Thursday, May 21, 2020

கந்தர் அநுபூதி - மனைவி மக்கள் என்னும் விலங்கு

கந்தர் அநுபூதி - மனைவி மக்கள் என்னும் விலங்கு 


கந்தர் அநுபூதியை சிறுவயதில் வீட்டில் உள்ள பெரியவர்கள் பாராயணம் பண்ணுவார்கள். அவர்கள் பாட்டுக்கு கட கட என்று சொல்லிக் கொண்டே போவார்கள். கேட்டு கேட்டு மனப்பாடம் ஆகிப் போனது.

பல பாடல்களுக்கு அர்த்தமும் விளங்கியது என்றே நினைத்தேன்.

நாள் ஆக ஆகத்தான், நான் அர்த்தம் என்று நினைத்துக் கொண்டிருந்தது சரி அல்ல என்று புலப்படத் தோன்றியது.

அப்படிப்பட்ட பாடல்களில் ஒன்று தான் கீழே உள்ளது.

பாடல்

வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும்
தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?
கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,
தொளைபட்டு உருவத் தொடு வேலவனே.

பொருள்


வளை பட்ட = வளையல் அணிந்த

கை (ம்)  = கைகளை உடைய

மாதொடு = மாது என்றால் பெண். அதாவது மனைவியுடன்

மக்கள் எனும் = பிள்ளைகள் என்ற

தளைபட்டு = விலங்கில் அகப்பட்டு

அழியத் தகுமோ? தகுமோ? = நான் அழிய தகுமோ தகுமோ ? (தகாது)

கிளைபட்டு = உறவினர்களோடு

எழு = போருக்கு எழுந்த

சூர்  = சூரனும்

உரமும் = அவன் வீரமும், மார்பும்

கிரியும், = கிரௌஞ்ச மலையும்

தொளைபட்டு = துளைத்துக் கொண்டு செல்லும்படி

உருவத்  = உருவிக் கொண்டு செல்லும்படி

தொடு வேலவனே. = வேலைத் தொட்டவனே

மனைவி மக்கள் என்ற குடும்ப சிக்கலில் மாட்டி நான் அதிலேயே அழுந்திப் போவது சரிதானா ?  நான் அப்படி அழிந்து போகாமல் இருக்க அருள் செய்வாய் என்று வேண்டுகிறார்.

ஆசைப் பட்டு திருமணம் செய்து கொண்டு, பின் பிள்ளைகளை பெற்று, அவர்களை  வளர்க்கிறோம். அவர்கள் எப்படி விலங்காக முடியும்?

ஏதோ மனைவியும், பிள்ளைகளும் நம் ஆன்ம முன்னேற்றத்திற்கு ஒரு தடைக் கல் போல சொல்கிறாரே...ஒரு வேளை அப்படித்தானோ?

திருமணம் செய்து இருக்கக் கூடாதோ? அப்படியே திருமணம் செய்து இருந்தாலும், பிள்ளைகள் பெற்று இருக்கக் கூடாதோ? அப்படியே பெற்றாலும், ஒரு அளவுக்கு மேல் அவர்களை கழட்டி விட்டு விட வேண்டுமோ? என்றெல்லாம் தோன்றியது உண்டு.

"மாதொடு மக்கள் எனும் தளை " என்று சொல்கிறாரே. தளை என்றால் விலங்கு. கையில் விலங்கை மாட்டிக் கொண்டு அலைய யாருக்கு ஆசையாக இருக்கும்? விடுதலை அடையத்தானே எல்லோரும் விரும்புவார்கள்.

சரி, அது ஒரு புறம் இருக்கட்டும்.

ஆண்களுக்கு , வளை பட்ட கை மாது ஒரு விலங்கு சரி.

பெண்களுக்கு?

மனைவிக்கு, கணவன் விலங்கா? அப்படியென்றால் ஏன் அதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை?

யாருமே திருமணம் செய்து கொள்ளக் கூடாதா? அதுவா உபதேசம்?

இதன் அர்த்தம் என்னவாக இருக்கும்? அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது பற்றி மேலும் சிந்திப்போம்.....

(தொடரும்)

https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_21.html

Wednesday, May 20, 2020

கந்தர் அநுபூதி - குருவாய் வருவாய்

கந்தர் அநுபூதி - குருவாய் வருவாய் 



பாடல்

உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.


இந்தப் பாடலை என் சிறுவயது முதல் எனக்குத் தெரியும். படித்து இருக்கிறேன். பல முறை கேட்டும் இருக்கிறேன். அடடா என்னமா எழுதி இருக்கிறார், ஒவ்வொரு சொல்லும் "வாய்" என்று முடியும்படி என்று வியந்தும் இருக்கிறேன்.

இத்தனை வருடம் ஆனது அதன் உள்ளே பொதிந்து கிடக்கும் அர்த்தம் தட்டுப்பட.

முதலில் அருஞ்சொற் பொருளை பார்த்து விடுவோம். அப்புறம் அர்த்தத்துக்குப் போவோம்.


