Sunday, February 4, 2024

கம்ப இராமாயணம் - மானிடரைச் சீறுதியோ

கம்ப இராமாயணம் - மானிடரைச் சீறுதியோ 

https://interestingtamilpoems.blogspot.com/2024/02/blog-post_4.html

இலக்குவனால் தண்டிக்கப்பட்ட சூர்பனகை, தன் அண்ணன் இராவணனை நினைத்துப் புலம்புகிறாள். 


புலம்பலில் கூட இவ்வளவு கவி நயமா என்று வியக்க வைக்கும் கவிதைகள். 


இன்று வரும் திரைப் படங்களில் கதா நாயகனை முதன் முதலில் காட்டும் போது, அவர் காலைக் காட்டுவார்கள், அவர் நடந்து வரும் போது அவர் போட்டிருக்கும் காலணியில் இருந்து தீப் பொறி பறக்கும். 


நாம் ஆகா என்று வியப்போம். 


இதெல்லாம் கம்பன் அன்றே காட்டிவிட்டான். 


இராவணன் நடந்து வந்தால், அவன் கால் உரசி தரையில் இருந்து தீப் பொறி பறக்குமாம். 


இராவணன் இன்னும் காப்பியத்துகுள் வரவில்லை. அதற்கு முன்பே கம்பன் கட்டியம் கூறுகிறான். 


பொடி என்ற ஒரு வாரத்தையை எடுத்துக் கொள்கிறான். 


"உருவம் பொடியான (சாம்பலான) மன்மதனை ஒத்து இருக்கும் இந்த மானிடர்களை நீ கோபித்து சீற்றம் கொள்ள மாட்டாயா?  நீ யார்? எவ்வளவு பெரிய ஆள்! இந்த மானிடர்கள் உன் செருப்பில் இருந்து பறக்கும் ஒரு மண் தூசிக்கு சமம் ஆவார்களா?  நீ நடந்து வந்தால் உன் காலடியில் நெருப்பு சிதறுமே. மதம் கொண்ட அட்ட திக்கு யானைகளோடு சண்டை போட்டு, அவற்றின் தந்தங்களை முறித்தவன் அல்லவா நீ. அது மட்டுமா? சிவன் உறையும் அந்த கைலாய மலையையே தூக்க முயன்றவன் அல்லவா நீ. அப்பேற்பட்ட நீ, இந்த மானிடர்களை ஒரு கை பார்க்க மாட்டாயா?" 


என்று சூர்பனகை புலம்புகிறாள். 


பாடல்  



'உருப் பொடியா மன்மதனை

     ஒத்துளரே ஆயினும், உன்

செருப்பு அடியின் பொடி ஒவ்வா

     மானிடரைச் சீறுதியோ?

நெருப்பு அடியில் பொடி சிதற, நிறைந்த

     மதத் திசை யானை

மருப்பு ஒடிய, பொருப்பு இடிய,

     தோள் நிமிர்த்த வலியோனே!


பொருள் 


'உருப் = உருவம் 

பொடியா = பொடியான (சாம்பலான) 

மன்மதனை = மன்மதனை 

ஒத்துளரே ஆயினும் = போல இருந்தாலும் 

உன் = உனது (இராவணனது) 

செருப்பு அடியின் = செருப்பின் கீழ் உள்ள 


பொடி = தூசிக்கு 

ஒவ்வா = இணையாக மாட்டாத


 மானிடரைச் = மனிதர்களைச் (இராம இலக்குவனர்களை) 


 சீறுதியோ? = அவர்கள் மேல் சீற்றம் கொள்ள மாட்டாயா ?


நெருப்பு அடியில் பொடி சிதற = உன் காலடியில் நெருப்பு பொறி பறக்க 


நிறைந்த மதத் = பெரிய மதம் பிடித்த


திசை யானை = அட்ட திக்கு யானைகளின் 


மருப்பு ஒடிய = தந்தம் ஓடிய 


பொருப்பு இடிய = மலை இடிபட 


தோள் நிமிர்த்த = தோள்களை நிமிர்த்து நின்ற 


வலியோனே! = வலிமையாணவனே 



உருப் பொடி

செருப்பு அடியின் பொடி

நெருப்பு அடியில் பொடி

மருப்பு ஒடிய, 

பொருப்பு இடிய,


கம்பனிடம் சொற்கள் கை கட்டி நின்று சேவகம் செய்கின்றன. 


பெரியவர்களின் தரம் தெரியாமல் இருப்பது அரக்கர்களின் குணம். 


முருகனை பாலன் என்று எண்ணி அழிந்தான் சூரன். 


கண்ணனை இடையன் என்று எண்ணி அழிந்தான் கம்சன். 


இராமனை மானிடன் என்று எண்ணி அழிந்தான் இராவணன். 


தரம் தெரியாததால் வந்த அழிவு. 



2 comments:

  1. கம்பன் 🙏 the great

    ReplyDelete
  2. கம்பர் கம்பரே! எடுத்துத் தந்ததற்கு நன்றி.

    ReplyDelete