Friday, August 30, 2013

இராமாயணம் - வரம்பு அறு திருவினை

இராமாயணம் - வரம்பு அறு திருவினை 


அரசு பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்படி இராமனிடம் தசரதன்  வேண்டுகிறான்.

"எனக்கு வயதாகி விட்டது. நொண்டி எருது பாரம் சுமப்பது மாதிரி இந்த வயதான காலத்தில் நான் இந்த அரச பாரத்தை இழுத்துக் கொண்டு  செல்கிறேன். இதை விடுத்து , அந்த எல்லை இல்லாத இன்பத்தை அடையும் ஆசை எனக்கு இருக்கிறது...ஐயா, நீ இதை எனக்கு அருள வேண்டும் " என்று இரைஞ்சுகிரான் .

பாடல்

ஒருத்தலைப் பரத்து ஒருத்தலைப் பங்குவின் ஊர்தி
எருத்தின், ஈங்கு நின்று, இயல்வரக் குழைந்து, இடர் உழக்கும்
வருத்தம் நீங்கி, அவ் வரம்பு அறு திருவினை மருவும்
அருந்தி உண்டு, எனக்கு; ஐய! ஈது அருளிடவேண்டும்

பொருள்





ஒருத்தலைப் பரத்து = ஒரு பக்கம் அரச பாரம்

ஒருத்தலைப் பங்குவின் ஊர்தி எருத்தின் = மற்றொருபுறம் ஊனம் உற்ற வண்டி இழுக்கும்  மாடு ,

ஈங்கு நின்று = அதுபோல இருந்து

இயல்வரக் குழைந்து = இயல்பாகவே வருந்தி

இடர் உழக்கும் = துன்பத்தில் உழலும்

வருத்தம் நீங்கி = வருத்தம் நீங்கி

அவ் = அந்த

வரம்பு அறு = எல்லை இல்லாத

திருவினை = செல்வத்தை , இன்பத்தை, முக்தியை

 மருவும் =  அணைக்கும்,அடையும்

அருந்தி உண்டு, எனக்கு = ஆசை எனக்கு உண்டு

ஐய! = ஐயனே

ஈது அருளிடவேண்டும் = நீ இதை எனக்கு அருள வேண்டும்

ஒரே ஒரு நரை முடி தசரதனை இந்த பாடு  படுத்துகிறது. மூப்பு வந்து விட்டது. இறப்பதற்குள் வீடு பேறு அடையும் வழியை காண வேண்டும் என்று தவிக்கிறான்.

உங்களுக்கு உள்ளுணர்வில் நம்பிக்கை இருக்கிறதா ?

தசரதன் அவசரப்  படுகிறான். தனக்கு ஏதோ நிகழ்ந்து விடும், அதற்கு முன் இந்த அரசை தகுதியான  ஒருவனிடம் கொடுக்க வேண்டும் என்று.

உண்மையோ பொய்யோ, அன்றிரவே தசரதன் இறந்தும்  போனான்.

முக்திக்கு வழி காண  முடியவில்லை.

அரசை ஏற்றுக் கொள் என்று இராமனிடம்  வேண்டினான். இராமன் ஏற்றுக் கொள்வதாகச்  சொன்னான்.அதை கைகேயிடம்  சொன்னான். அவள் இரண்டு வரம் கேட்டாள் . அதைக் கேட்டு மாரடைப்பால் மாண்டு போனான்.

இராமாயணம் சொல்லும் பாடம்  இது. மரணம் எப்போது  வரும். எதை செய்ய வேண்டுமோ அதை உடனே செய்ய வேண்டும்.

தசரதனுக்கு , முதல் நரை முடி கண்டதற்கும், மரணத்திற்கும் நடுவில் சில மணித்துளிகளே  கிடைத்தது.

யுத்தம்  இல்லை. நோய்வாய்ப்  படவில்லை.

கூனி வடிவில் கூற்றம் அவனுக்கு  வந்தது.

யோசிக்க வேண்டிய விஷயம்.




1 comment:

  1. எனவே, உடனடியாக வேலையை ராஜினாமா செய்து விட்டு, பக்தி பூஜை புனஸ்காரத்தில் இறங்கக் காசி சென்று விடு!

    ReplyDelete