திருக்குறள் - தவம்
நீங்கள் மற்ற குறள்களை படிக்கிறீர்களோ, இல்லையோ அல்லது மற்ற புத்தகங்கள் எதையும் படிக்கிறீர்களோ இல்லையோ, இந்த ஒரு குறளை மட்டும் முழுவதுமாக உணர்ந்து படித்தால் போதும் என்று சொல்லுவேன். அவ்வளவு இருக்கிறது.
அப்படி என்ன குறள் அது?
பாடல்
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு
பொருளுக்கு பின்னால் வருவோம்.
அனைத்து உயிர்களும் இன்பத்தையே விழைகின்றன. துன்பம் வேண்டும் என்று யாராவது நினைப்பார்களா ? ஆனால், இன்பம் என்னவோ அத்தி பூத்தாற் போல் என்றோ ஒரு நாள் வருகிறது, சில காலம் இருக்கிறது. பின் மறைந்து விடுகிறது. எப்பப் பாரு துன்பம், வேலை, எரிச்சல், எதிர் காலம் பற்றிய பயம், ஒரு படபடப்பு, இனம் புரியாத ஒரு டென்ஷன், சந்தோஷம் வந்தால் கூட வெளியே காட்டிக் கொள்ள பயம், கண் பட்டு விடுவோமோ என்று, மற்றவர்கள் பொறாமை கொள்வார்களோ என்று பயம்...இன்பத்தில் கூட துன்பமே இருக்கிறது.
இது என்ன வாழ்க்கை? எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை. இன்னும் ஓடு ஓடு என்று வாழ்க்கை ஓட்டிக் கொண்டே இருக்கிறது.
பணம் இருந்தால், உடல் நிலை சரி இல்லை.
உடல் ஆரோக்கியமாக இருந்தால், உறவுகள் சரி இல்லை.
உறவுகள் சரியாக இருந்தால், வேலையில் குழப்பம்.
இப்படி ஒன்றோடு ஒன்று பின்னிக் கொண்டு நம்மை ஒரு பக்கமும் போக விடாமல் வாழ்க்கை புரட்டி புரட்டி எடுக்கிறது.
வெளியே சந்தோஷமாகக் காட்டிக் கொண்டாலும், உள்ளூர ஆயிரம் சிக்கலில் கிடந்து தவிக்கிறோம்.
என்ன செய்வது ? இதில் இருந்து எப்படி வழி படுவது ?
இந்த கேள்வி ஒரு புறம் இருக்கட்டும்.
இலக்கியங்கள் பொதுவாகவே எதையும் மிகைப் படுத்தி கூறும் இயல்பு உடையவை.
ஒருவன் பலசாலி என்று சொல்ல வேண்டும் என்றால், ஆயிரம் யானை பலம் கொண்டவன் என்று சொல்லும். மலையையே தூக்கி விடுவான் என்று சொல்லும். மலையை தூக்க முடியுமா ? முடியாது. இருந்தாலும், பெரிய பல சாலி என்று சொல்லுவதற்கு ஒரு உத்தி அது.
பல இலக்கியங்களில் பார்க்கிறோம்....பெரிய சாதனைகளை செய்பவர்கள், தவம் செய்து , வரம் பெற்று அவற்றை சாதித்தார்கள் என்று பார்க்கிறோம்.
காட்டில் சென்று, முள் முனையில் நின்று, அன்ன ஆகாரம் இன்றி, உடம்பின் மேல் புற்று வளரும் அளவுக்கு தன்னை மறந்து தவம் செய்வார்கள். கடவுள் நேரில் வருவார். வேண்டிய வரங்களை தருவார்...என்றெல்லாம் படித்து இருக்கிறோம்.
தவம் செய்தால், கடவுளே நேரில் வருவார். நாம் நினைத்தது நடக்கும். இந்திர பதவி கிடைக்கும். அகில உலகங்களையும் ஆளலாம். தேவர்களையும் வேலை வாங்கலாம். நீண்ட நாள் வாழலாம். புது உலகையே படைக்கலாம். ரொம்ப ஜாலியாக இருக்கலாம்.
