Thursday, December 2, 2021

திருக்குறள் - சாவா மருந்தெனினும் வேண்டாம்

திருக்குறள் - சாவா மருந்தெனினும் வேண்டாம் 


உலகில் மூன்று வகையான மருந்துகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். 


நோவா மருந்து 

மூவா மருந்து 

சாவா மருந்து 


என்று மூன்று வகை மருந்துகள் இருக்கிறதாம். நமக்கு நோவா மருந்து மட்டும் தான் தெரியும். எப்போதும் இளமையாக இருபதற்கு ஒரு மருந்து இருந்தால் எப்படி இருக்கும். இளமையாகவும் இருந்து சாகாமலும் இருந்தால் அது எப்படி இருக்கும்? 


ஆசை தான். 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


சாவா மருந்து என்பதை பொதுவாக அமுதம் என்று சொல்வார்கள். அமுதம் உண்டால் சாவு கிடையாது. 


நமக்கு கொஞ்சம் அமுதம் கிடைத்து இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதை நாம் உண்ண தொடங்கும் அந்த நேரத்தில் ஒரு விருந்தினர் வந்து விட்டார் என்று வைத்துக் கொள்வோம். நாம் என்ன செய்வோம்? 


ஒரே வாயில் அந்த அமுதத்தை உண்டு விட்டு, விருந்தினரை "வாங்க வாங்க " என்று உபசரிப்போம். அப்படிதான் பெரும்பாலானோர் செய்வார்கள். 


வள்ளுவர் சொல்கிறார், அமுதமே என்றால் கூட, விருந்து வீட்டில் காத்து இருக்க தனித்து உண்பது என்பது கூடாது என்று. 


பாடல் 


விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/12/blog-post_2.html


(Please click the above link to continue reading)



விருந்து = விருந்தினர் 


புறத்ததாத் = புறத்தில் இருக்க 


தானுண்டல் = தான் மட்டும் உண்பது 


சாவா மருந்தெனினும்  = சாக மருந்து என்று சொல்லப்படும் அமுதம் என்றாலும் 


வேண்டற்பாற் றன்று. = அது வேண்டுவது/விரும்புவது முறை அன்று 


இதில் சில தர்க்க ரீதியான சிக்கலும், நயமும் இருக்கிறது. 


சரி, விருந்து வந்து விட்டால் என்ன?  உள்ளே தூக்கி வைத்து விட்டு, விருந்தினர் போன பின் உண்ணலாமே என்றால், தனித்து உண்டல் கூடாது என்கிறார். 


சரி, விருந்தினருக்கு கொஞ்சம் கொடுத்து, நாமும் கொஞ்சம் உண்டால் என்ன என்றால், அமுதம் என்பது பெரிய அண்டாவில் கிடைக்கும் பொருள் அல்ல. ஏதோ கொஞ்சம் கிடைத்து இருக்கும். அதை முழுமையாக உண்டால்தான் பலன் கிடைக்கும். விருந்தினர்க்கு கொஞ்சம் கொடுத்து, நாம் கொஞ்சம்உண்டால் இரண்டு பேருக்கும் பலன் இருக்காது. 


அப்படி என்றால் என்ன செய்வது?


வள்ளுவர் சொல்கிறார், "அப்படிப் பட்ட அமுதம் வேண்டாம்" என்று. வேண்டற் பாற்று. 


அமுதத்தை உண்ணா விட்டால் உயிர் போய் விடும். இப்ப இல்லாவிட்டாலும் பின் ஒரு நாள் உயிர் கட்டாயம் போகும். 


உயிரே போனாலும் பரவாயில்லை, விருந்தினர் புறத்து இருக்க நான் மட்டும் தனியாக உண்ண மாட்டேன் என்று இருக்க வேண்டும் என்கிறார். 


அமுதம் என்று ஒன்று இல்லை தான். இது ஒரு இல் பொருள் உவமை தான். 


இருந்தும், எவ்வளவு உயர்ந்த பொருளாக இருந்தாலும், விருந்தினரை வெளியே இருக்க வைத்து விட்டு தான் மட்டும் உண்பது என்பது அறம் அல்ல என்கிறார்.


அமுதமே உண்ணக் கூடாது என்றால் மற்றவற்றைப் பற்றி என்ன சொல்லுவது.


விருந்தோம்பலின் உச்சம் தொட்டுக் காட்டுகிறார் வள்ளுவர். 


விருந்துக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தது நம் பாரம்பரியம். 


முடிந்தவரை எட்டிப் பிடிப்போம். 






1 comment:

  1. மூவகை மருந்துகளின் பெயர்களே அசத்துகின்றன.


    சாகா மருந்தான தமிழை,
    மூவா மருந்தான
    உங்கள் வலைதளகட்டுரை நோவா மருந்தாக எளிமையாக மாற்றி பயன்தருகிறது.

    ReplyDelete