Tuesday, August 6, 2013

திருக்குறள் - நிலமும் நீரும்

திருக்குறள் - நிலமும் நீரும் 



நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்
கினத்தியல்ப தாகும் அறிவு.

போன குறளில் பெருமை சிற்றினம் கண்டு அஞ்சும் என்று  பார்த்தோம்.

சிலருக்கு அதில் சந்தேகம். எல்லோரும் நமக்கு ஏன் வம்பு என்று விலகி விட்டால் கெட்டவர்களை யார் திருத்துவது என்று ?

வள்ளுவர் சொல்லுகிறார்....

நம் அறிவு இருக்கிறதே அது  நீர் போன்றது. அது எந்த நிலத்தில் விழுகிறதோ அந்த நிலத்தின் தன்மையை  பெரும்.

செம்மண் நிலத்தில் விழுந்தால் செந்நீராக மாறும்.

கரிசல் காட்டில் விழுந்தால் கரிய நீராக மாறும்.

திரிதல் என்றால்  மாறுதல்.பால் திரிந்து விட்டது என்றால் பால் அப்படியேதான் இருக்கும், அதன் குணம்  மாறிப் போகும்.

நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்றாகும்  மாந்தர்க்கு
இனத்து இயல்பாகும் அறிவு

நிலத்தோடு சேர்ந்த நீரின் குணம்  மாறுவது போல மக்களுக்கு அவர்கள் சேர்ந்த  இனத்தால் அறிவு மாறும்.

 நல்ல  அறிவு வேண்டும் என்றால் நல்ல இனத்தோடு சேருங்கள்.

அப்படி நல்ல அறிவு வேண்டாம் என்றால் மற்ற இனத்தோடு சேருங்கள். கெட்டவர்களை  திருத்துவது உங்கள் நோக்கம் என்றால் கெட்டவர்களோடு
பழகுங்கள் அவர்கள் திருந்துகிறார்களோ இல்லையோ, உங்கள் அறிவு மாற்றம்  அடையும்.

நீர் திரிந்து அற்றாகும் என்றார். அது என்ன அற்றாகும் ? அற்றம் என்றால் முடிவு. அறிவு அற்றம் காக்கும்  கருவி என்பது  வள்ளுவம்.

நீர் திரிந்து போவது மட்டும் அல்ல, அது அதன் முடிவை அடையும். அழிந்து போகும்.

அது போல கெட்டவர்களோடு சேர்ந்த நல்லவர்களின் அறிவும் அழிந்து போகும்.

  

4 comments:

  1. அதே போல நல்லவர்களோடு சேரும் கெட்டவர்களின் குணமும் மாறும் அல்லவா. அப்படி பார்த்தாள் கரை படிவது நல்லதுதானே. சங்கு சுட்டாலும் வெண்மை தரும். அதுபோல நல்லவர்கள் கெட்டு போக மாட்டார்கள் ஆனால் கெட்டவர்கள் திருந்தலாம் இல்லையா

    ReplyDelete
  2. திருந்தலாம். முயற்சி செய்து பார். ஒரு பத்து பதினைந்து கெட்ட ஆட்களோடு பழகி அவர்களை திருத்த முயற்சி செய்.

    ReplyDelete
  3. புவனாவின் கேள்விகள் அருமை! என்னை வாய் விட்டுச் சிரிக்க வைத்தன! நல்ல கேள்விகள்.

    ReplyDelete
  4. பட்டுப் போன மரத்தையும் கெட்டுப் போன மனத்தையும் மாற்றுவதற்கு பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டும். இயலாது என்றில்லை ஆனால் மெனக்கெட வேண்டும் என்று நினக்கிறேன். பூவோடு சேர்ந்த நாரும் மணக்கலாம்...அது நாராக இருந்தால் மட்டுமே. அது நாறும் சேறாக இருக்கும் பட்சத்தில் பூவும் சேறாக நாறத்தான் வாய்ப்பு அதிகம். இதுவும் ஒரு சமீபத்திய பாடம்!!

    ReplyDelete