பொருள் 

உருவாய் = உருவத்துடன்

அருவாய் = உருவம் இல்லாமல்

உளதாய் = இருக்கக் கூடியதாய்

இலதாய் = இல்லாததாய்

மருவாய்  = மலரின் வாசமாக

மலராய் = மலராக

மணியாய் = மணியாக

ஒளியாய்க் = மணியில் இருந்து வரும் ஒளியாக

கருவாய்  = கருவாக

உயிராய்க்  =உயிராக

கதியாய் =  வழியாக 

விதியாய்க் = விதியாக

குருவாய் = குரு வடிவில்

வருவாய் = வருவாய்

அருள்வாய் = அருள் செய்வாய்

குகனே. = முருகா

கடினமான சொல் ஒன்றும் இல்லை.

இதில் என்ன புதிதாக கண்டுவிட்டேன் என்று கேட்கிறீர்களா?

"குருவாய் வருவாய்"

நாம் இறைவனை, உண்மையை தேடி அலைகிறோம். நிறைய புத்தகங்கள் வாசிக்கிறோம். பலர் சொல்வதைக் கேட்கிறோம். நமக்கு இவர் தான் குரு, ஆச்சாரியார்  என்று ஒருவரை ஏற்றுக் கொண்டு அவர் சொல்கிற படி கேட்கிறோம். துறவிகள், சாமியார்கள், உபன்யாசம் செய்பவர்கள் என்று எவ்வளவோ பேர்.  இப்போதெல்லாம், youtube வந்து விட்டது. வீட்டில் இருந்த படியே  அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொள்ள முடியும்.

இருந்தும் ஒன்றும் ஆன மாதிரி தெரியவில்லை. அது ஒரு பாட்டுக்கு போகிறது. வாழ்க்கை இன்னொரு பக்கம் நம்மை இழுத்துக் கொண்டு போகிறது.

அருணகிரிநாதர் சொல்கிறார்.

"நீ குருவை தேடி அலையாதே.  குரு உன்னைத் தேடி வருவார். நீ எப்போது பக்குவப் படுகிறாயோ அப்போது  குரு உன்னைத் தேடி வருவார்" என்று.

ஆங்கிலத்தில் சொல்லுவார்கள், "The teacher will appear when the student is ready" என்று.

நீங்கள் தேடி கண்டுபிடிக்கும் யாரும் உங்கள் குரு அல்ல. உங்களுக்கு எப்படித் தெரியும், அவர் தான் குரு என்று?

"வருவாய்" அவனே வருவான்.

வருவான் என்று எப்படி சொல்ல முடியும்? என்ன உத்தரவாதம் இருக்கிறது?

'கதியாய் விதியாய்"

"உன் விதிப்படி அவன் வருவான். உனக்கு எப்போது விதித்து இருக்கிறதோ, அப்போது வருவான். வந்து உன்னை நல்ல கதிக்கு கொண்டு செல்வான். "


சரி, எப்படி வருவான்?  எந்த வடிவில் வருவான் ?

எனக்கு எத்தனையோ குரு மார்கள். பாடம் சொல்லித் தந்தவர்கள் சிலர். வாழக்கையை சொல்லித் தந்தவர்கள் சிலர்.  வழி கட்டியவர்கள் சிலர். அவன் எப்படி  வேண்டுமானாலும் வருவான்.

புரியலையே !

"உருவாய்"

அவன் மானிட உருவில் வருவான்.

"அருவாய்"

உருவம் இல்லாமல் வருவான். அது எப்படி உருவம் இல்லாமல் வருவான்? அப்படி வந்தால்  நாம் எப்படி அவனை அறிய முடியும்?

ஒரு உயர்ந்த புத்தகத்தை வாசிக்கிறீர்கள், நல்ல சொற்பொழிவை கேட்கிறீர்கள், நாள் எழுத்தை வாசிக்கிறீர்கள்...உங்களுக்குள் ஏதோ ஒன்று நிகழ்கிறது. 'சே, இது தெரியாமல் இத்தனை நாள் வாழ்ந்து விட்டேனே..இனியாவது  கொஞ்சம் மாற வேண்டும் " என்று நினைக்கிறீர்கள் அல்லவா....அந்த எழுத்துதான் உங்கள் குரு. அதற்கு மானுட வடிவம் இல்லை. ஒளி வடிவம், ஒலி வடிவில் வந்து அருள் தருவான்.

mp3 file, youtube வீடியோ, dvd , vcd என்று ஏதோ ஒரு வழியில். அருவமாக வந்து அருள் தருவான்.

மருவாய், மலராய்

மலர் தெரியும், அதன் வாசம் தெரியுமா? சில சமயம் வாசம் மட்டும் வரும், எங்கிருந்தோ.  அது போல, ஆள் தெரியாது, எங்கிருந்து, எப்படி வருகிறது என்று தெரியாது.  அவன் அருள் வந்து சேரும்.

மணியாய் ஒளியாய்

மணி தெரியும். அதன் உள்ளே ஆடும் அதன் நா தெரியும். அது ஆடுவது தெரியும். ஒலி தெரியுமா?  காதில் வந்து விழும்.  ஒரு வார்த்தை. ஒரு சொல். ஒரு வாக்கியம் ,

"காதற்ற ஊசியும் வாராது காண் நும் கடை வழிக்கே"

என்று ஒரு வாக்கியம், பட்டினத்தாரை மாற்றிப் போட்டது.

