Thursday, August 12, 2021

கம்ப இராமாயாணம் - வலியார் வலியே

 கம்ப இராமாயாணம் - வலியார் வலியே 


அசோகவனத்தில் சீதை சிறை இருக்கிறாள். அனுமன் அவளை அடையாளம் கண்டு கொள்கிறான். மறைந்து இருந்து அவள் செய்வதை/பேசுவதை கேட்கிறான். 


சீதை புலம்புகிறாள். 


"கரிய மேகம், பெரிய கடல், காடு போன்ற கரிய இராமன் என் உயிரை திருப்பித் தருவானா? பேரிடி போல் கேட்கும் அவன் வில்லின் நாண் ஒலி தான் நான் கேட்பேனா? இராம இலக்குவனர்களிடம் உள்ள வலிமையே, நீ சொல்வாய்" 


என்கிறாள் 


பாடல் 


கரு மேகம்,நெடுங் கடல், கா அனையான்

தருமே, தனியேன்எனது ஆர் உயிர்தான் ?

உரும்ஏறு உறழ்வெஞ் சிலை நாண் ஒலிதான்

வருமே ? உரையாய், வலியார் வலியே !


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_12.html


(Please click the above link to continue reading)


கரு மேகம் = கரிய மேகம் 


நெடுங் கடல் = நீண்ட பெரிய கடல் 


கா  = அடர்ந்த காடு 


அனையான் = போன்றவன் 


தருமே = தருவானா 


தனியேன் எனது = தனியாக இருக்கும் எனது 


ஆர் உயிர்தான் ? = அருமையான உயிரைத்தான் 


உரும்ஏறு உறழ் = பேரிடி போல சப்தம் செய்யும் 


வெஞ் சிலை = கொடிய வில்லின் 


 நாண் ஒலிதான் = நாண் ஒலி தான் 


வருமே ? = இங்கே இலங்கைக்கு வருமா ? 


உரையாய் = நீ சொல்வாய் 


வலியார் = வலிமை பொருந்திய இராம, இலக்குவர்கள் 


வலியே ! = இடம் உள்ள வலிமையே 



இராமன் வந்து தன்னை சிறை மீட்டிச் செல்வான் என்ற நம்பிக்கையில் இருக்கிறாள். அவன் வருவானா, எப்போது வருவான் என்று ஏங்குகிறாள். 


சோகத்தில், துன்பத்தில் தான் மனதின் அடியில் உள்ள உணர்சிகள் மேலே வருகின்றன. 


மேலும் என்னென்ன சொல்கிறாள் என்று பார்ப்போம். 



Tuesday, August 10, 2021

திருக்குறள் - இல்லதும், உள்ளதும்

 

திருக்குறள் - இல்லதும், உள்ளதும் 



முந்தைய குறளில் ஒருவனுக்கு மனைவி சரியாக அமையாவிட்டால் அவனிடம் என்ன இருந்தும், அவன் ஒன்றும் இல்லாதவனாகவே கருதப்படுவான் என்று பார்த்தோம்.  


மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை

எனைமாட்சித் தாயினு மில்


இதன் பொருளையும் விளக்கத்தையும் இறுதியில் உள்ள உள்ள இணைய தளத்தில் காணலாம். 






இனி அடுத்த குறளுக்குப் போவோம். 


மனைவி நல்லவளாக அமையாவிட்டால் என்ன இருந்தும் அது ஒன்றும் இல்லாதது போலத்தான் என்று கூறி விட்டார். 


சரி, அவள் நல்லவளாக அமைந்து விட்டால்? 


நல்லவளாக அமைந்து விட்டால் அவளுடைய கணவனுக்கு இந்த உலகில் அதை விட வேறு என்ன செல்வம் இருக்க முடியும் என்று கேட்கிறார். 


அதாவது, அவள்தான் அனைத்து சிறப்புக்கும் காரணம். அவன் பெருமை, புகழ், மானம், செல்வம் அனைத்தும் அவள்  கையில் தான் உள்ளது என்கிறார். 


