!



பொருள்


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/blog-post_17.html

(click the above link to continue reading)


 ‘கிட்டியதோ செரு? = போர் கிடைத்ததா 

கிளர் = சிறந்த 

பொன் = பொன் போன்ற 

 சீதையைச் = சீதையை 

சுட்டியதோ? =  முன்னிறுத்தியா. அவள் பொருட்டா ?

முனம் சொன்ன சொற்களால் = முன்பு நானும், வீடணனும், மற்றவர்களும் சொன்ன அறிவுரைகளால் 


திட்டியின் = திட்டி = திருஷ்டி = பார்வை 


விடம் அன்ன = விஷம் போன்ற 


கற்பின் செல்வியை = கற்பின் செல்வியை 


விட்டிலையோ? = நீ இன்னமும் விட வில்லையா ?


இது விதியின் வண்ணமே! = இது விதியின் விளையாட்டே 


பாம்பு கடித்தால் தான் விஷம் ஏறும். திட்டி விடம் என்று ஒரு பாம்பு இருக்கிறது.  அது கடிக்க வேண்டாம். கண்ணில் இருந்து விஷத்தைக் கக்கும். ஆள் காலியாகி விடுவான். அது போல, சீதை தொட வேண்டாம். அவள் பார்வை உன்னை தகித்து விடும். 


நம் அறிவு என்று பெரிதாக நினைக்கக் கூடாது. 


தேவர்களையும், முனிவர்களையும், ஒன்பது கோள்களையும் ஆட்டிப் படைத்த இராவணனை விதி தூக்கிப் போட்டது என்றால் நாம் எம்மாத்திரம்?


இலக்கியங்கள் நமக்கு நம் எல்லைகளை அறிந்து கொள்ள உதவும். உலகியல் நிகழ்வுகளால் நாம் ரொம்பவும் அலைகழிக்கப் படாமல் இருக்க அவை உதவும். 


உதவட்டும். 


திருக்குறள் - உரைப்பாயிரம் - பாகம் 3

 திருக்குறள் - உரைப்பாயிரம் - பாகம் 3 


வாழ்வின் நோக்கம் என்ன ? (வீடு பேறு அடைவது)

அதை அடையும் வழி என்ன ? (அறம் பொருள் இன்பம் வீடு என்ற வழி)

அதில் வீடு பற்றி வள்ளுவர் ஏன் சொல்லவில்லை (அது சிந்தையும், சொல்லும் செல்லா இடத்தது என்பதாலும், துறவறம் நோக்கிய காரண வகையால் அறிந்து கொள்ளலாம் என்பதால்)


அதில் அறம் என்றால் என்ன (மனு முதலிய நூல்களில் விதித்தவற்றை செய்தாலும், விலக்கியவற்றை விலக்குதலும் ).


என்பது வரை முந்தைய மூன்று ப்ளாகுகளில் பார்த்தோம். 

இப்போது, அறம் , பொருள் இன்பம் என்ற மூன்றில் அறம் என்றால் என்ன என்று எடுத்துக் கொள்கிறார். 


"அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும்."


அறத்துக்கு மூன்று கூறுகள். 


அதாவது, ஒழுக்கம், வழக்கு, தண்டனை என்பது. 


சரி, ஒழுக்கம் என்றால் என்ன என்று அடுத்து சொல்ல வருகிறார். 

எப்படி ஒரு ஆற்றோட்டம் போல அவர் எழுதுகிறார் என்று பாருங்கள். 

ஒவ்வொரு படியாக எடுத்து வைக்கிறார். எழுதினால் இப்படி எழுத வேண்டும். 


"அவற்றுள் ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரிய முதலிய நிலைகளினின்று அவ்வவற்றிற்கு ஓதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்."


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/3.html

(click the above link to continue reading)


இரண்டு வார்த்தைகளை கவனியுங்கள் - ஒன்று "வருணத்தார்" , இன்னொன்று "நிலைகள்" 

அது என்ன வர்ணம், நிலை ?