சரி. நம்மால் காட்டில் போய் , ஜடா முடி எல்லாம் வளர்த்துக் கொண்டு தவம் செய்ய முடியுமா ? அன்னம் தண்ணி இல்லாமல் இரண்டு நாள் இருக்க முடியுமா நம்மால்? முடியாது தான்.
அப்படி என்றால் நம்மால் தவம் செய்ய முடியாதா ?
ஆயிரம் யானை பலம் மாதிரி, இவை எல்லாம் கொஞ்சம் அதீத கற்பனை தான்.
காட்டுக்கெல்லாம் போக வேண்டாம்.
வள்ளுவர் சொல்கிறார். தவம் என்றால் என்ன என்று.
ரொம்ப ரொம்ப எளிமையான விளக்கம். ஏழே வார்த்தை.
தவம் என்றால் இரண்டு விஷயங்கள் என்று சொல்ல்கிறார் வள்ளுவர்.
ஒண்ணு நமக்கு வந்த துன்பத்தை பொறுத்துக் கொள்வது.
இன்னொன்று
மற்றவர்களுக்கு துன்பம் செய்யாமல் இருப்பது.
அம்புட்டுதான்.
இதில் முதல் பகுதியை மட்டும் எடுத்துக் கொள்வோம்.
துன்பம் வந்தால் பொறுத்துக் கொள்வது.
அதற்கு என்ன அர்த்தம்?
துன்பம் வரும். வந்து கொண்டே இருக்கும். அதை பொறுப்பதுதான் தவம்.
சற்று விரிவாகப் பார்ப்போம்.
புத்தர் சொல்கிறார், வாழ்க்கை என்பது துன்பம் நிறைந்தது என்று. அதற்கு அர்த்தம் எப்ப பார்த்தாலும் ஏதாவது பசி, பிணி, அடி தடி, சண்டை, வழக்கு, வாய்தா என்று அத்தம் அல்ல.
வாழ்வில் சாதிக்க வேண்டும் என்றால், முயற்சி வேண்டும். எந்த முயற்சியும் கடினமானது தான்.
உதாரணமாக,
பிள்ளை பரீட்சைக்கு படிக்கிறான். ஒரு இடத்தில் இருந்து, ஒவ்வொரு நாளும், பல மணி நேரம் விடாமல் படிப்பது என்பது கடினமான செயல் தான். துன்பம் தான். வலி அல்ல. வருத்தம் அல்ல. ஆனால், துன்பம். முதுகு வலிக்கும். கை வலிக்கும். தூக்கம் வரும். கழுத்து வலிக்கும். அவற்றைப் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். அது தவம்.
கணவன் மனைவி உறவில் ஏதோ சிக்கல். யார் பேசுவது. எப்படி சமாதானம் செய்வது. எப்படி விட்டு கொடுப்பது. தப்பு யார் பேர்ல....இவற்றை எல்லாம் நேருக்கு நேர் இருந்து பேசுவது சங்கடம்தாம். வலி அல்ல. வருத்தம் அல்ல. ஆனாலும், ஒருவித துன்பம் தான். அந்தத் துன்பத்தை பொறுத்துக் கொண்டு, பேசினால்தான் சிக்கல் தீரும். இல்லை என்றால் கோர்ட் படி ஏற வேண்டி வரும்.
அலுவலகத்தில், தொழில் செய்யும் இடத்தில், நண்பர்கள் மத்தியில், உறவில் எங்கும் சிக்கல்கள் வரலாம்...அதை சகித்துக் கொண்டு, அவற்றை களைய வேண்டும். பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றால் ஒன்றும் நடக்காது.