கணவன் என்னதான் படித்து, உழைத்து உயர்ந்தாலும், மனைவி சரி இல்லை என்றால் அதனால் ஒரு பயனும் இல்லை. 


கணவன் படிக்கவில்லை, பெரும் பொருள் சேர்க்கவில்லை, புகழ் இல்லை என்றாலும், அவனுக்கு ஒரு நல்ல மனைவி வாய்த்து விட்டால் அவனிடம் இல்லாதது ஒன்றும் இல்லை. எல்லாம் அவனுக்கு வாய்த்தது போல என்கிறார். 

பாடல் 


இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்

இல்லவள் மாணாக் கடை


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_10.html


(please click the above link to continue reading)



இல்லதென் = இல்லது என்? என்ன இல்லை? 


இல்லவள் மாண்பானால் = இல்லவள் (மனைவி) மாண்பு உடையவள் ஆனால் (நற்குண நற்செய்கைகள் உள்ளவள் ஆனால்) 


உள்ளதென் = உள்ளது என்? என்ன இருக்கிறது? 


இல்லவள் = மனைவி 


மாணாக் கடை = மாண்பு இல்லாதவள் ஆன போது 


இல்லது என், உள்ளது என் என்று இரண்டு கேள்விகள் கேட்கிறார். 


மனைவி மாண்பு உடைவள் ஆனால் இல்லாது ஒன்றும் இல்லை. 


மாண்பு இல்லாதவள் ஆனால் உள்ளது ஒன்றும் இல்லை. 


உடனே, நம்ம உள்ளூர் கொடி பிடிக்கும் கும்பல் ஒன்று "பார்த்தீர்களா...நாங்க தான் எல்லாம்...நீங்க ஒன்றும் இல்லை" என்று கோஷம் போடத் தொடங்கி விடும். 


வள்ளுவர் எல்லா மனைவிகளையும் சொல்லவில்லை. 


நற்குண, நற்செய்கைகள் உள்ள பெண்களை மட்டும் தான் சொல்கிறார். 


மாண்பு என்ற சொல்லை குறித்துக் கொள்ள வேண்டும். 


சமைத்து போடுவது, துணி துவைப்பது,  வீட்டை சுத்தம் செய்வது மட்டும் மாண்பு என்ற பட்டியலில் இல்லை. 


நற்குண நற்செய்கைகள் என்னென்ன என்று முந்தைய ப்ளாகில் படித்து அறிந்து கொள்க. 


மாண்புடைய மனைவியை பற்றி மட்டும் தான் சொல்கிறார். 


கொடி பிடிக்கும் முன் அதை சிந்திக்க வேண்டும்.  


ஊருக்கே நன்மை செய்யும் மனைவிகளைப் பற்றிக் கூறுகிறார். தனிக் குடித்தனம் போக நினைக்கும் பெண்களைப் பற்றி அல்ல. 


பெண்ணின் பெருமையை உயர்த்திப் பிடிக்கும் வள்ளுவர், அதற்கான தகுதி பற்றியும் கூறுகிறார்.


முந்தைய ப்ளாகின் முகவரி 



https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_8.html

Monday, August 9, 2021

கம்ப இராமாயணம் - குறையாத அன்பு

 கம்ப இராமாயணம் -  குறையாத அன்பு 


எனக்கு சில சமயம் தோன்றும், இராமயணத்தை பேர் மாற்றி சீதாயணம் என்று வைத்து இருக்கலாம் என்று. 


யோசித்துப் பார்ப்போம். 


கணவன் அலுவலகத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வருகிறேன் என்று சொல்கிறான். ஆனால், வீடு வந்து சேரும் போது நேரம் தாழ்ந்து விடுகிறது. எத்தனை மனைவிகள் அதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்வார்கள்? 


மனைவியின் பிறந்த நாளை மறந்து விடுகிறான்...


