திருக்குறள் - விழுமம் தரும்
ஏன் இன்னா செய்யாமையை பெரிய அறமாக வள்ளுவர் கூறுகிறார். நமக்கு ஒருவன் தீங்கு செய்தான் என்றால் அவனுக்கு திருப்பி ஒரு தீங்கு செய்வதில் என்ன தவறு. நம்மை ஒருவன் அடித்தான் என்றால் பதிலுக்கு அவனுக்கு ஒரு அடி கொடுத்தால் அடுத்த முறை நம்மை அடிக்க யோசிப்பான் அல்லவா?
அது ஒரு நன்மை தானே. அதை ஏன் வள்ளுவர் வேண்டாம் என்கிறார்?
பாடல்
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமம் தரும்
பொருள்
செய்யாமல் செற்றார்க்கும் = நாம் ஒரு தீங்கும் செய்யாமல் இருந்த போதும், நம் மேல் பகை பாராட்டி நமக்கு ஒருவன் தீங்கு செய்தால்
இன்னாத செய்தபின் = அவனுக்கு நாம் பதிலுக்கு ஒரு தீங்கு செய்தால்
உய்யா விழுமம் தரும் = நாம் செய்த அந்த தீங்கு ஆனது மீள முடியாத துன்பத்தைக் கொடுக்கும்.
விழுமம் என்பது இங்கே துன்பம் என்ற பொருள் தாங்கி நின்றது.
ஏன் அப்படி நிகழும் என்று வள்ளுவர் சொல்லவில்லை. பரிமேலழகர் சொல்கிறார்.
ஒரு துறவி, மிகுந்த தவம் செய்து, தன் ஆன்மீக பயணத்தில் முன்னே சென்று கொண்டு இருக்கும் போது, அவனுக்கு ஒருவன் ஒரு தீங்கு செய்தால், பதிலுக்கு அவனுக்கு ஒரு தீங்கு செய்ய முனையும் போது, அந்தத் துறவி இதுவரை பெற்ற தவத்தின் பலனை இழக்க நேரிடும். சாபம் கொடுப்பதின் மூலமும், தண்டிப்பதின் மூலமும், ஒரு முனிவன் தன் தவ வலிமயை இழக்கிறான். அது மட்டும் அல்ல, மற்றவனுக்கு தீங்கு செய்த பாவமும் வந்து சேரும்.
செய்த தவமும் போய், பாவமும் வந்து சேரும். நரகம் அல்லது மறு பிறவி நிகழும். மீண்டு வர முடியாத துன்பம் அது.
எனவே "உய்யா விழுமம் தரும்" என்கிறார்.
சரி, அது துறவிக்கு, முனிவனுக்கு பொருந்தும். இல்லறத்தில் இருக்கும் நமக்கு?
ஒருவன் நமக்கு தீங்கு செய்தால், அந்தத் தீங்கை பற்றியே நினைத்துக் கொண்டிருப்போம், அவனுக்கு எப்படி பதிலுக்கு தீங்கு செய்யலாம் என்று திட்டம் தீட்டிக் கொண்டு இருப்போம். சரியான சமயம் பார்த்து பழி வாங்குவோம். எவ்வளவு நேரம் விரயம் ? இந்த நேரத்தில் எவ்வளவோ நல்ல விடயங்கள் செய்து இருக்கலாம்.
சரி, பழி வாங்கியாகிவிட்டது. அதோடு முடியுமா என்றால் முடியாது. அடி வாங்கியவன் மீண்டும் நம்மைப் போல் சிந்திக்க ஆரம்பிப்பான். நாம் கொடுத்ததை விட அதிகமாக எப்படி திருப்பிக் கொடுப்பது என்று யோசிப்பான்.
இதற்கிடையில், அதைப் பற்றியே சிந்தித்து சிந்தித்து நம் இரத்த அழுத்தம், மன அழுத்தம் எல்லாம் எகிறும்.
எப்படி முனிவனின் தவம் அழிகிறதோ, இல்லறத்தில் இருப்பவனின் நிம்மதி அழியும், உடல் நிலை கெடும்.
தேவையா?
No comments:
Post a Comment