Tuesday, April 28, 2020

இராமானுஜர் நூற்றந்தாதி - தகவெனும் சரண் கொடுத்தே

இராமானுஜர் நூற்றந்தாதி - தகவெனும் சரண் கொடுத்தே 


வகுப்புக்கு ஒழுங்கா வருகிற மாணவனைத்தான் ஆசிரியர் நிறைய கேள்வி கேட்பார், பரீட்சை வைப்பார், வீட்டுப் பாடம் தருவார். போட்டு படுத்தி எடுப்பார். வகுப்புக்கு வரமால், ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டு இருப்பவனை ஆசிரியர் கண்டு கொள்ள மாட்டார்.

ஒழுங்கா வருகிறவனைப் போட்டு படுத்துகிறார். ஊரு சுற்றுபவவனை ஒன்றும் சொல்வதில்லை. இது சரியில்லையோ என்று தோன்றும்.

ஆனால், கேள்வி, பரீட்சை, வீட்டுப் பாடம் என்று போட்டு படுத்தி எடுத்த மாணவனுக்கு முதல் வகுப்பில் தேர்ச்சி என்று பட்டம் கிடைக்கும்.

தகுதி இருக்கானு பாக்கணும் இல்ல.

அது  போல, இறைவனும், முக்தி தருவதற்கு முன்னால் பக்தர்களை போட்டு படுத்தி எடுத்து விடுவான்.

ஞானம், பக்தி, என்று கிடந்து அல்லாட வேண்டும். அப்புறம் தான் முக்தி தருவான்.

ஆனால், ஒரு தாய் என்பவள் அப்படி அல்ல. பிள்ளை படிச்சானா, வேலை செஞ்சானா என்றெல்லாம் பார்ப்பது இல்லை. ஐயோ , என் பிள்ளைக்கு பசிக்குமே என்று சோறிடுவாள்.

திருவரங்கத்து அமுதனார் சொல்கிறார்


"ஞானம் பெற்று, நல்லது செய்து, பக்தியால் நாளும் உள்ளம் நைந்து உருகுபவர்களுக்குத்தான் திருமால் முக்தி கொடுப்பான். ஆனால், இராமானுஜரோ, அவரிடம் வந்தவர்களுக்கு, அவர்கள் உள்ளத்தில் உள்ள அழுக்கை எல்லாம் அகற்றி, தன்னுடய கருணையினால் அவர்களுக்கு முக்தி கொடுப்பார் "

என்று.


பாடல்


ஞானம் கனிந்த நலங்கொண்டு நாடொரும் நைபவர்க்கு
வானம் கொடுப்பது மாதவன் வல்வி னை யேன்மனத்தில்
ஈனம் கடிந்த இராமா னுசன் தன்னை எய்தினர்க்குத்
தானம் கொடுப்பது தன்தக வென்னும் சரண்கொடுத்தே.


பொருள்

ஞானம் கனிந்த  = ஞானத்தை முழுமையாகப் பெற்று

நலங்கொண்டு = நல்லவற்றை செய்து

நாடொரும் = ஒவ்வொரு நாளும்

-நைபவர்க்கு = பக்தியால் உருகுபவர்க்கே

வானம் கொடுப்பது = முக்தி தருவது

மாதவன் = மாதவனான திருமாலின் வழி

வல்வி னை யேன்மனத்தில் = கொடிய வினைகள் கொண்ட என் மனத்தில்

ஈனம் கடிந்த = கீழான எண்ணங்களை மாற்றி

 இராமா னுசன் = இராமானுஜன்

தன்னை எய்தினர்க்குத் = தன்னை அடைந்தவர்களுக்கு

தானம் கொடுப்பது = தானமாக கொடுப்பது

தன்தக வென்னும் = தன்னுடைய சான்றாண்மை என்ற

சரண் கொடுத்தே. = திருவடிகளை கொடுத்தே


சும்மா இருக்கிற புத்தகத்தை எல்லாம் படிச்சா போதாது. படித்து தெளிந்த ஞானம் பெற வேண்டும்.

பின், பெற்ற ஞானத்தால் பிறருக்கு  உதவ வேண்டும்.

