Showing posts with label Kamba Ramaayanam. Show all posts
Showing posts with label Kamba Ramaayanam. Show all posts

Sunday, July 9, 2023

கம்ப இராமாயணம் - அங்கதன் புலம்பல் - சிந்தையால், செயலால்

 கம்ப இராமாயணம் - அங்கதன் புலம்பல் - சிந்தையால், செயலால் 


இறந்து கிடக்கும் வாலி மேல், அங்கதன் விழுந்து புலம்புகிறான். 


என்னடா இது நாளும் கிழமையுமா சாவு, புலம்பல் என்று வாசிக்க வேண்டி இருக்கிறதே என்று நினைக்கத் தோன்றலாம். 


இறப்பு என்பது வாழ்வின் ஒரு பகுதி. அதைக் கண்டு வெறுத்து ஓடவோ, முகம் சுளிக்கவோ தேவையில்லை. மரணத்தை பற்றி பேசக் கூட கூடாது என்றால் வாழ்க்கை இரசிக்காது. 


அப்பாவோ, அம்மாவோ, வாழ்க்கைத் துணையோ ஒரு நாள் போய் விடப் போகிறார்கள் என்று நினைத்து அவர்களைப் பாருங்கள், அன்பு பெருகும். அவர்கள் இல்லாத வாழ்வு வெறுமையானது என்றால் இருக்கும் வாழ்வு நிறைவானதாக இருக்க வேண்டும் அல்லவா?  இருக்கிறதா?  பெரும்பாலும் இருப்பது இல்லை. காரணம், நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம், 'பிரிவே வராது' என்று. 


மரணம் வரும், பிரிவு வரும் என்று நினைத்தால் இருப்பவற்றின் மேல் பற்றும் பாசமும் பெருகும். 


நாமும் ஒரு நாள் போய் விடுவோம் என்ற எண்ணம் இருந்தால் இத்தனை சண்டை, சச்சரவு, பொறாமை, கோபம், தாபம் எல்லாம் வருமா?  இருக்கின்ற கொஞ்ச நாளை இனிமையாக கழிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும் அல்லவா?  


அது ஒரு புறம் இருக்கட்டும். 



அங்கதன் சொல்கிறான் ,


"அப்பா, நீ யாருக்கும் ஒரு தீங்கும் செய்யாதவன் ஆயிற்றே. உனக்கு இப்படி ஒரு நிலையா?  உன்னைப் பார்த்தால் எமனும் நடுங்குவானே.  அந்த எமனுக்கு எப்படி தைரியம் வந்தது உன் உயிரைக் கொண்டு போக.  உன் உயிரையே பயம் இல்லாமல் கொண்டு போய் விட்டான் என்றால், இனி அவன் யாருக்குப் பயப்படுவான்?"


என்று. 


பாடல் 


'எந்தையே! எந்தையே! இவ் எழு

      திரை வளாகத்து, யார்க்கும்,

சிந்தையால், செய்கையால், ஓர்

      தீவினை செய்திலாதாய்!

நொந்தனை! அதுதான் நிற்க, நின்

      முகம் நோக்கிக் கூற்றம்

வந்ததே அன்றோ, அஞ்சாது? ஆர்

      அதன் வலியைத் தீர்ப்பார்?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/07/blog-post_9.html


(pl click the above link to continue reading)



'எந்தையே! எந்தையே!  = என் தந்தையே, என் தந்தையே 


இவ்  = இந்த 

எழு திரை = திரை என்றால் அலை. ஏழு கடல் அல்லது கடல் சூழ்ந்த  


வளாகத்து = உலகில் 


யார்க்கும் = யாருக்கும் 


சிந்தையால் = மனத்தால் 


செய்கையால் = செயலால் 


ஓர் = ஒரு 


தீவினை = தீமை 


செய்திலாதாய்! = நீ செய்தது கிடையாது 


நொந்தனை!  = உனக்கு இப்படி ஒரு துன்பம் வந்து விட்டது 


அதுதான் நிற்க = அது ஒரு புறம் இருக்கட்டும் 


நின் = உன் 


முகம் நோக்கிக் = முகத்தைப் பார்த்து 


 கூற்றம் = எமன் 


வந்ததே அன்றோ, = வந்தானே 


அஞ்சாது? = அச்சமில்லாமல் 


ஆர் = யார் 

 

அதன் வலியைத் = எமனின் வலிமையை 


தீர்ப்பார்? = எதிர் கொள்ள முடியும் இனி 




Wednesday, July 5, 2023

கம்ப இராமாயணம் - அங்கதன் புலம்பல் - கனலும், நீரும், குருதியும்

 கம்ப இராமாயணம்  - அங்கதன் புலம்பல் -  கனலும், நீரும், குருதியும் 


ஆண்களால் உணர்சிகளை எளிதில் வெளிக் காட்ட முடிவதில்லை. ஆரம்பம் முதலே ஒரு மாதிரியாக முரட்டுத் தனமாக வளர்ந்து விடுகிறார்கள். வேட்டையாடி, போர் செய்து, அந்தக் குணம் படிந்து போய் விட்டது போலும். 


அதிலும், குறிப்பாக தந்தைக்கும் மகனுக்கும் இடையே உள்ள உறவு ரொம்பவும் சிக்கலானது என்றே தோன்றுகிறது. தந்தைக்கும் மகளுக்கும் உள்ள உறவு மிக மிக மென்மையானது. இனிமையானது. அதே தந்தை மகன் என்று வரும்போது ஒரு கடுமை காட்டுவதும், உள்ளுக்குள் உருகுவதும் ஒரு வித்தியாசமான அனுபவம்தான். 


உங்கள் தனி வாழ்வில் உங்கள் அனுபவம் வேறு மாதிரி இருக்கலாம். 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


வாலி இறந்து கிடக்கிறான். 


வாலியின் மகன் அங்கதன் வந்து வாலியின் மேல் விழுந்து புலம்புகிறான். 


ஒரு புறம் தந்தை இறந்த துக்கம். இரு புறம் தந்தையை மற்றவர்கள் கொன்று விட்டார்களே என்ற கோபம். இன்னொரு புறம் தந்தையின் வீரத்தின் மேல் உள்ள பெருமிதம். இன்னொரு புறம் போய் விட்டானே என்ற வெறுமை/ஏமாற்றம். 


அத்தனை உணர்வுகளையும் தெள்ளத் தெளிவாக படம் பிடிக்கிறான் கம்பன். 



பாடல் 


கண்ட கண்  கனலும் நீரும்

      குருதியும் கால, மாலை,

குண்டலம் அலம்புகின்ற குவவுத்

      தோள் குரிசில், திங்கள்

மண்டலம் உலகில் வந்து கிடந்தது;

      அம் மதியின் மீதா

விண்தலம் தன்னின் நின்று ஓர்

      மீன் விழுந்தென்ன, வீழ்ந்தான்.


பொருள் 


(please click the above link to continue reading)


கண்ட கண் = வாலியைக் கண்ட அங்கதன் கண்கள் 


கனலும் = நெருப்பையும் (கோபத்தால்) 


நீரும் = கண்ணீரும் (துக்கத்தால்) 

 

குருதியும் = இரத்தமும் (எதிரிகளை பழி வாங்க வேண்டும் என்ற ஆங்காரமும்) 


கால = வழிய 


மாலை = கழுத்தில் அணிந்த மலர் மாலை 


குண்டலம் = காதில் அணிந்த குண்டலம் 


அலம்புகின்ற = அசைந்து, தழுவி, புரளிகின்ற 


குவவுத் = பெரிய 


தோள்  = தோள்களை உடைய 


குரிசில் = ஆண்மகன் 


திங்கள் மண்டலம் = ஒளி பொருந்திய நிலவு 


உலகில் வந்து கிடந்தது = தரையில் விழுந்து கிடக்க 


அம் மதியின் மீதா = அந்த நிலவின் மீது 


விண்தலம்  தன்னின் நின்று = விண்ணில் இருந்து 


   ஓர் = ஒரு 


மீன் = விண்மீன், நட்சதிரம் 


விழுந்தென்ன = விழுந்தது போல 


வீழ்ந்தான் = விழுந்தான் 


ஆற்றல் மிக்க தகப்பன். அன்பு கொண்ட மகன். அகால மரணம். 


உணர்வுகளின் உச்சம். கம்பனின் கவிதை அந்த உணர்வுக் கொந்தளிப்பை கொஞ்சம் கூட குறைக்காமல் நம் மனதில் பதியும்படி செய்கிறது. 


மற்ற கவிதைகளையும் பார்ப்போம். 



Wednesday, May 24, 2023

கம்ப இராமாயணம் - அங்கதன் தூது - சூழ்வு இலா மாயம் செய்து

 

 கம்ப இராமாயணம் - அங்கதன் தூது - சூழ்வு இலா மாயம் செய்து


(அங்கதன் தூதின் முந்தைய பதிவுகளின் வலை தளளங்களின் முகவரிகளை இந்தப் பதிவின் இறுதியில் காணலாம்)


பல சந்தர்ப்பங்களில் நாம் நமக்கு வேறு வழியே இல்லை, ஒரே ஒரு வழிதான் இருக்கிறது என்று நினைத்துக் கொள்கிறோம். இருப்பது ஒரே ஒரு வழிதான் என்றால் அதைச் செய்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும். 


அது ஒரு மிகத் தவறான பாதை. 


தற்கொலை செய்து கொள்பவர்களை பற்றி சிந்திப்போம். அவர்கள் நினைக்கிறார்கள் உயிரை விடுவதைத் தவிர வேறு வழி இல்லை என்று நினைக்கிறார்கள். தற்கொலை முயற்சி செய்து, அதில் பிழைத்துக் கொண்டவர்களை கேட்டால் சொல்வார்கள், அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று. 


தேர்வில் தோல்வி, காதல் தோல்வி, தொழிலில் தோல்வி என்று வந்துவிட்டால் பலர் உடைத்து போய் விடுகிறார்கள். 


கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை, எதிர்பார்த்த வேலை கிடைக்கவில்லை, விசா கிடைக்கவிலை, என்றால் ஏதோ உலகமே  இருண்டு போன மாதிரி நினைத்துக் கொள்கிறார்கள். 


கணவன் மனைவி மனத் தாங்கல், அதிகாரிகளுடன்  சண்டை, விபத்தில் அங்கம் குறைவு, நெருங்கிய உறவினரின் மரணம்   என்று வந்தால், என்ன செய்வது, அவ்வளவுதான் வாழக்கை என்று நினைத்துக் கொள்கிறார்கள். 


இன்றெல்லாம் பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வேலையை விட்டு நிறுத்தி விடுகிறார்கள். வேலையை இழந்தவர்கள் மனம்  ஒடிந்து எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கக் கூடாது. 


எந்த சூழ்நிலையிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட வாய்ப்புகள் நமக்கு உண்டு. 


மனைவியை ஒருவன் கவர்ந்து சென்றுவிட்டான், காப்பாற்ற சென்ற பெரிய தந்தையை கொன்று விட்டான். அவனை என்ன செய்யலாம்?


இலக்குவன் நினைக்கிறான், வேறு வழியே இல்லை, அவனை போர் செய்து அழிக்க வேண்டியதுதான். வேறு என்ன செய்வது  என்று நினைக்கிறான். 


இராமன் அப்படி நினைக்கவில்லை. 