அந்த வாக்கியம் தான் அவருக்கு குரு.

அந்த வாக்கியம் நமக்கு கிடைத்து இருந்தால், "சரி, வராட்டி போகட்டும், அதனால் என்ன" என்று ஓலையை தூக்கி குப்பையில் போட்டு விட்டு வேலையை பார்க்க போய் விடுவோம்.   பட்டினத்தாரின் மனம் பக்குவப் பட்டிருந்தது. ஒரு வாக்கியம், அருள் செய்தது.

"அருள்வாய் குகனே"

அது அருள்தான்.  காசு கொடுத்து வாங்க முடியாது. வண்டி வண்டியாக புத்தகங்களை படித்து  அறிய முடியாது. அந்த அருள், grace, வர வேண்டும்.

அவனே அருள்வான்.

ஞான சம்பந்தருக்கு மூன்று வயதில் வந்தான்.

திருநாவுக்கரசருக்கு 80 வயதில் வந்து அருள் தந்தான்.

என்ன சொல்லுவது?

யார் குரு என்று எப்படி அறிவது?

ஆதி சங்கரருக்கு புலையனாக வந்தான்.

சங்கரர் அறிந்தார் இல்லை.

அவர் பாடு அப்படி என்றால், நாம் எம்மாத்திரம்?

மாணிக்க வாசகருக்கு அருள் புரிய வந்தான், மணிவாசகர் அறிந்தார் இல்லை. விட்டு விட்டார்.

அவன் உருவாய், அருவாய், உளதாய், இலதாய் , மருவாய், மலராய், மணியாய், ஒளியாய் எப்படி வேண்டுமானாலும் வருவான்.

அவன் வந்தால்தான் உண்டு. நாம் போய் கண்டு பிடிக்க முடியாது.

மனம் பக்குவப் பட வேண்டும்.

நீங்கள் தேடிப் பிடித்த எந்த குருவும் உங்கள் உண்மையான குரு அல்ல என்று தெரிகிறது அல்லவா? அவர் வேண்டுமானால் வழி காட்டலாம், அவர் ஒரு படியாக இருந்து உதவி செய்யலாம்....உண்மையான குரு, அவர் உங்களைத் தேடி வருவார்.

இப்படி எத்தனை பாடல்களை, "இதில் என்ன இருக்குறது" என்று அறியாமல் தள்ளி விட்டு வந்தேனோ?


https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_20.html

Tuesday, May 19, 2020

திருக்குறள் - என்ன இருந்தாலும் இல்லை

திருக்குறள் - என்ன இருந்தாலும் இல்லை 


ஒரு ஊரில் ஒரு பெரிய  பணக்காரன் இருந்தான். ஏகப்பட்ட சொத்து. நிலம், பெரிய வீடு, கார், ஆள், அம்பு, சேனை..எல்லாம்.

வருடா வருடம் மூட்டைக் கணக்கில் நெல் வந்து சேர்ந்து விடும்.

பின்னாடி தோட்டத்தில் பத்து பதினைந்து பசு மாடுகள். பாலும், நெய்யும் வீடெங்கும் நிறைந்து கிடக்கிறது.

இலவம் பஞ்சில் செய்த மெத்தை.

மருத்துவர் சொல்லி விட்டார், கேழ்வரகும், கம்பும் தான் சாப்பிட வேண்டும். அரிசி சோறு வாயில் போட்டால் சர்க்கரை கூடி விடும், காலை எடுக்க வேண்டி வரும் என்று.

அவருக்கு பக்கத்து வீட்டில் ஒரு பரம ஏழை. அரிசி வாங்கக் கூட வசதி இல்லை.  எப்போதாவது அரிசி சோறு இருக்கும் வீட்டில்.

செல்வந்தன் வீட்டில் எல்லாம் இருக்கிறது, ஆனால் அரிசிச் சோறு சாப்பிட முடியாது.

வறியவன் வீட்டில், பணம் இல்லை. அரிசிச் சோறு சாப்பிட முடியாது.

இரண்டு பேரும் அரிசிச் சோறு சாப்பிட முடியாது.

வள்ளுவர் சொல்கிறார், செல்வந்தனிடம் இருந்தும் அது இல்லை மாதிரித்தான் என்று.

ஒரு பொருள் நம்மிடம் இருக்கிறது என்றால், அதனால் நமக்கு  ஒரு பயன் இருக்க வேண்டும். இல்லை என்றால், அது இருந்தும் இல்லாத மாதிரிதானே.

பயனில்லாத ஒன்று இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? எல்லாம் ஒன்றுதானே.

அது போல, ஒருவனுக்கு என்னதான் செல்வம், செல்வாக்கு எல்லாம் இருந்தாலும்,  அவன் மனைவி நல்லவளாக இல்லாவிட்டால், அவன் ஒன்றும் இல்லாதவனுக்கு சமம் என்கிறார்.

