Saturday, June 18, 2022

தேவாரம் - பிறவா நாளே

தேவாரம் - பிறவா நாளே  


காலையில் எழுந்தவுடன் "இன்னிக்கு அந்த வேலையை செய்து முடிக்கணும்" அப்படின்னு நினைகிறீங்க. அதுக்கு முன்னாடி வேற என்னென்னவோ வேலைகள் வந்து சேர்கிறது. அதையெல்லாம் செஞ்சு முடிச்சிட்டு நீங்க நினைச்ச வேலையை எடுக்கலாம்னு நினைக்கும் போது, ரொம்பவும் சோர்வாக உணர்கிறீர்கள். சரி கொஞ்ச நேரம் ஓய்வு எடுப்போம் என்று நினைகிறீர்கள்.


அப்படியே youtube, whatsapp என்று பார்கிறீர்கள். நேரம் போய் விடுகிறது. கடைசியில் "சே, நாள் பூராவும் வீணா பொழுது போயிருச்சு...ஒண்ணும் உருப்படியா செய்யல" என்று அலுத்துக் கொள்வீர்கள் அல்லவா?


அதே போல், முழு வாழ்நாளையும் நினைத்துப் பாருங்கள். எதுக்காக வந்தோம், என்ன செய்து கொண்டு இருக்கிறோம், முடியும் போது நம் மன நிலை எப்படி இருக்கும்? உருப்படியா ஏதாவது செய்தோம் என்று மன நிறைவு இருக்குமா, அல்லது வெட்டி வேலை நிறைய செய்து பொழுதை எல்லாம் வீணடித்து விட்டோம் என்று நினைப்போமா?


திருநாவுக்கரசர் சொல்கிறார்,


"இறைவனை நினையாத நாள் எல்லாம் பிறவா நாளே" 

என்று.


பிறந்தும் ஒரு பலனும் இல்லை என்றால், பிறந்து என்ன பிறக்காமல் இருந்து என்ன ? எல்லாம் ஒன்று தானே? 


காலையில் எழுந்து காப்பி குடித்து, செய்தி வாசித்து, வேலைக்குப் போய், சமைத்து, சாப்பிட்டு, தூங்கி, தொலைக் காட்சி பார்த்து ....இப்படி ஒவ்வொரு நாளும் போய்க் கொண்டிருந்தால் அந்த நாட்களால் என்ன பலன்?


பாடல் 


அரியானை அந்தணர்தம் சிந்தை யானை

        அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்

தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்

        திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்

கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்

        கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற

பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்

        பேசாத நாளெல்லாம் பிறவா நாளே


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_18.html


(pl click the above link to continue reading)


அரியானை = அறிவாலும், பொருளாலும் அடைய அரிதானவனை 


அந்தணர்தம் சிந்தை யானை = அந்தணர்களின் சிந்தனயில் என்றும் இருப்பவனை 


அருமறையின் = உயர்ந்த மறைகளின் 


அகத்தானை = உட்பொருளாக அமைந்தவனை 


அணுவை  = அணுவை 


யார்க்கும் = ஒருவருக்கும் 


தெரியாத தத்துவனைத் = தெரியாமல் வைத்த உண்மை வடிவானனவை 


தேனைப் = தேன் போன்றவனை 


பாலைத் = பால் போன்றவனை 


திகழொளியைத் = ஒளி போருந்தியவனை 


தேவர்கள்தங் கோனை  = தேவர்களின் தலைவனை 


மற்றைக் கரியானை  = கரிய நிறம் கொண்ட திருமால் 


நான்முகனைக் = நான்கு முகம் கொண்ட பிரமன் 


கனலைக் = தீயை 


காற்றைக் = காற்றை 


கனைகடலைக் = ஒலி உடைய கடலை 


குலவரையைக் = பெரிய மலையை 


கலந்து நின்ற =இவை எல்லாவற்றிலும் கலந்து நின்ற 


பெரியானைப்  = பெரியவனை 


பெரும்பற்றப் புலியூ ரானைப் = புலியூர் என்ற ஊரில் இருப்பவனை 


பேசாத நாளெல்லாம் பிறவா நாளே = பற்றி பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே 


அப்படி எல்லாம் கணக்கு போட்டால் நம் வயது எவ்வளவு இருக்கும் ? ஐந்து அல்லது பத்து நாள் தான் இருக்கும். 


எவ்வளவோ நாட்கள் வீணாகப் போகின்றன. 


அந்தக் கவலை எப்போதும் இருக்க வேண்டும். 


ஒவ்வொரு நாளும் சிறப்பாக கழிய வேண்டும். 