பின், பக்தியால் மனம் தினமும் உருக வேண்டும்.

இப்படி எல்லாம் செய்தால், திருமால் முக்தி தருவார்.

விடிஞ்சிரும்.

இராமாநுஜரிடம் இப்படி எல்லாம் ஒரு கெடு பிடியும் கிடையாது.

நீயே சரண் என்று அவரை பிடித்து விட்டால் போதும், நேரே சுவர்க்கம் தான்.

point to point service மாதிரி.

எது வசதி?


https://interestingtamilpoems.blogspot.com/2020/04/blog-post_71.html

இராமானுஜர் நூற்றந்தாதி - சுடரொளியால் இருளை துரத்தி

இராமானுஜர் நூற்றந்தாதி - சுடரொளியால் இருளை துரத்தி 



ஒவ்வொரு கால கட்டத்திலும், மக்கள் எது அறம், எது அறம் அல்லாதது என்று வழி தெரியாமல் தவித்து இருக்கிறார்கள்.

ஓரினத்தில் திருமணம் செய்து கொள்வது அறமா, அறம் அற்ற செயலா ?

பல பெண்களை மணந்து கொள்வது சரியா தவறா ?

மாமிசம் உண்பது சரியா, தவறா ?

சூதாடுவது சரியா, தவறா?

வட்டி வாங்குவது சரியா, தவறா ?

இப்படி பல குழப்பங்களில் மக்கள் தடுமாறி இருக்கிறார்கள். தடுமாறிக் கொண்டு இருக்கிறார்கள்.

இப்படி, மக்கள் திசை தெரியாமல் தவிக்கும் போது, பெரியவர்கள் தோன்றி மக்களை வழி காட்டி இருக்கிறார்கள்.

 திருவரங்கத்து அமுதனார் சொல்கிறார்

"கடல் போல அஞ்ஞான இருள் உலகமெங்கும் சூழ்ந்து இருந்த போது, இராமானுஜர் மட்டும் வந்து நான்கு வேதத்தின் சாரத்தை எடுத்து அறிவொளி தந்து இருக்கா விட்டால், இந்த ஆன்மாக்களை உடையவன் நாராயணன் என்று  யாருமே உற்று உணர்ந்து அறிந்து இருக்க மாட்டார்கள்"

பாடல்


கடலள வாய திசையெட்டி னுள்ளும் கலியிருளே
மிடைதரு காலத் திராமா னுசன், மிக்க நான்மறையின்
சுடரொளி யாலவ் விருளைத் துரத்தில னேல்உயிரை
உடையவன், நாரணன் என்றறி வாரில்லை உற்றுணர்ந்தே.

பொருள்

கடலள வாய = கடல் அளவான

திசையெட்டி னுள்ளும் = திசை எட்டினுள்ளும்

கலியிருளே = கலி புருஷனின் இருள். அதாவது அஞ்ஞான இருள்

மிடைதரு காலத்தில் = அடர்ந்து இருந்த காலத்தில்

இராமா னுசன் = இராமானுஜன்

மிக்க = சிறந்த

நான்மறையின் = நான்கு வேதத்தின்

சுடரொளியால் = சுடர் ஒளியால்

அவ் விருளைத் = அந்த இருளை

துரத்தில னேல் = துரத்தி இருக்காவிட்டால்

உயிரை = உயிரை

உடையவன் = உடையவன்

நாரணன் = நாராயணன்

என்றறி வாரில்லை = என்று அறிவாரில்லை

உற்றுணர்ந்தே = உற்று உணர்ந்தே

முதலாவது,  குழப்பத்தில் இருந்த மக்களை வழி காட்டி நடத்த அவர் வந்தார்.

இரண்டாவது, என்ன குழப்பம்?  மக்களுக்கு புரியவில்லை. யார் இறைவன், யாரை வழிபடுவது போன்ற குழப்பங்கள். ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு கடவுளை சொல்கின்றன.   ஒரே மதத்திலும் பல உட்பிரிவுகள் இருக்கின்றன. ஆளுக்கு ஒரு மதம்,  மதத்துக்கு ஒரு கடவுள் என்ற குழப்பங்கள்.

மூன்றாவது, அவர் இருளை விலகினார். உடனே எல்லோருக்கும் புரிந்து விட்டதா?  இல்லை. ஒரு அறையில் நல்ல  புத்தகம் இருக்கிறது. ஆனால், அறை முழுவதும்   ஒரே இருள். இராமானுஜர் வந்து விளக்கை ஏற்றி வைத்தார். புத்தகம் இருக்கிற இடம் தெரிகிறது. ஆனால், புத்தகத்தை எடுத்து படிக்க வேண்டியது நம் பொறுப்பு.  "அறிவாரில்லை உற்று உணர்ந்தே" என்கிறார்.

அறியவும் வேண்டும். உணரவும் வேண்டும்.

அறிவது எளிது. உணர்வது கடினம்.

இரண்டையும் அடைய இராமானுஜர் ஞான ஒளி ஏற்றினார்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/04/blog-post_28.html

Monday, April 13, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - நான் பெற்ற துன்பம் நீயும் பெற்றாயா?

நாலாயிர திவ்ய பிரபந்தம் - நான் பெற்ற துன்பம் நீயும் பெற்றாயா?



நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்ற இலக்கியங்களை படிக்கும் போது, பல உணர்ச்சிகள் உண்டாகிறது.

ஒரு பக்கம் பக்தி. இன்னொரு பக்கம் காதல். இன்னொரு பக்கம் தமிழின் சுவை, கவிதையின் நயம், சொல்லாட்சி, ஆறு போன்ற கருத்தோட்டம்...எதை எடுப்பது, எதை விடுவது என்று நம்மை தத்தளிக்க வைக்கும்.

நம்மாழ்வாரின் இன்னுமொரு அற்புதமான பாசுரம்.

அவள் கடற்கரையை ஓரம் உள்ள ஒரு குப்பத்தில் வசிப்பவன். அவளுக்கு அவன் மேல் அப்படி ஒரு காதல்.

ஒரு நாள், மாலை நேரம், கடற்கரையில் அமர்ந்து அவனைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறாள். நேரம் மெல்ல மெல்ல போய் கொண்டிருக்கிறது. மாலை போய் முன்னிரவு வந்து விட்டது. நிலவொளியில் கடல் நீர் பால் போல ஜொலிக்கிறது.

அலை அடித்த வண்ணம் இருக்கிறது.

அந்தக் கடலைப் பார்த்து அவள் கேட்கிறாள் ...

"நீயும் தூக்கம் இல்லாமல் இரவும் பகலும் என்னைப் போல நெஞ்சம் உருகி ஏங்குகிறாயா ? ஒரு நேரமாவது இந்த அலை அடிக்காமல், நிம்மதியா தூங்க மாட்டாயா ? எதுக்கு அனாவசியமா காதலிக்கிற ? அப்புறம் கிடந்து இப்படி நிம்மதி இல்லாம அலையுற" என்று கேட்கிறாள்.

பாடல்


காமுற்ற கையறவோ டெல்லே இராப்பகல்,

நீமுற்றக் கண்டுயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால்

தீமுற்றத் தென்னிலங்கை யூட்டினான் தாள்நயந்த,

யாமுற்ற துற்றாயோ வாழி கனைகடலே


பொருள்


காமுற்ற = காமம் உற்ற = ஆசைப் பட்டு

கையறவோ = கையில் கிடைக்காமல்

டெல்லே இராப்பகல் = இரவு பகல் எந்நேரமும்

நீமுற்றக் = நீ முழுவதும்

கண்டுயிலாய் = கண் துயில மாட்டாய்

நெஞ்சுருகி = நெஞ்சு உருகி

யேங்குதியால் = ஏக்கம் கொள்கிறாயா

தீமுற்றத்  = தீ முற்றும் அழிக்க

தென்னிலங்கை யூட்டினான்  = தென் திசையில் உள்ள இலங்கையை எரித்தான்

தாள்நயந்த = திருவடிகளை விரும்பிய

யாமுற்ற = யாம் உற்றது = எனக்கு கிடைத்தது

துற்றாயோ  = உனக்கும் கிடைத்ததா

வாழி கனைகடலே = நீ வாழ்க கடலே

முற்ற என்ற சொல் எவ்வளவு அழகாக வந்து  விழுகிறது பாருங்கள்.