பாடல் 


‘வாழியாய்! நின்னை அன்று

    வரம்பு அறு துயரின் வைக,

சூழ்வு இலா மாயம் செய்து, உன்

    தேவியைப் பிரிவு சூழ்ந்தான்;

ஏழைபால் இரக்கம் நோக்கி,

    ஒரு தனி இகல் மேல் சென்ற,

ஊழி காண்கிற்கும் வாழ்நாள்

    உந்தையை உயிர் பண்டு உண்டான்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/05/blog-post_24.html


(pl click the above link to continue reading)




‘வாழியாய்!  = என்றும் வாழ்பவனே, முடிவு இல்லாதவனே 


நின்னை = உன்னை 


அன்று = அன்றொருநாள் 


வரம்பு அறு = வரம்பு இல்லாத, எல்லை இல்லாத 


துயரின் வைக = துன்பத்தில் மூழ்க வைக்க 


சூழ்வு இலா = இதுவரை கேட்டிராத சூழ்ச்சி 


மாயம் செய்து = மாயம் செய்து  


உன் = உன்னுடைய 


தேவியைப் = மனைவியை (சீதையை)  


பிரிவு சூழ்ந்தான் = பிரிக்க நினைத்தான் 


ஏழைபால் = அந்த சீதையின் மேல் 


இரக்கம் நோக்கி = இரக்கம் கொண்டு 


ஒரு தனி = ஒரு பெரிய 


இகல் = போர், சண்டை 


மேல் சென்ற = செய்யச் சென்ற 


ஊழி காண்கிற்கும் வாழ்நாள் = நீண்ட வாழ் நாளை உடைய 


உந்தையை = உன் தந்தைக்கு நிகரான ஜடாயுவின்  


உயிர் = உயிரை 


பண்டு உண்டான் = முன்பு பறித்தான் 


என்று இலக்குவன் கூறினான்.


இவ்வளவு செய்த இராவணனை கொல்வதைத் தவிர வேறு வழி இல்லை என்பது அவன் எண்ணம். நாமும் அப்படித்தான் நினைப்போம். 


இராமன் அப்படி நினைக்கவில்லை. 


எந்த சிக்கலான சூழ்நிலையிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட வாய்ப்புகள் இருக்கின்றன. 


அதை அறிய அறிவும், தெளிவும், தெளிவான சிந்தனையும் வேண்டும்.  



[ ஒரு முன்னோட்டம் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_29.html

கருணையின் நிலையம் அன்னான்


]


Sunday, May 7, 2023

கம்ப இராமாயணம் - அங்கதன் தூது - வழி அலா வழி

 கம்ப இராமாயணம் - அங்கதன் தூது - வழி அலா வழி


(அங்கதன் தூதின் முந்தைய பதிவுகளின் வலை தளளங்களின் முகவரிகளை இந்தப் பதிவின் இறுதியில் காணலாம்)


போருக்கு முன்னால் இராவணனுக்கு ஒரு தூது விட வேண்டும்  இராமன் கூறுகிறான். 


அதை மறுத்து இலக்குவன் கூறுகிறான். 


"இராவணன்   அயோக்கியன். சீதையை சிறை பிடித்து வைத்து இருக்கிறான். தேவர்களுக்கும், மனிதர்களுக்கும், அந்தணர்களுக்கு சொல்ல முடியாத துன்பங்களை செய்து கொண்டிருக்கிறான். யாருக்கும் எதுவும் கொடுக்காமல் எல்லாம் தனக்கே என்று எடுத்துக் கொள்பவன். வழி அல்லாத வழியில் செல்பவன்" என்று கூறினான்.


பாடல் 


தேசியைச் சிறையில் வைத்தான்;
    தேவரை இடுக்கண் செய்தான்;
பூசுரர்க்கு அலக்கண் ஈந்தான்;
    மன்னுயிர் புடைத்துத் தின்றான்;
ஆசையின் அளவும், எல்லா
    உலகமும் தானே ஆள்வான்,
வாசவன் திருவும் கொண்டான்;
    வழி அலா வழிமேல் செல்வான்.


பொருள் 



(pl click the above link to continue reading)

தேசியைச் = தேசு என்றால் ஒளி. ஒளி பொருந்திய தேவியை 


சிறையில் வைத்தான் = சிறையில் வைத்தான் 


தேவரை = தேவர்களுக்கு 


இடுக்கண் செய்தான் = துன்பம் செய்தான் 


பூசுரர்க்கு = பூ உலகின் தேவர் போன்ற அந்தணர்களுக்கு 


அலக்கண் ஈந்தான் = பல துன்பங்களை தந்தான் 


 மன்னுயிர் = நிலைத்த உயிர்களை 


புடைத்துத் தின்றான்; = கொன்று தின்றான் 


ஆசையின் அளவும் = அளவற்ற ஆசையால் 


எல்லா = அனைத்து 


உலகமும் தானே ஆள்வான் = அனைத்து உலகங்களையும் தானே ஆள்வான் 


வாசவன் = இந்திரனின் 


திருவும் கொண்டான் = செல்வங்களை எல்லாம் தானே எடுத்துக் கொண்டான் 


வழி அலா வழிமேல்  = வழி அல்லாத வழியில் 


செல்வான் = செல்வான் 

அது என்ன வழி அலா வழி?

பேசாமல் தீய வழி என்று சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதானே?


பெரியவர்கள் எப்போதும் உயர்ந்தவற்றையே நினைப்பார்கள். அவர்கள் வழி என்று சொன்னால் அது நல்ல வழி என்றுதான் கொள்ள வேண்டும். 


எனவே வழி அலா வழி என்பது தீய வழி. 



ஒளவையார் "வழியே ஏகுக, வழியே மீளுக" என்றாள். நல்ல வழியில் போய் , நல்ல வழியில் திரும்பி வா என்று அர்த்தம். 



 நெறியல்லா நெறி என்பார் மணிவாசகர்.



 நெறியல்லா நெறிதன்னை
    நெறியாக நினைவேனைச்
சிறுநெறிகள் சேராமே
    திருவருளே சேரும்வண்ணம்
குறியொன்றும் இல்லாத
    கூத்தன்தன் கூத்தையெனக்
கறியும் வண்ணம் அருளியவா
    றார்பெறுவார் அச்சோவே 


இராவணன் கொடியவன். ஏன் ?

இலக்குவன் மூலம் கம்பர் பட்டியல் இடுகிறார். 

1. மாற்றான் மனைவியை கவர்ந்தான். 

2. நல்லவர்களுக்கு தீமை செய்தான் 

3. எல்லாம் தனக்கு என்று வைத்துக் கொண்டான். யாருக்கும் எதுவும் கொடுக்கும் மனம் இல்லை. 

4. பேராசை. இருக்கின்ற செல்வம் போதாது என்று மேலும் மேலும் அலைந்தான். 

இவை எல்லாம் தீய குணங்கள். இந்தக் குணங்கள் இருப்பவர்கள் தீயவர்கள். 

நம்மிடம் இந்தத் தீக் குணங்கள் இருக்கிறதா என்று அடிக்கடி சோதனை செய்து கொள்ள வேண்டும். 




[ ஒரு முன்னோட்டம் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_29.html

கருணையின் நிலையம் அன்னான்


]


Friday, April 7, 2023

கம்ப இராமாயணம் - அங்கதன் தூது - அழகிற்றே யாகும்

     கம்ப இராமாயணம் - அங்கதன் தூது - அழகிற்றே யாகும்


(அங்கதன் தூதின் முந்தைய பதிவுகளின் வலை தளளங்களின் முகவரிகளை இந்தப் பதிவின் இறுதியில் காணலாம்)


இராவணனிடம் சீதையை விட்டு விடும்படி தூது அனுப்பலாம் என்று இராமன் நினைத்து தன் கருத்தைச் சொல்கிறான். அவனுடன் இருக்கும் மற்றவர்கள் கருத்துகளை கேட்கிறான். ஒவ்வொருவராக தங்கள் கருத்துக்களைச் சொல்கிறார்கள். 


வீடணன் சொல்லுவான், "தூது அனுப்புவதுதான் அழகான செயல்" என்று 


சுக்ரீவன் சொல்லுவான் "தூது அனுப்புவதுதான் அரச தர்மம்" என்று 


பின் இலக்குவன் நீண்ட உரை ஆற்றுகிறான். 


"இராவணன் மேல் இரக்கம் காட்டுவது தவறு. அவனுக்கு அம்பால் தான் பதில் சொல்ல வேண்டுமே அல்லால் சொல்லால் (தூதின் மூலம்) சொல்ல வேண்டியது ஒன்றும் இல்லை" என்று. 



பாடல் 


அரக்கர் கோன் அதனைக் கேட்டான்,

    ‘அழகிற்றே யாகும் ‘என்றான்;

குரங்கு இனத்து இறைவன் நின்றான்,

    ‘கொற்றவற்கு உற்றது ‘என்றான்;

‘இரக்கமது இழுக்கம் ‘என்றான்,

    இளையவன்; ‘இனி, நாம் அம்பு

துரக்குவது அல்லால், வேறு ஓர்

    சொல் உண்டோ? ‘என்னச் சொன்னான்.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/04/blog-post_7.html


(pl click the above link to continue reading)



அரக்கர் கோன் = வீடணன் 


அதனைக் கேட்டான்= தூது அனுப்பலாம் என்று இராமன் சொன்னதைக் கேட்டான் 


‘அழகிற்றே யாகும் ‘என்றான் = அதுதான் சிறந்தது என்றான் 


குரங்கு இனத்து = குரங்கு இனத்தின் 


இறைவன் = தலைவனான சுக்ரீவன் 


நின்றான்= எழுந்து நின்று 

‘கொற்றவற்கு உற்றது ‘ = அரசர்களுக்கு உரியது. அதாவது அரச தர்மம் 

என்றான் = என்று கூறினான் 


‘இரக்கமது இழுக்கம் ‘என்றான் = இராவணன் மேல் இரக்கம் காட்டுவது குற்றம் என்றான் 


 இளையவன்; = இராமனுக்கு இளையவனான இலக்குவன் 


‘இனி = இனிமேல்  


நாம் = நாம் 


அம்பு துரக்குவது அல்லால் = அம்பை விடுவதைத் தவிர 


வேறு ஓர் = வேறு ஒரு 


சொல் உண்டோ?  = சொல்வதற்கு ஒன்று இருக்கிறதா ? 


‘என்னச் சொன்னான் = என்று சொன்னான் 


இங்கே ஒரு சில பாடங்களை கம்பன் நமக்குச் சொல்லாமல் சொல்கிறான். 



முதலாவது, இராமன் பெரிய வீரன். நன்கு படித்து அறிந்தவன். அவனால் தன்னிச்சையாக முடிவு செய்ய முடியும்.. இருந்தும், மற்றவர்கள் கருத்துகளைக் கேட்கிறான். வீட்டிலும் சரி, வேலை செய்யும் இடத்திலும் சரி நான் தான் பெரியவன், எனக்கு எல்லாம் தெரியும், நான் யாரையும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை, மற்றவர்களுக்கு என்ன தெரியும் என்று  நினைத்து செயல்படக் கூடாது. 


மனைவியிடம், கணவனிடம், கீழே வேலை செய்பவர்களிடம் கலந்து பேசி முடிவு செய்வது சிறந்தது. 



இரண்டாவது, எந்த சூழ்நிலையிலும், இதைத் தவிர வேறு வழியே இல்லை என்று நினைக்கக் கூடாது. அவ்வளவுதான், என் வாழ்க்கை பாழ், இனி செய்வதற்கு என்ன இருக்கிறது, எல்லாம் முடிந்து போய் விட்டது என்று ஒருக்காலும் நினைக்கக் கூடாது. எந்த சூழ்நிலையிலும் ஒன்றுக்கு மேற்பட்ட செயல் படும் வாய்ப்புகள் இருக்கும். தேடி கண்டு பிடிக்க வேண்டும். 



இலக்குவன் சொல்கிறான், "வேறு வழி இல்லை. சண்டை ஒன்றுதான் ஒரே வழி" என்கிறான். அதே தவறை இராவணனும் செய்தான். அது வேறு விடயம். அதை பின்னால் பார்க்க இருக்கிறோம். 



வீடணனும், சுக்ரீவனும் சண்டை ஒரு வழி. தூது இன்னொரு வழி என்று நினைக்கிறார்கள். 



எந்த சிக்கலில், எந்த துக்கத்திலும் இருந்து வெளிவர இந்த சிந்தனை உதவும். 


இப்படி கிடந்து துன்பப் பட்டுக் கொண்டு இருப்பதைத் தவிர வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்று சிந்திக்க வேண்டும். 


ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் 


You have no control over what happens to you but you have absolute control over how you react to what happens to you 


என்று. 

வேறு என்னவெல்லாம் செய்ய முடியும் என்று சிந்திக்க வேண்டும். 



[ ஒரு முன்னோட்டம் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_29.html

கருணையின் நிலையம் அன்னான்


]


Thursday, March 30, 2023

கம்ப இராமாயணம் - அங்கதன் தூது - கருணையின் நிலையம் அன்னான்

 

 கம்ப இராமாயணம் - அங்கதன் தூது - கருணையின் நிலையம் அன்னான்



(அங்கதன் தூதின் முந்தைய பதிவுகளின் வலை தளளங்களின் முகவரிகளை இந்தப் பதிவின் இறுதியில் காணலாம்)


இன்று இராம நவமி. 


இராமனின் உயர் குணங்களை எடுத்துச் சொல்லும் இராமாயணத்தில் அங்கதன் தூது பற்றி சிந்திக்கக் தொடங்க நல்ல நாள். 


தாயின் இயல்பு பிள்ளை மேல் அன்பு செலுத்துவது. 


அப்படி என்றால் பிள்ளை மேல் கோபமே வராதா, திட்டவே மாட்டாளா என்றால் வரும். வந்தவுடன் போய் விடும். மறுபடியும் அந்த இடத்தில் அன்பு வந்து அமர்ந்து கொள்ளும். அடித்தாலும், திட்டினாலும் ஓடிச் சென்று பிள்ளையை கட்டிக் கொள்வாள். அது அவள் இயல்பு. 



அது போல இறைவனின் இயல்பு கருணை. சில சமயம் கோபம் வரலாம். நமக்கு துன்பம் தருவது போல இருக்கும். வலிக்கும். அது கொஞ்ச நேரம்தான். பின் ஓடிவந்து கட்டிக் கொள்வான். 


தாயிற் சிறந்த தயவான தத்துவன் அவன். 


தன் மனைவியை கவர்ந்து சென்றவன் மேல் எவ்வளவு கோபம் வர வேண்டும். 



இராமன் கோபம் கொள்ளவில்லை. மாறாக, 


"இராவணனுக்கு ஒரு தூது அனுப்புவோம். சீதையை விடுதலை செய்யச்சொல்லி அறிவுறுத்துவோம். அவன் கேட்கவில்லை என்றால் அவனை தண்டிப்போம். அதுதான் நீதியும் , அறமும் என்று என் உள்ளம் சொல்கிறது" என்றான். 




தூதுவன் ஒருவன் தன்னை

    இவ்வழி விரைவில் தூண்டி,

“மாதினை விடுதியோ? “ என்று

    உணர்த்தவே, மறுக்கும் ஆகின்,

காதுதல் கடன் என்று உள்ளம்

    கருதியது, அறனும் அஃதே;

நீதியும் அஃதே ‘என்றான்

    கருணையின் நிலையம் அன்னான்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_30.html


(pl click the above link to continue reading)


தூதுவன் ஒருவன் தன்னை = ஒரு தூதுவனை 


இவ்வழி  = இப்போது 


விரைவில் தூண்டி = விரைவில் முடிவு செய்து 


“மாதினை விடுதியோ? “ என்று = சீதையை விடுகிறாயா இல்லையா என்று 


உணர்த்தவே = கேட்போம். அவனின் உள்ளத்தில் என்ன இருக்கிறது என்று அறிவோம் 


மறுக்கும் ஆகின் = சீதையை விட மறுப்பான் ஆகில் 


காதுதல் = அவனை அழித்தல் 


கடன் = என் கடமை  


என்று உள்ளம்  கருதியது = என் உள்ளம் சொல்கிறது 


அறனும் அஃதே = அதுதான் அறமும் கூட 


நீதியும் அஃதே ‘என்றான் = நீதியும் அதுதான் என்றான் 


கருணையின் நிலையம் அன்னான். = கருணையின் இருப்பிடமான இராமன் 


"உள்ளம் கருதியது", "நீதியும், அறமும் அதுவே"

உள்ளமும், அறிவும் ஒன்றுபட்டு நிற்கிறது. 

இது வெறும் அறிவு சார்ந்த விடயம் மட்டும் அல்ல. 


இராமனின் உள்ளத்தில் கருணை முதலில் பிறக்கிறது. பின் அறிவு அதை சரி என்று சொல்கிறது. 


பெரும்பாலும், மக்கள் உணர்ச்சிவசப்பட்டு செய்யும் செயல்கள் , பேசும் பேச்சுகள்தான் அதிகம். அறிவு வேலை செய்தால் மனம் வேலை செய்வது இல்லை. மனம் வேலை செய்தால் அறிவு வேலை செய்வது இல்லை. 


சில சமயம் தவறான இடத்தில் தவறான கருவிகளும் வேலை செய்வது உண்டு. 



இராமனின் மன நிலை அதிசய வைக்கிறது. 


மனைவியை ஒரு அரக்கன் தூக்கிக் கொண்டு போய் விட்டான். அவனை கண்டு பிடிக்க காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து, கடல் நடுவில் பாலம் கட்டி, பெரிய படையை நடத்திக் கொண்டு வந்து, பின் சொல்கிறான் "சீதையை விட்டு விட்டால் சமாதானம்"  என்று. 


யாரால் முடியும்?  

பகைவனுக்கும் இரங்கும் மனம். 

நம்மால் உறவிலும் நட்பிலும் கூட இவ்வளவு இரக்கம் காட்ட முடியுமா என்பது சந்தேகமே. 

மேலும் படிப்போம். 



[ ஒரு முன்னோட்டம் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_29.html



]


Wednesday, March 29, 2023

கம்ப இராமாயணம் - அங்கதன் தூது - ஒரு முன்னோட்டம்

 கம்ப இராமாயணம் - அங்கதன் தூது - ஒரு முன்னோட்டம் 


இராவணனோடு போர் தொடங்கும் முன்பு, ஒரு சமாதான தூது விடுவது என்று இராமன் முடிவு செய்கிறான். போரை முடிந்தவரை தவிர்ப்பது என்பது நம் யுத்த தர்மமாக இருந்தது.  


வாலியின் மைந்தன் அங்கதனை தூது அனுப்ப முடிவு செய்யப்படுகிறது. 


ஒரு 43 பாடல்கள். மிக அருமையான பாடல்கள். 


அரசியல் சூழ்ச்சிகள், தனிமனித ஆசா பாசாங்கள், சொற்சுவை, பொருள் சுவை என அத்தனை இனிமைகளும் நிறைந்த பாடல்கள். 



வாலியோடு சண்டை என்ற போது தூது விடாத இராமன், இராவணனுக்கு மட்டும் ஏன் தூதுவிட்டான் என்ற கேள்வி வரும். 



இராவணனோடு கொண்ட பகை, சொந்தப் பகை. இராமனின் மனைவியை இராவணன் அபகரித்துச் சென்றுவிட்டான். அது இராமனுக்கும், இராவணனுக்கும் உள்ள தனிப் பகை. 



https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_29.html


(pl click the above link to continue reading)


வாலியோடு இராமனுக்கு தனிப் பகை எதுவும் இல்லை. தம்பி மனைவியை கவர்ந்தான் என்ற குற்றத்திற்கு தண்டனை வழங்கினான். 


மறைந்து இருந்து அம்பு விட்டது சரிதானா என்ற கேள்வி நிற்கிறது. 



வாலி இறந்த பின், எவ்வளவோ நாட்களுக்குப் பின் இலங்கையில் யுத்தம் நடக்க இருக்கிறது. இராமன் அங்கதனை தூது விடுகிறான். அங்கதனும் மகிழ்ச்சியோடு செல்கிறான். தன் தந்தையான வாலியை கொன்றவன் இராமன் என்ற   கோபமோ, வருத்தமோ அவனிடம் இல்லை. 



அங்கதன், அது சரி என்று நினைத்து இருக்கலாம். அல்லது அதை மறந்து மன்னித்து இருக்கலாம். அல்லது, வாலியே இறுதியில்  அது தவறு அல்ல என்று முடிவு செய்து அங்கதனை இராமனிடம் அடைக்கலம் என்று ஒப்புவித்தபின்  அதை மேலும் மேலும் தோண்டுவதில் அர்த்தம் இல்லை என்று நினைத்து இருக்கலாம்.



இராமன் வாலியைக் கொன்றது எல்லாம் இந்த அங்கதன் தூதில் வருகிறது. 


சுவாரசியமான பகுதி. 


வாருங்கள் சுவைப்போம். 

Monday, February 27, 2023

கம்ப இராமாயணம் - அறத்தினால் அன்றி

கம்ப இராமாயணம் - அறத்தினால் அன்றி 


வாழக்கை என்பது பெரிய போராட்டம். கருவறை தொடங்கி கல்லறை வரை இது ஒரு முடிவில்லா போராட்டம். 


இந்தப் போராட்டத்தில் வெற்றி பெற என்ன வேண்டும்?


நிறைய செல்வம் வேண்டும். பணம் இருந்தால் எதையும் சாதிக்க முடியும். 


அப்புறம் ஆட்கள் துணை வேண்டும். கணவன், மனைவி, மக்கள், சுற்றம், நட்பு.


அப்புறம், அறிவு, படிப்பு, திறமை 


அப்புறம், கொஞ்சம் நல்ல நேரம் அமைய வேண்டும். 


இப்படித்தான் பெரும்பாலானோர் நினைக்கிறார்கள். 



கம்பன் மட்டும் அல்ல, நம் தமிழ் இலக்கியம் முழுவதும் இதை மறுதலிக்கிறது. 



இது பற்றி கம்பன் சொல்கிறான்



என்ன சொல்கிறான் என்பதைவிட எங்கு சொல்கிறான் என்பது வியப்பளிக்கும் விடயம். 



இராவணன் தேர் இழந்து,  ஆயுதங்கள் எல்லாம் இழந்து, மணி மகுடங்களை இழந்து, தனியே போர்க்களத்தில் நிற்கிறான். 



அந்த இடத்தில் இராமன் வாயிலாக கம்பன் ஒரு அறவுரை கூறுகிறான். 



இராவணனிடம் என்ன இல்லை?



பணம் - குபேரன் அவன் அரண்மனையில் வேலை செய்கிறான். அதற்கு மேல் என்ன வேண்டும்?


வீரம்?


தவம் ?


புகழ்?


பெருமை?


ஆட்கள்?


எல்லாம் அவனிடம் தேவைக்கு அதிகமாக இருந்தது.



இருந்தும், நிராயுதபாணியாக நிற்கிறான். இராமன் நினைத்து இருந்தால், ஒரு நொடியில் அவன் உயிரை வாங்கி இருக்க முடியும். 



அவ்வளவு அனாதையாக நிற்கிறான். 



என்ன ஆயிற்று அவன் செல்வம், பணம், புகழ், எல்லாம்?



ஒன்றும் துணைக்கு வரவில்லை. 


இராமன் சொல்கிறான் 



"அறத்தின் துணை அன்றி மறத்தினால் பெரிய போர்களை வெல்ல முடியாது. இதை மனதில் கொள். தனித்து நிராயுதபாணியாக நிற்கும் உன்னை கொல்ல மனம் வரவில்லை. உன் சுற்றத்தோடு போய் இரு" என்று அனுப்பி வைக்கிறான். 


பாடல் 




 அறத்தினால் அன்றி, அமரர்க்கும் அருஞ் சமம் கடத்தல்


மறத்தினால் அரிது என்பது மனத்திடை வலித்தி;


பறத்தி, நின் நெடும் பதி புகக் கிளையொடும்; பாவி!