அலுவலகத்தில் மேலே உயர வேண்டுமா ? மற்றவர்களை விட கடினமாக உழைக்க வேண்டும். அது துன்பம் தான். பெண்டாட்டி, பிள்ளைகளை விட்டு விட்டு, சோறு தண்ணி இல்லாமல் இரவு பகலாக உழைத்தால் பதவி உயர்வு வரும். உழைப்பு துன்பம் தான். அந்தத் துன்பத்தை பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றால் சாதிக்க முடியாது.
கணவனுக்கு, மனைவிக்கு, பிள்ளைகளுக்கு நல்லது செய்வோம். அவர்கள் அதை புரிந்து கொள்ளாமல் ஏதாவது பேசி விடுவார்கள். அந்த வார்த்தை துன்பம்தான். அதைப் பொறுப்பது தவம். தவம் செய்தால் வெற்றி கிடைக்கும்.
விளையாட்டில், படிப்பில் என்று எங்கு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். துன்பம் இல்லாமல் இருக்காது.
இன்னும் சொல்லப் போனால் , நாம் செய்ய வேண்டியது எல்லாம் எந்த துன்பம் வேண்டும் என்று தேர்வு செய்வது தான்.
கடினமாக உழைத்து படிக்கும் துன்பம் வேண்டுமா ?
அல்லது நல்ல வேலை இல்லாமல், நல்ல சம்பளம் இல்லாமல் படும் துன்பம் வேண்டுமா?
இந்த இரண்டு துன்பத்தில் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்வது மட்டும் தான் நாம் செய்யக் கூடியது. இரண்டுமே வேண்டாம் என்றால் முடியாது.
நேர்ந்த துன்பத்தை பொறுத்துக் கொள்வது தவம் என்கிறார் வள்ளுவர்.
துன்பத்தை பொறுப்பது ஒன்றும் அவ்வளவு எளிதானது அல்லவே. எப்படி துன்பத்தை பொறுத்துக் கொள்வது? சொல்லுவது எளிது. செய்வது எப்படி?
அதற்குத்தான் விரதம் என்று ஒன்று வைத்தார்கள்.
ஒரு நாள் சாப்பிடாமல் இருந்து பார். அது துன்பம் தான். பசிக்கத்தான் செய்யும். சட்டியில் சாதம் இருக்கிறது. வேண்டுமானால் போட்டு சாப்பிடலாம். சாப்பிடாமல் இருந்து பார். இப்படி ஒவ்வொரு மாதமும் பசி என்ற துன்பத்தை பொறுத்து பழகிக் கொள்கிறோம்.
தூக்கம் வரும். சிவ இராத்திரி. தூங்காமல் இருந்து பார். துன்பம் தான். பொறுத்துப் பழகு. கண் விழித்து வேலை செய்ய வேண்டிய நாட்கள் வரும். அப்போது, இந்த பழக்கம் கை கொடுக்கும்.
மலை ஏறு. பாத யாத்தரை போ. விரதம் இரு. தூக்கம் முழி.
இதெல்லாம் ஒரு பயிற்சி.
"உற்ற நோய் பொறுத்தல்"
நோய் என்றால் துன்பம். துன்பம் வந்தால் தையா தக்கா என்று குதிக்காமல், அமைதியாக அதை ஏற்றுக் கொள்ள பழக வேண்டும். அதுதான் தவம்.
தவம் வெற்றிக்கு வழி வகுக்கும்.
வெற்றி இன்பத்தை கொண்டு வந்து தரும்.
யோசித்துப் பாருங்கள். துன்பம் என்று எவ்வளவு விஷயங்களை நீங்கள் தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறீர்கள் என்று. செய்யணும். செஞ்சால் நல்லது. அப்புறம் செய்யலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போகும் செயல்களின் பட்டியலை தயார் செய்யுங்கள்.
ஒவ்வொன்றாக செய்யுங்கள். ஒவ்வொன்றும் கஷ்டம் தான். செய்து முடிக்க செய்து முடிக்க மனதில் நிம்மதி பிறக்கும். வெற்றி வரும். இன்பம் வரும்.
செய்து பாருங்கள்.
https://interestingtamilpoems.blogspot.com/2019/02/blog-post_25.html