Friday, August 23, 2019

திருக்குறள் - சொற்குற்றம் - சீர்மை சிறப்பொடு நீங்கும்

திருக்குறள்  - சொற்குற்றம்  - சீர்மை சிறப்பொடு நீங்கும்


நல்ல  பெயர் எடுப்பது என்பது மிகக் கடினமான செயல். அப்படி முயற்சி செய்து நல்ல பெயர் எடுத்தாலும், அதை கட்டிக் காப்பது அதனினும் கடினமான ஒன்று.

அப்படி முயன்று பெற்ற நல்ல பெயரும் புகழும், பயன் இல்லாத சொற்களை சொல்வதனால் , அப்படி பேசுபவர்களை விட்டு நீங்கும் என்கிறார் வள்ளுவப் பேராசான்.

பாடல்

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இல
நீர்மை உடையார் சொலின்

பொருள்

சீர்மை  = மேன்மை, உயர்வு

சிறப்பொடு = சிறப்பான பெயர், புகழ், மதிப்பு

நீங்கும் = ஒருவரை விட்டு நீங்கும். எப்போது என்றால்

பயன்இல = பயன் இல்லாதவற்றை

நீர்மை = நீரின் தன்மை

உடையார் = உடையவர்

சொலின் = சொன்னால்

சீரும் சிறப்பும் போய் விடும் என்கிறார்.

அப்படி என்றால் நல்ல பெயர் எடுக்க வேண்டும், எடுத்த பெயரை காக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

பயன் இல்லாத சொற்களை பேசக் கூடாது என்பது தெரிகிறது அல்லவா.

சரி, அது என்ன நீர்மை உடையார்?

நீர்மை என்ற சொல்லுக்கு பல பொருள் சொல்லுகிறார்கள்.

நீர் இன்றி அமையாது உலகு என்று சொல்லுவார்கள். நீர் அவ்வளவு உயர்ந்தது. இன்று கூட வெளிக் கிரகங்களில் உயிரினங்கள் இருக்கிறதா என்று ஆராயும் போது , முதலில் அங்கே நீர் இருக்கிறதா என்று ஆராய்கிறார்கள்.

நீர் இருந்தால் உயிரினம் இருக்கும் என்பது ஒரு எதிர்பார்ப்பு.

நீர் உயிர் காப்பது.

நீர்மை உடையார் என்றால், உயிர் காப்பதைப் போன்று அருள் உள்ளம் கொண்டவர்கள், பெரியவர்கள், சான்றோர் என்று பொருள்.



நைவாய எம்மேபோல் நாண்மதியே நீயிந்நாள்,
மைவான் இருளகற்றாய் மாழாந்துதேம்புதியால்,
ஐவாய் அரவணைமே லாழிப்பெருமானார்,
மெய்வாசகம் கேட்டுன் மெய்ந்நீர்மை தோற்றாயே.

என்று பிரபந்தம் பேசும்.

நிலவே, உன் உயரிய தன்மையை இழந்து விட்டாயா என்று கேட்கிறது அந்தப் பாசுரம்.

பயன் தரக்கூடியவற்றை எப்படி பேசுவது?

அதற்கு முதலில் பயன் தரக்கூடியவற்றை படிக்க வேண்டும். கேட்க வேண்டும்.

எது உள்ளே போகிறதோ, அது தானே வெளியே வரும்.

அரட்டைகளும், நையாண்டிகளும், துணுக்குகளும்,  பொய் செய்திகளும் உள்ளே போனால், அதுதானே வரும்.

நல்லவற்றை உள்ளே அனுப்புங்கள்.

கிழியும்படியடற் குன்றெறிந்தோன் கவிகேட்டுருகி
யிழியுங் கவிகற்றிடாதிருப்பீரெரி வாய்நரகக்
குழியுந்துயரும் விடாய்ப்படக் கூற்றுவனூர்க்குச் செல்லும்
வழியுந் துயரும் பகரீர் பகரீர் மறந்தவர்க்கே.

(கந்தரலங்காரம்-56)

என்பார் அருணகிரிநாதர்.

"இழியும் கவி கற்றிடாதிருப்பீர் "...மோசமான கவிதைகளை கற்காமல் இருங்கள் என்கிறார்.

