Saturday, August 7, 2021

திருக்குறள் - வாழ்க்கைத் துணை

 திருக்குறள் - வாழ்க்கைத் துணை 


இல்லறத்துக்கு துணையாக வரும் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார். 


குறள் என்ன சொல்கிறது என்றால், வீட்டின் மொத்தப் பொறுப்பையும் மனைவியிடம் கொடுத்து விடுகிறது. வீட்டின் வரவு செலவை பார்பதில் இருந்து விருந்து, போன்றவற்றை பார்த்துக் கொள்வது எல்லாம் மனைவி கையில் கொடுத்து விடுகிறது. ஆணுக்கு அதில் ஒரு பங்கும் இல்லை. 


குறள் என்ன  சொல்கிறது என்று பார்பதற்கு முன்னால், நாம் சிறிது சிந்திப்போம். ஒரு நல்ல மனைவி என்றால் அவள் எப்படி இருக்க வேண்டும்? 


அழகாக இருக்க வேண்டும், படித்து இருக்க வேண்டும், அன்பாக பேச வேண்டும், கணவன் மனம் அறிந்து நடக்க வேண்டும், மாமனார் மாமியாரை மதிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு போவோம். 


ஒன்றே முக்கால் அடியில் வள்ளுவர் சொல்கிறார் - இது எல்லாம் ஒன்றுமே அவர் சொல்ல வில்லை. பின் என்னதான் சொன்னார் ?



பாடல் 


மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்

வளத்தக்காள் வாழ்க்கைத் துணை


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_7.html


(Please click the above link to continue reading)



மனைத்தக்க = இல்லறத்துக்கு ஏற்ற 


மாண்புடையள் =மாண்பு (பண்புகள்) உடையவள் 


ஆகி = ஆகி 


தற் கொண்டான் =தன்னைக் கொண்டவனது (கணவனது) 


வளத்தக்காள் =வளமைக்கு தக்க வாழ்பவள் 


வாழ்க்கைத் துணை = வாழ்க்கைத் துணை 


இல்லறத்தின் பண்புகள் என்றால் என்ன ?  பரிமேலழகர் இல்லை என்றால் நமக்கு ஒன்றும் புரிந்து இருக்காது 


"மனைத் தக்க மாண்பு" என்றால் நற்குண நற்செய்கைகள் என்கிறார். 


நல்ல குணம், நல்ல செய்கை இது இரண்டும் மனையறத்துக்கு தேவையான பண்புகள் என்கிறார். 


உடனே கேள்வி வரும்....நற்குணம், நற்செய்கைகள் என்றால் என்ன என்று?


"நற்குணங்களாவன : துறந்தார்ப் பேணலும், விருந்து அயர்தலும், வறியார்மாட்டு அருளுடைமையும் முதலாயின"


துறவிகளை பேணுதலும், விருந்தை உபசரிப்பதிலும், வறியவர்களுக்கு அருள் செய்வதும் போன்றவை. 


"நற்செய்கைகளாவன: வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்கள் அறிந்து கடைப்பிடித்தலும், அட்டில் தொழில் வன்மையும், ஒப்புரவு செய்தலும் முதலாயின"


நற்செய்கைகள் என்பன வாழ்க்கைக்கு வேண்டிய பொருள்களை அறிந்து கடைப் பிடிப்பதும், சமையல் தொழிலில் தேர்ச்சியும், ஊருக்கு நன்மை செய்தாலும் போன்றவை. 


பெண் சமையல் செய்வதில் கெட்டிக்காரியாக இருக்க வேண்டும்.  ஏன் பெண் சமையல் செய்ய வேண்டும்? பெண் என்றால் ஏதோ பொங்கி ஆக்கி போடுவது தான் பெண்களின் வேலையா என்று கேட்கலாம். 


கணவனை விட்டு விடுவோம். அந்தப் பெண், பிள்ளைகளை பெறுவாள். பிள்ளை பசித்து அழும். பிள்ளை வளரும் போது, அம்மா பசிக்குது என்று உணவு கேட்கும். ஏதோ கடையில் வாங்கிக் கொடுக்கலாம். அல்லது அப்பாவிடம் போய் கேள் என்று சொல்லலாம். அல்லது பிள்ளைக்கு ருசியாக செய்து தரலாம். 