பாடல்


மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினு மில்

பொருள்

மனைமாட்சி = இல்லறத்துக்கு வேண்டிய நற்குணங்கள், நற் செய்கைகள்

இல்லாள்கண் = மனைவியிடம்

இல்லாயின் = இல்லாவிட்டால்

வாழ்க்கை = வாழ்க்கையில்

எனை = எவ்வளவு

மாட்சித்  தாயினு மில் = பெருமை இருந்தாலும் அது அவை இல்லாத மாதிரிதான்

வீட்டில் நிறைய செல்வம் இருக்கிறது. கணவனின் நண்பர்களோ, உறவினர்களோ வருகிறார்கள்.  இவள் முகத்தைக் தூக்கி வைத்துக் கொண்டால், அந்தக் கணவன் தன்னிடம் உள்ள அத்தனை செல்வத்தாலும், வந்த உறவினரை  மகிழ வைக்க முடியாது. அந்த செல்வத்தால் ஒரு பயனும் இல்லை.   அது இருந்தாலும் இல்லாத மாதிரிதான்.

இன்னொரு உதாரணம்

கணவனுக்கு மாதம் பத்தாயிரம் சம்பளம் என்று வைத்துக் கொள்வோம்.

மனைவி பன்னிரண்டாயிரம் செலவு செய்பவள் என்றால், அவன் சம்பாதித்தது ஒன்றும் இல்லைதானே.   வந்தது போக, கடனில் இருப்பான்.

எவ்வளவு படித்தாலும், எவ்வளவு வேலை செய்தாலும், எவ்வளவு சம்பாதித்தாலும்,  எவ்வளவு சொத்து சேர்த்தாலும், மனைவி சரி இல்லை என்றால்,  என்ன இருந்தும் ஒரு பயனும் இல்லை. என்கிறார்.

மாறாக, கொஞ்சம் பணம் இருக்கிறது. கணவனின் உறவினரோ, நணப்ர்களோ வருகிறார்கள்,  அவனின் மனைவி அவர்களை சிரித்த முகத்தோடு வரவேற்று, அவர்களுக்கு வேண்டியதைச் செய்தால் கணவன் எவ்வளவு மகிழ்வான். கோடி பணம் இருந்தாலும், அந்த சந்தோஷம் வராது.

எல்லாம் அவள் கையில் இருக்கிறது.



https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_19.html

Sunday, May 17, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அச்சுவை பெறினும் வேண்டேன்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அச்சுவை பெறினும் வேண்டேன் 


நாக்கில் நல்ல உணவு பட்டால் அதன் சுவை தெரியும். நாம் அதை அனுபவிக்கலாம்.

நாவினால் ஒரு பெயரைச் சொன்னால் அது சுவை தருமா?

தரும் என்கிறார் தொண்டரடிப் பொடி ஆழ்வார்.

ஸ்ரீராம நீ நாம ஏமி ருச்சிரா...ஓ ராமா நீ நாமம் என்தோ ருச்சிரா...என்பார் பத்ராச்சல இராமதாஸர்.

அந்தப் பாடலை திரு. பாலமுரளி கிருஷ்ணா பாடிய ஒலிப்பதிவை இங்கே கேட்டுப் பாருங்கள் .

https://www.youtube.com/watch?v=DCyshbQUgAE


இராம உன் நாமம் எப்படி இவ்வளவு சுவையாக இருக்கிறது, என்ன ஒரு சுவை என்று ரசிக்கிறார்.


தொண்டரடிப் பொடி ஆழ்வார் சொல்கிறார்,

"பச்சைமா மலைபோல்மேனி"

"பவளவாய் கமலச் செங்கண்"

"அச்சுதா"

"அமர ரேறே"

"ஆயர்தம் கொழுந்தே"

அப்படினு சொல்லிகிட்டே இருந்தால், அந்த சுவையே போதும். அதை விட்டு விட்டு,  பரமபதம் கிடைத்தாலும் வேண்டாம் என்கிறார்.

பாடல்

பச்சைமா மலைபோல்மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே.

பொருள்

பச்சை = பச்சை நிறம் கொண்ட

மா = பெரிய

மலைபோல் = மலையை போன்ற

மேனி = உடல்

பவளவாய் = பவளம் போல் சிவந்த உதடுகள்

கமலச் செங்கண் = தாமரை போல் சிவந்த கண்கள்

அச்சுதா = அச்சுதன் என்றால் தன்னை பற்றியவர்களை கை விடாதவன் என்று அர்த்தம்

அமர ரேறே = தேவர்களில் எருது போன்று வலிமையானவனே

ஆயர்தம் கொழுந்தே = ஆயர்களின் கொழுந்தே

என்னும் = என்று சொல்லும்

இச்சுவை = இந்த சுவையை

தவிர = விட்டு விட்டு

யான்போய் = நான் போய்

இந்திர லோக மாளும் = இந்திர லோகத்தை ஆளும்

அச்சுவை = அந்த சுவையை

பெறினும் =  பெற்றால் கூட

வேண்டேன் = விரும்ப மாட்டேன்

அரங்கமா நகரு ளானே. = திருவரங்கம் என்ற பெரிய திருத்தலத்தில் உள்ளவனே

அது என்ன "ஆயர்தம் கொழுந்தே". ஆயர்தம் வேறே என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும்?  ஆயர் குலத்துக்கு வேர் போன்றவன் அல்லவா அவன்?  பின் கொழுந்தே என்றார்?