காமம் உற்ற
நீயும் உற்ற
தீ முற்ற
யாம் உற்ற

என்ன ஒரு சொல்லாட்சி. என்ன ஒரு உணர்ச்சி பிரவாகம். என்ன ஒரு எளிமையான பாடல்.

இதைப் படிக்கவும் நேரம் இல்லையே...என்ன செய்யலாம் ?

https://interestingtamilpoems.blogspot.com/2020/04/blog-post_13.html

Sunday, April 12, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - இரவெல்லாம் விழித்து இருப்பாயா?

நாலாயிர திவ்ய பிரபந்தம் - இரவெல்லாம் விழித்து இருப்பாயா?


அன்றில் பறவை என்று ஒரு பறவை இருந்தது. இப்போது இல்லை. தமிழ் இலக்கியத்தில் இந்தப் பறவை பற்றிய குறிப்புகள் உள்ளது.  அன்னப் பறவை போல இந்தப் பறவையும் இன்று இல்லை.

அன்றில் பறவையின் சிறப்பு என்ன என்றால், அது எப்போதும் துணையுடனேயே இருக்கும்.

அன்றி + இல் = துணை இல்லையேல், தானும் இல்லை.

அந்தப் பறவை இரவில் தூங்கும் போது, துணை பறவையின் அலகை, தன் அலகால் கவ்விக் கொண்டே தூங்குமாம்.

துணையைப் பிரிந்தால், "குர்ரீ குர்ரீ" என்று பெரிய குரல் எடுத்து துணையை அழைக்கும். துணை வராவிட்டால், உயிரை விட்டுவிடும்.

அது துணையை அழைக்கும் குரல் ஏக்கத்தின் குரலாக ஒலிக்கும். கேட்போர் மனதை உருக்கும்.

அவள் வீடோ ஒரு சிறு குடிசை. கடற்கரை ஓரம் உள்ள ஒரு சின்ன குடிசை. நேரமோ இரவு நேரம்.  குளிர்ந்த கடல் காற்று நிற்காமல் அடித்துக் கொண்டு இருக்கிறது. தூரத்தில், அலை அடிக்கும் சத்தம்.

வீட்டின் மறு பக்கத்தில் எல்லோரும் படுத்து உறங்குகிறார்கள். அவளுக்கு தூக்கம் வரவில்லை. முழங்காலை கட்டிக் கொண்டு, அதில் தலை சாய்த்து அவனை நினைத்து உருகுகிறாள்.

அந்த நிசப்த இரவில், அவள் வீட்டின் கொல்லையில் உள்ள தோட்டத்தில், ஒரு அன்றில் பறவை ஏக்கக் குரலில் தன் துணையை தேடி அழைக்கிறது.

"ஏய் அன்றில் பறவையே, இந்த நீண்ட யாமப் பொழுதில், நீயும் உன் துணையை பிரிந்து ஏங்குகிறாயா என்னைப் போல" என்று அந்த அன்றில் பறவையிடம் கேட்கிறாள்.


பாடல்

கோட்பட்டசிந்தையாய்க் கூர்வாய அன்றிலே,
சேட்பட்ட யாமங்கள் சேரா திரங்குதியால்,
ஆட்பட்ட எம்மேபோல் நீயும் அரவணையான்,
தாட்பட்ட தண்டுழாய்த் தாமம்கா முற்றாயே.


பொருள்

கோட்பட்ட = சிறைப்பட்ட

சிந்தையாய்க்  = மனதால்

கூர்வாய = கூர்மையான அலகைக் கொண்ட

அன்றிலே = அன்றில் பறவையே

சேட்பட்ட = நீண்ட

யாமங்கள் = யாமப் பொழுதுகள்

சேரா திரங்குதியால், = சேராது + இரங்குதியால். உன் துணையோடு சேராமல்  இரக்கம் கொள்கிறாயா ?