கண்டதையும் படிக்கக் கூடாது.



நல்லதைப் படித்தால், நல்ல சிந்தனை வரும்.

நல்ல சிந்தனை வந்தால், நல்ல சொல் வரும்.

நல்ல சொல் வந்தால், சீரும் சிறப்பும் தானே வந்து சேரும்.

குப்பைகளை படிப்பதை நிறுத்த வேண்டும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_23.html


Thursday, August 22, 2019

திருக்குறள் - சொற்குற்றம் - பாரித்து உரைக்கும் உரை

திருக்குறள் - சொற்குற்றம் - பாரித்து உரைக்கும் உரை 


சிலபேர் ஒண்ணும் இல்லாததை ஏதோ பெரிய விஷயம் போல விரித்து விலாவாரியாக சொல்லுவார்கள்.

முதலில், பயனில்லாத சொல்லை சொல்லவே கூடாது.  அதையும், விரித்து, பெரிதாக்கி சொல்லுவது அதனினும் கொடுமை.

இப்போது வரும் டிவி சேரியல்களைப் பார்த்தால் தெரியும்.

முதலில் அதில் ஒரு கருத்தும் இருக்காது. ஒன்றும் இல்லாத அந்த கருத்தை 300 அல்லது 400 வாரமாக இழுத்துக் கொண்டே போவார்கள். கொடுமையான விஷயம்.

செய்தித்தாள்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவன் ஒரு கெடுதல் செய்தான் என்றால் அதை விலாவாரியாக விளக்குகிறார்கள்.

ஒரு பெண்ணை சிலர் கெடுத்து விட்டார்கள் என்றால், அதை பக்கம் பக்கமாக விளக்குகிறார்கள்.

எதற்கு?

பெண்ணின் மேல் அமிலம் வீசிவிட்டார்கள், வெட்டி விட்டார்கள், யாரையோ யாரோ கொலை செய்து விட்டார்கள் என்றால் எப்படி செய்தார்கள் என்று தத்ரூபகமாக விளக்குகிறார்கள்.

இப்படி எல்லாம் செய்யக் கூடாது என்கிறது குறள்.

ஒருவன் பேசுவதை வைத்து ஒருவன் நல்லவனா அல்லது கெட்டவனா என்று அறிந்து கொள்ளலாம் என்கிறார்.

யாராவது உங்களிடம் எதையாவது பேசுகிறார்கள் என்றால் கூர்ந்து கவனியுங்கள். அது எந்த விதத்தில் உங்களுக்கு பயன் தரும் என்றும் அதை அவர்கள் எவ்வளவு விரிவாக சொல்கிறார்கள் என்று.

வள வள என்று சொல்லிக் கொண்டே போனால், சொல்பவர் சரி இல்லை என்று குறித்துக் கொள்ளுங்கள்.

பொதுவாக இந்த புரணி பேசுபவர்கள், புறம் சொல்லுபவர்கள், போட்டுக் கொடுப்பவர்கள், வஞ்சனை செய்பவர்கள், பொய் சொல்பவர்கள் போன்றவர்கள்தான்  பெரிதாக பேசிக் கொண்டே போவார்கள்.


மௌனம் , ஞான வரம்பு  என்பது தமிழ் கோட்பாடு.

சில அரசியல்வாதிகள் பேசுவதைக் கேட்டால் இது புரியும். ஒன்றும் இல்லாததை ஒரு மணி நேரம்  பேசிக் கொண்டு இருப்பார்கள். அப்படி பேசுபவர்கள்  நல்லவர்கள் இல்லை என்பதை அவர்கள் பேச்சே காட்டிக் கொடுத்துவிடும்  என்கிறார் வள்ளுவர்.


பாடல்

நயனிலன் என்பது சொல்லும் பயனில 
பாரித்து உரைக்கும் உரை


பொருள்


நயனிலன் = நயன் +  இலன். நயன் என்ற சொல்லுக்கு நீதி, நேர்மை, தர்மம், அறம் என்று பல பொருள் உள்ளது. இங்கே நல்லவன் இல்லை என்று நாம் எடுத்துக் கொள்ளலாம்.