இறத்தி; யான் அது நினைக்கிலென், தனிமை கண்டு இரங்கி.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_27.html


(pl click the above link to continue reading)


அறத்தினால் அன்றி, = அறவழியில் செல்வது இல்லாமல் 



அமரர்க்கும் = தேவர்களுக்கும் 



அருஞ் சமம் = அரும் சமர் = பெரிய போர்களை 



கடத்தல் = கடந்து செல்லுதல் 



மறத்தினால் அரிது = அறம் அல்லாத மற வழியில் அரிது (வெற்றி காண்பது அரிது) 



என்பது = என்பதனை 



மனத்திடை வலித்தி = மனதில் ஆழ பதிவு செய்து கொள் 



பறத்தி = பறந்து செல். இங்கு நிற்காதே 



நின் = உன்னுடைய  



நெடும் = பெரிய 



பதி = வீடு, இல்லம், அரண்மனை 



புகக் = சென்று 



கிளையொடும் = உறவினர்களோடு 



பாவி! = பாவம் செய்தவனே 



இறத்தி = இருப்பாயாக 



யான் = நான் 



அது நினைக்கிலென் = அது என்பது உன்னைக் கொல்வதை நினைக்கவில்லை 



தனிமை கண்டு இரங்கி = உன் தனிமை கண்டு இரக்கப்பட்டு 



இராமாயணம் கதையோ, உண்மையோ, அது ஒரு புறம் இருக்கட்டும். 



சமீப காலத்தில் ஊடங்களில் ஒரு பெரிய நிறுவனம் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் இருந்து சரிந்து கீழே வந்தது என்று.




பணம், அரசியல் செல்வாக்கு,  ஆள் பலம் எல்லாம் இருக்கலாம். 



அற வழியில் செல்லாவிட்டால் அழிவு நிச்சயம். 



மறம், இராவணனை நிராயுதபாணியாக்கி போர்க்களத்தில் நிற்க வைத்து வேடிக்கை பார்த்தது. 



ஒரு சின்ன சறுக்கம்.  சீதை மேல் கொண்ட காமம். அவனை எங்கு கொண்டு நிறுத்தியது.


இதைச் சொல்வதற்காகவே காத்து இருந்ததைப் போல, கம்பன் சரியான இடத்தைத் தேர்ந்து எடுத்து இந்தப் பாடலை பொறுத்தி இருக்கிறான். 



Friday, February 17, 2023

கம்ப இராமாயணம் - மறைகளுக்கு இறுதி ஆவார்

 கம்ப இராமாயணம் - மறைகளுக்கு இறுதி ஆவார்


மாலை பாம்பு போலத் தெரியும் உதாரணம் பலவிதங்களில், பல இடங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது. எல்லோரும் அறிந்ததுதான். அந்த உதாரணத்தை கம்பர் காட்டும் விதம் பிரமிப்பு ஊட்டும்.


நாம் உலகில் பலவற்றை காண்கிறோம். 


பொருள்கள், உறவுகள், நட்பு,  இன்பம், சுகம், பகை, துன்பம், செல்வம், வறுமை என்று காண்கிறோம். 


அவை எல்லாம் உண்மையா? எது உண்மை? எது பொய் ?


செல்வம் இருந்தால் நம் துன்பங்கள் நீங்கிவிடும்.


வயதான காலத்தில் பிள்ளைகள் பெற்றோரை பார்த்துக் கொள்வார்கள். 


இப்படி பல "உண்மைகளை" நாம் கொண்டிருக்கிறோம். 


கம்பர் விளக்குகிறார். 


வெளிச்சம் போதுமானதாக இல்லாமல் இருப்பதால் மாலையா பாம்பா என்று தெரியவில்லை. 


கொஞ்சம் வெளிச்சம் வந்தவுடன், ஓ...இது மாலை, பாம்பு இல்லை என்று அறிந்து பெருமூச்சு விடுகிறோம். 


சற்றுப் பொறுங்கள். 


அது மாலையா? 


இல்லை, பூ, நார், நூல், ஜரிகை சேர்ந்த கலவை.  மாலை என்று பெயர் தந்திருக்கிறோம் அவ்வளவுதான். 


சரி,  நூல் என்றால் பஞ்சு. நார் பூ என்பது செடி கொடியில் இருந்து வருவது.  செடி கொடி என்பது விதை, நீர், சூரிய ஒளி, மண் சத்து இவற்றின் கலவை. 


இது இப்படி போய்க் கொண்டே இருக்கும். எங்கு போய் இது முடியும்? எது உண்மை? 


எந்த அளவில் நாம் நிறுத்துவது? 


இந்த உலகம் என்பது பஞ்ச பூதங்களின் கலவை. அடிப்படையில் பஞ்ச பூதங்கள். அவ்வளவுதான்.  


ஆனால், அது நமக்குத் தெரியுமா? மனைவி, கணவன், பிள்ளைகள், என்றால் உணர்ச்சிகள், ஞாபகங்கள் எல்லாம் சேர்ந்து வருகிறது. பஞ்ச பூதங்களின் கலவை என்று நினைக்க முடியுமா? 


முடியும். 


எப்போது என்றால் இறைவன் முன். இறை உணர்வோடு நாம் ஒன்று படும்போது இந்த வேறுபாடுகள் மறைந்து எல்லாம் ஒன்றே என்ற எண்ணம் வரும். 



பாடல் 


அலங்கலில் தோன்றும் பொய்ம்மை  அரவு என, பூதம் ஐந்தும்

விலங்கிய விகாரப்பாட்டின்  வேறுபாடு உற்ற வீக்கம்

கலங்குவது எவரைக் கண்டால் ?  அவர், என்பர்- கைவில் ஏந்தி,

இலங்கையில் பொருதார்; அன்றே,  மறைகளுக்கு இறுதி யாவார்!


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_17.html


(Please click the above link to continue reading)


அலங்கலில் = மாலையில் 


தோன்றும்  = தோன்றும் 


பொய்ம்மை = பொய்மை 


அரவு என = பாம்பு என்று 


பூதம் ஐந்தும் = ஐந்து பூதங்களும் 


விலங்கிய விகாரப்பாட்டின்  = ஒன்றோடு ஒன்று சேர்ந்தும், விலகியும் தோன்றும் 


வேறுபாடு = வேறு வேறாக  தோன்றும் 


உற்ற வீக்கம் = பெரிதாகத் தோன்றும் 


கலங்குவது = மறைவது 


 எவரைக் கண்டால் ? = யாரைப் பார்த்து என்றால் 


அவர், = அவர் 


என்பர் = என்று சொல்லுவார்கள் 


கைவில் ஏந்தி = கையில் வில் ஏந்தி 


இலங்கையில் = இலங்கையில் 


பொருதார் = சண்டையிட்டார் 


அன்றே = அப்போதே 


மறைகளுக்கு = வேதங்களுக்கு 


இறுதி யாவார்! = முடிவில் உள்ளார் 


இறைவன் முன் இந்த வேறுபாடுகள் எல்லாம் மறையும்.  உயர்ந்தவன், தாழ்ந்தவன், இன்பம், துன்பம், செல்வம், வறுமை என்ற வேறுபாடுகள் எல்லாம் இறைவன் முன் மறையும்


யார் அந்த இறைவன் என்றால், அது இராமன்தான் என்கிறார் கம்பர். 




Friday, January 27, 2023

கம்ப இராமாயணம் - அறத்தின் ஊங்கு இனிக் கொடிது

கம்ப இராமாயணம் -  அறத்தின் ஊங்கு இனிக் கொடிது


இராமனுக்கு முடி சூட்டுவது என்று முடிவாகி விட்டது. தயரதனுக்கு கீழே உள்ள அமைச்சர்கள் எல்லோரும் அது சரியான முடிவு என்று ஏற்றுக் கொண்டு விட்டார்கள். வசிட்டரும் அது சரி என்று சொல்லி விட்டார். .


இறுதியாக முதல் அமைச்சர் சுமந்திரன் தன் எண்ணத்தை வெளிப்படுத்துகிறான். 


அதுதான் சூழ்நிலை. அதை மனதில் நாம் கற்பனை செய்து கொள்ள வேண்டும். 


அற வழியில் வாழ்வது எளிதா? அல்லது அறம் அல்லாத வழியில் வாழ்வது எளிதா? என்று கேட்டால், அற வழியில் வாழ்வது மிகக் கடினம். 


பொய், புரட்டு, முகஸ்துதி, முன்னுக்கு பின் முரணாகப் பேசுவது, தவறென்றாலும், பெரிய ஆள் சொன்னால் சரி என்று ஏற்றுக் கொள்வது, என்பதெல்லாம் எளிதாக இருக்கிறது. 


நீதி, நேர்மை, நடு நிலைமை, உண்மை, தர்மம் என்று வாழ்வது கடினமாக இருக்கிறது. 


நினைத்துப் பாருங்கள், பொய்யே சொல்ல மாட்டேன் என்று ஒருவன் வாழ முடியுமா? 


இலஞ்சம் கொடுக்க மாட்டேன் என்று இருக்க முடியுமா?  நமக்கு வேலை நடக்கும் என்றால் கொஞ்சம் பணம் கொடுத்து சாதித்துக் கொள்வதுதானே புத்திசாலித்தனம். 


இறைவனைப்  பார்க்கக் கோவிலுக்குப் போகும் போதும், தனி வழி, சிறப்பு வழி, சிபாரிசு கடிதம் என்று கொடுத்து எளிதாக போய் வந்து விடுகிறோம். நீண்ட வரிசையில் நிற்பது கடினமாக இருக்கிறது. 


குறுக்கு வழி சுகமாக இருக்கிறது. எளிதாக இருக்கிறது. நேர் வழி கடினமாக இருக்கிறது. 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


சுமந்திரன் சொல்கிறான் 


"அரசரே, ,நீங்கள் இராமனுக்கு முடி சூட்டப் போகிறீர்கள் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே சமயம் நீங்கள் முடி துறக்கப் போகிறீர்கள் என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. அதற்காக உங்கள் குல மரபை விடுவதும் சரி அல்ல. அற வழியில் செல்வதைப் போல கொடுமையான ஒன்று இல்லை போலும்"


என்றான். 


இறுதி வரி தூக்கி வாரிப் போடுகிறது. அற வழியில் செல்வதைப் போல கொடுமையான ஒன்று இல்லை போலும் என்கிறான். 


இலஞ்சம் வாங்கி சம்பாதிப்பவன் காரு, வீடு என்று மகிழ்ச்சியாக இருக்கிறான். நேர்மையாக வாழ்பவன் அடிப்படை தேவைகளுகுக் கூட துன்பப் படுகிறான். அதுதானே உலக இயற்க்கையாக இருக்கிறது?


பாடல் 



“உறத் தகும் அரசு இராமற்கு என்று

    உவக்கின்ற மனத்தைத்

துறத்தி நீ எனும் சொல் சுடும்;

    நின்குலத் தொல்லோர்

மறத்தல் செய்கிலாத் தருமத்தை

    மறப்பதும் வழக்கு அன்று;

அறத்தின் ஊங்கு இனிக் கொடிது எனல்

    ஆவது ஒன்று யாதே?‘‘



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_27.html


(please click the above link to continue reading)


“உறத் தகும் = பொருத்தமானது 


அரசு இராமற்கு = அரசை இராமனுக்குத் தருவது 


என்று = என்று 


உவக்கின்ற மனத்தைத் = மகிழ்ச்சி கொள்கின்ற மனத்தை 


துறத்தி நீ = நீ (தயரதன்) முடி துறக்கப் போகிறாய் 


எனும் சொல் சுடும்; = என்ற சொல் சுடும் 


நின்குலத் தொல்லோர் = உன் குலத்தில் வந்த முன்னோர் 


மறத்தல் = மறக்காமல் 


செய்கிலாத் தருமத்தை = தொடர்ந்து செய்து வந்த தர்மத்தை 


மறப்பதும் வழக்கு அன்று; = நீ மறப்பது என்பது சரி அல்ல 


அறத்தின் ஊங்கு = அற வழியில் செல்வது 


இனிக் = இனிமேல் 


கொடிது எனல் =  கொடுமையானது என்று சொன்னால் 


ஆவது ஒன்று யாதே?‘‘ = வேறு என்னதான் செய்வது 


அற வழியில் செல்வது கொடுமையான செயல் என்றால், வேறு என்னதான் செய்வது என்று கேட்கிறான். 