எங்கோ அழைத்துப் போகிறேன் அல்லது வாங்கித் தருகிறேன் என்று சொல்லிவிட்டு அதைச் செய்யாமல் எவ்வளவு கோபமும் வருத்தமும் வரும் அவன் மனைவிக்கு. 


அப்படியே சீதையை பார்ப்போம். பெரிய சக்ரவர்த்தியின் மூத்த மகன், பெரிய பலசாலி (வில்லை ஒடித்தவன்), அவனை திருமணம் செய்து கொள்கிறாள். அவள் மனதில் என்னவெல்லாம் ஆசைகள் இருந்திருக்கும்? 


ஆனால், கிடைத்தது என்ன? வன வாசம். அங்கேயும் கணவனோடு இருக்க முடியவில்லை. இராவணன் வந்து தூக்கிக் கொண்டு போய் விட்டான். 


இன்றைய பெண்களை (பெரும்பாலனா) நினைத்துப் பார்ப்போம். "நீங்க வேணும்னா காட்டுக்குப் போயிட்டு வாங்க, நான் என் அப்பா வீட்டுக்குப் போகிறேன். திரும்பி வந்து என்னைக் கூட்டிக் கொண்டு போங்கள் " என்று பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி இருப்பார்கள். "உங்க தலை எழுத்து காட்டுல போய் அவதிப் படணுமுன்னு எழுதி இருக்கு ..." என்று அங்கலாய்த்துக் கொண்டு போய் விடுவார்கள். 


சீதை ஒரு இடத்தில் கூட இராமனையோ, மாமியார் மாமனரையோ குறை சொல்லவில்லை. 


அசோக வனத்தில் சிறை இருக்கிறாள். அனுமன் வருகிறான். சீதையை கண்டு கொள்கிறான். சீதை அவனைப் பார்க்கவில்லை. அனுமன் ஒரு மந்திரத்தின் மூலம் அங்கே காவலுக்கு இருந்த அரக்கிகளை உறங்கப் பண்ணி விடுகிறான். 


அப்போது சீதை தனக்குத் தானே பேசத் தொடங்குகிறாள்....


பாடல் 


துஞ்சாதாரும் துஞ்சுதல் கண்டாள் துயர் ஆற்றாள்

நெஞ்சால் ஒன்றும் உய்வழி காணாள் நெகுகின்றாள்

அஞ்சா நின்றாள் பல்நெடு நாளும் அழிவுற்றாள்

எஞ்சா அன்பால் இன்ன பகர்ந்து ஆங்கு இடர் உற்றாள்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_9.html


(please click the above link to continue reading)



துஞ்சாதாரும் = உறங்காதவர்களும் (காவல் அரக்கிகள்) 


துஞ்சுதல் கண்டாள் = தூங்குவதை பார்த்தாள் 


துயர் ஆற்றாள் = துக்கம் தாளாமல் 


நெஞ்சால் = மனதில் 


ஒன்றும் உய்வழி காணாள் = துயரில் இருந்து விடுபடும் வழி ஒன்றையும் காண 

முடியாமல் 



நெகுகின்றாள் = வருந்தினாள் 


அஞ்சா நின்றாள் = அஞ்சி நின்றாள் 


பல்நெடு நாளும் = ரொம்ப நாளாக 


அழிவுற்றாள் = துன்புற்று இருந்தாள் 


எஞ்சா அன்பால் = குறைவு படாத அன்பால் 


இன்ன பகர்ந்து = இவற்றை சொல்லி 


ஆங்கு இடர் உற்றாள். = அங்கு துன்பம் அடைந்து நின்றாள் 


இவ்வளவு துயரத்துக்கு இடையிலும், அவள் மனதில் அன்பு குறையவே இல்லை.


அன்பு மட்டும் இருந்து விட்டால், எந்த பெரிய துயரையும் தாங்கிவிடலாம் போல. 



Sunday, August 8, 2021

திருக்குறள் - என்ன இருந்தும் ஒன்றும் இல்லை

திருக்குறள் - என்ன இருந்தும் ஒன்றும் இல்லை 


வீடு என்று வந்து விட்டால், அது மனைவியின் கையில் தான் இருக்கிறது என்கிறது குறள். 


