Tuesday, August 17, 2021

நாலடியார் - வருந்தியும் கேட்பர்

 நாலடியார் - வருந்தியும் கேட்பர் 


வீட்டிலோ, அலுவலகத்திலோ நமக்கு வேண்டிய ஒருவர் தவறாக ஒன்றைச் சொல்லி விட்டால் நாம் என்ன செய்வோம்?


உடனே, சுறுசுறுப்பாக அந்தத் தவற்றைச் சுட்டி காட்டுவோம். அப்படி காட்டினால் நமது புத்திசாலித்தனம் வெளிப்படும் என்று நாம் நினைக்கிறோம். 


"வள்ளுவர் சொன்னது தவறு" என்று சொல்லுவதன் மூலம், நாம் வள்ளுவரை விட பெரிய அறிஞர் என்று காட்டிக் கொள்ள முனைவோம். 


அது நாகரிகம் அல்ல. பண்பாடு அல்ல. 


ஒருவர் தவறாக ஒன்றைச் சொல்லி விட்டால், ஒரு சபையில் வைத்து அவனை திருத்தக் கூடாது. படித்தவர்கள், பெரியவர்கள் அப்படி செய்ய மாட்டார்கள். தனியாக கூப்பிட்டு, அதை சுட்டிக் காட்டுவார்கள். 


"கற்றறிந்தோர் சபையில் ஒரு கல்லாதவன் ஏதாவது உளறினால், அங்குள்ள பெரியவர்கள், கஷ்டப்பட்டாவது அவன் சொல்வதைக் கேட்பார்கள். ஏன் என்றால், அவன் பிழையை சுட்டிக் காட்டினால் அவன் பல பேர் முன்னிலையில் வெட்கப் பட வேண்டி வரும் என்று நினைத்து "



பாடல் 


புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி

கல்லா வொருவ னுரைப்பவுங் - கண்ணோடி|

நல்லார் வருந்தியுங் கேட்பரே மற்றவன்

பல்லாரு ணாணல் பரிந்து. 


பொருள் 



(please click the above link to continue reading)


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_17.html


புல்லா = பொருந்தாத, சரி இல்லாத 


வெழுத்திற் = எழுத்தை, 


பொருளில் = பொருள் இல்லாமல் 


வறுங் = வீணாகப் பேசி 


கோட்டி = கற்றறிந்தோர் சபையில் 


கல்லா = கல்வி அறிவு இல்லாத 


வொருவ னுரைப்பவுங்  = ஒருவன் உரைப்பவும் = ஒருவன் சொல்லக் கேட்டும் 


கண்ணோடி| = கருணையினால் 


நல்லார் = நல்லவர்கள் 


வருந்தியுங் கேட்பரே  = துன்பப் பட்டாவது கேட்பார்கள் 


மற்றவன் = அவன் 


பல்லாரு ணாணல் பரிந்து.  = பல பேர் முன் நாணப்படுதலை சிந்தித்து 


ஒருவன் தவறாக ஒன்றைச் சொல்லி விட்டால், சொல்லிவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட வேண்டும். 


முட்டாளோடு வாக்குவாதம் செய்து என்ன ஆகப் போகிறது. 


மேலும், அந்தக் கல்லாதவன் நமக்கு வேண்டியவனாகப் போய் விட்டால், அவனை திருத்தப் போய், அவன் உறவும் முறியும்.


அவன் பலரால் கேலி செய்யப் படுவானே என்று நினைந்து நல்லவவர்கள் வருந்தியும் கேட்பார்களாம். 


நாகரீகத்தின் உச்சம். 


"வருந்தியும் கேட்பர்"  என்ன ஒரு அழகான சொற் கையாளல். 




No comments:

Post a Comment