திருவாசகம் - யாத்திரைப் பத்து - போக விடுமின்கள்
சின்ன வயதில் ஒரு விதமான உடைகளை அணிந்து இருப்போம். வயதான பின்னும் அதையே அணிய முடியுமா? வயதுக்கு ஏற்ப உடை அணிய வேண்டாமா?
சிறு வயதில் குச்சி மிட்டாய், போன்ற தின் பண்டங்களை விரும்பி உண்டிருப்போம். வயதாக வயதாக அவற்றில் உள்ள பற்றை விட வேண்டாமா? என்பது வயதிலும் குச்சி மிட்டாய் வேண்டும் என்றால் எப்படி?
உடை, உணவு போல மற்றவற்றையும் நீங்கள் நினைத்துக் கொள்ளுங்கள். ஒரு வயதில் அது சரி. பின் அதை விடப் பழக வேண்டும்.
நம் சிக்கல் என்ன என்றால், பிள்ளைகளுக்கு சமமாக, பேரப் பிள்ளைகளுக்கு சமமாக நாமும் போட்டி போட்டுக் கொண்டு வாழ்கையை வாழ நினைக்கிறோம்.
இயற்கை நமக்கு நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறது. உனக்கு வயதாகிறது. உன் வாழ்வை சீராக்கு என்று. பல் சொத்தை விழுகிறது. பல் விழுந்து விடுகிறது. பொய் பல் கட்டியாவது முறுக்கு சீடை சாப்பிட வேண்டுமா?
ஏன், சாப்பிட்டால் என்ன? என்று கேட்கலாம்.
பல்லுக்கு பதில் பொய் பல் கட்டி விடலாம். சீரண உறுப்புகளுக்கும் வயதாகுமே. அவைகளும் செயல் இழக்கத் தொடங்குமே. அதற்கு என்ன செய்வது?
உலக பற்றுகளை கொஞ்சம் கொஞ்சமாக விட வேண்டும். போதும், அனுபவித்து ஆகி விட்டது. எவ்வளவு தான் அனுபவித்தாலும் ஆசை தீரப் போவது இல்லை. நெய்யை விட்டா நெருப்பை அணைக்க முடியும்.
பொருள்கள், அனுபவங்கள் மேல் உள்ள பற்றை விட்டு இறை நாட்டம், ஆத்ம முன்னேற்றத்துக்கு முயல வேண்டும்.
நமக்கு இறை நாட்டம் வந்து விட்டால் போதுமா? இறைவனை அடைய முடியுமா? அப்படி என்றால் எல்லோரும் அடைந்து விடுவார்களே.
மணிவாசகர் சொல்கிறார்...."அதை ஏன் கேட்கிறீர்கள். நம்மை போல மோசமானவர்கள் யாரும் இந்த உலகில் கிடையாது. நம்மை ஆட்கொள்ள அந்த இறைவனே இறங்கி இரங்கி வருகிறான். ஊரில் உள்ளவர்கள் எல்லாம் அவனைப் பார்த்து சிரிக்கிறார்கள். 'உனக்கு என்ன பைத்தியமா..? அவனை போய் ஆட்கொள்ள செல்கிறாயே...நீ எவ்வளவு பெரிய ஆள்...அவன் ஒண்ணுக்கும் உதவாதவன் .. அவனுக்கு அருள் செய்யப் போகிறாயே' என்று இறைவனை பார்த்து எல்லோரும் நகைக்கிறார்கள். இருந்தும் அவன் நமக்கு அருள் செய்ய வருகிறான்" என்று உருகுகிறார் மணிவாசகர்.
நமக்கு அருள் செய்ய வேண்டும் என்று ஒரு நிர்பந்தமும் இல்லை இறைவனுக்கு. அருள் செய்யா விட்டாலும் யாரும் ஏன் என்று அவனை கேட்கப் போவதும் இல்லை.
இருந்தும் அவன் கருணை, நமக்கு அருள் செய்கிறான். மற்றவற்றை விட்டு விட்டு அவன் தாளைப் பற்றுங்கள் என்கிறார் மணிவாசகர்.
பாடல்
புகவே வேண்டாம் புலன்களில் நீர்; புயங்கப் பெருமான் பூம் கழல்கள்
மிகவே நினைமின்; மிக்க எல்லாம் வேண்டா; போக விடுமின்கள்;
நகவே, ஞாலத்து உள் புகுந்து, நாயே அனைய நமை ஆண்ட,
தகவே உடையான் தனைச் சாரத் தளராது இருப்பார் தாம் தாமே.
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2021/12/blog-post_3.html
(please click the above link to continue reading)
புகவே வேண்டாம் புலன்களில் நீர் = நீங்கள் புலன்கள் தரும் இன்பத்தின் பின்னால் போய்த் திரிய வேண்டாம்
புயங்கப் பெருமான் = பாம்பணிந்த பெருமான்
பூம் கழல்கள் = பூ போன்ற திருவடிகளை
மிகவே நினைமின் = ஆழ நினையுங்கள்
மிக்க எல்லாம் வேண்டா = மற்றவை எல்லாம் வேண்டாம்
போக விடுமின்கள் = போகட்டும், விட்டு விடுங்கள்
நகவே = உலகில் உள்ளவர்கள் சிரிக்க
ஞாலத்து உள் புகுந்து = இந்த உலகத்தின் உள்ளே வந்து
நாயே அனைய = நாய் போன்ற
நமை ஆண்ட = நம்மை ஆட்கொண்ட
தகவே உடையான் = பெருமை உடையவன்
தனைச் சாரத் = அவனை சார்ந்தவர்கள்
தளராது இருப்பார் தாம் தாமே. = ஒரு தளர்ச்சியும் இல்லாமல் அவரவர்கள் இருப்பார்கள்.
இதுவரை நம் பயணம் புலன் இன்பங்களை நாடி சென்று கொண்டு இருந்தது. இனி, அந்தத் திசையை விட்டு இறை நோக்கி நம் பயணம் அமையட்டும் என்கிறார் யாத்திரைப் பத்தில் இரண்டாவது பாடலில்