சரியாகப் படிக்காமல், சரிதான் கம்பரே சொல்லிவிட்டார், இனி அற வழியில் செல்ல வேண்டாம் என்று முடிவு எடுக்கக் கூடாது. 


அற வழியில் செல்வது கடினம்தான். மறுப்பதற்கு இல்லை. ஆனால், அதுவே கடினம் என்றால், அறம் அல்லாத வழியில் செல்வது அது எவ்வளவு பெரிய கொடுமையாக இருக்கும் என்று முடிக்கிறான். 


அற வழியே கடினம் என்றால் பின் என்னதான் செய்வது என்று கேட்டால், ஒன்றும் செய்ய வேண்டாம். கடினமாக இருந்தாலும் அற வழியில்தான் போக வேண்டும். அதுதான் சரி. 


படிப்பதற்கு செலவாகும். உண்மைதான். அதற்காக படிக்காமல் இருந்தால் செலவு குறையுமா?  நாள் வாழ் நாள் எல்லாம் ஒரு பைசா கூட படிப்புக்கு என்று செல்வழித்ததே கிடையாது என்று ஒருவன் சொன்னால் அவனைப் பற்றி என்ன நினைக்கத் தோன்றும்?  


உடற் பயிற்சி கடினம்தான். அதற்காக சாப்பிட்டு சாப்பிட்டு படுத்து தூங்கிக் கொண்டிருந்தால்?


கடினமாக இருந்தாலும், அற வழியில்தான் செல்ல வேண்டும். ஏன் என்றால், அறம் அல்லாத வழி அதைவிட மிக மிக கடினமான ஒன்று. 


எந்த இடத்தில் அறத்தை போதிக்கிறார் பாருங்கள். 


ஒரு பாடலைக் கூட வேண்டாம் என்று தள்ளி விட்டுப் போய் விட முடியாது. 


அவ்வளவு பெரிய புதையல் கம்ப இராமாயணம். 




Thursday, January 26, 2023

கம்ப இராமாயணம் - நினைக்கும்தோறும் திடுக்கிடும்

கம்ப இராமாயணம் - நினைக்கும்தோறும் திடுக்கிடும் 


வீடணன் அடைக்கலம் அடைந்து விட்டான். அவனிடம் இராவணனின் படை பலம், துணை பலம் என்று எல்லாவற்றையும் இராமன் கேட்டு அறிந்து கொள்கிறான். இலங்கைக்குப் போக சேது பந்தனம் அமைக்கச் சொல்கிறான். 


இராமன் என்ன செய்கிறான் என்று அறிந்து வர இராவணன் ஒற்றர்களை அனுப்புகிறான். 


அந்த ஒற்றர்களை வீடணன் அடையாளம் கண்டு சொல்லி விடுகிறான். வானரங்கள் அந்த ஒற்றர்களை "கவனிக்கிறார்கள்". இராமன் அவர்களை விசாரித்து பின் அவர்களை விட்டு விடுகிறான். 


அவர்கள் இராவணனிடம் போகிறார்கள். 


அவர்கள் வந்து சொன்னதை கம்பன் சொல்லும் அழகு இருக்கிறதே, அடடா. 


"ஒற்றர்கள் உள்ளே வருகிறார்கள். வந்து இராவணனின் பாதங்களை வணங்குகிறார்கள்.  பனை மரம் போன்ற வலுவான கைகளைக் கொண்ட வானரங்களை நினைத்துப் பார்க்கிறார்கள். நினைக்கும் போதெலாம் அவர்கள் மனம் திடுக்கிடுகிறது. கொஞ்சம் செருமிக் கொள்கிறார்கள். இருமல் வருகிறது. இருமினால் இரத்தம் வருகிறது"


எந்த அளவுக்கு பயந்திருப்பார்கள் !


பாடல் 


மனைக்கண் வந்து, அவன் பாதம் வணங்கினார் - 

பனைக் கை வன் குரங்கின் படர் சேனையை 

நினைக்கும்தோறும் திடுக்கிடும் நெஞ்சினார், 

கனைக்கும் தோறும் உதிரங்கள் கக்குவார்



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_26.html


(Please click the above link to continue reading)


மனைக்கண் வந்து = இராவணன் இருக்கும் இடத்துக்கு (ஒற்றர்கள்) வந்து  


அவன் பாதம் வணங்கினார் = அவனை வணங்கி 


பனைக் கை = பனை மரம் போல பருத்த, உறுதியான கைகளைக் கொண்ட 


வன் குரங்கின் = வலிமையான குரங்குகளின் 


படர் சேனையை  = பெரிய சேனையை 


நினைக்கும்தோறும் = மனதில் நினைத்து பார்க்கும் போதெல்லாம் 


திடுக்கிடும் நெஞ்சினார்,  = திடுக்கிடும் மனதினை உடையவராய் 


கனைக்கும் தோறும் = இருமும் பொழுதெல்லாம்  


உதிரங்கள் கக்குவார் = இரத்தம் கக்கினார்கள் 


இன்று சினிமா படம் எடுக்கும் போது கதை, திரைக் கதை என்று இரண்டு சொல்லுவார்கள். 


இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?


கதாநாயகன் பெரிய பணக்காரன். அவனிடம் நிறைய சொத்து இருக்கிறது. அவனுக்கு கீழே பலர் வேலை செய்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டு போவது கதை. 


கதாநாயகன் கப்பல் போல ஒரு பெரிய காரில் வந்து இறங்குகிறான். அவனுக்கு ஒருவன் கார் கதவை திறந்து விடுகிறான். அவன் ஒரு பெரிய பங்களாவுக்குள் நுழைகிறான். அவனுக்கு ஒருவன் கதவு திறந்து விடுகிறான். 


ஒரு வார்த்தை சொல்லவில்லை.  நமக்கு புரிந்து விடுகிறது கதாநயாகன் பெரிய பணக்காரன் என்று. அது திரைக் கதை. திரையில் பார்த்து கதையைப் புரிந்து கொள்ள வைப்பது. 


இங்கே கம்பன் திரைக் கதை வடிக்கிறான். 


ஒற்றர்கள் ஒன்றும் சொல்லவில்லை. 


நடுங்கிறார்கள், இருமினால் இரத்தம் தெறிக்கிறது. அவ்வளவுதான். 


அதில் இருந்து அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள். அங்கே என்ன நடந்திருக்கும் என்று அந்த அவையில் உள்ளவர்கள் அறிந்து கொள்ள முடியும் அல்லவா?


அது தான் கம்பன். 





Saturday, September 17, 2022

கம்ப இராமாயணம் - பெண்களும் ஜொள்ளு விடுவார்களா ?

கம்ப இராமாயணம் - பெண்களும் ஜொள்ளு விடுவார்களா ?


எப்பப் பார்த்தாலும் திருக்குறள், பிரபந்தம், தேவாரம், திருவாசகம் என்று இல்லாமல், இடை இடையே கொஞ்சம் வேறு விடயங்களையும் பார்ப்போம். 


எவ்வளவுதான் மனதில் காதலும், காமமும் இருந்தாலும் பெண்கள் அதை வெளியே சொல்லுவது இல்லை. தமிழ் இலக்கியம் முழுவதையும் அலசி ஆராய்ந்தாலும், பெண்கள் தங்கள் உணர்சிகளை வெளிப்படுத்திய இடங்கள் மிகக் குறைவு. பெண்களின் எழுத்துக்களில், ,பெண் உணர்வுகள் வெளிப்படும் இடங்கள் மிகக் குறைவு. 


தற்காலத்தில், புதுக் கவிதைகள் எழுதுகிறார்கள். 


கம்ப இராமாயணத்தில், கம்பன் பெண்களின் மன உணர்வுகளை பல இடங்களில் மிக அழகாக படம் பிடிக்கிறான். 


அதில் ஒரு இடம், சூர்பனகை இராம இலக்குவனர்களை கண்டு காமம் கொண்டு தன் உள்ளத்தை வெளிபடுத்தும் இடம். 


இராமன் கானகத்தில் இருக்கிறான். அவன் இருக்கும் வனப் பகுதி சூர்பனகைக்கு சொந்தமான இடம். அங்கு வந்த சூர்பனகை இராமனைப் பார்க்கிறாள். 


இராமனின் அழகில் மயங்குகிறாள். சொக்கிப் போகிறாள். மனதில் காதலும், காமமும் எழுகிறது. 


அவளுக்குத் தோன்றுகிறது....


"அந்தக் காலத்தில் சிவ பெருமான் தவம் செய்து கொண்டிருந்த போது அவரின் தவத்தைக் கலைக்க தேவர்கள் மன்மதனை அனுப்பினார்கள். அவனும் சிவன் மீது மலர்க் கணைகளை தொடுத்தான். தவம் கலைந்த சிவன் சினம் கொண்டு மன்மதனை தன் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கி விட்டார். பின், இரதிதேவி வேண்ட, யார் கண்ணுக்கும் தெரிய மாட்டான், உன் கண்ணுக்கு மட்டும் தான் தெரிவான் என்ற வரத்தைத் தந்தார்.அந்த மன்மதன், நீண்ட காலம் தவம் செய்து எல்லோரு கண்ணிலும் படும்படி வரம் வாங்கி வந்துவிட்டானோ....இவனைப் பார்த்தால் மன்மதன் போல இருக்கிறதே " என்று ஜொள்ளுகிறாள் .



பாடல் 


 'கற்றை அம் சடையவன் கண்ணின் காய்தலால்

இற்றவன், அன்று தொட்டு  இன்றுகாறும், தான்

நல் தவம் இயற்றி, அவ்  அனங்கன், நல் உருப்

பெற்றன னாம்' எனப்  பெயர்த்தும் எண்ணுவாள்


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_17.html


(please click the above link to continue reading)




 'கற்றை அம் சடையவன் = சடை முடி உடைய அந்த சிவன் 


கண்ணின் காய்தலால் = நெற்றிக் கண்ணால் எரித்ததால் 


இற்றவன் = அழிந்தவன் 


அன்று தொட்டு = அன்று முதல் 


இன்றுகாறும் = இன்று வரை 


தான் = அவன் 


நல் தவம் இயற்றி = பெரிய தவங்களைச் செய்து 


அவ் அனங்கன் = அந்த அங்கம் இல்லாதவன், அதாவது உருவம் இல்லாதவன் 


நல் உருப் பெற்றன னாம்' எனப் = நல்ல வடிவைப் பெற்றான் போலும் 


பெயர்த்தும் எண்ணுவாள் =  மீண்டும் நினைப்பாள் 


எந்தக் கதை எப்படி வந்து நிற்கிறது..


எங்காவது வாய்ப்புக் கிடைத்தால் போதும், கம்பன் இராமனை இரசிக்கத் தவறுவது இல்லை. 


சூர்பனகை மூலம் கம்பன் இராமனை அனுபவிக்கிறான்.


கம்பன் மூலம் நாமும் அந்த இரசனையில் பங்கு கொள்வோம். 




Wednesday, August 3, 2022

கம்ப இராமாயணம் - கணவன் மனைவி உறவு - பாகம் 6 - என்னை நிகழ்ந்தது?

 

கம்ப இராமாயணம் - கணவன் மனைவி உறவு - பாகம் 6   - என்னை நிகழ்ந்தது?



(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_17.html


பாகம் 2 - யாழைப் பழிக்கும் மொழி: 

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/2.html


பாகம் 3 - கூந்தல் மலரை தூக்கி எறிந்தாள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/3.html


பாகம் 4 - மானைத் தூக்கிய யானை போல 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/4.html



பாகம் 5 - மன்னன் ஆவி அன்னாள்


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/5.html


)


இராமனுக்கு முடி சூட்டப் போகும் செய்தியைச் சொல்ல தயரதன் கைகேயி அரண்மனைக்கு வருகிறான். அங்கே கைகேயி அலங்கோலமாக தரையில் கிடக்கிறாள். 