உரை எழுதிய பெரியவர்கள் கூறுவார்கள் "கொழுந்து வாடினால் வேர் வாடாது. ஆனால், வேர் வாடினால் கொழுந்து வாடிவிடும்...எனவே, ஆயர் குலத்தில் உள்ளவர்கள்  எல்லோரும் வேர். அவன் கொழுந்து. அந்தக் குலத்தில் யார் வாடினாலும், அவன் வாடிவிடுவான்" என்று.

வியாக்கியானம் எழுதுவதில் வைணவ உரை ஆசிரியர்களை மிஞ்ச ஆள் இல்லை.

கோவிலுக்கு சென்று வழிபாடு செய்கிறோம். இறைவன் அங்கே இருக்கிறான் என்று யாராவது நம்புகிறார்களா? இறைவன் எங்கோ இருக்கிறான்...கைலாயத்தில், பாற்கடலில் எங்கோ இருக்கிறான். இங்கே எங்கே இருக்கிறான் என்பது தான் அவர்கள் நம்பிக்கை. இறந்த பின், அங்கே போகலாம் என்பது எதிர்பார்ப்பு.

ஆனால், ஆழ்வார் சொல்கிறார், அதெல்லாம் இல்லை. அந்த பரந்தாமன் இங்கேதான் இருக்கிறான். அவனைத் தேடி இந்திரன் முதலான தேவர்கள் இங்கே வந்து விட்டார்கள். நான் அங்கு போய் என்ன செய்யப் போகிறேன்? எனவே, அந்த வெறுமையான உலகை ஆளும் பதவி தந்தாலும் வேண்டேன்,  இங்கேயே இருக்கிறேன் என்கிறார்.

இறந்த பிறகு இல்லை, இப்போதே, இங்கேயே காணலாம். இது தான் வைகுண்டம், இதுதான் கைலாயம். அங்கே போக வேண்டிய அவசியமே இல்லை.

இப்பவே அனுபவிக்கலாம்.

யோசித்துப் பாருங்கள். அடுத்த முறை கோவிலுக்குப் போகும் போது , நீங்கள் வணங்கும் இறைவன் அங்கே இருக்கிறான் என்றால் எப்படி இருக்கும் என்று....

தொண்டரடிப் பொடி ஆழ்வார் கண்டார்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_17.html

Saturday, May 16, 2020

திருக்குறள் - பெண் பார்க்கும் படலம்

திருக்குறள் - பெண் பார்க்கும் படலம் 


திருமணத்துக்கு என்று ஒரு பெண்ணை தேர்ந்து எடுப்பது என்றால் எப்படி தேர்ந்து எடுப்பது?

அழகு, கல்வி, செல்வம், உயரம், நிறம், எடை, இதெல்லாம் தேவை இல்லை என்று சொல்லிவிட்டார் வள்ளுவர்.

போன பிளாகில் வளத்தக்காள் என்றால் என்ன என்று பார்த்தோம்.

வரவுக்கு ஏற்ப செலவு செய்வது.

சரி, அது மட்டும் போதுமா?

"மனைத்தக்க மாண்புடையள் ஆகி" என்று சொல்கிறார். அது என்ன?

சிலருக்கு நல்ல குணம்  இருக்கும். ஆனால், சில செயல் நன்றாக இருக்காது.

வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணுக்கு நல்ல சாப்பாடு தருவாள், நல்ல துணிமணி தருவாள் ஆனால் ஒவ்வொரு நாளும் அவளை ஏதாவது குற்றம் கண்டு பிடித்து திட்டிக் கொண்டே இருப்பாள்.

உதவுகின்ற குணம் இருக்கிறது.  மட்டு மரியாதை இல்லாமல் திட்டும் கெட்ட செயல் இருக்கிறது.

நல்ல குணமும், நல்ல செயலும் சேர்ந்ததைத் தான் "மனைத்தக்க மாண்பு என்கிறார் வள்ளுவர்.


மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை


சரி, அது என்ன நல்ல குணம், நல்ல செயல் ?

பரிமேல் அழகர் உரை எழுதுகிறார் ...

"நற்குணங்களாவன : துறந்தார்ப் பேணலும், விருந்து அயர்தலும், வறியார்மாட்டு அருளுடைமையும் முதலாயின.

நற்செய்கைகளாவன: வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்கள் அறிந்து கடைப்பிடித்தலும், அட்டில் தொழில் வன்மையும், ஒப்புரவு செய்தலும் முதலாயின"

துறந்தார் பேணல் என்றால், துறவிகளை போற்றுதல், பாதுகாத்தல்

விருந்து அயர்தல்  என்றால் விருந்தை வரவேற்று, உபசாரம் செய்தால்.

ஏழைகள் மேல் அன்பு.

முதலாயின என்று சொல்லும் போது, அது போன்ற குணங்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதாவது, தேவைப்படும் தனி மனிதர்களுக்கு உதவுதல். பெண்ணிடம் அந்த அருள், அன்பு இருக்க வேண்டும்.

பிச்சைக்காரன் வந்தால், போ போ என்று விரட்டி அடிக்கும் பெண்ணிடம் அந்த அன்பு இல்லை என்று அர்த்தம்.