Friday, June 17, 2022

திருக்குறள் - பிறனில் விழையாமை - 4 - எனைத்துணையர் ஆயினும் என்னாம்

 

திருக்குறள் - பிறனில் விழையாமை - 4 - எனைத்துணையர் ஆயினும் என்னாம் 


(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலைத் தலங்களில் காணலாம் 


முன்னுரை - https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_8.html


குறள் 141: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/1_10.html


குறள் 142: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/2.html


குறள் 143:https://interestingtamilpoems.blogspot.com/2022/06/3.html



)


சமுதாயத்தில் ஒரு நல்ல பெயர் எடுப்பது மிகக் கடினம். பல ஆண்டுகள் உழைக்க வேண்டும். ஒழுக்கமாக இருக்க வேண்டும். கல்வி, அறிவு, வேலை, பதவி, மற்றவர்களுக்கு உதவுவது என்று பல செய்து ஒரு நற்பெயரை சம்பாதிக்க வேண்டும். 


ஆனால், அத்தனை உழைப்பு ஒரு நொடியில் வீணாகிவிடும். 


எப்போது என்றால், தன் நிலை மறந்து மற்றவன் வீட்டில் அவன் மனைவியை அடையும் நோக்கத்தில் சென்றால். 


அவன் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அதனால் ஒரு  பயனும் இல்லை ,  எல்லாம் வீணாகிப் போய்விடும் என்கிறார் வள்ளுவர்.


பாடல் 


எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்

தேரான் பிறனில் புகல்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/4.html


(pl click the above link to continue reading)



எனைத்துணையர் = எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் 


 ஆயினும் = ஆனாலும் 


என்னாம்  = என்ன பலன் 


தினைத்துணையும் = ஒரு நொடியளவும் 


தேரான் = சிந்திக்காமல் 


பிறனில் புகல் = மற்றவன் வீட்டில் புகுந்தவன் 


வள்ளுவர் ஒவ்வொரு வார்த்தையையும் ஆராய்ந்து, தெரிந்து எடுத்துப் கையாள்கிறார். 


"எனைத்துணையர் ஆயினும் என்னாம்". ஒருவன் எவ்வளவு உயர்ந்தவனாக இருந்தாலும் என்ன என்று கேட்கிறார். அவன் பதவி, புகழ், செல்வாக்கு, அதிகாரம், செல்வம், படிப்பு எது ஒன்றாலும் பயன் இல்லை. எல்லாம் செல்லாக் காசாகிவிடும் என்கிறார். 


எல்லோருக்கும் தெரியும் இது. இருந்தும் காமம் கண்ணை மறைக்கும். 


இராவணன் தவறினான். 


இந்திரன் தவறினான். தேவர்களுக்கு எல்லாம் அதிபதி, கௌதமர் வந்துவிட்டார் என்று அறிந்து பூனை வடிவம் கொண்டு தப்பி ஓடினான். தேவ இராசா ஒரு சிறு விலங்காகிப் போனான். அவன் செய்த தவம், புகழ், சக்தி, ஒன்றும் அவனுக்கு கை கொடுக்கவில்லை. 


விஸ்வாமித்திரன் செய்த அத்தனை தவத்தையும் ஒரு நொடியில் இழந்தான். 


எவ்வளவு பெரிய ஆளையும் ஒரு நொடியில் புரட்டிப் போட்டு விடும் காமம். 


பெரிய ஆட்கள் கதியே இது என்றால், சிறியவர்கள் கதி என்ன ஆகும். பெரிய பெரிய கப்பலே மூழ்கும் என்றால், சிறு படகு எம்மாத்திரம். 


அடுத்தது, பிறனில் விழைந்தான் என்று கூட வள்ளுவர் சொல்லாவில்லை. 


"தேரான் பிறனில் புகல்" : எது சரி, எது தவறு என்று தெரியாமல் ஒருவன் வீட்டுக்குள் செல்பவன் என்கிறான். அப்படி ஒரு அறிவு இல்லாதவன் மற்றவன் இல்லத்துக்கு செல்வதே குற்றம் என்கிறார்.   


மற்றவன் இருப்பான். அவன் மனைவி இருப்பாள். நான் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும். தவறு எதுவும் செய்து விடக் கூடாது. என் பார்வையோ, சொல்லோ, செயலோ தவறு இழைத்து விடக் கூடாது என்று அறிந்து, தெளிந்து செல்ல வேண்டும் என்கிறார். அந்த தெளிவு இல்லாவிட்டால் போகாதே என்கிறார். 


இன்னொரு நுணுக்கத்தை பரிமேலழகர் எடுத்துக் காட்டுகிறார். 


"எனைத்துணையர்" , "தேரான்" 


என்று இரண்டு சொற்கள் இருக்கின்றன. 


முதலில் பன்மையில் ஆரம்பிக்கிறார். 


"எனைத்துணையன்" என்று போட்டு இருக்கலாம். துணையர் என்று மரியாதை காரணமாக பன்மையில் ஆரம்பிக்கிறார். 


அறிவு இல்லாமல் செல்பவனுக்கு என்ன மரியாதை வேண்டி இருக்கிறது என்று "தேரான்" என்று ஒரு ஒருமையில் குறிப்பிடுகிறார். தேரார் என்று வந்திருக்க வேண்டும். அவனுக்கு என்ன மரியாதை என்று ஒருமையில் அழைக்கிறார் என்று பரிமேலழகர் குறிப்பிடுகிறார். 