கணவன் என்னதான் படித்து, பட்டம் பெற்று, பெரிய பதவி, ஆள், அம்பு, சேனை, செல்வாக்கு, புகழ், பணம், சொத்து என்று இருந்தாலும், அவனுக்கு மனைவி சரி இல்லை என்றால், அவனுக்கு ஒன்றுமே இல்லை என்று அர்த்தம் என்கிறார். 


பாடல் 


மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை

எனைமாட்சித் தாயினு மில்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_8.html


(please click the above link to continue reading)



மனைமாட்சி = மனையறத்துக்கு தக்க நற்குண நற்செய்கைகள் 


இல்லாள்கண் = ஒரு மனைவியிடம் 


இல்லாயின் = இல்லாமல் போனால் 


வாழ்க்கை = வாழ்க்கையில் 


எனை = எந்த 


மாட்சித் = மாட்சிமை, பெருமை, புகழ், செல்வம் 


தாயினு மில் = ஆயினும், இல். இருந்தாலும், இல்லை. 



கோடி உரூபாய் சொத்து இருக்கிறது. அவரைத் தேடி நண்பர் வருகிறார். கணவன் மனவியை அழைக்கிறான், நண்பரிடம் அறிமுகப் படுத்த. அவள் வருவதாய் இல்லை. ஒரு முறை, இரண்டு முறை கூப்பிட்டுப் பார்கிறான். அவள் வர மறுக்கிறாள். அந்தக் கணவனுக்கு எப்படி இருக்கும். 


அல்லது வருகிறாள், வந்து தண்ணீர் குவளியை நங் என்று வைக்கிறாள் என்று வைத்துக் கொள்வோம்.  என்ன ஆகும்?


அவர் வெளியில் போகிறார், ஊரில் உள்ளவர்கள் "இதோ போறாரே அவர் மனைவி ஒரு மாதிரி" என்று சொன்னால் அவரால் தலை நிமிர்ந்து நடக்க முடியுமா? 


மனைவி  சரி இல்லை என்றால், என்ன இருந்தாலும், இல்லை என்று அர்த்தம் என்கிறார்.


அது எப்படி, இருந்தாலும் இல்லை என்று சொல்ல முடியும். என் பெயரில் இத்தனை கோடிக்கு வங்கியில் பணம் இருக்கிறது. என் மனைவி எப்படி இருந்தால் என்ன, அந்தப் பணம் என் பணம் தானே. அதை எப்படி வள்ளுவர் இல்லை என்று சொல்ல முடியும் என்று கேட்டால், அதற்கு பரிமேலழகர் பதில் சொல்கிறார். 


"பயன் படாமையின் இல் என்றார்" என்று.


பணம் இருக்கும், அதை வைத்து என்ன செய்வது?


ஒரு நல்ல உடை வாங்கி உடுத்திக் கொண்டு வந்தால், மனைவி "ஆமா..இது ஒண்ணு தான் குறைச்சல்" என்று ஒரு வார்த்தை சொல்லி விட்டால், அந்த உடையை உடுக்க முடியுமா? 


நல்ல உணவு மேஜை மேல் இருக்கிறது, எடுத்து ஒரு வாய் வைக்கப் போகிறான், "இதுக்குத்தான் இலாயக்கு" என்று ஒரு வார்த்தை சொல்லி விட்டால், அந்த உணவை வாயில் வைக்க முடியுமா?


உணவு இருக்கிறது, அதனால் பயன் இல்லை என்பதால் அது இருந்தும் ஒன்றுதான் இல்லாமல் இருப்பதும் ஒன்று தான் என்ற அர்த்தத்தில் "எனை மாட்சித்தாயினும் இல்" என்றார். 


கணவனின் அத்தனை புகழுக்கும் அல்லது இகழுக்கும் மனைவிதான் பொறுப்பு என்று அவ்வளவு பெரிய பொறுப்பை மனைவியிடம் தருகிறது குறள். 