அவை நல்ல குணங்கள்.

நல்ல செயல்கள் என்றால் என்ன ?

முதலாவது, வாழ்க்கைக்கு வேண்டிய பொருள் அறிந்து கடை பிடித்தல்.

கடை பிடித்தல் என்றால் கடைசிவரை பிடித்துக் கொள்ளுதல். எது வாழ்கைக்குத் தேவையோ, அதை கடைசிவரை பிடித்துக் கொள்ளுதல்.

"நான் வியாழக்கிழமை மாமிசம் சாப்பிட மாட்டேன்"

"வெள்ளிக் கிழமை பொய் சொல்ல மாட்டேன்"

"புதன் கிழமை தண்ணி அடிக்க மாட்டேன்"

இதெல்லாம் , கடைசிவரை கை கொள்ளுதல் அல்ல. பெண்கள், ஒன்றைப் பிடித்தால், கடைசிவரை அதை விட மாட்டார்கள்.

மனைவி எவ்வளவு அழகாக, அறிவாக இருந்தாலும், ஆணின் மனம் மற்றொரு பெண்ணின்  மேல் போவது பற்றி நாம் அறிந்து இருக்கிறோம்.

கணவன் எவ்வளவு மோசமானவாக இருந்தாலும், அவனை அவன் மனைவி விட்டு விடுவதில்லை என்றும் பார்க்கிறோம் .

விரதம், ஆசாரம், பக்தி, அன்பு, என்று பெண்கள் ஒன்றை நினைத்து விட்டால், அதை விடாப்பிடியாக பிடித்துக் கொள்வார்கள். அதில் இருந்து எளிதில் மாறமாட்டார்கள். ஆண்கள், எளிதில் மாறி விடுவார்கள்.

இரண்டாவது, அட்டில் தொழில் வன்மை. அட்டில் என்றால் சமையல். சமையல் செய்வதில் திறமை இருக்க வேண்டும். சமையல் செய்தால் போதாது. அதில் திறமை இருக்க வேண்டும்.

ருசி, இருப்பதைக் கொண்டு நல்ல உணவு தயாரித்தல், திடீரென்று உறவினர்களோ, நண்பர்களோ வந்து   விட்டால் சட்டென்று ஏதோ ஒரு நல்ல உணவை தயார் செய்து தருவது  போன்றவை.

கடையில் வாங்கித் தர மனைவி வேண்டுமா?

மனைவி கையின் மணம் , பக்குவம் சாப்பாட்டில் தெரிய வேண்டும்.

மூன்றாவது, ஒப்புரவு.

ஒப்புரவு என்றால் சமுதாயத்துக்கு செய்யும்  நன்மை. தனி மனிதனுக்கு செய்யும் நன்மைகளுக்கு  ஈகை என்று பெயர். சமுதாயத்துக்கு செய்யும் நன்மைகளுக்கு ஒப்புரவு என்று பெயர்.

அது என்ன ஒப்புரவு?

ஊரில் ஒரு விஷேஷம், கோவில் திருவிழா, குடியிருக்கும் அபார்ட்மெண்டில் ஏதோ ஒரு  கொண்டாட்டம், என்றால் அதற்கு தன்னால் ஆன உதவிகளை செய்வது. நமக்கும் அதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்று இருக்கக் கூடாது.

நல்ல குணம், நல்ல செயல், வரவு அறிந்து செலவழிக்கும் பெண் நல்ல வாழ்க்கைத் துணை.

மற்றது?

https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_16.html

Thursday, May 14, 2020

திருக்குறள் - வளத்தக்காள்

திருக்குறள் - வளத்தக்காள் 


குடும்பத்தில், குறிப்பாக கணவன் மனைவி உறவில் விரிசல் விழ காரணம் என்ன?

பல காரணங்கள் இருந்தாலும், பெரும்பாலான நேரங்களில் பொருளாதாரம் தான் காரணமாக இருக்கும்.

மனைவிக்கு பல ஆசைகள் இருக்கும்.

- இருக்க ஒரு நல்ல வீடு வேண்டாமா? இப்படி ஒரு சின்ன புறா கூண்டில் இருந்து கொண்டு மூச்சு முட்டுது

- எப்பப் பாரு, ஒரே நகை. எந்த விழாவுக்கு போனாலும் திருப்பி திருப்பி ஒரே நகையை போட்டுக் கொண்டு போக வேண்டி இருக்கிறது.

- மிஞ்சி மிஞ்சி போனா ஒரு சினிமா, ஒரு ஹோட்டல்...அவ்வளவு தான். எத்தனை அயல் நாடுகள் இருக்கு. அங்கெல்லாம் என்ன மாதிரி இருக்கு. வருஷம் ஒரு தரம் இல்லாட்டியும், ரெண்டு அல்லது மூணு வருஷத்துக்கு ஒரு தடவையாவது அங்கெல்லாம் போய் பாக்க வழி இல்லை.

