Tuesday, August 24, 2021

ஏலாதி - நூல் வேண்டா விடும்

ஏலாதி - நூல் வேண்டா விடும் 


தமிழில் எத்தனை ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன? அவற்றை எல்லாம் படித்து, தெளிவாக அறிந்து, அதன் படி நடப்பது என்பது நடக்கிற காரியமா? 


திருக்குறள் ஒன்று படிக்கவே ஒரு வாழ்நாள் போதாது போல் இருக்கிறது. இதில் மற்றவற்றை எப்போது படிப்பது. 


தமிழ் மட்டுமா? சமஸ்க்ரிதம், ஆங்கிலம் என்று எத்தனை மொழிகள் இருக்கின்றன. அவற்றில் எத்தனை நல்ல புத்தகங்கள் இருக்கும். எல்லாவற்றையும் என்று படித்து தீர்வது?


பக்தி நூல்களைப் படித்தால் பாதிக்கு மேல் இறைவன் பற்றிய வர்ணனையாக இருக்கிறது. நீ அதைச் செய்தாய், நீ இதைச் செய்தாய், நீ அப்படி இருப்பாய், இப்படி இருப்பாய். அதைத் தெரிந்து நமக்கு என்ன ஆகப் போகிறது? அவர் எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும். 


சரி, சங்க இலக்கியம் படிக்கலாம் என்றால், அந்தக் கால வாழ்க்கை வரலாறு தெரியும். தெரிந்து என்ன செய்ய? காலம் எவ்வளவோ மாறி விட்டது. கைப் பேசியும், கணணியும் உள்ள காலத்தில் வளையல் நெகிழ்ந்த கதைகள் பெரிதாக ஒரு தாக்கத்தை உண்டு பண்ணப் போவதில்லை. 


சரி, அதுவும் வேண்டாம், அற நூல்களைப் படிக்கலாம் என்றால், அவை நடை முறைக்கு சாத்தியமாகுமா என்று தெரியவில்லை. படிக்க நன்றாக இருக்கும். ஆனால் கடை பிடிக்க முடியுமா என்ற சந்தேகம் வருகிறது. 


பின் எதைத்தான் படிப்பது?


எப்படி நம்மை முன்னேற்றுவது?


எதை ஒன்றை அறிந்து கொண்டால், மற்றவை எல்லாம் தேவை இல்லையோ, அதை மட்டும் படித்தால் போதும் அல்லவா?


ஏலாதி அதற்கு ஒரு வழி சொல்கிறது. 


இதை மட்டும் தெரிந்து அதன் படி நடந்தால் வேறு எந்த நூலும் படிக்க வேண்டாம் என்கிறது. 


பாடல் 


இடர்தீர்த்த லெள்ளாமை கீழினஞ்சே ராமை

படர்தீர்த்தல் யார்க்கும் பழிப்பின் - நடைதீர்த்தல்

கண்டவர் காமுறுஞ்சொற் காணிற் கலவியின்கண்

விண்டவர்நூல் வேண்டா விடும்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_24.html


(pl click the above link to continue reading)


இடர்தீர்த்தல் = பிறர்க்கு வந்த துன்பங்களைப் போக்குதல் 


எள்ளாமை = பிறரை பரிகாசம் செய்யாமல் இருத்தல். மற்றவர்களை கேலி பேசக் கூடாது 


கீழினஞ்சே ராமை = கயவர்களோடு சேராமல் இருத்தல் 


படர்தீர்த்தல் = பிறர் பசியைத் தீர்த்தல் 


யார்க்கும் = யாராய் இருந்தாலும் (இதை முந்தைய பசி தீர்த்தலோடு சேர்த்து, 

பசி என்று யார் வந்தாலும் அந்தப் பசியைப் போக்குதல்) 


பழிப்பின்  நடை  = பழி வரக் கூடிய செயல்களை 


தீர்த்தல் = செய்யாமல் இருத்தல் 


கண்டவர் = எதிரில் நம்மைக் கண்டவர்கள் 


காமுறுஞ்சொற் = விரும்பும் சொல்லைச் கூறுதல், 


காணிற் = ஒருவன் செய்வானானால் 


கலவியின்கண் = உலகப் பற்றில் இருந்து (இங்கே கலவி என்பது உலகத்தோடு கலந்து இருப்பது) 


விண்டவர் = விடுபட்டவர்கள் , துறவிகள், முனிவர்கள், சான்றோர் 


நூல் வேண்டா விடும். = அவர்கள் எழுதிய எந்த ஒரு நூலும் வேண்டாம் (படிக்க வேண்டாம்).



இது கடினமே இல்லை. 


துன்பத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். 


பசித்தவர்களுக்கு உணவு தர வேண்டும். 


தீயவர்களோடு பழகக் கூடாது 


எல்லோரிடத்தும் இனிமையாக பேச வேண்டும். 


உலகம் பழிக்கும் செயலகளைச் செய்யக் கூடாது.


அவ்வளவுதான். 


இவற்றை ஒருவன் செய்தால், அவன் வேறு ஒரு நூலையும் படிக்க வேண்டாம். 


அனைத்து நூல்களும் சொல்வது இதைத் தான். 


இதை செய்து பழகுவது கஷ்டமா? 


1 comment:

  1. அருமை. கண்டிப்பாக பின்பற்ற வேண்டியவை

    ReplyDelete