Tuesday, August 20, 2013

நன்னூல் - மாணாக்கன் தன்மை

நன்னூல் - மாணாக்கன் தன்மை 


நன்னூல்  ஒரு தமிழ் இலக்கண  நூல்.எழுதியவர் பவணந்தி  முனிவர்.

தமிழ் இலக்கணத்தை  எளிய முறையில் பாடல் வடிவில் தொகுத்து  .தரும் நூல்.

 அதில்,மாணாக்கர்களை தரம் பிரிக்கிறார் பவணந்தியார்.

முதல் இடை கடை என்று கடை என்று மூன்று நிலையாக மாணவர்களைப் பிரிக்கிறார்.


பாடல்

அன்ன மாவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடமா டெருமை நெய்யரி
அன்னர் தலையிடை கடைமா ணாக்கர்.


பொருள் 



அன்ன மாவே =  அன்னமும், பசுவும்

 மண்ணொடு கிளியே = மண்ணோடு கிளி

இல்லிக் குடமா டெருமை நெய்யரி = இல்லிக்  குடம், ஆடு, எருமை , நெய்யரி

அன்னர் = போன்றோர்

 தலையிடை கடைமா ணாக்கர் = தலை இடை கடை மாணாக்கர்


என்ன தலை சுத்துதா ?

கொஞ்சம் வார்த்தைகளை மாத்திப் போட்டால் அர்த்தம்  விளங்கும்.

அன்னம் மாவே தலை மாணாக்கர்
மண்ணோடு கிளியே இடை மாணாக்கர்
அன்ன மாவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடமா டெருமை நெய்யரி
அன்னர் தலையிடை கடைமா ணாக்கர்.

கடை மாணாக்கர்

சரி  அது என்ன அன்னம், மா போன்றவை ?

சற்று விரிவாகப்  பார்ப்போம்.

அன்னம் பாலையும் தண்ணீரையும் பிரித்து அருந்தும் இயல்பு  உடையது. அது  போல  சிறந்த மாணவர்கள் தேவை இல்லாததை விட்டு விட்டு தேவையானதை  படிப்பார்கள்.

பசு, புல் கண்ட இடத்தில் வயறு முட்ட வேகமாக நிரப்பிக்  கொண்டு,பின் ஆற அமர அசை  போடும். அது போல சிறந்த மாணவர்கள் நல்ல ஆசிரியனையோ , புத்தகத்தையோ கண்டால் வேகமாக முடிந்த வரை அறிவை   பெற்றுக் கொண்டு  பின் தனிமையில் அதைப் பற்றி  ஆராய்ந்து,சிந்தித்து  தெளிவு  பெறுவான்.

 இது இரண்டும் முதல் தரமான மாணவனின்  இலக்கணம்.

மண்ணோடு கிளியே - இடை மாணவனுக்கு இலக்கணம்.

ஒரு உழவன் எவ்வளவு பாடு படுகிறானோ அந்த அளவுக்கு நிலம் பலன் தரும். அது போல இடை மாணவன், ஒரு ஆசிரியர் எவ்வளவு கஷ்டப் பட்டு சொல்லித் தருகிறாரோ  அந்த அளவு அவனும்  படிப்பான்.அதுக்கு மேல படிக்க மாட்டான். பாட  நூலில் எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவு தான் படிப்பான். மேற்கொண்டு   படிப்பது எல்லாம்  கிடையாது.

கிளி சொன்னதை திருப்பிச்  சொல்லும். அது போல இடை மாணவன் ஆசிரியர்  சொன்னதை அப்படியே வாங்கி , மனப்பாடம் பண்ணி மீண்டும் ஒப்பிப்பான்.  அவ்வளவுதான்.

இந்த இரண்டும் இடை மாணவனுக்கு இலக்கணம்.


இல்லிக் குடமா டெருமை நெய்யரி - கடை மாணவர்

இல்லிக் குடம் என்றால் உடைந்த குடம். அதில் எவ்வளவு  நீர் விட்டாலும்  நிறையாது. நீர் வெளியேறிக்  .கொண்டே இருக்கும். கடை மாணவனுக்கு எவ்வளவு  சொல்லித் தந்தாலும் மண்டையில்  ஒன்றும்  நிற்காது.மறந்து  போவான்.

ஆடு - ஒரு செடியிலும் முழுவதும்  தின்னாது. ஒவ்வொரு செடியிலும் கொஞ்சம்  கொஞ்சமாக  தின்னும். எல்லா செடியிலும் வாய் வைக்கும். ஒன்றையும்  முழுமையாக  உண்ணாது.அது போல கடை மாணவன் ஒன்றையும்  ஒழுங்காகப் படிக்க மாட்டான். இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம்.... இந்த ஆசிரியனிடம் கொஞ்சம் அந்த ஆசிரியனிடம் கொஞ்சம் என்று உருப்படியாக ஒன்றும் படிக்க மாட்டான்.