தயரதன், கைகேயி எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். நம் வாழ்வில் இப்படி ஒரு சூழ்நிலை இருந்தால் என்ன நடந்திருக்கும்?


வேலைக்கு சென்ற கணவன் களைத்து வீடு திரும்புகிறான். வந்தால், மனைவி அலங்கோலமாக தரையில் கிடக்கிறாள். 


உடம்புக்கு ஒன்றும் இல்லை. 


பொதுவாக கணவனுக்கு என்ன தோன்றும்?


"இன்னைக்கு என்ன கூத்தோ? பேசாமல் இன்னும் கொஞ்ச நேரம் அலுவலகத்திலேயே இருந்திருக்கலாம். வேலையாவது முடிந்திருக்கும். ஏண்டா வீட்டுக்கு வர்றோம்னு இருக்கு" 


என்றுதான் பெரும்பாலான கணவர்கள் அலுத்துக் கொள்வார்கள். 


தயரதனும், மந்திர ஆலோசனை முடிந்து வருகிறான். நேரம் நள்ளிரவு. களைப்பு இருக்குமா ? இருக்காதா?  எடுத்த முடிவோ பெரிய முடிவு. அரசை இராமனிடம் கொடுப்பது என்ற முடிவு. எவ்வளவு வேலை இருக்கும். மனைவியிடம் சொல்ல ஓடோடி வந்தால், அவள் இப்படி இருக்கிறாள். 


ஆனால், அலுவலகத்தில் என்ன பெரிய வேலை செய்தாலும் ஒரு பொருட்டு இல்லை. மனைவி துயரத்தில் இருக்கிறாள் என்றால் மற்றதை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு அவளை கவனிக்க வேண்டும். 


நான் ஒரு ப் பெரிய ஒப்பந்தத்தை முடித்து விட்டேன், அதை சாதித்தேன், இதைச் சாதித்தேன் என்ற பெருமிதத்தில் கவலையாக இருக்கும் மனைவியை கவனிக்கமால் இருக்கக் கூடாது. 


"தயரதன் அவள் இருக்கும் நிலை கண்டு  என்ன ஆயிற்றோ என்று அஞ்சினான். அவளை அள்ளி எடுத்து அவளிடம் கேட்கிறான் 'என்னம்மா ஆச்சு? உன்னை யாரும் ஏதாவது உன் மனம் வருந்தும்படி சொன்னார்களா? என் கிட்ட சொல்லு. யாராக இருந்தாலும், அவங்களை உண்டு இல்லை என்று பண்ணி விட்டு வருகிறேன். என்னை நம்பு...என்னனு சொல்லு"


என்கிறான். 



பாடல் 


அன்னது கண்ட அலங்கல் மன்னன்,  அஞ்சி,

“என்னை நிகழ்ந்தது? இஞ் ஞாலம்  ஏழில் வாழ்வார்

உன்னை இகழ்ந்தவர் மாள்வர்!  உற்றது எல்லாம்

சொன்னபின் என் செயல் காண்டி!  சொல்லிடு!“ என்றான்.



பொருள்   


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/6.html


(please click the above link to continue reading) 


அன்னது கண்ட = அவள் இருக்கும் நிலை கண்ட 


அலங்கல் மன்னன் = மாலை அணிந்த மன்னன் (தயரதன்) 


அஞ்சி, = (என்ன ஆயிற்றோ) என்று அச்சப்பட்டு 


“என்னை நிகழ்ந்தது? = "என்ன நடந்தது"  


இஞ் ஞாலம்   ஏழில் = இந்த ஏழு உலகில் 


வாழ்வார் = வாழ்பவர்கள் 


உன்னை இகழ்ந்தவர்  மாள்வர்! = உனக்கு வருத்தம் வரும்படி பேசியவர்கள் உயிரை விடுவார்கள் 


 உற்றது எல்லாம் =  என்ன நடந்ததுனு சொல்லு 


சொன்னபின் = நீ சொன்ன பின் 


என் செயல் காண்டி! = நான் என்ன செய்யிறேன் பாரு 


சொல்லிடு!“ என்றான். = சொல் என்றான் 


கணவன் மனைவிக்கு நடுவில் சிக்கல் வந்தால், முதலில் செய்ய வேண்டியது - பேச வேண்டும். நிறைய பேச வேண்டும். மனம் விட்டுப் பேச வேண்டும். 


முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு பேசாமல் இருக்கக் கூடாது. 


தயரதன் தான் ஒரு பெரிய சக்கரவர்த்தி என்பதெல்லாம் தூக்கி ஒரு புறம் வைத்து விட்டு, அவன் மனைவியின் துன்பத்தைத் துடைக்க ஒரு கணவனாக அவளோடு பேசுகிறான். 


(தொடரும்) 



Wednesday, July 27, 2022

கம்ப இராமாயணம் - கணவன் மனைவி உறவு - பாகம் 5 - மன்னன் ஆவி அன்னாள்

கம்ப இராமாயணம் - கணவன் மனைவி உறவு - பாகம் 5   - மன்னன் ஆவி அன்னாள்




(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_17.html


பாகம் 2 - யாழைப் பழிக்கும் மொழி: 

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/2.html


பாகம் 3 - கூந்தல் மலரை தூக்கி எறிந்தாள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/3.html


பாகம் 4 - மானைத் தூக்கிய யானை போல 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/4.html





)


இராமனுக்கு முடி சூட்டப் போகும் செய்தியைச் சொல்ல தயரதன் கைகேயி அரண்மனைக்கு வருகிறான். அங்கே கைகேயி அலங்கோலமாக தரையில் கிடக்கிறாள். அவளை அப்படியே வாரி எடுக்கிறான் தயரதன். 


"கைகேயி அவன் கைகளை தள்ளிவிட்டு, கீழே நழுவி விழுகிறாள். ஒரு மின்னல் தரை இறங்கி வந்தது போல இருந்தது அது. ஒன்றும் பேசவில்லை. பெரு மூச்சு விடுகிறாள், தயரதனின் உயிர் போன்ற கைகேயி"


பாடல் 


நின்று தொடர்ந்த நெடுங் கைதம்மை நீக்கி,

மின் துவள்கின்றது போல, மண்ணில் வீழ்ந்தாள்.

ஒன்றும் இயம்பலள்; நீடு உயிர்க்கலுற்றாள் -

மன்றல் அருந் தொடை மன்னன் ஆவி அன்னாள்.



பொருள்   


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/5.html


(please click the above link to continue reading) 


நின்று = ஒரே இடத்தில் நின்று 


தொடர்ந்த =மேலும் நீண்ட, மேலும் நெருங்கி வந்த 


நெடுங் கை  தம்மை நீக்கி, = (தயரதனின்) நீண்ட கைகளை தள்ளிவிட்டு 


மின் துவள்கின்றது போல = மின்னல் துவழ்ந்து வருவது போல 


மண்ணில் வீழ்ந்தாள். = மண்ணில் விழுந்தாள் 


ஒன்றும் இயம்பலள்; = ஒன்றும் பேசவில்லை 


நீடு உயிர்க்கலுற்றாள் - = நீண்ட பெரு மூச்சு விட்டாள் 


மன்றல் = மணம் பொருந்திய 


அருந் தொடை  = அழகிய மலர்களைக் கொண்டு செய்த மாலை அணிந்த 


மன்னன் = தயரதனின் 


 ஆவி அன்னாள். = உயிர் போன்றவள் 


கைகேயி என்றால் தயரதனுக்கு அவ்வளவு அன்பு. உயிர் போன்றவள். 


கணவன் மனைவி இடையில் உள்ள சிக்கல் எப்படி எழுகிறது, அது எப்படி தொடர்கிறது என்று பார்ப்போம். 







Sunday, July 24, 2022

கம்ப இராமாயணம் - கணவன் மனைவி உறவு - பாகம் 4 - மானை யானை தூக்கியது போல

   

 கம்ப இராமாயணம் - கணவன் மனைவி உறவு - பாகம் 4   - மானை யானை தூக்கியது போல 


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_17.html


பாகம் 2 - யாழைப் பழிக்கும் மொழி: 

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/2.html


பாகம் 3 - கூந்தல் மலரை தூக்கி எறிந்தாள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/3.html




)


இது உங்கள் வீட்டிலும் நிகழ்ந்து இருக்கலாம். 


ஏதோ ஒரு காரணத்தால் மனைவி வருத்தமாக இருக்கிறாள். சாப்பிடவில்லை. அலங்காரம் பண்ணிக் கொள்ளவில்லை. ஒரே சோகம். தரையில் கையை தலைக்கு வைத்து படுத்து இருக்கிறாள். 


கணவன் வீட்டுக்கு வருகிறான். மனைவியின் சோர்ந்த, வருத்தமான முகத்தைப் பார்க்கிறான். அவள் படுத்திருக்கும் நிலையை பார்க்கிறான்.


பெரும்பாலும் என்ன நடந்திருகும்?


"என்ன உடம்பு கிடம்பு சரியில்லையா? ஏன் தரையில படுத்திருக்க? டாக்டர் கிட்ட போகனுமா? காய்ச்சல் அடிக்குதா?"  என்று கணவன் விசாரிக்கலாம். 


வேண்டும் என்றால் காப்பி போட்டுக் கொடுக்கலாம். 


உங்கள் வீட்டில் எப்படி என்று உங்களுக்குதான் தெரியும். 


தயரதன் வீட்டில் என்ன நடந்தது என்று கம்பன் காட்டுகிறான். 


"உள்ளே வந்த தயரதன், கைகேயின் நிலையைப் பார்க்கிறான். பார்த்தவுடன் அவன் மனதில் துயரம் வருகிறது. மனைவிக்கு ஏதோ சங்கடம் என்று நினைத்த மாத்திரத்தில், அந்த சோகம் அவனையும் பற்றிக் கொள்கிறது. அவன் மனம் வாடுகிறது. அவள் அருகில் சென்று, என்ன உடம்புக்கு என்றெல்லாம் கேட்கவில்லை..அவளை அப்படியே தன் இரண்டு கைகளாலும் ஏந்திக் கொள்கிறான்...ஒரு மானை யானை தன் தும்பிக்கையில் தூக்குவதைப் போல"   என்கிறான் கம்பன். 


பாடல் 


அடைந்து , அவண் நோக்கி,  ‘அரந்தை என்கொல் வந்து

தொடர்ந்தது?’ எனத் துயர்கொண்டு  சோரும் நெஞ்சன்,

மடந்தையை, மானை எடுக்கும் ஆனையேபோல்,

தடங்கை கள் கொண்டு தழீஇ,  எடுக்கலுற்றான்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/4.html


(please click the above link to continue reading) 



அடைந்து = (தயரதன், கைகேயின் அரண்மனையை) அடைந்து 


அவண் நோக்கி = அவள் இருந்த நிலையை நோக்கி 


‘அரந்தை = இந்தப் பெண்ணுக்கு 


என்கொல் வந்து = என்ன வந்தது 


தொடர்ந்தது?’ = அதுவும் தீராமல் நிற்கிறது (தொடர்கிறது) 


எனத் துயர்கொண்டு = என்று மனதில் துயரம் அடைந்து 


சோரும் நெஞ்சன், = வருந்தும், தளரும் நெஞ்சினோடு 


மடந்தையை = கைகேயியை 


மானை எடுக்கும் = ஒரு மானை எடுக்கும் 


ஆனையேபோல், = யானையைப் போல 


தடங்கை கள்  = நீண்ட கைகளைக் 


கொண்டு தழீஇ = தழுவிக் கொண்டு 


எடுக்கலுற்றான். = அவளைத் தூக்கினான் 


யோசித்துப் பாருங்கள். 


நீங்கள் கணவனாக இருந்தால், கடைசியாக எப்போது உங்கள் மனைவியை இரண்டு கைகளில் ஏந்தி இருக்கிறீர்கள் என்று. 


நீங்கள் மனைவியாக இருந்தால், எப்போது உங்கள் கணவர் உங்களை இரண்டு கைகளால் தூக்கி இருக்கிறார் என்று. 