இதில் ஆணாதிக்கம், பெண்ணடிமை என்பதெல்லாம் எங்கிருந்து வருகிறது? பார்ப்பவர் கண்ணின் குறை நூலில் உள்ளது போலத் தெரியும்.


எங்காவது ஒரு அடிமையின் கையில் இருக்கிறது எஜமானனின் பெருமை என்று சொல்லி இருக்கிறதா? 


பெண் அடிமை இல்லை. ஒருஆணின் அத்தனை புகழுக்கும் அவளே காரணம் என்று அவளை உயர்த்திப் பிடிக்கிறது குறள். 


அதே சமயம், பெண் மேல் ஒரு பெரும் பொறுப்பை ஏற்றுகிறது. "நீ தான் ஒரு குடும்பத்தின் பெருமைக்கு காரணம். அதைத் தெரிந்து, புரிந்து நடந்து கொள்" என்று சொல்கிறது. 


எங்களுக்கு அந்தப் பொறுப்பு வேண்டாம். அது ஒரு பெரிய சுமை. நாங்க எங்க இஷ்டத்துக்கு இருப்போம். பெண் சுதந்திரம் என்று பேசுபவர்கள், ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். 


பொறுப்பு என்றால் அதற்கு தக்க அதிகாரம் இருக்கும், மரியாதை இருக்கும். 


பொறுப்பு வேண்டாம் என்றால்....


சிந்திக்க வேண்டும். 



Saturday, August 7, 2021

திருக்குறள் - வாழ்க்கைத் துணை

 திருக்குறள் - வாழ்க்கைத் துணை 


இல்லறத்துக்கு துணையாக வரும் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார். 


குறள் என்ன சொல்கிறது என்றால், வீட்டின் மொத்தப் பொறுப்பையும் மனைவியிடம் கொடுத்து விடுகிறது. வீட்டின் வரவு செலவை பார்பதில் இருந்து விருந்து, போன்றவற்றை பார்த்துக் கொள்வது எல்லாம் மனைவி கையில் கொடுத்து விடுகிறது. ஆணுக்கு அதில் ஒரு பங்கும் இல்லை. 


குறள் என்ன  சொல்கிறது என்று பார்பதற்கு முன்னால், நாம் சிறிது சிந்திப்போம். ஒரு நல்ல மனைவி என்றால் அவள் எப்படி இருக்க வேண்டும்? 


அழகாக இருக்க வேண்டும், படித்து இருக்க வேண்டும், அன்பாக பேச வேண்டும், கணவன் மனம் அறிந்து நடக்க வேண்டும், மாமனார் மாமியாரை மதிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு போவோம். 


ஒன்றே முக்கால் அடியில் வள்ளுவர் சொல்கிறார் - இது எல்லாம் ஒன்றுமே அவர் சொல்ல வில்லை. பின் என்னதான் சொன்னார் ?



பாடல் 


மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்

வளத்தக்காள் வாழ்க்கைத் துணை


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_7.html


(Please click the above link to continue reading)



மனைத்தக்க = இல்லறத்துக்கு ஏற்ற 


மாண்புடையள் =மாண்பு (பண்புகள்) உடையவள் 


ஆகி = ஆகி 


தற் கொண்டான் =தன்னைக் கொண்டவனது (கணவனது) 


வளத்தக்காள் =வளமைக்கு தக்க வாழ்பவள் 


வாழ்க்கைத் துணை = வாழ்க்கைத் துணை 


இல்லறத்தின் பண்புகள் என்றால் என்ன ?  பரிமேலழகர் இல்லை என்றால் நமக்கு ஒன்றும் புரிந்து இருக்காது 


"மனைத் தக்க மாண்பு" என்றால் நற்குண நற்செய்கைகள் என்கிறார். 


நல்ல குணம், நல்ல செய்கை இது இரண்டும் மனையறத்துக்கு தேவையான பண்புகள் என்கிறார். 


