Wednesday, August 18, 2021

திருக்குறள் - பெண்ணுக்குக் காவல்

 திருக்குறள் - பெண்ணுக்குக் காவல் 


கற்பு என்பதை உடல் சார்ந்த விடயமாகவே வைத்துக் கொண்டாலும், அது ஏன் பெண்ணுக்கு மட்டும் பெரிதாகச் சொல்லப் படுகிறது? ஆணுக்கு கற்பு வேண்டும் என்று எந்த இலக்கியமும் கூறவில்லை. 


கோவலன், மாதவியோடு சென்றான் என்றால் அவனை ஒரு கெட்டவனாக சிலப்பதிகாரம் சித்தரிக்கவில்லை. ஏன், அவன் மனைவியே கூட அவனை திட்டவில்லை. 


தசரதனுக்கு பதினாறாயிரம் மனைவிகள் என்றால் கேட்டுவிட்டு சிரித்து விட்டு நகர்ந்து விடுகிறோம். சீ என்று யாரும் சொல்லுவதில்லை. அவன் மகனா இராமன் என்று யாரும் இராமனை கேலி செய்யவில்லை. 


ஆயிரம் உதாரணம் சொல்லலாம். இந்து கடவுள்கள் கூட பலதாரம் மணம் செய்து கொள்கிறார்கள். கேட்டால் ஏதாவது ஒரு கதை சொல்கிறார்கள். ஒன்று இச்சா சக்தி, இன்னொன்று கிரியா சக்தி என்கிறார்கள். நாங்களும் அந்த இரண்டு சக்திகளை வைத்துக் கொள்கிறோம் என்று பக்த கோடிகள் ஆரம்பித்து விட்டால்?


பெண்ணுக்கு கற்பு ஏன் பெரிதாக கூறப்பட்டது என்றால், பெண் கற்பு நிலை பிறழ்ந்தால் குடும்பம் சிதைந்து விடும்.  குடும்பம் சிதைந்தால் சமுதாயமும், நாடும் சிதையும். 


எப்படி. 


ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்து கொள்கிறாள் அல்லது பல ஆண்களிடம் தொடர்பு வைத்து இருந்தால், அவளுக்கு பிறக்கும் பிள்ளைக்கு யார் தகப்பன் என்ற கேள்வி வரும். யாரும் பொறுப்பு எடுக்க மாட்டார்கள். அந்தப் பிள்ளைக்கு படிப்பு, உணவு, உடை, மருத்துவம், நல்லது கெட்டது சொல்வது என்று யாரும் பொறுப்பு எடுக்க மாட்டார்கள். அந்தப் பிள்ளை அனாதை போலத்தான் வளரும். இன்னும் சொல்லப் போனால், தகப்பன் பெயர் தெரியாதவன் என்று பழியோடு வளரும். 


அப்படி வளர்ந்தவன்தான் கர்ணன். அவன் எவ்வளவு சங்கடப்பட்டான் என்று பாரதம் கூறுகிறது. 


இப்படி நாடு பூராவும் தகப்பன் பெயர் தெரியாத பிள்ளைகள் இருந்தால் எப்படி இருக்கும். 


எனவே தான், அதில் ஆழமாகச் செல்லாமல், பெண்ணுக்கு கற்பை பெரிய விடயமாக சொன்னார்கள். 


சரி, பெண் வெளியில் சென்றால் தானே, நாலு பேரிடம் பழகினால் தானே அவள் மனம் சலனப் பட வாய்ப்பு இருக்கிறது? கற்பு நெறி பிறழ வாய்ப்பு இருக்கிறது? எனவே அவளை வெளியே அனுப்பாமல் வீட்டிலேயே வைத்து பூட்டி வைத்து விட்டால் ஒரு குழப்பமும் வராது தானே என்று நினைத்து பெண்ணை பூட்டி வைக்க நினைப்பவர்களைப் பற்றி இங்கே கூறுகிறார். 


"ஒரு பெண், அவளே நினைத்தால் அல்லது அவளை கற்பு நெறியில் நிற்க வைக்க யாராலும் முடியாது. சிறை வைத்தாலும் நடக்காது" என்கிறார். 


பாடல் 


சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்

நிறைகாக்கும் காப்பே தலை


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_18.html


(please click the above link to continue reading)


சிறைகாக்கும் = சிறையில் வைத்து காக்கும் 


காப்பு = காவல் 


எவன் செய்யும் = யாரால் செய்ய முடியும் 


மகளிர் = பெண்கள் 


நிறைகாக்கும் = கற்பு என்ற என்ற நெறியில் நின்று காக்கும் 


காப்பே தலை = காவலே தலை சிறந்தது 


பெண்கள் கற்பு நெறியில் நிற்க வேண்டும் என்றால் அது அவர்கள் மேல் செலுத்தும் அன்பால் தான் முடியும். மாறாக கணவன், அவனுடைய புகழ், செலவாக்கு, உடல் பலம், இவற்றைக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது என்கிறார் வள்ளுவர். 


இதுவும் கூட கொஞ்சம் நெருடலான குறள் தான். கற்பு என்று வந்து விட்டாலே கூடவே சச்சரவும் வரத்தான் செய்யும். 


தாண்டிப் போவோம். 


1 comment:

  1. ஹும் ... தாண்டிப் போக வேண்டியதுதான்!

    ReplyDelete