- பெரிய, விலை உயர்ந்த கார் வேண்டாம்...அதுக்காக எத்தனை நாள் தான் இந்த இரண்டு சக்க வண்டியிலேயே போறது

- பிள்ளைகளை அயல் நாட்டுக்கு அனுப்பி படிக்க வைக்கவிட்டாலும் பரவாயில்லை, உள்ளூரில் ஒரு நல்ல காலேஜில் படிக்க வைக்கலாம்ல

என்று மனைவிக்கு ஆயிரம் ஆசை இருக்கும்.

கணவன்மார்களும் இதில் சளைத்தவர்கள் அல்ல....

பெரிய வீடு, பெரிய கார், குடும்பத்தோட அயல் நாடு சுற்றுலா, என்று அவர்களுக்கும்  ஆசை இருக்கும்.

வசதி வேண்டாமா?

மனைவி ஆராய்ச்சி செய்ய வேண்டும். எது முடியும் , எது முடியாது என்று.

முடியாத ஒன்றை விட்டு விட்டு, முடிந்ததில் மகிழ்ச்சியாக இருக்க பழக வேண்டும்.

முடியாதுனா பரவாயில்லை என்று முகத்தை மூணு முழத்துக்கு நீட்டி வைத்துக் கொண்டு இருக்கக் கூடாது.

கணவன் சொன்னால் கூட, "அதெல்லாம் வேண்டாங்க....நம்ம லெவலுக்கு அது ரொம்ப  அகலக் கால்...அதை விட குறைவான ஒன்றைப் பார்ப்போம் " என்று சொல்ல  வேண்டும்.  "கடன உடன வாங்கிகிட்டு, வாங்குற சம்பளத்துல பாதி வட்டி கட்டியே ஓஞ்சு போவோம்...வேண்டாம், நமக்கு அது சரிப்படாது" என்று   எடுத்துச் சொல்ல வேண்டும்.

கணவனை உசுப்பேத்தி விட்டு, இராவா பகலா உழைக்க விட்டு, கடனை வாங்கி, வட்டி கட்டி, எல்லோரையும் சங்கடத்தில் ஆழ்த்தக் கூடாது.

வள்ளுவர் காட்டும் மனைவியின் தகுதிகளில் ஒன்று "கணவனின் வரவு அறிந்து செலவு செய்தல்"

பாடல்

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை

பொருள் 


"வளத்தக்காள்" - கணவனின் வளமை அறிந்து செலவு செய்பவள். வரவுக்கு மீறிய செலவை தானும் செய்யக் கூடாது, கணவனையும் செய்ய விடக் கூடாது. 


3 பெட் ரூம் ரொம்ப விலை. நமக்கு கட்டுப்படி ஆகாது. பின்னால் வசதி வந்தால் பார்த்துக் கொள்ளலாம். இப்போதைக்கு 2 பெட் ரூம் வீடே போதும் என்று சொல்ல வேண்டும். 

செலவு கட்டுக்குள் இருந்தால், வீட்டில் பாதி சிக்கல் இருக்காது. 

கையில் பணம் மிச்சம் இருக்கும். வாழ்வில் ஒரு தைரியம் இருக்கும். 

மாறாக, சொத்துக்கு மேல் கடன் இருந்தால், வாழ்வில் பற்று இருக்காது. பயம் தான் இருக்கும். 

இப்படி இன்னும் கொஞ்சம் சொல்லி இருக்கார். 

நமக்கு இதெல்லாம் சரிப்படாது இல்ல? வள்ளுவர் அந்தக் காலத்து ஆளு. அவருக்கு என்ன தெரியும்? பாவம். 

https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_70.html


தேவாரம் - குரங்கு கை பூமாலை

தேவாரம் - குரங்கு கை பூமாலை 


பள்ளிக் கூடத்தில் முதலாவது வகுப்பில் படித்த பாடம்.

ஒரு ஊரில் ஒரு தொப்பி வியாபாரி இருந்தான். அவன் ஊர் ஊராக சென்று தொப்பி விற்று வந்தான். அப்படி செல்லும் வழியில், ஒரு நாள் அவனுக்கு மிகுந்த களைப்பாக இருக்கவே, ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து சற்று இளைப்பாறினான்.

நடந்த களைப்பு, மர நிழல், சுகமான காற்று..அப்படியே கண் அயர்ந்து தூங்கி விட்டான்.

சற்று நேரம் கழித்து விழித்துப் பார்த்தால், கூடையில் ஒரு தொப்பி கூட இல்லை. எங்கடா போச்சு என்று சுத்தி முத்தி பார்த்தான். ஒன்றும் புலப்படவில்லை.

அப்போது மரத்தின் மேல் ஏதோ சப்த்தம் கேட்கவே அண்ணாந்து பார்த்தான்.

பார்த்தால், மரத்தில் பல குரங்குகள், இவனுடைய தொப்பியை தலையில் வைத்து விளையாடிக் கொண்டு இருந்தன.

அந்த குரங்குகளிடம் இருந்து தொப்பியை எப்படி வாங்குவதும் என்று சிந்தித்த அந்த வியாபாரி, தன் தலையில் இருந்த தொப்பியை தூக்கி தரையில் எறிந்தான். அவன் செய்வதைப் பார்த்த குரங்குகள், தங்கள் தலையில் இருந்த தொப்பியை கழற்றி தரையில் எறிந்தன. வியாபாரி எல்லா தொப்பியையும் எடுத்துக் கொண்டு இடத்தை காலி பண்ணினான்.