 என்பது = என்பது

சொல்லும் = நமக்கு எடுத்துச் சொல்லும். எது எடுத்துச் சொல்லும் என்றால்

பயனில = பயன் இல்லாதவற்றை

பாரித்து = விரிவாக்கி

உரைக்கும்  = சொல்லும்

உரை = பேச்சு  (எழுத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்).

எவன் ஒருவன் பயனில்லாதவற்றை விரித்துச் சொல்லுகிறானோ, அவன் ஏதோ கெடுதல் செய்யப் போகிறான்   என்று அறிந்து கொள்ளவேண்டும்.

நாமும், பயனில்லாதவற்றை பேசுவதை தவிர்ப்பது நலம். முடியாவிட்டால், சுருக்கமாக சொல்லிவிட்டு நகர்ந்து விட வேண்டும்.


அடுத்தமுறை யாராவது, அல்லது ஊடகங்கள் டிவி, whatsapp , youtube , facebook , செய்தித்தாள்கள், தேவையில்லாதவற்றை விளக்கமாக சொல்லிக் கொண்டிருந்தால், சட்டென்று அந்த இடத்தை விட்டு விலகுங்கள்.

அது மட்டும் அல்ல, நீங்களும், பயனில்லாதவற்றை நீட்டி முழக்கி பேசாதீர்கள்.

செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_22.html

Monday, August 19, 2019

திருக்குறள் - சொற்குற்றம் - நாட்டார் கண் செய்தலின் தீது

திருக்குறள் - சொற்குற்றம் - நாட்டார் கண் செய்தலின் தீது 



பெற்ற பிள்ளைக்கு யாராவது தீங்கு நினைப்பார்களா ? பெற்றோருக்கு? உடன் பிறப்புக்கு? நெருங்கிய நண்பர்களுக்கு?

எதிரிக்கு தீங்கு செய்தால் பரவாயில்லை. உற்றார், உறவினர், நண்பர்களுக்கு தீமை செய்வது என்பது எவ்வளவு பெரிய கொடிய விஷயம்.

அதை விட கொடியது ஒன்று இருக்கிறது என்கிறார் வள்ளுவர்.

அது தான், பல பேர் முன், பயனில்லாத சொற்களை சொல்லுவது.

மற்றவர்களுக்கு தீமை செய்வது கொடிய செயல்.

அதிலும், நெருங்கியவர்களுக்கு செய்வது அதனினும் கொடுமை.

அதை விட கொடியது, பல பேர் முன்னிலையில் பயன் இல்லாத சொற்களை கூறுவது.

பாடல்


பயன்இல பல்லார்முன் சொல்லல் நயன்இல
நட்டார்கண் செய்தலின் தீது


பொருள்


பயன்இல = பயன் இல்லாத. தனக்கும், மற்றவர்க்கும் , இம்மைக்கும், மறுமைக்கும் பயன் தராத சொற்களை

பல்லார்முன் = பல பேர் முன்னிலையில்

சொல்லல்  = சொல்வது என்பது

நயன்இல = நன்மை இல்லாத

நட்டார்கண் = நெருங்கியவர்களிடத்து

செய்தலின் தீது = செய்வதை விட தீமையானது

சற்று ஆழமாக யோசிப்போம்.

"தீது" என்று யாருக்குச் சொல்கிறார். சொல்வது தீது அல்ல. செல்பவருக்கு தீது.

ஏன்?

உலகத்தில் நமக்கு பலர் முன்னே பின்னே தெரியாதவர்கள். பார்த்தும், கேட்டும் இல்லாதவர்கள்.  அவர்களை விட்டு விடுவோம். அவர்களுக்கும் நமக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை.

கொஞ்ச பேர் எதிரிகள் இருப்பார்கள் - தொழில் ரீதியாக, போட்டியில், அக்கம் பக்கம், அலுவலகம் போன்ற இடங்களில் இருப்பார்கள்.

கொஞ்சம் நண்பர்கள், உறவினர்கள் இருப்பார்கள்.

மொத்தம் அவ்வளவுதானே?

இப்போது, நமக்கு நெருங்கியவர்களிடம் நாம் பயன் இல்லாத சொற்களை பேசினால்  என்ன ஆகும்.