இங்கு வர்ணாசிரம தர்மத்தை ஒரு வரியில் சொல்லி விட்டுப் போகிறார். மிகப் பெரிய விடயம். நிதானமாக விளங்குவோம். 

"அந்தணர் முதலிய வருணத்தார் " என்று கூறும் போது அந்தணர் தவிர வேறு வர்ணங்களும் இருக்கின்றன என்று நமக்குப் புரிகிறது. அவை என்னென்ன என்ற கேள்வி அடுத்தது வரும். 


"பிரமசரிய முதலிய நிலைகளினின்று" பிரமச்சரிய முதலிய நிலை என்றால் இன்னும் பல நிலைகள் இருக்கின்றது என்று அர்த்தம். அவை என்னென்ன? 


இந்த வர்ணம் + நிலை தான் வர்ணாசிரம தர்மம் என்று கூறப் பட்டது.  அது ஒரு ஒழுங்கு முறை. வாழ்கை நெறி. 


இன்று வர்ணாசிரம தர்மம் என்றால் ஏதோ ஒரு தீண்டத்தகாத வார்த்தை என்பது போல் ஆகிவிட்டது. 


"காய்த்தல் உவத்தில் இன்றி ஒரு பொருட்கண் ஆய்தல் அறிவுடையார் கடன்". 

நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ, நம்மால் ஒத்துக் கொள்ள முடிகிறதோ இல்லையோ, அது என்ன என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். தெரிந்து கொள்ளாமலேயே ஒன்று சரி அல்லது தவறு என்று எப்படி முடிவு செய்வது? 


இந்த வர்ணம் + நிலை பற்றி அடுத்த ப்ளாகில் சிந்திக்க இருக்கிறோம். 








Tuesday, March 16, 2021

திருக்குறள் - பரிமேலழகர் உரைப்பாயிரம் - பாகம் 2

திருக்குறள் - பரிமேலழகர் உரைப்பாயிரம் - பாகம் 2 

முதல் பாகத்திலே, கீழ்கண்ட பத்தியின் உரையை பார்த்தோம்.

https://interestingtamilpoems.blogspot.com/2021/03/1.html

இந்திரன் முதலிய இறையவர் பதங்களும், அந்தமில் இன்பத்து அழிவில் வீடும், நெறியறிந்து எய்துதற்குரிய மாந்தர்க்கு உறுதியென உயர்ந்தோரான் எடுக்கப்பட்ட பொருள் நான்கு. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன. அவற்றுள் வீடென்பது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து ஆகலின், துறவறமாகிய காரணவகையாற் கூறப்படுவதல்லது இலக்கணவகையாற் கூறப்படாமையின், நூல்களாற் கூறப்படுவன ஏனை மூன்றுமேயாம்.


இனி மேலே தொடருவோம்....


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/2.html


click the above link to continue reading



சரி, அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கில் வீடு என்பதை சொல்லியோ, சிந்தித்தோ அறிந்து கொள்ள முடியாது என்பதால், அதை காரண வகையால் அன்றி இலக்கண வகையால் அறிய முடியாது என்பதால், முதல் மூன்றை எடுத்துக் கொள்கிறார். 


அதில் 


அறம் என்றால் என்ன என்று சிந்திக்கத் தலைப்படுகிறார் பரிமேலழகர். 


தர்மம், நியதி, அறம், ஒழுங்கு, சட்டம் என்பதற்கு யாராலாவது சரியான விளக்கம் கூற முடியுமா?  


இதுதான் அறம் என்று சுட்டி கூற முடியுமா?


கீழ்க் கோர்டில் சொன்னதை மேல் கோர்ட் மறுக்கிறது. எது அறம் என்பதில் எவ்வளவு குழப்பம் இருக்கிறது. 