உடனே கேள்வி வரும்....நற்குணம், நற்செய்கைகள் என்றால் என்ன என்று?


"நற்குணங்களாவன : துறந்தார்ப் பேணலும், விருந்து அயர்தலும், வறியார்மாட்டு அருளுடைமையும் முதலாயின"


துறவிகளை பேணுதலும், விருந்தை உபசரிப்பதிலும், வறியவர்களுக்கு அருள் செய்வதும் போன்றவை. 


"நற்செய்கைகளாவன: வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்கள் அறிந்து கடைப்பிடித்தலும், அட்டில் தொழில் வன்மையும், ஒப்புரவு செய்தலும் முதலாயின"


நற்செய்கைகள் என்பன வாழ்க்கைக்கு வேண்டிய பொருள்களை அறிந்து கடைப் பிடிப்பதும், சமையல் தொழிலில் தேர்ச்சியும், ஊருக்கு நன்மை செய்தாலும் போன்றவை. 


பெண் சமையல் செய்வதில் கெட்டிக்காரியாக இருக்க வேண்டும்.  ஏன் பெண் சமையல் செய்ய வேண்டும்? பெண் என்றால் ஏதோ பொங்கி ஆக்கி போடுவது தான் பெண்களின் வேலையா என்று கேட்கலாம். 


கணவனை விட்டு விடுவோம். அந்தப் பெண், பிள்ளைகளை பெறுவாள். பிள்ளை பசித்து அழும். பிள்ளை வளரும் போது, அம்மா பசிக்குது என்று உணவு கேட்கும். ஏதோ கடையில் வாங்கிக் கொடுக்கலாம். அல்லது அப்பாவிடம் போய் கேள் என்று சொல்லலாம். அல்லது பிள்ளைக்கு ருசியாக செய்து தரலாம். 


பரிமேலழகர் சொல்கிறார், ஒரு குடும்பத்தை நன்றாக கொண்டு செல்ல, பெண்ணின் சமையல் திறமை மிக முக்கியமானது என்கிறார். 


ஏற்றுக் கொள்ளாதவர்கள், நாளும் வெளியில் கடையில் வாங்கித் தரலாம். 


மனைத்தக்க மாண்பு பற்றி பார்த்தோம். 


வளத்தக்காள் என்றால் கணவனின் வருமானத்துக்கு ஏற்ப வாழ வேண்டும். வருமானத்துக்கு மேலே வாழ மனைவி நினைத்தால், அங்கு தான் சிக்கல் ஆரம்பிகிறது? கணவன் கடன் வாங்க வேண்டும், அல்லது வேறு வழியில் பணம் சம்பாதிக்க வேண்டும். 


கணவனின் வருமானம் பற்றி மனைவி கொஞ்சம் குறைவாக பேசினால் கூடப் போதும், கணவனின் தன்மானம் முறியும். மனைவி மேல் கோபம் வரும். இல்லறம் முறியும். 


நல்ல குணம் +

நல்ல செய்கை +

வருமானத்துக்குள் வாழ்வது 


இந்த மூன்றும் அமைந்தவள் தான் "வாழ்க்கைத் துணை" (மனைவி).


இந்த மூன்றும் இல்லை என்றால் அவள் மனைவி இல்லை. 


அழகு, படிப்பு, செல்வம், வேலை, இதெல்லாம் இந்தப் பட்டியலில் இல்லை. 


எவ்வளவு தீர்கமான சிந்தனை !


சிந்திப்போம். 



Friday, August 6, 2021

திருக்குறள் - வாழக்கை துணை நலம் - ஒரு முன்னோட்டம்

 திருக்குறள் - வாழக்கை துணை நலம் - ஒரு முன்னோட்டம் 


கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என பாயிரவியலில் நான்கு அதிகாரங்களைத் தந்தார். 


பின் இல்லறவியலுக்குள் நுழைகிறோம். 