"வந்துட்டாண்டா, சரியான அறுவை கேஸு...வந்தா விட மாட்டான்...எதையாவது தொண தொண என்று பேசிக் கொண்டிருப்பானே, இவனிடம் இருந்து  எப்படி தப்புவது" என்று நம்மை விட்டு விலகிப் போக நினைப்பார்கள்.

இருக்கின்ற கொஞ்ச நஞ்ச நண்பர்களையும், உறவினர்களையும் இழக்க நேரிடும்.

யாருமே நமக்கு உறவு என்று இருக்க மாட்டார்கள்.

மாமியார் மருமகள் சண்டை வந்து பிள்ளை அம்மாவை விட்டு  விட்டு போவதற்கு காரணம்  என்ன ? பயனில்லாத சொல்.

நண்பர்கள் பகைவர்களாக மாற காரணம் என்ன - பயனில்  சொல்

கணவன் மனைவி உறவில் விரிசல் வரக் காரணம் என்ன - பயனில் சொல்

பயன் இல்லாத சொற்களை பேசினால், மற்றவர்களிடம் இருந்து அந்நியப் பட்டுப் போவோம்.

"அவன் கிட்ட மனசுக்கு ஒரு நிம்மதி கிடைக்கும், ஆறுதலா நாலு வார்த்தை சொல்லுவான், எந்த பிரச்சனை என்றாலும் என்னுடைய நலத்தை யோசித்து வழி சொல்லுவான்  ..." என்று மற்றவர்களை நினைத்தால் உறவு பலப்படும்.

எனவே, உறவினர்களுக்கு தீமை செய்வது எவ்வளவு தீமையானதோ, அதை விட  தீமையானது பலர் முன் பயன் இல்லாத சொற்களை கூறுவது.

பேசும்போது ரொம்ப எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஒரு வார்த்தை வாழ்க்கையின் திசையை மாற்றி விடும்.

எல்லோருக்கும் பயன் படும்படி எப்படி பேசுவது என்று சிந்தியுங்கள்.

அப்படி பேசுவதாக இருந்தால், உங்களிடம் நிறைய நல்ல விஷயங்கள் இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் நிறைய அறிவை சேகரிக்க வேண்டும். படிப்பறிவு மற்றும் அனுபவ அறிவு.  இரண்டும் வேண்டும்.

அந்த அறிவின் மேம்பாடு உங்களை உயர்ந்த இடத்துக்கு கொண்டு போகும்.

சரி தானே?

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_19.html

Sunday, August 18, 2019

திருக்குறள் - சொற்குற்றம் - பயனில சொல்லாமை

திருக்குறள் - சொற்குற்றம் - பயனில சொல்லாமை 


ஆளுமை (personality ) எப்படி வருகிறது. நம்முடைய தோற்றம், நடை, உடை, பாவனை, நம் பேச்சு செயல் என்று இவற்றில் இருந்து நம்முடைய ஆளுமை பிறக்கிறது.

இதில் முக்கியமானது பேச்சு.

நாம் எப்படி மற்றவரிடத்தில் பேசுகிறோம் என்பதை வைத்து மற்றவர்கள் நம்மை எடை போடுவார்கள்.

இவன் படித்தவன், அறிஞன், முட்டாள், விஷயம் தெரிந்தவன், புளுகன் என்றல்லாம் நம்மை எடை போடுவார்கள்.

எடை போடுவது ஒரு புறம் இருக்கட்டும், நம் வாழ்க்கைக்கு மிக மிக தேவையான ஒன்று மற்றவர்களிடம் நாம் கொள்ளும் உறவு.

பிள்ளைகளிடம், பெற்றோரிடம், கணவனிடம், மனைவியிடம், உடன் பிறப்புகளிடம், சுற்றத்தாரிடம், நண்பர்களிடம், மாமனார், மாமியார், நாத்தனார், மேலதிகாரி , கீழே வேலை பார்ப்பவர் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

அத்தனை பேரிடமும் நல்லபடியாக உறவை வளர்ப்பது என்பது சவாலான காரியம்.

உறவின் பலம், பேச்சில் இருக்கிறது.

சொல்லில் ஏற்படும் குற்றங்களை களைய வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

வள்ளுவருக்கு உரை எழுத வந்த பரிமேலழகர் சொல்லின் கண் ஏற்படும் குற்றங்கள் நான்கு என்கிறார்.