மது அருந்தலாமா? அது அறம் இல்லை என்றால், இன்னொரு மதத்ததில், அந்த மதத்தின் இறைவனே மக்களுக்கு மதுவும் மீனும் கொடுத்ததார் என்று வருகிறது. அவர்கள் எல்லோரும் அறம் வழுவியவர்களா?


மாமிசம் உண்ணலாமா கூடாதா? 


பலதார மணம் சரியா தவறா? 


விவாகரத்து சரியா தவறா? 


அறம் என்பதை எப்படி அறுதியிட்டு கூறுவது?


ஒரே வரியில் சொல்லி விட்டுப் போகிறார் பரிமேலழகர். அவருடைய அறிவின் ஆழத்துக்கு இந்த ஒரு வரி போதும். 


"அவற்றுள், அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழிதலுமாம். "


அறம் என்றால், மனு முதலிய நூல்களில் சொல்லப் பட்டவற்றை கடை பிடிப்பதும், அவை செய்யக் கூடாது என்று சொல்லியவற்றை செய்யாமல் இருப்பதும் என்கிறார். 


முக்கியமாக கவனிக்க வேண்டியது "முதலிய" என்ற சொல்லை. முதலிய என்றால் அது போன்ற உயர்ந்த நூல்களில் எது செய், அல்லது செய்யாதே என்று சொல்லி இருக்கிறதோ, அதை செய்வதும், செய்யாமல் விடுவதும் அறம் ஆகும். 


எனவே, அற வழியில் நடக்க வேண்டும் என்றால், முதலில் உயர்ந்த நூல்களை படிக்க வேண்டும். அவற்றுள் செய்யச் சொன்னவற்றை செய்ய வேண்டும். செய்யக் கூடாது என்று சொன்னவற்றை செய்யாமல் விட வேண்டும். 


மனு சாஸ்திரம் எல்லாம் காலத்துக்கு ஒவ்வாது. அதை எப்படி இப்போது கடை பிடிப்பது என்ற கேள்வி வரும். 


முதலில் அதை படிக்க வேண்டும். புரிந்து கொள்ள வேண்டும். பின், அதற்கு பின் வந்த நூல்கள் அந்த அறத்தை எப்படி மாற்றி இருக்கின்றன என்று புரிந்து கொண்டு காலத்துக்கு ஏற்ப நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். 


கால மாற்றங்கள் வரும். நம் நூல்கள் அவற்றை அனுமதிக்கும். 


நீண்ட நாள் உள்ள ஒரு  பழக்கத்தை, ஒரு ஒழுக்கத்தை மாற்றலாமா என்றால் மாற்றலாம். ஆனால், யார் மாற்றுவது ?


கற்றறிந்த அறிஞ்ர்கள், ஒழுக்கத்தில் உயர்ந்த ஆன்றோர், முற்றும் துறந்த துறவோர் அவற்றை மாற்றலாம். அவர்களுக்கு அந்த உரிமை உண்டு. 


ஆனால், இப்போது என்ன நடக்கிறது, நமக்கு கீழே உள்ளவன் , நம்மை விட குறைவாக படித்தவன், ஒழுக்கக் குறைவு உள்ளவன் செய்வதைப் பார்த்து, அது தான் சரி என்று  நாம் பின்பற்றத் தொடங்கி விடுகிறோம்.  

 

உங்களை விட உயர்வானவர்களை நோக்குங்கள். அவர்கள் சொல்வதை கேளுங்கள். 


அறத்துக்கு இரண்டு கூறு சொல்கிறார். 


ஒன்று செய்வது, இன்னொன்று செய்யாமல் விடுவது. 


செய்வது கடினம். செய்யாமல் இருப்பதில் என்ன கஷ்டம்?


கள்ளுண்ணாதே , திருடாதே, பொய் பேசாதே என்கிறார். 