இல்வாழ்க்கை என்ற அதிகாரத்தைப்  பற்றி சிந்தித்தோம். இல்லறம் என்றால் என்ன, அதன் பதினொரு கடமைகள், அதன் சிறப்பு, எல்லாம் பார்த்தோம். 


அடுத்தது, வாழ்க்கை துணை நலம் பற்றி சிந்திக்க இருக்கிறோம். 


இல்லறக் கடமைகளை ஒரு ஆடவனை முன்னிறுத்தித்தான் சொல்லி இருக்கிறார். 


பெண் விடுதளையாரளர்கள், விடுதளையாளிகள் உடனே கொடி பிடிக்கலாம். ஏன், நாங்கள் செய்ய மாட்டோமா அந்தக் கடமைகளை என்று.


செய்யலாம்.....


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_6.html

(Please click the above link to continue reading)


ஒரு பெண் தனித்து இருக்கிறாள். 


நான் துறவிகளை பேணும் இல்லறக் கடமைகளை செய்கிறேன் என்று தினம் சில பல துறவிகள் அவள் வீட்டுக்கு வந்து போனால் எப்படி இருக்கும்? அக்கம் பக்கம் என்ன சொல்லும். 


நானும் ஏனைய மூன்று நிலைகளில் உள்ளவர்களை பேணுவேன் என்று தினம் ஒரு பிரம்மச்சாரியை வீட்டுக்கு அழைத்து வந்து உபசரித்தால் என்ன ஆகும்? 


செய்வோம் என்று கொடி பிடிப்பவர்கள் செய்து பார்க்கட்டும். அவர்களை விட்டு விடுவோம். 


சரி, ஒரு பெண்ணால் இவற்றைச் செய்ய முடியாது என்றே வைத்துக் கொள்வோம். ஆணால் மட்டும் செய்ய முடியுமா? ஒரு துறவி வீட்டுக்கு வந்தால் ஒரு பெண்ணின் துணை இல்லாமல் ஆண் அந்தத் துறவிக்கு உணவு படைக்க முடியுமா? மல்லுக் கட்டிக் கொண்டு ஒரு நாள் செய்யலாம். அது இயல்பாக வராது. ஆணாலும் முடியாது. 


இல்லற தர்மங்களை ஒரு ஆணோ, பெண்ணோ தனித்துச் செய்ய முடியாது. ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்தால் தான் இல்லறம் நடக்கும். நானா நீயா என்று போட்டி வந்தால் இல்லறத் தேர் அங்கேயே நின்று விடும். 


இங்கே யார் பெரியவர் என்ற போட்டி இல்லை. இல்லறம் என்பது மல்யுத்த மைதானம் அல்ல. சண்டை போட்டு யார் வென்றார்கள் என்று முடிவு செய்ய. 


அன்பும், அறமும் உடையது இல்வாழ்க்கை. 


அது நம் கலாச்சாரம். நாம் மேலை நாட்டு பழக்கங்களை பார்த்து, அது நன்றாக இருக்கிறதே என்று மயங்குகிறோம். அது சரியா தவறா என்பதல்ல கேள்வி. அவர்களுக்கு அது சரி. நாம் அவர்களுக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பெரிய கலாச்சாரத்தோடு வாழ்ந்தவர்கள். நாம் ஏன் அவர்களைப் பார்த்து படிக்க வேண்டும்? 


திருக்குறள் படிப்பதன் நோக்கம் எந்த பண்பாடு அல்லது கலாசாரம் உயர்ந்தது என்று பட்டி மன்றம் நடத்த அல்ல. 


நம் வாழ்க்கை முறையை தெரிந்து கொள்ள. நம் அறம், தர்மம் பற்றி புரிந்து கொள்ள. எவ்வளவு ஆழமாக, நுணுக்கமாக அலசி ஆராயிந்து வாழ்கை நெறியை அமைத்து இருக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள. 


பின் முடிவு செய்யலாம், எதை பின் பற்றுவது என்று. 