அதாவது,

பொய் சொல்லுதல்
குறளை
கடுஞ் சொல்
பயனில் சொல்

"பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில்சொல் லென "

என்று மணிமேகலை கூறும்.

குறளை என்றால் நிந்தனை, திட்டுதல், ஏசுதல்.

தீக்குறளை சென்றோதோம் என்பாள் ஆண்டாள்.


வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் "தீக்குறளைச் சென்றோதோம்"
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமா(று) எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.'


இதில், வியக்கும் விஷயம் என்ன என்றால், உரை எழுதிய பரிமேல் அழகர் கூறுகிறார், முற்றும் துறந்த முனிவர்களால் மட்டும் பொய்யை முழுவதும்   அகற்ற முடியும் . எனவே, அதை விட்டு விட்டு, மற்றவற்றை திருவள்ளுவர் சொல்லுகிறார் என்றார்.

யாருக்கு கிடைக்கும் இப்படி பட்ட ஆசான்கள்.

இதில், பயனில் சொல்லாமை என்று ஒரு அதிகாரமே எழுதி இருக்கிறார்.

பயனில்லாத என்றால் என்ன?

தனக்கும் மற்றவர்க்கும் அறம் , பொருள், இன்பம், வீடு இந்த நான்கில் ஒன்றாவது  கிடைக்கும் பயன் இல்லாமல் பேசுவது பயனில் சொல்லாமை.

வாயை திறக்கிறோம் என்றால், என்ன சொல்லப் போகிறோம் என்று தெரிந்து பேச வேண்டும். நாம் சொல்லப் போவதால் யாருக்கு என்ன நன்மை என்று அறிந்து  பின் பேச வேண்டும்.

அதில் முதல் குறள்


பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்


பொருள்

பல்லார் = பலர்

முனியப்  = கோபம் கொள்ளும்படி, வெறுக்கும் படி

பயனில = பயனில்லாத

சொல்லுவான் = (சொற்களை) சொல்லுவானை

எல்லாரும் = எல்லாராலும்

எள்ளப் படும் = நகைக்கப் படும்

பலர் வெறுக்கும் படி பேசுபவனை எல்லாரும் பார்த்து நகைப்பார்கள்.

வெட்டிப் பேச்சு. அரட்டை.  பொழுது போகாமல் எதையாவது பேசிக் கொண்டிருப்பது.

இப்படி பேசுபவர்களை கண்டால், எல்லோரும் கோமாளி என்று நினைத்து  நகைப்பார்கள். பழிப்பார்கள் என்கிறார்.

பயன் தரும் சொல் ஒன்றும் இல்லையா. பேசாமல் இருந்து விடுவது நல்லது.

சொல்லுக்குள் வலிமையை ஏற்ற வேண்டும்.

ஒவ்வொரு சொல்லையும் தேர்ந்து எடுத்து பேச வேண்டும்.

எப்படி பயனில் சொற்களை தவிர்ப்பது என்று வள்ளுவர் பாடம் நடத்துகிறார்.

கேட்போமா ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_18.html

Friday, August 16, 2019

கம்ப இராமாயணம் - இராமாயணம் சொல்ல வருவது என்ன ?

கம்ப இராமாயணம் - இராமாயணம் சொல்ல வருவது என்ன ?


கம்ப இராமாயணத்தை எத்தனையோ விதமாக அணுகலாம். அது தான் காப்பியங்களின் பெருமை. நாம் நினைக்க நினைக்க அது விரிந்து கொண்டே போகும்.

இராமாயணம் என்பது  ஒரு கதை அல்ல. அதைக் கதை என்று எடுத்துக் கொண்டு அணுகினால், அப்படி ஒன்றும் பெரிய  கதை அல்ல. இன்றைய டிவி சீரியல்கள் அதை விட உணர்ச்சி பூர்வமான கதைகளை சொல்லிக் கொண்டிருக்கின்றன.

பின், அந்த காப்பியத்தில் மறைந்து கிடக்கும் பாடங்கள் என்ன என்று சிந்தித்துப் பார்த்தால் நமக்கு சில உண்மைகள் புலப்படும்.