(பரிமேல் அழகர் அப்படிச் சொல்லவில்லை. "ஒருமை பன்மை மயக்கம் மரியாதை நிமித்தம் மயங்கிற்று" என்பார். நான் சற்று விளக்கினேன்).


மற்றவர்கள் வீட்டுக்குச் செல்வதனால, மிகவும் ஆராய்ந்து, நேரம், ,காலம், எல்லாம் அறிந்து எதற்காகச் செல்கிறோம், என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது என்று அறிந்து,தெளிந்து செல்ல வேண்டும் என்கிறார். 


எவ்வளவு சிந்தித்து இருக்கிறார்கள். 




Wednesday, June 15, 2022

நான்மணிக்கடிகை - 6 - அறிவார் யார்?

 நான்மணிக்கடிகை -  6 - அறிவார் யார்? 


நான்மணிக்கடிகை என்ற நூல், வாழ்க்கையின் அனுபவத்தை, சாரத்தை வடித்துத் தரும் நூல். தங்கள் அனுபவத்தில் கண்டதை, நமக்கு உதவும் பொருட்டு எழுதி அருளிய நூல். 


தவறுகள் செய்து, அடிபட்டு, அனுபவங்களை சேகரித்து நாம் அந்தத் தவறுகளை செய்யாமல் இருக்கவும், அந்தத் துன்பங்களை அடையாமல் இருக்கவும், நம் மீது கருணை கொண்டு எழுதித் தந்த நூல். 


வீட்டில், பிள்ளையிடம் அம்மா சொல்லுவாளே "மழையில நனையதடா, காய்ச்சல் வரும்" என்று. அந்த அன்போடு, கரிசனத்தோடு கூறும் நூல். அம்மா ஒன்றும் மருத்துவர் கிடையாது. அவள் அனுபவம் சொல்கிறது மழையில் நனைந்தால் காய்ச்சல் வரும் என்று. 


அது போல உலக இயல்பை கவனித்து, யாதார்த்தை முழுவதும் உள்வாங்கி, இந்த உலகம் இப்படித் தான் இருக்கிறது. இது தான் இந்த உலகின் வரைபடம். இதை வைத்துக் கொண்டு நீ விரும்பிய இடத்தை அடையலாம் என்று நமக்கு ஒரு வழிகாட்டும் ஓரூர் நூல். 


ஏறக்குறைய நூறு பாடல்கள் உண்டு. ஒவ்வொன்றும் ஒரு அனுபவத் தெளிவு. 


அதில் சில பாடல்களை பகிர்ந்து கொள்ள ஆசை.


நாம் சிலபேரை அவர்கள் தோற்றம், அவர்கள் பொருளாதார நிலை, அவர்கள் உடுத்தும் உடை, பேசும் பேச்சு, அவர்கள் நிறம், அவர்கள் பிறந்த குலம் இவற்றை வைத்து எடை போடுவோம். 


அது சரியல்ல. 


ஒருவரை சரியாக எடை போடவேண்டும் என்றால் அவரோடு பழகி, அவரின் அறிவு, குணம், ஒழுக்க, செயல் இவற்றை அறிந்து பின் முடிவு செய்ய வேண்டும். 


இந்த குடியில் பிறந்தவன் உயர்ந்தவன், இந்த குடியில் பிறந்தவன் உயர்ந்தவனாக இருக்க முடியாது என்று முடிவு செய்யக் கூடாது. எதையும் ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும் என்கிறது நான்மணிக்கடிகை. 


பாடல் 


கள்ளி வயிற்று இன் அகில் பிறக்கும்; மான் வயிற்று

ஒள் அரிதாரம் பிறக்கும்; பெருங் கடலுள்

பல் விலைய முத்தம் பிறக்கும்; அறிவார் யார்,

நல் ஆள் பிறக்கும் குடி?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/6_15.html


(Pl click the above link to continue reading)




கள்ளி = கள்ளி மரத்தின் 


வயிற்று இன்  = உள்ளே 


அகில் பிறக்கும் = அகில் என்ற வாசனைப் பொருள் தோன்றும் 


மான் வயிற்று = மானின் வயிற்றில் 


ஒள் அரிதாரம் பிறக்கும்  = முகத்தில் பூசும் ஒளி பொருந்திய அரிதாரம் பிறக்கும் 


பெருங் கடலுள் = குடிக்க முடியாத, ,உப்பு நிறைந்த கடலின் இடையே 


பல் விலைய முத்தம் பிறக்கும் = விலை மதிக்க முடியாத பல வித முத்துக்கள் பிறக்கும் 


அறிவார் யார், = யாருக்குத் தெரியும் ?