எத்தனை ஆண்களால் இன்று தங்கள் மனைவியை தூக்க முடியும் - திருமணமான ஆண் பிள்ளை இருக்கும் வயதில். 


எத்தனை பெண்களை இன்று தூக்க முடியும்? 


தூக்குகிறேன் பேர்வழி என்று முதுகு பிடித்துக் கொள்ளாமல் இருந்தால் சரி.


அந்த வயதிலும் தயரதனிடம் அவ்வளவு வலிமை. அந்த வயதிலும் கைகேயின் மென்மை. பட்டது அரசி. மூன்று வேளையும் நன்றாகச் உண்டு உடல் பெருத்து இருக்கலாம். இல்லை, மான் குட்டி போல அவ்வளவு எடை இல்லாமல், தூக்க சுகமாக இருக்கிறாள். 


இரசிக்க வேண்டும். :)





Friday, July 22, 2022

கம்ப இராமாயணம் - கணவன் மனைவி உறவு - பாகம் 3 - கூந்தல் மலரை தூக்கி எறிந்தாள்

  

 கம்ப இராமாயணம் - கணவன் மனைவி உறவு - பாகம் 3  - கூந்தல் மலரை தூக்கி எறிந்தாள் 


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_17.html


பாகம் 2 - யாழைப் பழிக்கும் மொழி: 

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/2.html


)


இராமனுக்கு முடி சூட்டப் போகும் செய்தியை சொல்ல கைகேயின் அரண்மனைக்கு தயரதன் வருகிறான். 


அங்கே....


அலங்கோலமாக கிடக்கிறாள் கைகேயி. 


அந்தக் காலத்தில் சில விடயங்களை மங்களகரமானவை என்று வைத்து இருந்தார்கள். அவற்றைச் செய்ய வேண்டும் என்று விதித்து இருந்தார்கள். அதை செய்யாமல் இருப்பது அமங்கலம் என்று நினைத்தார்கள். 


உதாரணமாக பெண்கள் தலையில் பூச் சூடி கொள்வது, நெற்றியில் திலகம் இட்டுக் கொள்வது, போன்றவை. 


இப்போது எல்லாம் அவை வழக்கொழிந்து போய் விட்டன. பெண்கள தாலியை கழற்றி வைத்துவிட்டு வேலைக்குப் போகிறார்கள். இரவு உறங்கும் போது "உறுத்துகிறது" என்ற கழட்டி தொங்க விட்டு விடுகிறார்கள். 


சடங்கு, சம்ப்ரதாயம், விதி, கோட்பாடு என்பதெல்லாம் மதிபிழந்து கொண்டு இருக்கிறது. 


நம் கலாசாரத்தின் பெருமை தெரியாமல் மேலை நாட்டு கலாசாரத்தை கண்டு மயங்கும் காலம் வந்துவிட்டது. இதனால் விளைவது என்ன? இங்கும் அல்ல அங்கும் அல்ல என்ற ஒரு திரிசங்கு நிலையில் நிற்கிறது நம் சமுதாயம். 


அந்தக் காலத்தில் பெண்கள் முகம் கழுவும் போது மறந்தும் கூட தங்கள் திலகத்தை அழித்து விடக் கூடாது, முகத்தில் நீரை அள்ளி தெளிப்பார்கள். குங்குமத்தை கை கொண்டு அழித்து தேய்க்க மாட்டார்கள். 


கணவன் மேல் கொண்ட அன்பு, மரியாதை, காதல். 


கைகேயி என்ன செய்தாள் என்று சொல்லுவதன் மூலம் என்னவெல்லாம் செய்யக் கூடாது என்று கம்பன் பட்டியல் இடுகிறான். 


இரண்டு வரங்களை கேள் என்று சொல்லிவிட்டு கூனி போன பின், 


"கைகேயி கட்டில் இருந்து கீழே இறங்கி தரையில் படுக்கிறாள். கூந்தலில் உள்ள பூவை பியித்து எறிகிறாள்"


பாடல் 


கூனி போன பின், குல மலர்க் குப்பைநின்று இழிந்தாள்;

சோனை வார் குழல் கற்றையில்  சொருகிய மாலை,

வான  மா மழை நுழைதரு மதி பிதிர்ப்பாள்போல்,

தேன் அவாவுறு வண்டினம் அலமர, சிதைத்தாள்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/3.html


(please click the above link to continue reading) 


கூனி போன பின் = கூனி போன பின் 


குல = குல மகளான கைகேயி 


மலர்க் குப்பை நின்று இழிந்தாள்; = குப்பை என்றால் குவியல். மலர்கள் குவிந்து கிடக்கும் இடமான கட்டிலில் இருந்து இறங்கினாள். படுக்கை அறையை மணம் நிறைந்ததாக வைத்துக் கொள்ள வேண்டும். 



சோனை = கருமேகம் 


வார் = வார்த்து எடுக்கப்பட்ட, வாரிய 


குழல் கற்றையில் = தலை முடியில் 


சொருகிய மாலை, = சூடிய மாலையை 


வான = வானத்தில் 


மா மழை  நுழைதரு = பெரிய மழை தரும்  மேகதில் இருந்து  (நுழை = நுழைந்து வெளி வருவது போல) 


 மதி  = நிலவு 


பிதிர்ப்பாள்போல், = பிரிந்து வெளி வருவது போல 


தேன் = தேனை 


அவாவுறு = விரும்பும் (அவா = ஆசை, விருப்பம்) 


வண்டினம் = வண்டுகள் 


அலமர = சிதறி ஓட 


சிதைத்தாள். = சிதைதாள் 


கூந்தலில் இருந்த மலர்களை பியித்து எறிந்தாள் என்று சொல்ல வேண்டும். அதற்குக் கூட கம்பன் உவமை சொல்கிறான். 


கரிய மேகத்தில் இருந்து வெளிவரும் நிலவு போல, அவளுடைய கரிய கூந்தலில் இருந்து மலர்கள் பிரிந்து போயின என்று. 


அந்தக் காலத்தில் பெண்கள் தங்கள் தலையில் சூடிய மலர்களை தாங்களே எடுக்க மாட்டார்கள். வேறு யாரையாவது கொண்டுதான் எடுக்கச் சொல்லுவார்கள். திலகத்தை அழிப்பது, பூவை எடுப்பது என்பதெல்லாம் அமங்கலம் என்று கருதினார்கள். 


அவற்றைச் செய்தாள் கைகேயி. 


என்ன நடந்தது என்று நமக்குத் தெரியும். 


கூந்தலில் உள்ள பூவை எடுத்து எறிந்தது மட்டும் அல்ல...இன்னும் ஒரு கொடுமையான செயலைச் செய்தாள் என்கிறான் கம்பன்....




Sunday, July 17, 2022

கம்ப இராமாயணம் - கணவன் மனைவி உறவு

 கம்ப இராமாயணம் - கணவன் மனைவி உறவு 


கணவன் மனைவி உறவு என்பது சிக்கலானது. முன் பின் தெரியாத இருவர், எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து ஒரு நாள் திருமணம் செய்து கொள்கிறார்கள். முன் பின் தெரியாத ஒருவரிடம் வாழ்வின் மீதி நாட்களை ஒப்புக் கொடுக்கிறார்கள். எனக்கு நீ, உனக்கு நான் என்று வாழத் தலைப் படுகிறார்கள். 


ஆயிரம் சிக்கல்கள் வரும். பணம் இருந்தாலும் சிக்கல். இல்லாவிட்டாலும் சிக்கல். 


எப்படி இதைச்  சமாளிப்பது? 


இராமாயணத்தில் எவ்வளவோ இருக்கிறது தெரிந்து கொள்ள. 


கணவன் மனைவி உறவு பற்றி ஏதாவது இருக்கிறதா?  


இராமனும் சீதையும் திருமணம் செய்து கொண்டார்கள், கானகம் போனார்கள். இராவணன் தூக்கிக் கொண்டு போய் விட்டான். பின் இணைந்தார்கள். சுபம் என்று முடிந்து விடுகிறது. 


இடையில் ஆரண்ய காண்டத்தில் இயற்கையை இருவரும் இரசிக்கிறார்கள். பின் இருவரும் பிரிவில் வாடுகிறார்கள். 


தாரை, மண்டோதரி, ஊர்மிளை (இலக்குவன் மனைவி) எல்லாம் வருகிறார்கள். ஒரு ஆழ்ந்த உறவு பற்றிய செய்தி இல்லை. 


ஆச்சரியமாக, தயரதன் வாழ்க்கை பல விடயங்களை தருகிறது இந்த உறவு பற்றி. 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_17.html


(please click the above link to continue reading)



மனைவியோ, கணவனோ, திருமணம் என்று ஆனபின் ஒருவரை ஒருவர் போற்றத் தான் வேண்டும். 


அந்த உறவை கொண்டாட வேண்டும். பொன் போல பொதிந்து காக்க வேண்டும். 


ஒருவருக்கு பிடிக்காததை மற்றவர் செய்யலாம், பேசலாம். சகிக்கத்தான் வேண்டும். 


பல திருமணங்களில் பிள்ளைகளால் சிக்கல் வந்து சேரும். 


பிள்ளையை எப்படி வளர்ப்பது என்பதில் கணவன் மனைவி சண்டையிட்டுக் கொள்வார்கள். யார் சொல்வது சரி, யார் பிழை என்று. யார் செல்லம் கொடுத்து கெடுப்பது, யார் ரொம்ப கண்டிப்பு காட்டுவது, என்பதில் எல்லாம் கருத்து வேறுபாடு வரும். 


நான் பெரிய ஆள். நான் நிறைய படித்து இருக்கிறேன். எவ்வளவு சம்பாதிக்கிறேன். நீ என்ன சொல்வது, நான் என்ன கேட்பது. என்ற ஆணவம் தலை தூக்கத்தான் செய்யும். 


உன் வீட்டார், என் வீட்டார் என்ற பாகுபாடு வரும். 


தயரதன் மூலம் கம்பன் இத்தனை சிக்கலுக்கும் விடை தருகிறான். 


ஆச்சரியமான விடயங்கள். 


என்னைக் கேட்டால், கம்ப இராமாயணத்தில் மற்ற எல்லாவற்றையும் கூட விட்டு விடலாம். தயரதன் மூலம் கம்பன் காட்டும் இல்லறத்தை படித்தால் கூட ஏ கணவன் மனைவி உறவு அவ்வளவு இனிமையாக இருக்கும் என்று தோன்றுகிறது. 


சசிந்திப்போம். 





Tuesday, June 28, 2022

கம்ப இராமாயணம் - இராமன் என்றொரு மானுடன் - 5 - திருஇலி வலிக்கு

    

கம்ப  இராமாயணம் - இராமன் என்றொரு மானுடன்  - 5  -  திருஇலி வலிக்கு


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளத்தில் காணலாம் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_22.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1_23.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2_25.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/06/4_22.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/06/5_23.html


)

 இனித் தொடர்வோம். 


தயரதன் தனக்கு ஒரு வாரிசு இல்லை என்று தன் குல குருவான வசிட்டரிடம் கூறினான். உடனே வசிட்டர் தன் ஞானக் கண்ணால் மேலுலகத்தில் நடந்தவற்றை பார்கிறார். 


தேவர்கள் எல்லோரும் சிவனிடம் சென்று முறையிடுகிறார்கள்.  சிவ பெருமானோ "நான் அரக்கர்களோடு போரிடுவது இல்லை என்று ஒரு வரத்தை அவர்ககளுக்கு கொடுத்து இருக்கிறேன். எனவே நான் அவர்களை எதிர்த்து போரிட முடியாது" என்று கூறிவிட்டு, அனைத்து தேவர்களையும் அழைத்துக் கொண்டு நான்முகனிடம் போனார். பிரமனும் தன்னால் முடியாது என்று கூறி அனைவரையும் அழைத்துக் கொண்டு பாற்கடல் சென்றனர், திருமாலிடம் முறையிட. 