ஆட்பட்ட = அடிமைப் பட்ட

எம்மேபோல் = என்னைப் போல

நீயும் = நீயும்

அரவணையான் = அரவு + அணையான் = பாம்பை படுக்கையாக கொண்டவன்

தாட்பட்ட = திருவடிகளில் பட்ட

தண்டுழாய்த் = குளிர்ந்த துளசி

தாமம்  = மாலை மேல்

கா முற்றாயே. = ஆசைபட்டாயா ?

https://interestingtamilpoems.blogspot.com/2020/04/blog-post_12.html

Saturday, April 11, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - உனக்கும் தூக்கம் வரலியா ?

நாலாயிர திவ்ய பிரபந்தம் - உனக்கும் தூக்கம் வரலியா ?



அது கடற்கரை ஓரம் உள்ள ஒரு சின்ன கிராமம். அதில் ஒரு வீடு. வீட்டில் இருந்து பார்த்தால் கடல் தெரியும். வீட்டை சுற்றி கொஞ்சம் கடல் மணலில் வளரும் சில குறுஞ்செடிகள்.

இரவு நேரம். நிலா வெளிச்சத்தில் கடல் பளபளக்கிறது. தூரத்தில் அலை அடிக்கும் சத்தம். கடற்காற்று, மணலை மெல்ல புரட்டிப் போட்டுக் கொண்டு போகிறது.

ஊரே தூங்கி விட்டது.

அவள் மட்டும் தூங்கவில்லை. தூக்கம் வரவில்லை.  அவன் நினைவு. ஜன்னல் வெளியே பார்க்கிறாள். அங்கிருந்த குறு மரத்தில் ஒரு நாரை உட்கார்ந்து இருக்கிறது. அதுவும் தூங்காமல் கண்ணை உருட்டி உருட்டி பார்த்துக் கொண்டு இருக்கிறது. அடிக்கிற காற்று அந்த நாரையை தள்ளுகிறது. அது விழாமல் அந்த மரத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறது.

"எனக்குத்தான் தூக்கம் வரவில்லை. அவனை நினைத்து, தூக்கம் வராமல் தவிக்கிறேன். உனக்கும் தூக்கம் வரலியா? நீயும் அவன் மேல் காதல் கொண்டாயோ ?"

என்று அந்தப் பெண், நாரையிடம் கேட்கிறாள்.

பாடல்

வாயுந்திரையுகளும் கானல்மடநாராய்,
ஆயும் அமருலகும்துஞ்சிலும் நீதுஞ்சாயால்,
நோயும் பயலைமையும் மீதூரவெம்மேபோல்,
நீயும்திருமாலால் நெஞ்சம்கோட் பட்டாயே.


பொருள்


வாயுந்  = மேலும் மேலும்

திரை = அலை, கடல் அலை

உகளும் = உருளும், அடிக்கும்

கானல் = கடற்கரை

மட நாராய், = நாரையே

ஆயும் = தாயும்

அமருலகும்  = அமரர் + உலகும் = தேவ லோகமும்

துஞ்சிலும்  = தூங்கினாலும்

நீ துஞ்சாயால், = நீ தூங்க மாட்டாயா ?

நோயும்  = (காதல்) நோயும்

பயலைமையும் = அதனால் வரும் பசலை நிறமும்

மீதூர = உன் மேல் வர

வெம்மே போல், = என்னைப் போலவே

நீயும் = நீயும்

திருமாலால் = திருமாலால்

நெஞ்சம் = மனம்

கோட் பட்டாயே. = பறித்துக் கொள்ளப் பட்டாயோ?

அவன், என் மனதைத்தான் கொண்டு சென்றான் என்று நினைத்தேன். உன் மனதையும்  கொண்டு சென்று விட்டானா ?

நம்மாழ்வார் பாசுரம்.

நாலாயிர திவ்ய பிரபந்தம்.

பிரபந்தத்தை புரட்டிப் பாருங்கள். இப்படி எத்தனையோ பாடல்கள்.

எதெதற்கோ நேரம் ஒதுக்குகிறோம். இதுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கிப் படித்தால்  என்ன ?

https://interestingtamilpoems.blogspot.com/2020/04/blog-post_11.html

Wednesday, April 8, 2020

ஐங்குறுநூறு - நீங்கினளோ என் பூங்கணோளே

ஐங்குறுநூறு - நீங்கினளோ என் பூங்கணோளே


பிள்ளைகளை விட்டு பிரிவது என்பது மிக மிக கடினமான காரியம்.