நல் ஆள் பிறக்கும் குடி? = நல்ல மனிதர்கள் பிறக்கும் இடம் 


நல்ல மனிதர்கள் எங்கும் தோன்றலாம். இங்குதான் தோன்ற வேண்டும், இங்கு தோன்ற முடியாது என்று நினைக்கக் கூடாது. நல்லது எங்கும் இருக்கலாம். ஒரு திறந்த மனத்தோடு உலகை அணுகினால் எல்லோரும் நட்பாவார்கள், பகை என்பது இருக்காது. யாரையும் உதாசீனம் செய்யும் எண்ணம் வராது, யாரையும் தவறாக நல்லவர்கள் என்று எடை போட்டு ஏமாற மாட்டோம். 


மிக எளிய, நடை முறையில் உள்ள உதாரணங்கள் மூலம், உயர்ந்த அனுபவத்தை சொல்லும் பாடல். 




Tuesday, June 14, 2022

திருக்குறள் - பிறனில் விழையாமை - 3 - தெளிந்தார் இல் தீமை புரிவார்

   

 திருக்குறள் - பிறனில் விழையாமை - 3 - தெளிந்தார் இல் தீமை புரிவார் 


(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலைத் தலங்களில் காணலாம் 


முன்னுரை - https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_8.html


குறள் 141: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/1_10.html


குறள் 142: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/2.html


)


பிறன்மனை விழைவது என்பது எப்படி நிகழும் என்று சிந்திக்கிறார் வள்ளுவர். 


ஒருவன் தன்னுடைய நண்பன் வீட்டுக்கோ, உறவினர் வீட்டுக்கோ போகிறான். அந்த வீட்டின் தலைவன் அவனை வரவேற்று உபசரித்து பேசிக் கொண்டு இருக்கிறான். ஏதோ பொருள் வாங்க வேண்டும் என்று வெளியில் செல்ல வேண்டி இருக்கிறது. "நீங்கள் பேசிக் கொண்டு இருங்கள்" என்று நண்பனிடமும், மனைவியிடமும் சொல்லிவிட்டு வெளியில் போகிறான். அந்த நேரத்தில், அந்த நண்பனின் மனைவியின் மேல் இவன் ஆசை கொள்கிறான். எல்லை மீறப் படுகிறது என்று வைத்துக் கொள்வோம். 


அந்த இடத்தில் நிறுத்தி வள்ளுவர் குறள் சொல்கிறார். 


"நீ நல்லவன் என்று உன்னை நம்பி வீட்டுக்குள் அனுமதித்த உன்  நண்பனுக்கு அல்லது உறவினனுக்கு நீ துரோகம் செய்கிறாய் என்றால் நீ மனிதன் அல்ல, விலங்கு கூட அல்ல, செத்த பிணம் போன்றவன்"


என்று மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடுகிறார். 



பாடல் 


விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தார்இல்

தீமை புரிந்தொழுகு வார்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/3.html


(pl click the above link to continue reading)



விளிந்தாரின் =  இறந்தவர்களின் 


வேறல்லர் = வேறு அல்லர் 


மன்ற = உறுதியாக 


தெளிந்தார்இல் = தெளிந்தவர் இல்லத்தில் 


தீமை புரிந்தொழுகு வார் = தீமை செய்து வாழ்பவர்கள் 


"தெளிந்தார் இல் " என்றால் நீ நல்லவன், தவறு செய்யமாட்டாய் என்று நம்பிக்கை கொண்டவன் இல்லம். அவனுக்கு இவன் மேல் சந்தேகம் இல்லை. தெளிவாக இருக்கிறான். இவன் நம்பத்தகுந்தவன் என்று தெளிவாக முடிவு செய்து மனைவியோடு தனியாக விட்டுச் செல்கிறான். எனவே, அவனை தெளிந்தார் என்றார். 


அப்படி நம்பியவனை துரோகம் செய்பவனை ஏன் பிணம் என்றார்? 


பரிமேலழகர் கூறுகிறார் "அறம், பொருள், மற்றும் இன்பம் என்பவை உயிர் சார்ந்த விடயம். இந்த மூன்றும் நம்பிக்கை துரோகம் செய்பவனுக்கு கிடைக்காது என்பதால் பிணத்துக்கும் அவனுக்கும் ஒரு வேற்றுமையும் இல்லை என்கிறார். 


வள்ளுவர் "தீமை" என்று தான் சொல்லி இருக்கிறார். அவன் வீட்டில் உள்ள பொருளை திருடுவது கூட தீமைதான். ஆனால், இந்த அதிகாரம் பிறனில் விழையாமை என்பதால், இங்கே தீமை என்பதை அவன் மனைவி மேல் ஆசை கொள்வது என்று அர்த்தம் செய்து கொள்ள வேண்டும். 


அவன் வீட்டுக்குப் போய், அவன் மனைவி கையால் சமைத்த உணவை உண்டுவிட்டு, அவனுக்கு துரோகம் செய்வது என்பது செய்நன்றி கொன்ற குற்றம். 


எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை 

செய்நன்றி கொன்ற மகற்கு 


என்ற குறளும் இங்கே எண்ணத் தக்கது. 


இந்த அதிகாரத்தின் தலைப்பு பிறனில் விழையாமை. 


பிறனில் அனுபவிக்காமை, அபகரிக்காமை என்று சொல்லவில்லை. 


மற்றவன் மனைவியை தொட வேண்டும் என்று கூட தேவையில்லை. மனதால் நினைத்தாலே அது குற்றம் என்பதால் 'விழையாமை" என்றார். விரும்பாமை. 


அவன் மனைவி எவ்வளவு அழகாக இருக்கிறாள், எப்படி அழகாக பேசுகிறாள். எப்படி சமைக்கிறாள். எனக்கும் ஒண்ணு வாய்த்து இருக்கிறதே. அந்தப் பெண்ணை போல இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று மனதளவில் நினைப்பது கூட குற்றம் என்கிறார். 


வள்ளுவர் ஏதோ ஆணாதிக்க சிந்தனை உள்ளவர், பெண்ணடிமையை போற்றுபவர் என்று சிலர் நினைக்கலாம். அவர்கள் இந்தக் குறளையும், இந்த அதிகாரத்தையும் படிக்க வேண்டும். 


மற்றவன் மனைவியை நினைப்பவனை பிணம் என்று சாடுகிறார் வள்ளுவர். 







Monday, June 13, 2022

நளவெண்பா - கற்பின்தாழ் வீழ்த்த கதவுநளவெண்பா - கற்பின்தாழ் வீழ்த்த கதவு

நளவெண்பா - கற்பின்தாழ் வீழ்த்த கதவு


எப்பப் பார்த்தாலும் அறம், பக்தி, துறவு, நிலையாமை என்று படிக்காமல் இடையிடையே கொஞ்சம் ஜொள்ளு பாடல்களையும் அறிவோம். 


தமிழ் இலக்கியத்தில் ஜொள்ளுக்கு ஒரு குறைவில்லை. ஒரு எல்லை தாண்டாமல் மிக நளினமாக காதலை, அதன் நெருக்கத்தை, பிரிவை, சோகத்தை எல்லாம் சொல்லி இருக்கிறார்கள். 


நள மன்னனுக்கும் தமயந்திக்கும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமலேயே காதல். அன்னம் எல்லாம் தூதுவிட்டு முடிந்து விட்டது. நளன், தமயந்தி இருக்கும் மாளிகைக்கு வருகிறான். அது பெரிய கதை. அதை பின்னர் காண்போம். 


முதன் முதலாக இருவரும் சந்திக்கிறார்கள். 


அந்த இடத்தில ஒரு பாட்டு வைக்கணும் என்று புகழேந்தி நினைக்கிறார். 


முதன் முதலாக காதலர்கள் சந்திக்கிறார்கள். என்னென்ன நடக்கும் என்று எல்லோருக்கும் தெரியும். எல்லாவற்றையும் இலக்கியத்தில் வெளிப்படையாக சொல்லவும் முடியாது. சொல்லாவிட்டாலும் சுவை இருக்காது. கத்தி மேல் நடப்பது போன்ற இடம். கொஞ்சம் தவறினாலும் விரசமாகிவிடும் அபாயம். 


மிக அற்புதமான கவிதை ஒன்றைத் தருகிறார் புகழேந்தி. 


நள மன்னனை பார்த்ததும் அவள் இது நாள் வரை கட்டுப் படுத்தி, அடக்கி வைத்து இருந்த கற்பின் கதவு தாழ் திறந்தது என்கிறார். 


அவ்வளவுதான். மற்றவற்றை நம் கற்பனைக்கு விட்டு விடுகிறார். 


பாடல் 


நீண்ட கமலத்தை நீலக் கடைசென்று

தீண்டும் அளவில் திறந்ததே - பூண்டதோர்

அற்பின்தாழ கூந்தலாள் வேட்கை அகத்தடக்கிக்

கற்பின்தாழ் வீழ்த்த கதவு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_13.html


(Pl click the above link to continue reading)




நீண்ட கமலத்தை  = நீண்ட தாமரை போன்ற முகம் கொண்ட நளனை 


நீலக் கடைசென்று = நீலோற்பலம் போன்ற கண்களை உடைய தமயந்தியின் கண்கள் 


தீண்டும் அளவில் = தீண்டிய அந்த நேரத்தில் 


திறந்ததே = திறந்து கொண்டதே  


பூண்டதோர் = பூட்டி வைக்கப்பட்ட 


அற்பின்தாழ = அன்பு மிக 


கூந்தலாள் = கூந்தலை உடைய தமயந்தியின் 


வேட்கை =  ஆசையை 


அகத்தடக்கிக் = உள்ளத்துள் அடக்கி 


கற்பின்தாழ் = கற்பு என்ற தாழ்பாள் 


வீழ்த்த கதவு. = வீழ, திறந்து கொண்ட கதவு 


என்ன ஒரு உவமை. 