அப்படி எனக்கு தட்டுப்பட்ட உண்மைகளை பகிர்ந்து கொள்ள விருப்பம்.

எந்த ஒரு கதையிலும், கதாநாயகன் நலலவன். வில்லன் கெட்டவன்.

கதாநாயகன் நல்லவன் என்பதற்கு சில சம்பவங்கள் காட்டப்படும்.

வில்லன் கெட்டவன் என்பதற்கு சில சம்பவங்கள் காட்டப்படும்.

இங்கே இராமன், கதாநாயகன். அவன் அவதாரம் என்று சொல்லி ஆகி விட்டது. எனவே, அவன் நல்ல குணங்கள் அளப்பரியன என்று சொல்லாமலே விளங்கும்.

இராவணன், இராமனுக்கு இணையான நல்லவன் என்றே கம்பன் காட்டுகிறான்.

வேறு எந்த காப்பியத்திலாவது வில்லனை இவ்வளவு உயர்வாக காட்டி இருப்பார்களா என்பது சந்தேகமே.

வாரணம் பொருத மார்பு
வரையினை எடுத்த தோள்

உடல் வலிமை மட்டும் அல்ல

நாரத முனிவர்க்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவு

தார் அணி மௌலி பத்து

சங்கரன் கொடுத்த வாள்  (தவ வலிமை)

முக்கோடி வாழ் நாள் (நீண்ட ஆயுள்)

முயன்று உடைய பெரும் தவம்

யாராலும் வெல்லப் படாய் எனப் பெட்ற வரம்

என்று அடுக்கிக் கொண்டே போகிறான் கம்பன்.

வீரம், தவம், பக்தி, அறிவு, உடல் வலிமை,  ஆயுள், என்று எதிலும் குறைவு இல்லாமல்  இருக்கிறான்.

எங்கே வந்தது அவன் குறை?

இராவணனையும் இராமனையும் இரு துருவங்களாக பிரிக்கும் ஒரே குணம் எது ?


ஒரு பெண்ணைத் தவிர வேறொருத்தியை மனதாலும் தொட்டேன் என்று சொன்னவன் இராமன்.

இருக்கிற பெண்கள் போதாது என்று மாற்றான் மனைவியும் வேண்டும் என்ற ஒழுக்கக் குறைவு   இராவணனிடம்.

அது ஒன்று தான் இருவரையும் பிரிக்கிறது .

"என்னை மணந்து கொண்ட போது, உன்னைத் தவிர வேறொரு பெண்ணை மனதாலும் தீண்டேன் என்று இராமன்  எனக்கு ஒரு வரம் தந்தான் . அதை நினைவு படுத்து   " என்று சீதை அனுமனிடம் கூறுகிறாள்.

வந்து எனைக் கரம் பற்றிய வைகல்வாய்
இந்த இப்பிறவிக்கு இரு மாதரைச்
சிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம்

தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய்

இது இராமனின் ஒழுக்கம்.


ஆசில் பரதாரம் அவை அம் சிறை அடைப்பேம்
மாசில்புகழ் காதலுறுவேம் வளமை கூரப்
பேசுவது மானம் இடை பேணுவதும் காமம்
கூசுவது மானுடரை நன்று நம் கொற்றம்

இது இராவணன்.

அந்த ஒரு புள்ளிதான்.

மனைவியைத் தவிர வேறு ஒரு பெண்ணை நினைக்காத ஒரு மனம்,
மாற்றான் மனைவியையும் நினைத்தது இன்னொரு மனம்.

கதை பின்னல்களூடே இந்த துருவங்கள் மறைந்து போயிருக்கலாம்.

நினைத்துப் பார்ப்போம்.

இது ஒரு பாடம்.

இன்னும் , சிந்திப்போம்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_16.html

Thursday, August 15, 2019

முத்தொள்ளாயிரம் - காணிய சென்று கதவுஅடைத்தேன்

முத்தொள்ளாயிரம் -  காணிய சென்று கதவுஅடைத்தேன்


ஒருவரிடம் சென்று உதவி கேட்பது என்றால் உடம்பு கூசித்தான் போகிறது.

