கம்ப இராமாயணம் - முகம் காட்ட வல்லேனோ ?
https://interestingtamilpoems.blogspot.com/2024/02/blog-post_28.html
இயற்கையாகவே பெண்கள் அழகானவர்கள். அவர்கள் அழகாக இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துபவர்கள். உடை, ஒப்பனை என்று அனைத்து விதத்திலும் தாங்கள் அழகானவர்கள் என்று காட்டிக் கொள்ள விரும்புவார்கள். அழகுணர்ச்சி அவர்களிடம் இயற்கையிலேயே அமைந்து கிடக்கிறது.
தங்கள் அழகு மட்டும் அல்ல, அவர்கள் இருக்கும் இடம், வீடு, சமையல் அறை எல்லாமே ஒரு அழகோடு, நேர்த்தியோடு இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.
ஒரு பெண்ணால் சகிக்க முடியாத ஒன்று அவளின் அழகை இழப்பதுதான். ஆரோக்கியம் குறைந்தால் கூட கொஞ்சம் குறைவாகத்தான் கவலைப்படுவார்கள். அழகு குறைவது பெரிய குறை.
சாதாரண நாட்களை விட வீட்டில் ஒரு விசேடம் என்றால் கேட்கவே வேண்டாம். புதுத் துணி, அழகு நிலையத்துக்குப் போய் தங்களை மேலும் அழகு படுத்திக் கொள்வது, நகைகளை மெருகேற்றிக் கொள்வது, என்று அதிகப்படியான சிரமம் எடுத்துக் கொள்வார்கள்.
நம் வீட்டு பெண்மணிகள் நிலை இது என்றால், சூர்பனகை நிலை எப்படி இருக்கும்.
இராவணனின் அவை எப்படி இருக்கும்?
தேவாதி தேவர்கள் எல்லாம் வந்து அவன் முன் கை கட்டி நிற்பார்கள். தேவ லோகப் பெண்கள் பல்லாண்டு பாடுவார்கள். ஏழேழு உலகமும் அவனை துதித்து நிற்கும். அப்பேற்பட்ட சபையில் அவள் சென்றால் அவளுக்கு எவ்வளவு மதிப்பு இருக்கும்.
ஆனால், இன்று அவள் மூக்கும், காதும், முலையும் அறுபட்டு இருக்கிறாள். இப்படிப்பட்ட நிலையில் அந்த சபைக்கு அவள் போனால் எப்படி இருக்கும்? அவளைப் பார்த்து எல்லோரும் சிரிக்க மாட்டார்களா? அவளால் அங்கு போக முடியுமா?
பாடல்
'இந்திரனும், மலர் அயனும்,
இமையவரும், பணி கேட்ப,
சுந்தரி பல்லாண்டு இசைப்ப, உலகு
ஏழும் தொழுது ஏத்த,
சந்திரன்போல் தனிக் குடைக்கீழ்
நீ இருக்கும் சவை நடுவே
வந்து, அடியேன் நாணாது,
முகம் காட்ட வல்லேனோ?
பொருள்
'இந்திரனும் = தேவர்களின் தலைவனான இந்திரனும்
மலர் அயனும் = தாமரை மலர் மேல் இருக்கும் பிரமனும்
இமையவரும் = கண் இமைக்காத மற்ற தேவர்களும்
பணி கேட்ப = இராவணன் இட்ட கட்டளையை கேட்டு நடக்க
சுந்தரி = தேவ லோகப் பெண்கள்
பல்லாண்டு இசைப்ப= பல்லாண்டு பாடல் பாட
உலகு ஏழும் = ஏழு உலகும்
தொழுது ஏத்த = பணிந்து தொழ
சந்திரன்போல் = நிலவைப் போன்ற வெண்மையான
தனிக் குடைக்கீழ் = தனிச் சிறப்பு வாய்ந்த குடையின் கீழ்
நீ = இராவணனாகிய நீ
இருக்கும் சவை நடுவே = வீற்றிற்கும் சபையின் நடுவே
வந்து = வந்து
அடியேன் = சூற்பனகையான நான்
நாணாது = நாணம் இல்லாமல்
முகம் காட்ட வல்லேனோ? = முகத்தையாவது காட்ட முடியுமா? (முடியாது)
அவளால் அந்த அவமானத்தை தாங்க முடியவில்லை. உறுப்பு அறுந்த வலி கூட பெரிதாகத் தெரியவில்லை. தன் அழகு போய் விட்டதே. வெளியே தலை காட்ட முடியாமல் போய் விட்டதே என்று வருந்துகிறாள்.
ஒரு பெண்ணின் அவல நிலையை கம்பன் அவ்வளவு துல்லியமாக படம் பிடிக்கிறான்.