பேசாமல் இருந்தால் போதும், பாதி அறம் வந்து விடும். பேசினால்தானே மெய்,பொய் என்று வரும். பேசாமல் இருந்து விட்டால் ? 

திருட்டு,பிறன் மனை விழைதல், கள் உண்ணுதல் என்ற அறப் பிழையும் வராது. 


மனு முதலிய நூல்களில் உள்ளது என்று சொல்லுவது எளிது. எத்தனை புத்தகங்கள் இருக்கின்றன? அதை எல்லாம் படித்து அதன் படி நடப்பது என்பது முடிகிற காரியமா?


முடியாது தான். அதனால் தான் வள்ளுவர், அவற்றை எல்லாம் தொகுத்து ஒரே புத்தகத்தில் தருகிறார். இதைப் படித்து அதன் படி நடந்தால் போதும். 


அறம் என்றால் என்ன என்று தேடி அலைய வேண்டாம். திருக்குறளில் எல்லா அறமும் இருக்கிறது. 


இதை மட்டும் பின் பற்றினால் போதும். 


எவ்வளவு பெரிய வேலையை செய்திருக்கிறார் வள்ளுவர்!


வாருங்கள் மேலும் படிப்போம். 




Monday, March 15, 2021

திருக்குறள் - பரிமேலழகர் உரைப்பாயிரம் - பாகம் 1

 திருக்குறள் - பரிமேலழகர் உரைப்பாயிரம் - பாகம் 1 


நமக்கு வாழ்வில் சில குறிக்கோள் இருக்கும்.  அந்த இலக்கை அடைந்தால் நாம் நிம்மதியாக மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நாம் மனதுக்குள் குறித்துக் கொண்டு அந்த குறிக்கோளை நோக்கி நகர்வோம். 


பல குறிக்கோள்களை அடைந்தும் இருப்போம். நிம்மதியாக, மகிழ்வாக இருக்கிறோமா? 


"பொண்ணுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சுட்டால், அப்புறம் ஒரு பிரச்சனையும் இல்லை. நிம்மதியா அக்கடான்னு இருக்கலாம்" நு நினைப்போம். அப்படி நினைத்த எத்தனை பேர் நிம்மதியாக இருக்கிறார்கள் ?



பெண்ணுக்கு திருமணம் ஆன சில நாட்கள், மாதங்கள் சந்தோஷமாக இருக்கும். அப்புறம் ஏதாவது பூதம் கிளம்பும். 


எந்த ஒரு பொருளையோ, அனுபவத்தையோ நாம் அடைந்தால் சந்தோஷம் வரும் என்று நினைத்து அதை அடையும் தருவாயில், நம் நோக்கம் மாறிப் போய் விடுகிறது. 


மனம், அதை விட்டு விட்டு வேறொன்றின் பின் செல்லத் தலைப் படுகிறது. 


சரி, இப்படியே போய்க் கொண்டிருந்தால், அதற்கு என்னதான் முடிவு என்று ஆராய்ந்து, அதற்கு ஒரு விடையும் கண்டு பிடித்து விட்டார்கள். 


அது தான் வீடு பேறு அல்லது இறைவனின் திருவடி. அதை அடைந்த பின், அதற்கு மேல் ஒன்று இல்லை. 


அதற்கு கீழான அனைத்து இன்பங்களும் முடியக் கூடிய இன்பங்கள். தொடங்கியதில் இருந்து முடியாமல் இருந்து கொண்டே இருக்கும் இன்பம் என்று ஒன்று இருக்கிறதா? 


சரி, வீடு பேறு என்று சொல்லப்படும் அதை எப்படி அடைவது? 


ஒன்று இருக்கிறது என்று சொன்னால், அதை எப்படி அடைவது என்றும் சொல்ல வேண்டும் அல்லவா?


அதை அடைய நம் சான்றோர் வகுத்த வழி நான்கு


அதாவது - அறம்  பொருள், இன்பம், வீடு என்பன. 