நமக்கு கூசுவது இருக்கட்டும், உலகளந்த பெருமாளே மூன்றடி மண் கேட்க வாமன உருவமாய் குறுகித்தானே போனார். நாம் எம்மாத்திரம்.

ஒரு பக்கம் பணத்தேவை. வறுமை. குடும்பம் பசியால் தவிக்கிறது. உதவி கேட்பதைத் தவிர வேறு வழியில்லை.

இருந்தாலும், மானம் தடுக்கிறது. இப்படி ஒரு நிலைமை நமக்கு வந்து விட்டதே இரக்கம் மேலிடுகிறது.

வறுமை வாய்ப்பட்டவன் இரண்டுக்கும் நடுவில் கிடந்து உழல்வான்.

இது எப்படி இருக்கிறது என்றால், பெண் ஆசைக்கும், நாணத்துக்கும் நடுவில் கிடந்து தவிப்பதைப் போல இருக்கிறது என்கிறார் கவிஞர்.

வறுமைக்கு காதலை உதாரணம் காட்டுகிறார்.

அவள் ஒரு இளம் பெண். சேர மன்னன் மேல் காதல் கொண்டாள். சேரன் வீதி உலா வரும்போது அவனை காண நினைத்தாள். வாசல் வரை சென்றாள். நாணம் மேலிட. சீ சீ...நான் போய் எப்படி அவனைப் பார்ப்பது என்று வெட்கப்பட்டு கதவை சாத்திவிட்டு வந்து விட்டாள்.

பார்க்கவே இல்லை. அவ்வளவு நாணம், வெட்கம்.

உதவி கேட்பதா வேண்டாமா என்று தவிக்கும் ஒரு ஏழையைப் போல, சேரனை பார்ப்பதா வேண்டாமா   என்று அவள் தவிக்கிறாள்.

பாடல்

ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக்
காணிய சென்று கதவுஅடைத்தேன் நாணிப்
பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல
வரும்செல்லும் பேரும்என் நெஞ்சு.


பொருள்

ஆய்மணிப் = ஆராய்ந்து எடுக்கப்பட்ட

பைம் = பசுமையான, இங்கே புதிய

பூண் = பூண் பொதிந்த ஆபரணம்

அலங்கு = ஆடும்

தார்க் = மாலை

கோதையைக் = அணிந்த அரசனை (கோ = அரசன்)

காணிய = காண்பதற்கு

சென்று  = சென்று

கதவுஅடைத்தேன் = கதவை அடைத்தேன்

நாணிப் = நாணத்தால்

பெருஞ்செல்வர் = பெரிய  செல்வர்

இல்லத்து = வீட்டில்

நல்கூர்ந்தார் = ஏழை

போல  = போல

வரும் = வரும்

செல்லும் = செல்லும்

பேரும் = நகரும்

என் நெஞ்சு= என் மனம்

எளிய தமிழ்.  மனித மனத்தின் உணர்ச்சிகளை தெள்ளத் தெளிவாக படம் பிடிக்கும் பாடல்.

நல்லா இருக்குல ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_15.html


Tuesday, August 13, 2019

கம்ப இராமாயணம் - விழி பொழி மழையன்

கம்ப இராமாயணம் - விழி பொழி மழையன் 


கம்ப இராமாயணத்தில் எவ்வளவோ அரிய பெரிய செய்திகள் எல்லாம் இருக்கின்றன.

என்னை மிகவும் ஆச்சரியப் பட வைத்த செய்தி எது என்று கேட்டால், சகோதர வாஞ்சை என்று சொல்வேன்.

அப்படி சொல்லும் பலர் எதை உதாரணம் காட்டுவார்கள் என்றால், இராமன், குகனையும், சுக்ரீவனையும், வீடணனையும் தன் தம்பியாகக் கொண்டான் எனவே இராமாயணத்தில் விஞ்சி நிற்பது சகோதர பாசமே என்று சொல்லுவார்கள்.

 அது ஒரு புறம்  இருக்கட்டும்.

என்னை ஆச்சரியப் பட வைத்தது அந்த சகோதர வாஞ்சை அல்ல.

இராமனை காட்டுக்குப் போ என்றாள் கைகேயி.

இலக்குவனை கூடப் போ என்று யாரும் சொல்லவில்லை. அண்ணன் கூட அவனும் கிளம்பி விட்டான்.

