Tuesday, August 27, 2013

வில்லி பாரதம் - தருமன் வேண்டுகோள்

வில்லி பாரதம் - தருமன் வேண்டுகோள் 


பன்னிரண்டு வருடம் வனவாசமும், ஒரு வருட அஞ்ஞாத வாசமும் முடிந்தபின் பாண்டவர்களுக்குத் தரவேண்டிய அரசை துரியோதன் தரவில்லை.

அவனிடம் தூது போகச் சொல்லி கண்ணனை பாண்டவர்கள் வேண்டினார்கள்.

முதலில் தருமன் வேண்டுகிறான்.....

"நீ எங்களுக்காகத் தூது சென்று நாங்கள் நினைப்பதை அவனிடம் சொல்லி,  எங்களுக்குச் சேர வேண்டிய பாகத்தை கேள். கொடுத்தால் நல்லது. நாட்டை கொடுக்க  மாட்டேன், போரை (war )க்  கொடுப்பேன் என்றால் அதுவும் நல்லது. நாடு அல்லது போர், இதில் இரண்டில் ஒன்றைப் பெற்றுக் கொண்டு வா " என்கிறான்.



பாடல்

நீதூதுநடந்தருளி யெமதுநினைவவர்க்குரைத்தானினைவின்வண்ணந்
தாதூதியளிமுரலுந் தண்பதியுந் தாயமுந்தான் றாரானாகின்
மீதூதுவளைக்குலமும் வலம்புரியுமிகமுழங்கவெய்யகாலன்
மாதூதர்மனங்களிக்கப்பொருதெனினும் பெறுவனிது வசையுமன்றே.


சீர் பிரித்த பின்

நீ தூது நடந்து அருளி எமது நினைவு அவர்க்கு உரைத்தால் நினைவின் வண்ணம் 

தாதூ ஊதி அளி  முரலும் தண் பதியும் தாயமும் தாரானாகின் 

மீது ஊது வளைக் குலமும்  வலம்புரிம் மிக முழங்க வெய்ய காலன்

மா தூதர் மனங் களிக்கப் பொருதெனினும் பெறுவன் இனிது, வசையும் அன்றே 

பொருள்

நீ தூது நடந்து அருளி = நீ தூது சென்று அருளி

எமது நினைவு = நாங்கள் நினைப்பதை

அவர்க்கு உரைத்தால் = துரியோதனுக்கு உரைத்தால்

 நினைவின் வண்ணம்  = நினைத்த மாதிரி

தாதூ ஊதி = பூக்களில் உள்ள மகரந்தப் பொடிகளை ஊதி

அளி  முரலும் = வண்டுகள் முரலும்

தண் பதியும் = குளிர்ச்சியான இடமும்

தாயமும் = அதிகாரமும்

தாரானாகின் = தரவில்லை என்றால்

மீது = அதற்கு மேல்

 ஊது வளைக் குலமும் = சப்தமிடும் சாதாரண சங்குகளும்

வலம்புரிம் =  சிறந்த வலம்புரி சங்குகளும்

மிக முழங்க = மிகுந்த சப்த்தம் எழுப்ப

வெய்ய காலன் = கொடிய காலனின்


மா தூதர் = பெரிய தூதர்கள்

மனங் களிக்கப் = மனம் சந்தோஷப் படும்படி (ஏன் சந்தோஷம் ? போர் வந்தால் நிறைய உயிர்கள் கிடக்குமே...அடிக்கடி அலைய வேண்டாமே ...அந்த சந்தோஷம் )

பொருதெனினும் = போர் என்றாலும்

பெறுவன் இனிது = சந்தோஷமாக பெற்றுக் கொள்வேன்

வசையும் அன்றே = அது வசை பேச்சுக்கு உரியது அல்ல . உறவினனை கொன்றான் என்ற பழி வராது. போருக்கு அஞ்சி கானகம் போனான் என்ற பழியும் வராது.







1 comment:

  1. அப்பாடி, மனுசனுக்குப் புரியக்கூடாதுன்னே எழுதி இருக்காரு!

    ReplyDelete