குரங்கு புத்தி.  பார்த்ததை அப்படியே செய்யும்.

திருமுதுகுன்றம் என்ற இடத்துக்கு திருஞானசம்பந்தர் போகிறார்.

அந்த ஊரில் உள்ள கோவிலில், அர்ச்சகர் சென்று நடையை திறப்பதற்கு முன், சாமிக்கு பூவால் அர்ச்சனை செய்த மாதிரி அவர் மேல் ஒரே பூ.

அங்கு வரும் பக்தர்கள்  பூ போட்டு வணங்குவதை கண்ட அந்த ஊர் குரங்குகள், எல்லோரும் போன பின், ஸ்வாமி மேல் உள்ள மாலையை எடுத்து, அதில் உள்ள பூக்களை பிய்த்து, ஸ்வாமி மேல போட்டன. பக்தி எல்லாம் இல்லை. சும்மா, எல்லோரும் போடுகிறார்களே என்று அவையும் போட்டன.

இராத்திரி எல்லாம் இதுதான் வேலை. மரத்தில் உள்ள பூவை எல்லாம் பறித்து, சுவாமி மேல போட வேண்டியது...அது ஒரு விளையாட்டு .....

பாடல்


எந்தை இவன் என்று இரவி முதலா  இறைஞ்சுவார் 
சித்தை யுள்ளே  கோயிலாகத் திகழ்வானே 
மந்தி ஏறி இனமா  மலர்கள் பல கொண்டு 
முந்தித்  தொழுது வணங்கும் கோயில் முதுகுன்றே.

பொருள்


எந்தை = என்னுடைய தந்தை

இவன் என்று  = இவன் என்று

இரவி = சூரியன்

முதலா = முதலான தேவர்கள்

இறைஞ்சுவார்  = வணங்குவர்

சித்தை யுள்ளே = அவர்களின் சிந்தையில் உள்ள அவன்

 கோயிலாகத் திகழ்வானே  = இங்கு கோவில் கொண்டு திகழ்கிறான்

மந்தி ஏறி = குரங்குகள் ஏறி

இனமா  மலர்கள் பல கொண்டு  = ஒத்த மலர்கள் பலவற்றைக் கொண்டு

முந்தித் = முன்னாடியே

தொழுது வணங்கும் = தொழுது வணங்கும்

கோயில் முதுகுன்றே. = முதுகுன்றில் உள்ள கோவில்.

நாமும் குரங்கில் இருந்து வந்தவர்கள்தானே.

அந்த குரங்கின் புத்தி நமக்கும் இருக்கும் தானே?

நல்லவர்களோடு சேர்ந்தால், அவர்கள் செய்வதை நாமும் செய்யத் தலைப்படுவோம்.

மற்றவர்களோடு சேர்ந்தாலும் அப்படியே.

நமது மூளையில் mirror neuron என்று ஒன்று உண்டு. மற்றவர்கள் செய்வதை நம்மை அறியாமலேயே  நாம் செய்வோம்.

சிறு குழந்தை, ஒருவாரம், இரண்டு வாரம் ஆன குழந்தை முன்னால் நாம் சென்று   சிரித்தால், அதுவும் சிரிக்கும். நாம் அழுவது போல பாவனை செய்தால், அதுவும் அழும்.

காரணம் தெரியாது.

சினிமா, டிவி பார்க்கும் போது, நம்மை அறியாமலேயே நாம் அழுவோம், சிரிப்போம், நம் தசைகள் முறுக்கு ஏறும், தளரும்...காரணம் அங்கே திரையில் நடப்பதைப் பார்த்து  நம் mirror neurons அப்படியே இங்கே செய்யும்.

நேரம் இருந்தால், இது பற்றி google செய்து பார்க்கவும். சுவாரசியமான ஒன்று.

பாடலுக்கு வருவோம்.

நாம் யாரோடு சேர்கிறோமா, அவர்கள் செய்வதை, அவர்கள் பேசுவதை போலவே நாமும் பேசத் தலைப்படுவோம்.

யாருடன் பழகுகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள்.

நான் யாரோட பழகினாலும், நான் உறுதியாக இருப்பேன் என்று சொல்லாதீர்கள். இவை நிகழ்வது உங்கள் செயல்பாட்டில் இல்லை. உங்களையும் அறியாமல் அவர்கள் வழியில் சென்று விடுவீர்கள்.

அடியார்  கூட்டம் அடியார் கூட்டம் என்று மீண்டும் மீண்டும் சொல்லக் காரணம், ஒரு காலத்தில் அடியார்கள் நல்லவர்களாக இருந்தார்கள்.

அதை விட்டு விடுவோம்.

நல்லவர்களை தேர்ந்து எடுத்து, அவர்களோடு பழகுங்கள்.

மற்றவர்கள் சகவாசத்தை விடுங்கள்.

இரவி முதலாய தேவர்களுக்கு முன்னே சென்று குரங்குகள் வழிபட்டன. குரங்குகளே அவ்வாறு  நல்ல காரியம் செய்ய முடியும் என்றால், நம்மால் எவ்வளவு செய்ய முடியும்.

செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_54.html