இதைத்தான் வள்ளுவர் தொகுத்துக் கூறுகிறார். 


ஆனால், வீடு பற்றி சொல்லவில்லையே. அறம், பொருள், இன்பம் மூன்று தானே இருக்கிறது என்று கேட்டால், வீடு என்பது நம் சொல்லும் சிந்தனையும் செல்லாத  இடம் என்பதால், அதை நேரே சொல்ல முடியாது, அதற்கு வழி தான் காட்ட முடியம் என்பதால், வழி சொல்வதோடு வள்ளுவர் நிறுத்திக் கொள்கிறார். நீங்கள் அந்த வழியே போனால், "வீடு பேறு" வரும். 


இதை பரிமேலழகர் உரைப்பாயிரத்தில் எப்படி சொல்கிறார் என்று பாருங்கள். 


உரைப்பாயிரம் 

இந்திரன் முதலிய இறையவர் பதங்களும், அந்தமில் இன்பத்து அழிவில் வீடும், நெறியறிந்து எய்துதற்குரிய மாந்தர்க்கு உறுதியென உயர்ந்தோரான் எடுக்கப்பட்ட பொருள் நான்கு. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன. அவற்றுள் வீடென்பது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து ஆகலின், துறவறமாகிய காரணவகையாற் கூறப்படுவதல்லது இலக்கணவகையாற் கூறப்படாமையின், நூல்களாற் கூறப்படுவன ஏனை மூன்றுமேயாம்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/1.html

click the above link to continue reading



அந்தக் கால தமிழ நடை. சற்று அடர்த்தியாக இருக்கும். 


ஒவ்வொரு பாகமாக படிப்போம். 


"இந்திரன் முதலிய இறையவர் பதங்களும்" = எவ்வளவு பெரிய செல்வம், பதவி, அதிகாரம் எதுவாக இருந்தாலும். இந்திர பதவியை விட பெரிய பதவி இருக்குமா? பஞ்ச பூதங்களும் இந்திரனின் ஆட்சிக்கு கட்டுப் பட்டவை.


"அந்தமில் இன்பத்து" = முடிவில்லாத இன்பம். எது முடிவில்லாது? ஸ்வர்கம், இந்திரப் பதவி போன்றவை என்றோ ஒரு நாள் முடியும். முடிந்த பின், மீண்டும் மனிதனாகவோ, விலங்காகவோ பிறக்க வேண்டும். முடிவில்லாத இன்பம் அடையவும்....


அழிவில் வீடும்  = அழிவற்ற வீடு பேறு. முதலில் இந்திரன் போன்ற தேவ பதவிகள், பின் அந்தம் இல்லாத இன்பம், பின் வீடு பேறு 


இந்த மூன்றையும் அடைய 


நெறியறிந்து எய்துதற்குரிய மாந்தர்க்கு = நெறி என்றால் வழி. எந்த வழியில், முறையில் சென்றால் அதை அடைய முடியுமோ. லாட்டரி சீட்டு அடித்தால் பணம் வரும். ஆனால் எல்லோருக்கும் அது அடிக்குமா? எனவே அது வழி அல்ல. குருட்டு அதிர்ஷ்டம். 


 உறுதியென = நிச்சயமானதென்று 


உயர்ந்தோரான் = பெரியவர்களால் 


எடுக்கப்பட்ட பொருள் நான்கு = சொல்லப் பட்ட பொருள்கள் நான்கு. 


அவை = அவையாவன 


 அறம், பொருள், இன்பம், வீடு என்பன. = அறம், பொருள், இன்பம் வீடு என்ற நான்குமாகும். 