அவளுடைய மனம் என்ற அறையில், அவளுடைய நிறை தன்மை என்ற கதவுக்கு, கற்பு என்ற தாழ்பாள் போட்டு வைத்து இருந்தாள். நளனை கண்டவுடன், அவன் மேல் கொண்ட காதலால் அந்த கற்பு என்ற தாழ்பாள் விலகி கதவு திறந்து கொண்டது என்கிறார்.


கவிதை ஓட்டத்தில் படித்தால் அதன் சுவை தெரியும். 


சுகமான, ஒரு தென்றல் தலை கலைத்து விட்டுப் போவது போன்ற ஒரு சுகம். 




Sunday, June 12, 2022

திருக்குறள் - பிறனில் விழையாமை - 2 - அறம் பொருள் கண்டார்

  

 திருக்குறள் - பிறனில் விழையாமை - 2 - அறம் பொருள் கண்டார் 


(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலைத் தலங்களில் காணலாம் 


முன்னுரை - https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_8.html


குறள் 141: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/1_10.html


)


பிறன் மனைவியை காதலித்து வாழும் பேதைமை அறம் பொருள் கண்டாருள் இல்லை என்றார் முதல் குறளில். 


அடுத்த குறளில் அது எவ்வளவு பெரிய பேதைமை என்று சொல்கிறார். 


காமவயப்ட்டு எவ்வளவோ பேர் எவ்வளவோ தவறான காரியங்களைச் செய்கிறார்கள். அவர்களை எல்லாம் வகைப் படுத்தினால், இந்த பிறன் மனை நோக்கியவன் இருக்கிறானே அவன் எல்லோருளும் கடைசியாக இருப்பான் என்கிறான். அதாவது உள்ளதுக்குள் மோசமானவன் என்கிறார். 




பாடல் 


அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை

நின்றாரின் பேதையார் இல்



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/2.html


(pl click the above link to continue reading)


அறன்கடை = அறத்தின் எல்லையில், அதாவது வெளியில் 


நின்றாருள்  = நின்றவர்களுள் 


எல்லாம் = அனைவரிலும் 


பிறன்கடை = மற்றவன் வீட்டு வாசலில் 


நின்றாரின் = நின்றவனைப் போல 


பேதையார் இல் = பேதை வேறு யாரும் இருக்க மாட்டார்கள் 




அற நெறி விலகியவர்கள் ஏதோ பெரிய வரிசை (queue) நிற்பது போலவும், அதில் கடைசியாக நிற்பவன் இந்த பிறன் மனை விரும்பியவன் என்றும் கூறுகிறார். 


இன்னொருவன் மனைவி மேல் ஒருவன் ஏன் ஆசை கொள்கிறான்? அவளிடம் ஏதோ இன்பம் கிடைக்கும் என்பதால் தானே? சமுதாயம் சீரழியும் என்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். நீ தேடிய இன்பமும் உனக்குக் கிடைக்காது என்கிறார் வள்ளுவர். 


அப்புறம் எதற்கு அதைச் செய்வானேன்? 


வள்ளுவர் "நின்றாருள் எல்லாம்" என்று சொல்லி விட்டார். நின்றவர்கள் எல்லாம் யார் யார் என்று சொல்லவில்லை. பரிமேலழகர் சொல்கிறார். 


காம வயப்பட்டவர்கள் பலவிதமான குற்றங்களைச் செய்வார்கள். அவை என்னென்ன என்று பரிமேலழகர் சொல்கிறார். 


காமவயப்படவன் 


பெண்வழிச் சேறல் 

வரைவின் மகளிரைச் சேறல் 

இழிகுல மகளிரைச் சேறல் 

பிறன்மனை சேறல் 


என்ற நான்கு விதமான குற்றங்களைச் செய்வார்கள் என்கிறார். 


அவை என்னென்ன என்று பார்ப்போம். 


சற்று நெருடலான விடயம்தான். என்ன செய்வது? 


பெண்வழிச் சேறல் என்றால் பெண்ணின் பேச்சைக் கேட்டு நடப்பது. "ஆஹா ஆணாதிக்க சிந்தனை, பெண்ணடிமை" என்று கொடி பிடிக்கும் முன் சற்று பொறுப்பது நல்லது. 


ஒரு பெண்ணிடம் காமவசப்பட்டு அவள் சொல்வதைக் கேட்டு வீட்டு மற்றும் நாட்டு நிர்வாகத்தை நடத்துவது குற்றம் என்கிறார். அன்போடு மனைவி சொல்கிறாள், அம்மா சொல்கிறாள் என்றால் அதைக் கேட்பதில் தவறில்லை.  காமவசதில்  ஒரு பெண் சொல்கிறாள் என்பதற்காக ஒரு நாட்டிலோ, நிர்வாகத்திலோ ஒருவன் ஒரு முடிவை எடுப்பான் என்றால் அது தவறு என்கிறார்.  