எருமை -  குளத்தில் நீர் தெளிவாக இருந்தாலும் அது குளத்தில் இறங்கி, அதை கலக்கி  சேறும் நீருமாக சேர்ந்து  குடிக்கும். அன்னம் நீரை விலக்கி பாலை மட்டும்  குடிக்கும்.  எருமையோ தெளிந்த நீரோடு சேற்றையும் சேர்த்து குடிக்கும்.

நெய்யரி என்பது வடி கட்ட உபயோகப் படுத்தும் துணி. வடிகட்டும் துணி நல்லதை  எல்லாம்  விட்டு விட்டு கசடை தன்னுள் தக்க வைத்துக்  கொள்ளும். அது போல, கடை மாணவன், நல்லதை எல்லாம் விட்டு விட்டு, தேவை இல்லாததை  பிடித்து வைத்துக்  கொள்வான்.

இதை எதற்காக பவணந்தியார் சொல்கிறார் ?

ஒன்று, நாம் முதல் மாணவனாக வர  வேண்டும். ஒரு வேளை இடை அல்லது கடை மாணவனாக  இருந்தால் அதை உணர்ந்து நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.

 இரண்டாவது, ஒரு ஆசிரியன் மாணவனை சரியாக எடை போட வேண்டும்.  அப்போதுதான்  அவனுக்கு சரியாக பாடம் சொல்லித் தர  முடியும்.

ஆசிரியனுக்கு இலக்கணம், பாடம் சொல்லித் தரும் முறை பற்றியெல்லாம் அவர் சொல்கிறார்.

அறிந்து கொள்ள உங்களுக்கு ஆவலாய் இருக்கிறதா ?

ஆம் அல்லது  இல்லை என்று பதில்  போடுங்கள். எத்தனை பேருக்கு இதில் ஆர்வம் என்று  அறிந்து கொண்டு மேலே எழுத  உத்தேசம்.


15 comments:

  1. OMG! மூன்று வரிகளிக்குள் இவ்வளவு அர்த்தமா? with out your blog i would have never understood this much meaning from this poem.

    தமிழில் இது மாதிரி எத்தனை பாடல்கள் இருக்கின்றன. அத்தனைக்கும் உரை எழுத ஒரு ஆயுள் போதாது. இந்த மஹா பெரிய வேலையை எழுதி முடிக்க உனக்கு ஒரு 100 வயதும் அதை படித்து முடிக்க எனக்கு ஒரு 100 வயதும் வேண்டி கடவுளிடம் பிரார்தனை பண்ணி கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. I assume not many people are interested in Nannool. No feedback. I will skip it.....

      Delete
    2. மிக அருமையான எளிமையான விளக்கம்.

      Delete
    3. தெளிவான விளக்கம்.நன்றி

      Delete
  2. இது வரை படித்திராத ஒரு புதிய பாடலை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி. கண்டிப்பாக மேலும் அறிய ஆவல். இது ஒரு பாடலின் பகுதியா அல்ல முழு பாடலுமே 3 வரிகள் தானா?

    ReplyDelete
  3. அருமையான பாடல். உன் விளக்கம் இல்லாமல் ஒன்றும் புரிந்திருக்காது.

    இந்த ப்ளாக் மூலம் எத்தனையோ புதிய பாடல்கள் மட்டும் அல்ல, புதிய நூல்களையே பற்றி படிக்க முடிந்திருக்கிறது. என்ன ஒரு இனிமையான பயணம்!

    நன்னூல் மட்டும் அல்ல, இன்னும் புதிய நூல்களையும் பாடல்களையும் பற்றி இன்னும் எழுத வேண்டுகிறேன்.

    ReplyDelete
  4. பயனுள்ள தகவல். மேலும் தகவலிட விரும்பி கேட்கிறேன்.

    ReplyDelete
  5. நன்றி. தமிழை வளர்ப்பதில் நீங்களும் ஒரு கருவியே.

    ReplyDelete
  6. மிக அருமையான எளிமையான விளக்கம்.

    ReplyDelete
  7. கற்க்கும் முறை அறிந்தேன்

    ReplyDelete
  8. அருமையான பதிவு நன்றி

    ReplyDelete
  9. கற்போம் கற்பிப்போம் 📒

    ReplyDelete
  10. நன்றி பல பல

    ReplyDelete
  11. ஆம். அருமையான பதிவு.

    ReplyDelete