பரிமேலழகர் சொல்கிறார், ஒரு குடும்பத்தை நன்றாக கொண்டு செல்ல, பெண்ணின் சமையல் திறமை மிக முக்கியமானது என்கிறார். 


ஏற்றுக் கொள்ளாதவர்கள், நாளும் வெளியில் கடையில் வாங்கித் தரலாம். 


மனைத்தக்க மாண்பு பற்றி பார்த்தோம். 


வளத்தக்காள் என்றால் கணவனின் வருமானத்துக்கு ஏற்ப வாழ வேண்டும். வருமானத்துக்கு மேலே வாழ மனைவி நினைத்தால், அங்கு தான் சிக்கல் ஆரம்பிகிறது? கணவன் கடன் வாங்க வேண்டும், அல்லது வேறு வழியில் பணம் சம்பாதிக்க வேண்டும். 


கணவனின் வருமானம் பற்றி மனைவி கொஞ்சம் குறைவாக பேசினால் கூடப் போதும், கணவனின் தன்மானம் முறியும். மனைவி மேல் கோபம் வரும். இல்லறம் முறியும். 


நல்ல குணம் +

நல்ல செய்கை +

வருமானத்துக்குள் வாழ்வது 


இந்த மூன்றும் அமைந்தவள் தான் "வாழ்க்கைத் துணை" (மனைவி).


இந்த மூன்றும் இல்லை என்றால் அவள் மனைவி இல்லை. 


அழகு, படிப்பு, செல்வம், வேலை, இதெல்லாம் இந்தப் பட்டியலில் இல்லை. 


எவ்வளவு தீர்கமான சிந்தனை !


சிந்திப்போம். 



5 comments:

  1. இல்லறத்தின் பண்புகள் என்றால் என்ன ? பரிமேலழகர் இல்லை என்றால் நமக்கு ஒன்றும் புரிந்து இருக்காது


    1. இந்த blog இல்லை என்றால் பரிமேலழகர் படித்தாலும் எனக்கு புரியாது

    2. கேள்வி வெளியில் வாங்கி சாப்பிடுவது பத்தியோ, கனவன் சமைப்பது பத்தியோ இல்லை
    வெளியில் போயி வேலை சம்பாதிப்பதுதான் பெரிய கொம்பு, சமைப்பது கேவலம் என்று நீங்கள் பேசுவதும் செயல்படுவதும்தான் கேள்வி. If you give due respect for what we are doing we dont mind being நல்ல மனைவி, as pee valluvar's standard

    ReplyDelete
  2. I'm not challenging. Valluvar.I'm challenging today's husband's who all.pushed us to prove ourselves like this.

    ReplyDelete
  3. வள்ளுவர் சொலிக்கிறார்: கணவர் "X" + மனைவி "Y" = நல்வாழ்க்கை

    ஆனால், கணவன் "A" + மனைவி "B" = நல்வாழ்க்கை என்றும் இருக்கலாமே?

    உதாரணமாக, மனைவி சம்பாதிக்க, கணவன் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வதும் நல்வாழ்க்கையாக இருக்கக் கூடாதா?

    வள்ளுவரின் formula-வைப் படிப்பதில் தவறு இல்லை. ஆனால், அது ஒன்று மட்டுமே சரியான formula என்று செல்லும்போதுதான் பிரச்சனை எழுகிறது.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. அதற்கும் மேலே போனால், இந்தக் காலத்தில்

    ஒரு ஆண் + இன்னொரு ஆண் = நல்வாழ்க்கை என்பதும் சரியே.

    மனிதர்களை மனிதர்களாய் பார்ப்பதே சரி. அதை விட்டு, அவர்களை ஒரு formula-வில் ஒரு பகுதியாக வைத்து, "நீ இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும்" என்று சொல்வது தவறு.

    ReplyDelete