"பத்துத் தலையும், இருபது கரங்களும் உள்ள அந்த அருள் இல்லாத இராவணனின் கொடுமையை எங்களால் தடுக்க முடியவில்லை. கருணைக் கடலான திருமாலே, நீர் அவனோடு சண்டையிட்டு எங்களை காத்தால் உண்டு" என்று திருமாலிடம் சரண் அடைந்தார்கள். 


பாடல் 



‘இருபது கரம். தலை ஈர்-ஐந்து. என்னும் அத்

திருஇலி வலிக்கு. ஒரு செயல் இன்று. எங்களால்.

கரு முகில் என வளர் கருணைஅம் கடல்

பொருது. இடர் தணிக்கின் உண்டு. எனும் புணர்ப்பினால்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/5_28.html


(pl click the above link to continue reading)




‘இருபது கரம் = இருபது கரங்கள் 


தலை ஈர்-ஐந்து = பத்துத் தலைகள் 


என்னும் = என்று இருக்கும் 


அத் திருஇலி  = அருள் இல்லதா, கருணை இல்லாத 


வலிக்கு = வலிமை மிக்க இராவணனை அடக்க 


ஒரு செயல் இன்று  = ஒரு செயலையும் செய்ய முடியவில்லை 


எங்களால். = தேவர்களாகிய எங்களால் 


கரு முகில் = கரிய மேகம் 


என  = போல 


வளர் கருணைஅம் கடல் = நாளும் வளரும் கருணைக் கடலே 


பொருது = அவனோடு சண்டையிட்டு 


இடர் தணிக்கின் உண்டு = எங்கள் துன்பத்தை தணித்தால் தான் உண்டு 


எனும் புணர்ப்பினால். = என்ற கருதினால். அந்தக் கருத்தைச் சொன்னார்கள் 


இராவணன் உட்பட எல்லா அரக்கர்களுக்கும் ஒரு சிக்கல் இருக்கிறது. 


மிக மிக கடுமையாக தவம் செய்வார்கள். இறைவனே நேரில் வருவான். கேட்கின்ற வரத்தை எல்லாம் தருவான். நீண்ட ஆயுள், செல்வம், புகழ், பெருமை, வீரம், அனைத்து வித இன்பங்களும் கிடைக்கும். 


வேறு என்ன வேண்டும்? அதை வைத்துக் கொண்டு சந்தோஷமாக வாழ வேண்டியதுதானே? 


ஆணவம் இருக்க விடுவதில்லை. 


தேவர்களை அடிமைப் படுத்தத் தூண்டும். சரி, அவர்களை வென்று சிறையில் அடைத்து விட்டால் அது அடங்குமா என்றால் இல்லை. அவர்களை துன்புறுத்த வேண்டும். அல்லது தான் தான் கடவுள், தன்னைத் தான் எல்லோரும் வணங்க வேண்டும் என்று ஆணவம் தலை தூக்கும். 


தேவர்களை துன்பப்படுத்தினால் உனக்கு என்ன கிடைக்கப் போகிறது? 


அது அரக்கர்களின் சிக்கல் மட்டும் அல்ல. 


நம் சிக்கலும் தான்.


எவ்வளவோ இருக்கிறது. இருக்கிறதை வைத்துக் கொண்டு இன்பமாக இருக்கத் தெரிவதில்லை. இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் அலைவது. பின் முட்டி மோதி அழிவது. இருப்பதையும் அனுபவிக்காமல், ஓடி ஆடி சம்பாதித்தையும் அனுபவிக்காமல், வாழ்வை இழந்து நிற்பது. 


இராவணன் அடுத்தவன் மனைவியை ஆசைப்பட்டான். 


நாம் அடுத்தவன் வைத்திருக்கும் காருக்கு, அவன் போல் பெரிய வீட்டுக்கு, அவன் செல்வத்திற்கு, புகழுக்கு ஆசைப் படுகிறோம். 


இலக்கியம் கொஞ்சம் மிகைப் படுத்தித்தான் கூறும். அடிப்படை என்ன என்றால், இருப்பதைக் கொண்டு இன்பமாக வாழத் தெரியாதவன், மேலும் கொஞ்சம் வந்து விட்டால் மட்டும் இன்பமாக வாழ்ந்து விடுவானா? 


ஒருக்காலும் முடியாது. 


இராவணனின் அழிவு எங்கே ஆரம்பிக்கிறது என்று இராமாயணம் காட்டுகிறது. 


இராம அவதாரம் நிகழவில்லை. சீதை இன்னும் பிறக்கவில்லை. ஆனால், அவனின் அழிவு தீர்மானிக்கப் பட்டு விட்டது. 


எங்கே அறம் பிறழ ஆரம்பிக்கிறதோ, அன்றே அழிவின் விதை ஊன்றப் பட்டுவிட்டது என்று அர்த்தம். விதை வளரும். 


அதை நீங்கள் கடவுள் என்று நம்பினாலும் சரி, இயற்கை என்று கொண்டாலும் சரி, விதி என்று நினைத்தாலும் சரி, எப்படி என்றாலும் அறம் பிறழத் தலைப்பட்டால் அழிவின் தொடக்கம் என்று புரிந்து கொள்ள வேண்டும். 


அறம் ஒன்றும் அவசரப்படாது.  நின்று, நிதானமாக வேலை செய்யும். நமக்குத்தான் என்பது வருடம், நூறு வருடம் என்று ஆயுள் கணக்கு இருக்கிறது. அறத்திற்கு காலம் ஒரு பொருட்டு அல்ல. அது என்றும் நிலைத்து நிற்பது. அது தன் பாட்டுக்கு தன் வேலையைத் தொடரும். 






Thursday, June 23, 2022

கம்ப இராமாயணம் - இராமன் என்றொரு மானுடன் - 5 - யான் இனி அடுகிலேன்

   

கம்ப  இராமாயணம் - இராமன் என்றொரு மானுடன்  - 5  -  யான் இனி அடுகிலேன்


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளத்தில் காணலாம் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_22.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1_23.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2_25.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/06/4_22.html


)

 இனித் தொடர்வோம். 


தயரதன் தனக்கு ஒரு வாரிசு இல்லை என்று தன் குல குருவான வசிட்டரிடம் கூறினான். உடனே வசிட்டர் தன் ஞானக் கண்ணால் மேலுலகத்தில் நடந்தவற்றை பார்கிறார். 


தேவர்கள் எல்லோரும் சிவனிடம் சென்று முறையிடுகிறார்கள்.  சிவ பெருமானோ "நான் அரக்கர்களோடு போரிடுவது இல்லை என்று ஒரு வரத்தை அவர்ககளுக்கு கொடுத்து இருக்கிறேன். எனவே நான் அவர்களை எதிர்த்து போரிட முடியாது" என்று கூறிவிட்டு, அனைத்து தேவர்களையும் அழைத்துக் கொண்டு 



பாடல்  


சுடு தொழில் அரக்கரால் தொலைந்து. வான் உளோர்.

கடு அமர் களன் அடி கலந்து கூறலும்.

படு பொருள் உணர்ந்த அப் பரமன். ‘யான் இனி

அடுகிலேன்’ என மறுத்து. அவரொடு ஏகினான்



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/5_23.html


(pl click the above link to continue reading)


சுடு தொழில் = தீய தொழில்களை செய்யக் கூடிய 


அரக்கரால் = அரக்கர்களால் 


தொலைந்து = வாழ்வை தொலைத்து 


வான் உளோர். = வானில் உள்ள தேவர்கள் 


கடு = கசப்பு, நஞ்சு 


அமர் = அமர்ந்த, இருந்த, தங்கிய 


களன் = கழுத்து (நஞ்சு கழுத்தில் தங்கிய = சிவன்) 


 அடி கலந்து கூறலும் = திருவடிகளை பணிந்து கூறிய பின் 


படு பொருள் = இனி வரப் போவதை 


 உணர்ந்த = உணர்ந்த 


அப் பரமன் = அப்பரமன், பெரிய கடவுள் 


 ‘யான் இனி = நான் இனி 


அடுகிலேன்’ = (அரக்கர்களோடு) போர் புரிய மாட்டேன்  (தந்த வரம் காரணமாக) 


என மறுத்து = என்று மறுத்து 


அவரொடு ஏகினான் = அவர்களை (தேவர்களை) கூட்டிக் கொண்டு போனான் 


எங்கே போனான் என்பதை அடுத்த பாட்டில் சொல்கிறார் கம்பர். 


இதெல்லாம் திருமால் இராமன் என்ற மானுட அவதாரம் எடுப்பதற்கு முன் நிகழ்ந்த நிகழ்வுகள். 


இராமாயணம் எப்படி உருவானது, அதன் கதைக் கரு எங்கே இருக்கிறது என்று அறிந்து கொள்வோம்.  

Wednesday, June 22, 2022

கம்ப இராமாயணம் - இராம அவதாரம் - 4 - கொடுமை தீர்ப்பேன்

  

கம்ப  இராமாயணம் - இராம அவதாரம்  - 4 - கொடுமை தீர்ப்பேன் 


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளத்தில் காணலாம் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_22.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1_23.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2_25.html

)

 இனித் தொடர்வோம். 


தன் குல குருவான வசிட்டரிடம் சென்று தயரதன் "எனக்கு பின் இந்த மக்களைக் காக்க ஒரு வாரிசு இல்லையே" என்று கூறியவுடன் வசிட்டன் தன் ஞானக் கண்ணால் நோக்குகிறான். 


அவருடைய கண்ணுக்கு பாற்கடல் தெரிகிறது. என்றோ நடந்த ஒரு நிகழ்ச்சி இப்போது தெரிகிறது. 


"பாற்கடல் மேல் திருமால் ஆதி சேஷன் என்ற பாம்பின் மேல் பள்ளி கொண்டிருக்கிறார். அப்போது தேவர்கள் எல்லோரும் வந்து அரக்கர்கள் பற்றி முறையிடுகிறார்கள். அரக்கர்களின் கொடுமையை நான் தீர்ப்பேன் என்று திருமால் அவர்களுக்கு வாக்குறுதி கொடுக்கிறார்"


அந்தக் காட்சி அவர் கண் முன் தோன்றுகிறது. 


பாடல்  


அலைகடல் நடுவண் ஓர்     அனந்தன் மீமிசை

மலை என விழி துயில்   வளரும் மா முகில்,

‘கொலை தொழில் அரக்கர் தம்  கொடுமை தீர்ப்பென்‘ என்று,

உலைவு உறும் அமரருக்கு   உரைத்த வாய்மையை.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/4_22.html


(pl click the above link to continue reading)


அலைகடல் = அலை வீசும் கடல் (இங்கே பாற்கடல்) 


நடுவண்  = நடுவில் 


ஓர் = ஒரு 


அனந்தன் = அனந்தாழ்வான் என்று சொல்லப்படும் ஆதிசேடன் என்ற பாம்பின் 


 மீமிசை = மேலே 


மலை என = கரிய மலை போல 


விழி துயில்  வளரும் = கண்கள் தூங்கும் 


 மா முகில், = பெரிய மழை மேகத்தைப் போல 


‘கொலை தொழில் = கொலையை தங்கள் தொழிலாகக் கொண்ட 


அரக்கர் தம் = அரக்கர்களின் 


கொடுமை தீர்ப்பென்‘ என்று, = கொடுமைகளை தீர்ப்பேன் என்று 


உலைவு உறும் அமரருக்கு = அமைதி இன்றி அலையும் தேவர்களுக்கு 


உரைத்த வாய்மையை. = கொடுத்த வாக்கை 


தயரதன் கேட்டது ஒரு வாரிசை. வசிட்டர் கண்டதோ பாற்கடலில் நடந்த ஒரு நிகழ்வை. 


இரண்டுக்கும் என்ன சம்பந்தம்? 


அங்குதான் கதை ஆரம்பமாகிறது. 


இராமாயணத்தின் முதல் முடிச்சு அங்கே இருந்து தொடங்குகிறது.