Wednesday, August 21, 2013

இராமாயணம் - தோள் அளவு

இராமாயணம் - தோள் அளவு 




நலம் கொள் மைந்தனைத் தழுவினன்' என்பது என்? நளிநீர்
நிலங்கள் தாங்குறு நிலையினை நிலையிட நினைந்தான்,
விலங்கல் அன்ன திண் தோளையும், மெய்த் திரு இருக்கும்
அலங்கல் மார்பையும், தனது தோள், மார்பு, கொண்டு அளந்தான். 

பதவி என்பது சாதாரண விஷயம் அல்ல. பதவியை கொடுப்பதும் ஏற்றுக் கொள்வதும் மிகுந்த அக்கறையுடன் செய்யப் பட வேண்டிய விஷயங்கள். பதவியோடு கூடி பொறுப்பு  வரும். பொறுப்புகளை நிறைவேற்றும் போது தவறுகள் நிகழலலாம். பதவியின் பொறுப்பை உணராதவன்தான் பதவி பதவி என்று அலைவான்.

தசரதன், இராமனுக்கு அரசாட்சி என்ற பொறுப்பை,  அரச பதவியை தருவதற்கு முடிவு செய்து விட்டான்.  இராமனை அழைத்து வரச் சொன்னான். இராமனும் வந்தான்.

வந்தவனை கட்டித் தழுவினான்.

எதற்கு ? அன்பினாலா ? இல்லை.

இத்தனை வருடம் தசரதன் அரசை ஆண்டான்.  அந்த ஆட்சிப் பொறுப்பு அவன் தோளில் இருந்தது.   இப்போது அனுவம் எதுவும் இல்லாத இராமனிடம் அரசைக் கொடுக்கப் போகிறான். இராமனால் இந்த பொறுப்பை ஏற்று நடத்த முடியுமா ? அவன் தோள்களுக்கு அந்த வலிமை இருக்கிறதா என்று அறிய, அவனை அணைக்கும் போது  இராமனின்  தோளை தன் தோள்களால் அளந்து பார்த்தானாம்.

பொருள்



நலம் கொள் = நன்மைகள் நிறைந்த

மைந்தனைத் = மகனை (இராமனை)

தழுவினன்' என்பது என்? = தழுவினான், எதற்காக

நளிநீர் = கடல் சூழ்ந்த

நிலங்கள் = இந்த உலகத்தை

தாங்குறு நிலையினை = தாங்கக் கூடிய நிலையை

நிலையிட நினைந்தான் = அளவிட நினைத்தான்

விலங்கல் அன்ன திண் தோளையும் = மலை போன்ற தன்னுடைய தோளையும்

மெய்த் திரு இருக்கும் = உண்மையான திரு இருக்கும். அதாவது திருமகள் நிஜமாக இருக்கும்

அலங்கல் மார்பையும் = மாலை அணிந்த மார்பையும்

தனது தோள், மார்பு, கொண்டு அளந்தான். = தனது தோளையும் மார்பையும் கொண்டு அளந்தான்


1 comment:

  1. தனது மகன் என்றாலுமே, அவனுக்குத் தகுதி இருக்கிறதா என்று சோதிக்க எண்ணியதே ஒரு அருமை. நமது அரசியல்வாதிகளுக்கும், தொழில் அதிபர்களுக்கும் ஒரு பாடம்.

    ReplyDelete