Monday, August 16, 2021

திருக்குறள் - மனைவி என்பவள் யார்?

 திருக்குறள் - மனைவி என்பவள் யார்? 


ஒரு பெண் திருமணம் செய்து கொண்டால் மனைவி ஆகி விடுவாளா?  இல்லை. 


பிள்ளை பெற்று விட்டால் தாயாகி விடுவாளா? இல்லை. 


மனைவி என்றால் யார் அல்லது எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளுவர் சொல்கிறார். 


அவர் யார் எங்களை சொல்ல என்று நினைப்பவர்கள் மேலே படிக்காமல் வேறு ஏதாவது உயர்ந்த விடயங்களை படிப்பது நல்லது.


"தன்னைக் காத்துக் கொண்டு, பின் தன்னை கொண்ட கணவனையும் காத்து, இருவரின் இல்லறம் பற்றி மற்றவர்கள் புகழ்ந்து பேசும்படி இறுதிவரை கடைப் பிடிப்பவளே பெண் (மனைவி)"


என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_16.html


(Please click the above link to continue reading)


தற்காத்துத் = தன்னை காத்துக் கொண்டு 

தற்கொண்டாற் = தன்னைக் கொண்ட கணவனை 

பேணித் = போற்றி, பாதுகாத்து 

தகைசான்ற = பெருமை அமைந்த 

சொற்காத்துச் = புகழைக் காத்து 

சோர்விலாள் பெண் = சோர்வு இல்லாதவள் பெண் (மனைவி)


கொஞ்சம் ஆழமாக சிந்திப்போம். 


தற்காத்துத் = முதலில் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும். பரிமேலழகர் உரையில் "கற்பினின்று வழுவாமல் தன்னைக் காத்துக் கொண்டு" என்று குறிப்பிடுகிறார். சற்று விரிவாகப் பொருள் கொண்டால், தன்னை அனைத்து விதத்திலும் காத்துக் கொண்டு என்று கூறலாம். 


பட்டினி கிடந்து, சரியான உணவை, சரியான நேரத்தில் உண்ணாமல் தியாகச் சுடராக இருக்கச் சொல்லவில்லை. அவள் தன்னைக் காத்துக் கொண்டாள் தான் குடும்பத்தை காக்க முடியும் என்பதால், முதலில் அவள் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும். 


அடுத்து, "தற்கொண்டான் பேணி". கணவனை பேண வேண்டும். "உணவு முதலியன கொடுத்து" என்கிறார் பரிமேலழகர். 


அடுத்து, "தகை சான்ற சொற் காத்து". இது மிக மிக முக்கியமான ஒன்று. அவர்கள் இல்லறத்தைப் பற்றி எல்லோரும் புகழ வேண்டும். கணவனோ மனைவியோ தங்களுக்குள் ஏற்படும் மன வேற்றுமைகளை வெளியே சொல்லக் கூடாது. சொன்னால், குடும்பத்தின் பெருமைக்கு கேடு வரும். சொல் என்பது இங்கே புகழ். மாமனார்,மாமியார், கணவன், என்று குடும்பத்தில் உள்ள நபர்களின் குறைகளை வெளியே சொன்னால், குடும்பத்தின் புகழ் குறையும்.


இதோடு நிறுத்தி இருந்தால், வள்ளுவர் பெரிய ஆள் இல்லை. 


அடுத்து ஒரு வார்த்தை சேர்கிறார். 


"சோர்விலாள்".  சோர்வு என்றால் மறதி என்கிறார் பரிமேலழகர்.  இடை விடாமல் கடை பிடிக்க வேண்டும். ஏதோ கொஞ்ச காலம் கடை பிடித்தோம் அப்புறம் விட்டு விட்டோம் என்று இருக்கக் கூடாது. வேலை செய்யும் வரை கணவனுக்கு மரியாதை இருக்கும்...அப்புறம் அவனை தூக்கி ஒரு மூலையில் வைத்து விடுவது என்பது "சோர்வில்" வரும். இறுதிவரை குடும்பத்தின் புகழை நிலை நிறுத்த வேண்டும். 


"அடடா, வீடு என்றால் அது, குடும்பம் என்றால் அது " என்று மற்றவர்கள் சொல்ல வேண்டும். 


அப்படி செய்பவள்தான் "பெண்" (மனைவி) என்கிறார். 


அதெல்லாம் இல்லை. எங்கள் மனதுக்குப் பட்டதை நாங்கள் சொல்லுவோம். குடும்ப மானத்தைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. கணவனோ, மாமியாரோ யாராக இருந்தாலும், தவறு செய்தால் நாலு பேருக்குத் தெரியும் படி உரக்கச் சொல்வோம் என்று கொடி பிடிப்பவர்களுக்கு அல்ல இந்தக் குறள். 


வள்ளுவர் சொற்களை தேர்ந்து எடுத்துப் போடக் கூடியவர்.


"சோர்விலாள் மனைவி" என்று சொல்லி இருக்கலாம். "சோர்விலாள் பெண்" என்று கூறுகிறார். 


இந்தக் குணம் இல்லாதவளை அவர் பெண் என்ற பட்டியலிலேயே சேர்க்கத் தயாராக இல்லை. தற்கொண்டான் என்று வருவதால், இங்கே பெண் என்பதை மனைவி என்று நாம் புரிந்து கொள்கிறோம். 


இது ஒரு வழிகாட்டி. எங்களுக்கு ஒரு வழி காட்டியும் வேண்டாம், நாங்கள் மனம் போன படி போவோம் என்று செல்பவர்களுக்கு நாம் கை அசைத்து விடை தருவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?



 தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண்



2 comments:

  1. நல்ல விளக்கம். நன்றி.

    ReplyDelete
  2. கவனர் பற்றியும் விளக்கம் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete