Wednesday, December 1, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - எண்ணாத பொழுது

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - எண்ணாத பொழுது 


நாம் யாரையெல்லாம் அடிக்கடி நினைக்கிறோம்?


கணவன்/மனைவி, பிள்ளைகள், பெற்றோர், உடன் பிறப்பு, சில பல நண்பர்கள் என்று ஒரு கூட்டம் வைத்து இருக்கிறோம்.


அது போக 


பள்ளியில், கல்லூரியில், அலுவலகக்தில், உடன் வேலை செய்பவர்கள், அரசாங்க அதிகாரிகள் என்று கொஞ்சம் பேரை நினைக்கிறோம். 


மேலும் 


தொலைக்காட்சி, செய்தித்தாள் என்று எடுத்தால் அரசியல் தலைவர்கள்,  விளையாட்டு வீரர்கள், கொலை கொள்ளை செய்த நபர்கள் என்று பலரை நினைவில் கொண்டு வருகிறது. 


நல்லவர்களை நினைக்கிறோமா? 


நல்லவர்கள் என்றால் யார்?


படித்தவர்கள், நாலு பேருக்கு நல்லது செய்பவர்கள், சுய நலம் இல்லாதவர்கள் என்று கொஞ்ச பேரையாவது நினைக்கிறோமா?


திருமங்கை ஆழ்வார் சொல்கிறார், "இறைவனை நினைக்காதவர்களை பற்றி நினைக்காமல் இருப்பதே சுகம்" என்று. 


இறைவன் நமக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறான். அந்த நன்றியை மறந்து அவனை நினைக்காதவர்களை நான் ஏன் நினைக்க வேண்டும். அப்படி நன்றி மறந்தவர்களை நினைக்காமல் இருப்பதே இனிமையான அனுபவம் என்கிறார். 


பாடல் 


மண்ணாடும் விண்ணாடும் வானவரும் தானவரும் மற்றுமெல்லாம்


உண்ணாத பெருவெள்ளம் உண்ணாமல் தான் விழுங்கி உய்யக் கொண்ட,


கண்ணாளன் கண்ணமங்கை நகராளன் கழல் சூடி, அவனை உள்ளத்து


எண்ணாத மானிடத்தை எண்ணாத போதெல்லாம் இனியவாறே.




பொருள் 





(Please click the above link to continue reading)


மண்ணாடும் = பூ உலகும் 


விண்ணாடும் = வானுலகமும் 


வானவரும் = தேவர்களும் 


தானவரும் = அசுரர்களும் 


மற்றுமெல்லாம் = மற்றும் உள்ள அனைத்தும் 


உண்ணாத பெருவெள்ளம் = அடங்காத பெரு வெள்ளம் (பிரளயம்) 


உண்ணாமல் = அவர்களை எல்லாம் உண்டு விடாமல் 


தான் விழுங்கி = தானே விழுங்கி, வயிற்றில் வைத்து இருந்து 


உய்யக் கொண்ட, = பின் உமிழ்ந்து அவை பிழைத்து இருக்கும் படி செய்த 


கண்ணாளன் = கண்ணாளன் (என்ன ஒரு அழகான சொல்) 


கண்ணமங்கை நகராளன் = திருக் கண்ணபுரம் என்ற தலத்தில் இருப்பவன் 


கழல் சூடி = திருவடிகளைப் போற்றி 


அவனை உள்ளத்து = அவனை தங்கள் உள்ளத்தில் 


எண்ணாத மானிடத்தை  = நினைக்காத மனிதர்களை 


எண்ணாத போதெல்லாம் = நான் நினைக்காமல் இருக்கும் பொழுது எல்லாம் 


இனியவாறே. = இனிய பொழுதே 


யோசித்துப் பாருங்கள். 


நமக்கு மனதுக்கு பிடித்தவர்களை நினைக்கும் போது நமக்கு ஒரு மகிழ்ச்சி உண்டாகிறது அல்லவா? 


சில பேரை நினைத்தாலே ஒரு கோபமும், எரிச்சலும், வெறுப்பும் வருகிறது அல்லவா?


இறைவனை நினைக்கும் அடியார்களை விடுத்து மற்றவர்களை நினைக்காமல் இருப்பதே சுகமான அனுபவம் என்கிறார். 


என்ன ஒரு அழகான சிந்தனை. 


கண்டவர்களையும் ஏன் நினைக்க வேண்டும்? 


2 comments:

  1. என்னால் நினைத்தும் பார்க்க முடியாத கண்ணோட்டம். ஆழ்வார் சொல்லும் அழகும் மெய் சிலிர்க்க வைக்கிறது. உங்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  2. Very beautiful explanation

    ReplyDelete