பெண் விடுதலை என்று பேசுபவர்கள், அடுத்த கட்டம் என்ன என்று சிந்தித்து இருப்பார்களா என்று தெரியவில்லை. சரி விடுதலை அடைந்து ஆகி விட்டது. அடுத்து என்ன? 


வள்ளுவர் ஒவ்வொரு படியாக கொண்டு செல்கிறார். 


ஒரு ஆடவன் இல்லற தர்மங்களை தனித்து செய்ய முடியாது என்பதால், அவனுக்கு ஒரு துணை வேண்டும் என்றும், அவன் மனைவி அவனுக்கு ஏற்ற துணை என்றும், அவளின் கடமைகள், சிறப்புகள் பற்றி இந்த அதிகாரத்தில் கூற இருக்கிறார். 


விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு வாசிப்போம்.


ஒரு பெண்ணை எந்த அளவுக்கு உயர்த்திப் பிடிக்கிறார் என்பது இந்த அதிகாரம் முழுவதும் படித்த பின் தெரியும். 


வாழ்க்கைக்கு துணை - அவளின் நலம் பற்றி கூறும் அதிகாரம். 


வாழ்க்கைத் துணை நலம். 


இனி, அதிகாரத்துக்குள் நுழைவோம். 



Wednesday, August 4, 2021

நாலடியார் - யாரிடம் தான் குறை இல்லை ?

 நாலடியார் - யாரிடம் தான் குறை இல்லை ?


யாரிடம் தான் குறை இல்லை? குறை இல்லாத மனிதனே இந்த உலகில் இல்லை. குறை உள்ளவர்களை விலக்கி நடந்தால், நாம் தனியாகத்தான் நடக்க வேண்டி வரும். நம்மிடம் குறை இல்லையா?


நட்பிலும், உறவிலும் குறை இருந்தால் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். 


நட்பு மட்டும் அல்ல, வீட்டுக்கு வந்த மருமகள்/ன் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தால் பொறுத்துதான் போக வேண்டும். விலக்கி விட முடியாது. 


மனிதர்களை விடுங்கள், "நெல்லில் உமி உண்டு, நீரில் நுரை உண்டு, மணம் மிக்க அழகான பூவில் கூட வாடி, நிறம் இல்லா ஓரிரு இதழ்கள் இருக்கலாம்...அதற்காக அவற்றை வெறுக்க முடியுமா? " ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்கிறது நாலடியார். 


பாடல் 


நல்லார் எனத் தாம் நனி விரும்பிக் கொண்டாரை,

அல்லார் எனினும், அடக்கிக் கொளல்வேண்டும்;-

நெல்லுக்கு உமி உண்டு; நீர்க்கு நுரை உண்டு;

புல் இதழ் பூவிற்கும் உண்டு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post.html


(Please click the above link to continue reading)


நல்லார் = நல்லவர் 


எனத் = என்று 


தாம் = நாம் 


நனி = மிக 


விரும்பிக் கொண்டாரை, = விரும்பி ஏற்றுக் கொண்டவரை 


அல்லார் எனினும் = அப்படி நல்லவர்கள் இல்லை என்றாலும் 


அடக்கிக் கொளல்வேண்டும்;- = வெளியே காட்டிக் கொள்ளாமல் அடக்கிக் கொள்ள வேண்டும் 


நெல்லுக்கு உமி உண்டு = நெல்லில் பயன் படாத உமி உண்டு 


நீர்க்கு நுரை உண்டு; = நீரிலே நுரை உண்டு 


புல் இதழ் பூவிற்கும் உண்டு. = பயன் தராத இதழ்கள் பூவிலும் உண்டு 



ஏதோ ஒரு கெட்ட குணம் இருக்கிறது என்பதற்காக நட்பை கை விட்டுக் விடக் கூடாது. 


எல்லாவற்றிலும் நிறை குறை இருக்கத்தான் செய்யும். 


சரி சரி என்று அணைத்துக் கொண்டு போக வேண்டியதுதான்...


என்ன, சரி தானே?