Thursday, February 1, 2024

அறநெறிச்சாரம் - அச்சு இறும் காலத்து

 அறநெறிச்சாரம் - அச்சு இறும் காலத்து 


மிக வயதானவர்களைப் பார்த்தால் தெரியும். படுக்கையில் இருந்து எழுவது கூட அவர்களுக்கு பெரிய வேலையாகத் தெரியும். எழுந்து நாலடி எடுத்து வைப்பதற்குள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கும். மற்றவர்கள் சொல்வது எதுவும் காதில் விழாது. படிப்பு என்பது சுத்தமாக இருக்காது.யார் என்ன சொன்னாலும் மிகச் சீக்கிரம் மறந்து விடும்....பார்க்கவே பரிதாபமாக இருக்கும். 


அந்த நேரத்தில் தேவாரம் படி, திருவாசகம் படி என்றால் நாக்கு குழறும், மனம் நிற்காது, உடல் எல்லாம் சோர்ந்து போய் இருக்கும். 


எப்படா போய்ச் சேருவோம் என்று இருக்கும். 



நமக்கும் அப்படி ஒரு நாள் கட்டாயம் வரும். அதில் இருந்து தப்ப முடியாது. 


நல்ல காரியங்களை பின்னால் செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தால், இதுதான் நிகழும். செய்யலாம் என்று நினைக்கும் போது உடல் ஒத்துழைக்காது. 


நாடி, நரம்பு எல்லாம் தளர்ந்த பின், அதை எடுத்து ஒட்டவைத்து ஓடவைத்து விடலாம் என்றால் நடக்காது. 


எனவே, உடல் நல்ல நிலையில் இருக்கும் போதே நல்ல காரியங்களை செய்து விட வேண்டும். 


பாடல் 



அறம் புரிந்து ஆற்றுவ செய்யாது நாளும்

உறங்குதல் காரணம் என்னை - மறந்து ஒருவன்

ஆட்டு விடக்கு ஊர்தி அச்சு இறும் காலத்துக்

கூட்டும் திறம் இன்மையால்


பொருள் 

அறம் புரிந்து  = அறச் செயல்களைச் செய்து 


ஆற்றுவ = செய்ய வேண்டிய நல்ல காரியங்களை ஒழுங்கான முறையில் 


செய்யாது = செய்யாமல் 


நாளும் = ஒவ்வொரு நாளும் 


உறங்குதல் = தள்ளிப் போட்டுக் கொண்டே போவதன் 


காரணம் என்னை  = காரணம் என்ன?


மறந்து  = செய்ய வேண்டிய செயல்களை மறந்து 


ஒருவன் = பிரமன்  


நாட்டு =  படைத்த 


விடக்கு = இறைச்சியால் செய்யப்பட்ட 


ஊர்தி = வண்டி 


அச்சு இறும் காலத்துக் = அச்சு முறிந்து போன காலத்தில் 


கூட்டும் = அதை மீண்டும் சரி செய்யும் 


திறம் இன்மையால் = திறமை இல்லாது இருத்தல் 


வயதாகி உடல் தளர்ந்து விட்டால், பின் என்ன செய்தாலும் அது சரியாகாது. 


நல்ல விடயங்களை இளமையில் படித்தால், அதன் படி நடக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் நன்மை வரும். 


பின்னால் படித்து, தெரிந்து, அதன் படி நடக்கலாம் என்றால் ஒன்றும் நடவாது. 


முதுமை கண்டு அச்சம் வேண்டும். 




1 comment:

  1. அறம் செய்யாமல் முதுமை அடைந்தவர்களைப்பற்றிய பாடல்களே பல உள்ளன. அவைற்றை தொகுத்து ஒரு தனி blog எழுதுங்கள்.

    ReplyDelete