Monday, August 7, 2023

நாலடியார் - நட்பிற் பிழை பொறுத்தல் - தீ

 நாலடியார் - நட்பிற் பிழை பொறுத்தல் - தீ 


தவறு செய்யாதவர் யார்? 


குறை இல்லாதவர் யார்?  


குறை இருக்கிறது, தவறு செய்து விட்டார்கள் என்று ஒருவரை நம் நட்பில் இருந்து விலக்கி விட்டால், அதனால் நட்டம் அடையப் போவது நாம் தான் என்கிறது நாலடியார். 


தீ சில சமயம் வீட்டையே எரித்து விடுகிறது. அதற்காக தீ வேண்டாம் என்று வைத்தால், எப்படி உணவு சமைப்பது? உண்பது? உயிர் வாழ்வது?


என்ன செய்வது, சில சமயம் வரம்பு மீறிப் போய் துன்பம் தந்து விடுகிறது. அதற்காக அது வேண்டாம் என்று ஒதுக்க முடியாது. 


அது போல, நண்பர்கள் சில சமயம் நமக்கு இன்னல் விளைவித்து விடலாம். பொறுத்துக் கொள்வது நமக்கு நன்மையே பயக்கும். 



பாடல் 


இன்னா செயினும், விடற்பாலர் அல்லாரைப்

பொன்னாகப் போற்றிக் கொளல் வேண்டும்-பொன்னொடு

நல் இல் சிதைத்த தீ நாள்தொறும் நாடித் தம்

இல்லத்தில் ஆக்குதலால்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_7.html


(please click the above link to continue reading)


இன்னா செயினும் = துன்பம் செய்தாலும், இன்பம் அல்லாதவற்றைச் செய்தாலும் 


விடற்பாலர் = விட்டு விடுதற்கு உகந்தவர் 


அல்லாரைப் = அல்லாதவரை. அதாவது, விடக் கூடாதவர்களை 


பொன்னாகப் = தங்கத்தைப் போல் 


போற்றிக் = சிறப்பாக 


கொளல் வேண்டும் = கொள்ள வேண்டும். நட்புக் கொள்ள வேண்டும் 


பொன்னொடு = தங்கத்தோடு, மதிப்புள்ள பொருள்களோடு உள்ள 


நல் இல் = நல்ல வீட்டை 


சிதைத்த = நாசம் செய்த 


தீ = தீயானது 


நாள்தொறும் = ஒவ்வொரு நாளும் 


 நாடித் = விரும்பி 


தம் = நமது 


இல்லத்தில் = இல்லத்தில் 


ஆக்குதலால் = சோறு ஆக்குதலால் 


என்றோ ஒரு நாள், ஒரு விபத்து மூலமாக, ஒரு அசாதரண சூழ்நிலையில் தீ நமக்கு துன்பம் விளைவித்து விடலாம். அதனால் வரும் துன்பம் பெரியதுதான். இல்லை என்று சொல்வதற்கு இல்லை. ஆனால், அப்படி ஒரு துன்பம் தந்த தீ இனிமேல் என் வீட்டில் இருக்கக் கூடாது என்று யாராவது சொல்லுவார்களா?  தீ இல்லாமல் உணவு சமைக்க முடியாது. 


அது போல நண்பர்களும், சில சமயம் நமக்கு பெரிய தீங்கு செய்துவிட்டாலும், அதை ஒரு விபத்து என்றே எடுத்துக் கொண்டு, அவர்களை விட்டு விடக் கூடாது. 


அதற்காக எல்லா நண்பர்களையும், எல்லா சமயத்திலும் என்று சொல்லவில்லை. 


சில நண்பர்கள் இருப்பார்கள். அவர்கள் நமக்கு பல உதவிகள் செய்து இருப்பார்கள். நம் மேலும், நம் குடும்பத்தின் மேலும் மிகுந்த அக்கறை உள்ளாவர்களாக இருப்பார்கள். ஏதோ ஒரு தவிர்க்க முடியாத காரணத்தால், அவர்களின் ஒரு செயல் நமக்கு துன்பம் தந்து இருக்கலாம். அதற்காக அவர்களை விட்டு விடக் கூடாது. 


"விடற்பாலர் அல்லாரைப்"


விடற்பாலர் என்றால் விட்டு விட கூடியவர்கள் 


அல்லாரை என்றால் அப்படி விட முடியாதவர்களை.


நல்ல நண்பர்களை இழந்துவிடக் கூடாது, அவர்களால் ஏதேனும் சில சங்கடங்கள் வந்தாலும். 




No comments:

Post a Comment