அவற்றுள் = அந்த நான்கில் 


வீடென்பது = வீடு பேறு என்பது 


சிந்தையும் மொழியும் = நம் அறிவும், சொல்லும் 


செல்லா நிலைமைத்து ஆகலின் = செல்லாது என்று இருப்பதால் 


துறவறமாகிய = துறவறம் என்ற 


காரணவகையாற் = காரண வகை.  அது என்ன காரண வகை? நீங்கள் புதிதாக ஒரு இடத்துக்குப் போகிறீர்கள். விலாசம் இருக்கிறது. ஆனால் வழி தெரியவில்லை. அங்குள்ள ஒரு ஆளிடம் அந்த விலாசத்தை காட்டி, வழி கேட்கிறீர்கள். அவர், வழி சொல்கிறார். "இப்படியே நேரே போய், வலது புறம் திரும்பி...." என்று அடையாளங்கள் சொல்கிறார். 


நீங்கள், "அதெல்லாம் நம்ப முடியாது. அந்த விலாசம் உள்ள வீட்டை இங்கே கொண்டு வந்து காட்டு. அப்போதுதான் நம்புவேன்" என்று சொன்னால் எப்படி இருக்கும். 


அவர் சொன்ன வழியில் சென்று பார்க்க வேண்டும். அவர் சொல்வதை நம்ப வேண்டும். வேறு வழி இருக்கிறதா? உங்களுக்கோ தெரியாது. தெரிந்தவர் சொல்கிறார். அவர் சொல்வதை கேட்டு நடந்தால், நீங்கள் தேடிய இடம் வரும். 


அதைத்தான் "காரண வகை" என்று கூறினார். மத்தபடி நேரில் காட்ட முடியாது. 


கூறப்படுவதல்லது = அதைத் தவிர் வேறு வழியில் கூற முடியாது 


இலக்கணவகையாற் கூறப்படாமையின் = விளக்கிக் கூற முடியாது என்பதால் 


நூல்களாற் கூறப்படுவன = அனைத்து நூல்களிலும் கூறப் படுவது 


ஏனை மூன்றுமேயாம். = மற்ற மூன்றும் தான். அதாவது, அறம், பொருள் இன்பம் என்ற மூன்று மட்டுமே. 


வீடு பேறு பற்றிக் எந்த நூலாவது கூறினால், அது சரி அல்ல என்று புரிந்து கொள்ள முடியும். 


எனவே, வீடு பேறு அடைய, அறம், பொருள் , இன்பம் என்ற இந்த மூன்று மட்டும்தான் (வேறு எதுவம் கிடையாது) . எனவே, அந்த  மூன்றை வள்ளுவர் எடுத்துக் கொள்கிறார் என்கிறார் பரிமேலழகர். 


இப்போது மீண்டும் ஒரு முறை உரைப்பாயிரத்தின் முதல் பத்தியை படித்துப் பாருங்கள். 


"இந்திரன் முதலிய இறையவர் பதங்களும், 


அந்தமில் இன்பத்து அழிவில் வீடும், 


நெறியறிந்து 


எய்துதற்குரிய மாந்தர்க்கு 


உறுதியென உயர்ந்தோரான் எடுக்கப்பட்ட பொருள் நான்கு. 


அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன. 


அவற்றுள்


 வீடென்பது


 சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து ஆகலின், 


துறவறமாகிய காரணவகையாற் கூறப்படுவதல்லது 


இலக்கணவகையாற் கூறப்படாமையின், 


நூல்களாற் கூறப்படுவன ஏனை மூன்றுமேயாம்."


வள்ளுவர் இந்த மூன்றையும் சொன்னதினால், அவர் வீடு பேறு பற்றியும் சொல்லி இருக்கிறார் என்று புரிந்து கொள்ள வேண்டும். 


இப்போது புரிகிறதா 


எதற்கு திருக்குறள் படிக்க வேண்டும் (வீடு பேறு அடைய) 

ஏன் அறம் , பொருள் இன்பம் என்று மட்டும் சொன்னார் 

என்பதெல்லாம் புரிந்து விட்டதா ?


மேலே படிப்போமா? அல்லது இவ்வளவே போதுமா ?