Wednesday, August 9, 2023

திருக்குறள் - ஒப்புரவறிதல் - ஒரு முன்னோட்டம்

 திருக்குறள் - ஒப்புரவறிதல் - ஒரு முன்னோட்டம் 


திருக்குறள் மூன்று பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது என்று நமக்குத் தெரியும். 


அறம், பொருள், இன்பம் என்று பிரிக்கப்பட்டுள்ளது. 


அதில் அறம் என்ற பகுதி - இல்லறம், துறவறம் என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. 


நாம் இப்போது இல்லறத்தின் இறுதிப் பகுதிக்கு வந்து விட்டோம். 


இல்லறம் என்பது என்ன?


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_9.html

(please click the above link to continue reading)


சுருக்கமாகச் சொன்னால் அன்பின் விரிவு. 


தனி மனிதனாக இருந்த ஒருவன் மனைவி, மக்கள், சுற்றம், நட்பு, சமுதாயம் என்று அவன் அன்பு விரிந்து கொண்டே போவதுதான் இல்லறம். 


துறவறமும் அதுதான். அது பற்றி பின் சிந்திப்போம். 


இல்லறத்தின் மூலம் விரியும் அன்பானது இல்லத்தைத் தாண்டி சமுதாயத்துக்குளும் பரவும். பரவ வேண்டும். 


அப்படி, தான் சார்ந்த ஒரு சமுதாயத்தின் மேல் அக்கறை உள்ள ஒருவன், அதன் மேல் அன்பு கொண்டு அந்த சமுதாயத்துக்கு செய்யும் நன்மைகள்தான் "ஒப்புரவு அறிதல்" என்று சொல்லப்படும். 


திருவள்ளுவர் ஒவ்வொரு அதிகாரத்துக்கும் தரும் தலைப்பே ஆயிரம் அர்த்தம் சொல்லும். 


முந்தைய அதிகாரம் "தீவினை அச்சம்". தீவினை செய்யாமை என்று வைத்து இருக்கலாம். அச்சம் என்று வைத்தார். 


இங்கே, ஒப்புரவு செய்தல் என்று வைத்து இருக்கலாம். ஆனால், ஒப்புரவு அறிதல் என்று வைத்து இருக்கிறார். 


காரணம் என்ன என்று நாம் எவ்வளவு சிந்தித்தாலும் புரியாது. 


பரிமேலழகர் விளக்குகிறார். 


"அஃதாவது உலக நடையினை அறிந்து செய்தல்.உலகநடை வேதநடை போல அறநூல்களுட் கூறப்படுவதன்றித் தாமே அறிந்து செய்யுந் தன்மைத்தாகலின் , ஒப்புரவு அறிதலென்றார்."


ஏதாவது புரிகிறதா?


என்ன சொல்ல வருகிறார் என்றால், உலகத்துக்கு இன்ன இன்னது தேவை என்று பட்டியல் போட்டு சொல்ல முடியாது. 


தெருவில் போகிறோம்.  இரவு நேரம். இருண்டு கிடக்கிறது. விபத்து நேரலாம். அல்லது சில கயவர்கள் ஏதேனும் செய்யலாம். அங்கு ஒரு விளக்கு போட உதவி செய்வது ஒப்புரவு அறிதல். இது ஏதேனும் நூலில் சொல்லி இருக்கிறதா என்றால் இல்லை. நீயே அறிந்து செய் என்கிறார். 


வேத நடை என்றால் வேதம் முதலிய அற நூல்களில் கூறி உள்ளது போல என்று அர்த்தம். அப்படி எல்லாவற்றையும் கூறிக் கொண்டு இருக்க முடியாது. நீயே அறிந்து செய். புத்தகத்தில் இல்லை, எனவே செய்ய மாட்டேன் என்று சொல்லாதே என்கிறார். 


இந்த ஒப்புரவு ஏன் செய்ய வேண்டும் என்றால், தான் வாழும் சமுதாயம் சிறக்க வேண்டும் என்று நினைத்து செய்வது.


எப்படி தன் குடும்பம் சிறக்க வேண்டும் என்று ஒருவன் நினைப்பானோ, அப்படியே தான் சார்ந்த சமுதாயத்தையும் தன் குடும்பமாக பாவித்து அதற்கும் உதவி செய்ய வேண்டும். 


இப்படி யோசித்துப் பாருங்கள்...ஒரு சமுதாயத்தில் உள்ள அனைவரும், அவர்களுடைய சமுதாயம் மேம்பட வேண்டும் என்று நினைத்து செயல்பட ஆரம்பித்தால் அந்த சமுதாயம் எப்படி இருக்கும். 


ஒரு மருத்துவர், நான் ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் செய்கிறேன் என்று ஆரம்பிக்கிறார். 


ஒரு ஆசிரியர், நான் ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக படிப்பு சொல்லித் தரப் போகிறேன் என்கிறார். 


ஒரு செல்வந்தர், இங்குள்ள எல்லோருக்கும், நான் இலவச உணவு அளிக்கப் போகிறேன் என்கிறார். 


இப்படி ஒவ்வொருவரும், சமுதாயம் சிறக்க பாடுபட்டால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். 


இல்லறம் என்பது நாலு சுவருக்குள் இருப்பது அல்ல. 


இனி, அதிகாரத்துக்குள் செல்வோமா....







No comments:

Post a Comment