நாம் செய்தித் தாள்களில் பார்கிறோமே. பெரிய அதிகாரிகளை, இராணுவ இரகசியம் தெரிந்தவர்களை, அரசியல்வாதிகளை பெண்களை அனுப்பி மயக்கி, பின் அதைக் கொண்டு அவர்களை மிரட்டி தங்களுக்கு வேண்டியதை சாதித்துக் கொள்பவர்கள் இருக்கிறார்கள்.  இதை ஆங்கிலத்தில் Honey Trap என்று சொல்லுவார்கள். 


அது முதல் குற்றம். 


இரண்டாவது  வரைவின் மகளிரைச் சேறல்.   இப்படிதான் வாழவேண்டும் என்று ஒரு வரையறை செய்து கொண்டு வாழ்வது ஒரு முறை. அப்படியெல்லாம் இல்லை, எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று நினைப்பது இன்னொரு முறை. வரைவு இல்லாமல் வாழும் பெண்களை வரைவின் மகளிர் என்று சொல்லுவார்கள். அப்படி ஒரு கூட்டம் இருந்திருக்கிறது, இன்றும் இருக்கிறது. விலைமகளிர் என்று சொல்லுவார்களே. நாகரீகம் கருதி, மேலும் விவரிக்காமல் விட்டு விடுவோம். 


மூன்றாவது, இழிகுல மகளிர் என்கிறார். அதாவது தன்னை விட தாழ்ந்த, பொருத்தம் இல்லாத பெண்ணிடம் காமம் கொண்டு செல்வது. இதை எப்படி விவரிப்பது ? அப்படியே விட்டுவிடுகிறேன். இது குலம் பற்றியது அல்ல, பொருந்தா காமம் என்று வைத்துக் கொள்ளுங்கள். 


அடுத்ததாக பிறன் மனை நயத்தல். 


ஏன் இந்த பிறன் மனை நயத்தலை எல்லோரிலும் கீழாக வள்ளுவர் சொன்னார் என்றால்....


முதல் சொன்ன மூவர்க்கும் அறமும், பொருளும் நட்டப்படும். ஆனால் இன்பம் கிடைக்கும். 


ஆனால், பிறன் மனை நயந்தவனுக்கு இன்பமும் கிடைக்காது.  எப்போது அந்தப் பெண்ணின் கணவன் வந்து விடுவானோ, வேறு யாரும் பார்த்து விடுவார்களோ என்று பயந்து பயந்து தான் இன்பம் அனுபவிக்கப் போக முடியும். அப்படி ஒரு பயத்தில் இன்பம் அனுபவிக்க முடியுமா? 


அறமும் போய், பொருளும் போய், இன்பமும் கிடைக்காமல் போவதால் அவனை வடி கட்டின முட்டாள் என்கிறார் வள்ளுவர். 


எல்லாவற்றையும் இழந்து, ஒன்றும் கிடைக்காமல் நிற்பவனை என்ன என்று சொல்லுவது?


அது மட்டும் அல்ல, பழி, அவமானம், தலை குனிவு எல்லாம்வரும் அல்லவா?


என்னதான் கிடைக்கும் என்று இன்னொருவன் மனைவியை விரும்பி ஒருவன் போகிறான் என்று  வள்ளுவர் அவனை கண்டிக்கிறார். 


சற்று சங்கடமான குறள்தான். அறம் சொல்ல வந்துவிட்டால் எல்லாம் கூறித்தான் ஆகவேண்டும் என்று வள்ளுவர் அதையும் வெளிபாடையாக கூறினார். 
















Saturday, June 11, 2022

திருவாசகம் - யாத்திரைப் பத்து - இது செய்மின், இன்றே

திருவாசகம் - யாத்திரைப் பத்து - இது செய்மின், இன்றே 


ஆன்மீகம் சிலசமயம் குழப்பமாகவும், தெளிவற்று மயக்கம் தருவதாகவும் தோன்றும். 


ஒரு பக்கம் கடவுள் இல்லை என்று கூறும் கூட்டம். 


இன்னொரு பக்கம் கடவுள் இருக்கிறார் ஆனால் எங்கள் கடவுள்தான் உண்மையான கடவுள் எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை என்று கூறும் மதங்கள் ஆயிரம். என் கடவுள் முக்தி தருவார், என் கடவுள் இறுதித் தீர்ப்பு தருவார், என்று ஆளாளுக்கு தங்கள் மதம், கடவுள் பற்றிக் கூறுகிறார்கள். இதில் எது சரி, எது தவறு என்று எப்படி கொள்வது? 


நாம் பிறந்த ஒரே காரணத்தால் என் மதம் உயர்ந்தது என்று எப்படிச் சொல்ல முடியும்? 


சரி கடவுள் கூட ஒருவர்தான் என்று ஏற்றுக் கொண்டாலும், அவரை அடையும் வழி எது தெரிய மாட்டேன் என்கிறது. 