பிள்ளைகள் வீட்டை விட்டு வெளிய போகத்தன் துடித்துக் கொண்டு இருப்பார்கள். பெற்றவர்களுக்குத் தான் தெரியும் அந்த வலி.

ஏதோ ஒரு காரணத்துக்காக பிள்ளகைள் வீட்டை விட்டு சென்று விடுகிறார்கள்...மேல் படிப்புக்கோ, வேலை நிமித்தமோ, திருமணம் ஆன பின்னோ...வீட்டை விட்டுப் போய் விடுகிறார்கள்.

அவர்கள் போன பின், அவர்கள் இருந்த அறை , அவர்கள் உபயோகப் படுத்திய பொருட்கள், எல்லாம் அவர்களை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும்.

"அந்த பய ஓட்டிக் கொண்டிருந்த சைக்கிள்...."

"அவ ஆசை ஆசையா வாங்கின படம்..."

வீட்டில் ஒவ்வொன்றும் பிள்ளைகளை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும். அதெல்லாம் அந்த குழந்தைகளுக்குத் தெரியாது. வீட்டில் பெற்றோர் படும் பாடு, அவர்களின் ஞாபகம் படுத்தும் பாடு...

இந்த உணர்ச்சிகளை சங்கப்பாடலான ஐங்குறுநூறு என்ற தொகுப்பில், ஓதலாந்தையார் என்ற கவிஞர் படம் பிடித்து காட்டுகிறார்.

மகள், திருமணம் ஆகி, கணவனோடு சென்று விட்டாள் .  இங்கே வீட்டில் அம்மா கிடந்து மருகுகிறார்கள்.

"இது என் மகள் வைத்து விளையாடிய பொம்மை. இது என் மகள் கொஞ்சிய கிளி. இப்படி எதைப் பார்த்தாலும் அவள் ஞாபகமே வருகிறது. எப்படித்தான் என்னை விட்டு விட்டுப் போனாளோ "

பாடல்

இது என் பாவை பாவை, இது என்
அலமரு நோக்கின் நலம்வரு சுடர் நுதல்
பைங்கிளி எடுத்த பைங்கிளி, என்றிவை
காண் தொறும் காண் தொறும் கலங்க,
நீங்கினளோ என் பூங்கணோளே.


பொருள்

இது என் பாவை = இது பொம்மை போன்ற என் மகள் விளையாடிய

பாவை = பொம்மை

இது என் = எது என்

அலமரு நோக்கின் = அலை பாயும் கண்களை உடைய

நலம்வரு சுடர் நுதல் = நல்ல சுடர் விடும் நெற்றியைக் கொண்ட

பைங்கிளி எடுத்த = கிளி போன்ற என் மகள் எடுத்து விளையாடிய

பைங்கிளி = பச்சைக் கிளி

என்றிவை = என்று இவை

காண் தொறும்  காண் தொறும்  = பார்க்க பார்க்க

கலங்க = என் மனம் கலக்கம் அடைய

நீங்கினளோ = என்னை விட்டுப் போய் விட்டாளே

என் பூங்கணோளே. = என்னுடைய பூ போன்ற அழகிய கண்களை உடைய என் மகள்

மகள் வைத்து புழங்கிய ஒவ்வொன்றைப் பார்த்தும் மருகுகிறது அந்தத் தாய் மனம்.

எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதிய பாடல்.

உலகம் எவ்வளவோ மாறி விட்டது.

ஆனாலும், அந்த அடிப்படை மனித உணர்ச்சிகள் இன்றும் அப்படியே இருக்கிறது.   ஆச்சரியம்.

எவ்வளவு எளிய பாடல்.

எவ்வளவு அழுத்தமான, ஆழமான  உணர்ச்சிகள்.

சங்க இலக்கியத்தை படிக்கும் போது, நம் முன்னவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று தெரியும்.

அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை, பிள்ளைகள் பெற்றோரின் பாசத்தை  புரிந்து கொள்வதே இல்லையோ?


https://interestingtamilpoems.blogspot.com/2020/04/blog-post_8.html

Friday, April 3, 2020

திருக்குறள் - அச்சுஇறும் அப்பண்டம்

திருக்குறள் - அச்சுஇறும் அப்பண்டம்



பாடல்

பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்

பொருள்

பீலி = மயில் தோகை

பெய் = வண்டியில் ஏற்றுதல்

சாகாடும் = வண்டியும்

அச்சுஇறும் = அந்த வண்டியின் அச்சும் உடைந்து போகும்

அப்பண்டம் = அந்த மயில் தோகை

சால மிகுத்துப் பெயின் = அளவுக்கு அதிகமாக ஏற்றினால்

அளவுக்கு அதிகமாக ஏற்றினால், அது மயில் தோகையாக இருந்தால் கூட, வண்டியும், அச்சும் உடைந்து போகும்.

இதைச் சொல்ல ஒரு வள்ளுவர் தேவையா? நமக்குத் தெரியாதா ?

தெரியும். ஆனால் வள்ளுவர் சொல்ல வந்தது வேற.

டீ காப்பி குடிப்பது நல்லதா? நல்லது இல்லை தான், இருந்தாலும், காலையில் ஒரு கப் உள்ள போகாட்டி வண்டி ஸ்டார்ட் ஆக மாட்டேங்குதே. காலையில ஒண்ணு,  சாயங்காலம் ஒரு கப்...அவ்வளவு தான்.   ஒரு இறகு.

 வாட்ஸாப் ஓயாமா பாக்குறது நல்லதா? நல்லது இல்லை தான். ..பொழுது தான் போகணும்ல...அப்பப்ப பாக்குறதுதான்...அப்படியே ஒண்ணு ரெண்ட போர்வர்துபண்ணுறதுதான்....இன்னொரு இறகு.

facebook ? அதுவும் ஒருநாளைக்கு ரெண்டு மூணு தடவ பாக்குறதோட சரி. இன்னொரு இறகு.

அர்த்தம் இல்லாத டிவி சீரியல்...இன்னொரு இறகு.

வெட்டி அரட்டை ...

குப்பை புத்தகங்கள், ப்ளாகுகள், youtube , instagaram ....இப்படி நாலஞ்சு இறகு.

எப்பவும் இல்ல, எப்பவாவது நண்பர்களுடன் பார்ட்டி னு போனா, லைட் ஆ ஒரு peg ...

இப்படி நிறைய மயில் இறகுகளை ஏற்றிக் கொண்டே போகிறோம்.

தனித்தனியா பார்த்தா எல்லாம் பெரிய தவறு இல்லைதான்.

ஒரு கப் காப்பி என்ன பெரிய தப்பா?

இல்லை.

இப்படி சின்ன சின்ன தவறுகளாக செய்து கொண்டே போனால், அது இந்த உடம்பை, நம் வாழ்வை முறித்து விடும்.

தவறு என்றால் தவறுதான். சின்னதுதானே  என்று நிறைய செய்து கொண்டே போகக் கூடாது.

எல்லாம் ஒன்று சேர்ந்தால், பெரிய பகையாகி விடும்.

அதை வெல்வது கடினம்.

எப்போதாவது என்று ஆரம்பித்த புகைப் பழக்கம், மதுப் பழக்கம், போதைப் பொருள்கள் பழக்கம் நம்மை  எங்கோ கொண்டு தள்ளிவிடும்.

ஈரலும், நுரையீரலும் வெந்து நொந்து மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில்  படுத்து இருக்கும் போது தெரியும், எப்படி அந்த சின்ன கெட்ட பழக்கம்  இந்த வண்டியை குடை சாய்த்தது என்று.

பட்டியல் போடுங்கள்.

ஒவ்வொன்றாக கெட்ட பழக்கங்களை விடுங்கள்.

ஒண்ணுதானே, எப்போதாவது தானே என்று நினைத்தால், மயில் இறகை நினைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு மென்மையாக இருக்கும். எவ்வளவு இலேசாக இருக்கும். அது ஒரு பெரிய பார வண்டியின் அச்சை முறிக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/04/blog-post_3.html