சரி, அவர்கள்தான் போனார்கள், பரதன் என்ன செய்தான்?

நமது நெருங்கிய உறவினர் யாரவது இறந்து விட்டால் கூட, ஓரிரண்டு வருடம் துக்கம் காப்போம், அப்புறம் நாளடைவில் அது மறைந்து விடும்.

பரதன், 14 வருடம் அண்ணனை நினைத்து தவம் இருக்கிறான், நந்தியம்பதி  என்ற  கிராமத்தில். அரண்மனை சுகம் அனைத்தையும் விட்டு விட்டு அண்ணணனை நினைத்து  ஏங்கி நிற்கிறான்.

நம்மால், நினைத்துப் பார்க்க முடியுமா ?

அப்படி ஒரு சகோதர பாசமா?

மனைவியை விட்டு விட்டு இலக்குவன் போனான்.

மனைவியை விட்டு விட்டு பரதன் ஊருக்கு வெளியே கிராமத்தில் இருந்தான்.

சரி, இலக்குவன் போனான். பரதன் போனான். சத்ருகன் என்ன செய்தான்?

அவனும் அரண்மனையை துறந்து, பரதன் கூடவே இருந்தான்.

சகோதரர்கள் இடையே இப்படி ஒரு பாசத்தை காண முடியுமா ?

ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் கூட இல்லை.  மாற்றாந்தாய் மக்கள். அவர்களுக்குள் இப்படி ஒரு பாசமா?

இராவண வதம் முடிந்து இராமன் அயோத்தி நோக்கி வந்து கொண்டிருக்கிறான். வருகிற வழியில் பரத்துவாஜ முனிவரை சந்திக்கிறான். அவர், பரதன் நிலை பற்றி இராமனுக்கு கூறுகிறார்.


பாடல்


வெயர்த்த மேனியன்; விழி பொழி மழையன்; மூவினையைச்
செயிர்த்த சிந்தையன்; தெருமரல் உழந்து உழந்து அழிவான்;
அயிர்த்து நோக்கினும், தென் திசை அன்றி, வேறு அறியான்
பயத்த துன்பமே உருவு கொண்டென்னலாம்  படியான்

பொருள்

வெயர்த்த மேனியன்;  = வியர்வை வழியும் மேனியை உடையவன். காரணம், சாமரம் வீசக் கூட ஆள் வைத்துக் கொள்ளவில்லை

விழி பொழி மழையன்; = விழிகள் மழை போல் கண்ணீரை சொரிகின்றன

மூவினையைச் = மூன்று வினைகளை, மூழுகின்ற வினைகளை

செயிர்த்த சிந்தையன்; = கோபித்த சிந்தையன்

தெருமரல் = மன மயக்கத்தால்

உழந்து உழந்து அழிவான்; = உழன்று உழன்று அழிவான்

அயிர்த்து நோக்கினும் = ஐயம் கொண்டு பார்த்தாலும்

தென் திசை அன்றி = தென் திசை அல்லாது

வேறு அறியான் = வேறு திசை ஒன்றையும் அறிய மாட்டான்

பயத்த = பயத்துடன் கூடிய

துன்பமே  = துன்பமே

உருவு கொண்டென்னலாம்   = உருவமாக உள்ளவன் என்று சொல்லலாம்

படியான் = அப்படி இருந்தான்

சகோதரர்கள் நால்வரும், நாட்டைத் துறந்து, அரண்மனை சுகங்களைத் துறந்து, கட்டிய மனைவியைத் துறந்து 14 வருடங்கள் இருந்திருக்கிறார்கள்.

இதையெல்லாம் நினைத்துப் பார்க்க முடியுமா இன்று?

ஒரு குடும்பத்தில் பிறந்த ஒருவருக்கு ஒருவர் காட்டும் உச்ச பச்ச அன்பு இது.

விட்டுப் போயிருந்தால், இனியேனும், சகோதர சகோதரிகளை கூப்பிடுங்கள், அவர்கள் வீட்டில் நடக்கும் நல்லது கெட்டதுகளில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். உறவை புதுப்பியுங்கள்.

உடன் பிறந்தார் பாசம், கம்பன் படிப்பிக்கும் பாடம்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_0.html