மதங்களுக்குள் உள்ள வேறுபாடுகள் ஒரு புறம் இருக்கட்டும்.  இந்து மதத்தின் உள்ளே கூட பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், கர்ம மார்க்கம்  என்று பலவிதமான மார்க்கங்கள் இருக்கின்றன. எதை கொள்வது. எதைத் தள்ளுவது என்று புரியாமல் குழப்பம் வரும். 


சரி ஏதோ ஒரு கடவுள், ஏதோ ஒரு மார்க்கம் என்று முடிவு செய்து விட்டால் கூட, அதில் போக எங்கே நேரம் இருக்கிறது?  வீடு, வேலை,  சம்பாத்யம்,  பொழுது போக்கு, உடல் ஆரோக்கியம் என்று ஒவ்வொரு நாளும் போய் விடுகிறது.  


இதில் எங்கே ஆன்மீகத்தில் ஈடுபட எங்கே நேரம் இருக்கிறது? 


இப்படி எல்லாம் குழப்பம் வரும் என்று மணிவாசகருக்குத்  தெரியும். 


" பக்தி செய்யும் பக்தர்களுக்குள் இன்றே வந்து சேராமல், மயக்கம் கொண்டவர்களே, பின்னாளில் நீங்கள் துன்பப்படும் போது உங்களை யார் மதிக்கப் போகிறார்கள்? உங்கள் குழப்பம் தெளிய வேண்டும் என்றால், ஒன்று செய்யுங்கள், சிவலோகத்து அதிபன், பாம்பணிந்த கைகளை கொண்டவனை அடையாமல் வேறு ஏதேதோ செய்து கொண்டிருக்கிறீர்கள். ஐயோ, ஐயோ, ஐயோ "


என்று பதறுகிறார். 


பாடல் 


 புரள்வார், தொழுவார், புகழ்வார், ஆய்; இன்றே வந்து, ஆள் ஆகாதீர்,

மருள்வீர்; பின்னை, மதிப்பார் ஆர்? மதியுள் கலங்கி, மயங்குவீர்;

தெருள்வீர் ஆகில், இது செய்மின்; சிவலோகக் கோன், திருப்புயங்கன்

அருள் ஆர் பெறுவார், அகல் இடத்தே? அந்தோ! அந்தோ! அந்தோவே!


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_11.html


(please click the above link to continue reading)



 புரள்வார் = தரையில் கிடந்து புரள்வார் 


தொழுவார் = வணங்குவார் 


புகழ்வார் = போற்றுவார் 


 ஆய் = ஆகி 


இன்றே வந்து = இன்றே வந்து 


ஆள் ஆகாதீர், = ஆட்படாமல் 


மருள்வீர் = மயக்கம் கொள்வீர்கள் 


பின்னை = பின்னாளில் 


மதிப்பார் ஆர்? = உங்களை யார் மதிக்கப் போகிறார்கள் 


மதியுள் கலங்கி = புத்தி குழம்பி 


மயங்குவீர்; = மயக்கம் கொண்டு 


தெருள்வீர் ஆகில் =அதில் இருந்து தெளிவு அடைய விரும்பினால் 


இது செய்மின் = இதைச் செய்யுங்கள் 


சிவலோகக் கோன் = சிவலோகத்து அதிபன் 


திருப்புயங்கன் = பாம்பணிந்த கைகளை கொண்டவன் 


அருள் ஆர் பெறுவார் = அருளை வேறு யார் பெறுவார்கள் ?


அகல் இடத்தே? = வேறு இடத்தில் 


அந்தோ! அந்தோ! அந்தோவே! = ஐயோ, ஐயோ, ஐயோவே 


படித்துக் கொண்டே இருந்தால், சிந்தித்துக் கொண்டே இருந்தால் இருக்க வேண்டியதுதான்.  குழப்பம்தான் மிஞ்சும். 


அவனை அறிவு கொண்டு காண முடியாது. 


அறிவு ஏற ஏற புரளுதலும், தொழுதலும் நிகழ்வது கடினமாகிப் போகும். அறிவு தடுக்கும்.  "தரையில் கிடந்து புரள்வதா?" என்று அறிவு தடுக்கும். 


ஆனால், புரண்டும், தொழுதும், போற்றியும் எளிதாக இறைவனை அடையலாம்.  அதை விட்டு விட்டு, ஏதேதோ செய்து கொண்டிருகிரீர்களே, ஐயோ, ஐயோ, ஐயோ என்று  பச்சாதப் படுகிறார் மணிவாசகர். 


இதெல்லாம் செய்ய நாள் கிழமை பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது. 


"இன்றே இதைச் செய்மின்" என்கிறார். 


இந்தப் பாடலோடு யாத்திரைப் பத்தில் உள்ள பத்து பாடல்களையும் நாம் பார்த்து விட்டோம். 


வாசித்தமைக்கு நன்றி.