அபிராமி அந்தாதி - வெருவிப் பிரிந்தேன்
உறவினர்களை பெரும்பாலும் நாம் தேர்ந்து எடுப்பதில்லை. அது அமைந்து விடுகிறது. திருமணம், அது சம்பந்தப்பட்ட உறவுகள் வேண்டுமானால் நாம் தேர்ந்து எடுக்கிறோம் என்று சொல்லலாம். அது தவிர ஏனைய உறவுகள், தானே அமைவதுதான்.
நண்பர்களும் அப்படித்தான். நாம் தேடிப் போய் தேர்ந்து எடுப்பது இல்லை. நம் வாழ்வில் எதிர்படுபவர்களில் , நமக்கு பிடித்தவர்களை நாம் நண்பர்களாகக் கொள்கிறோம். அலுவலகம், வேலை செய்யும் இடம், குடி இருக்கும் இடம் என்று பொதுவாக அனைத்து இடங்களிலும் நமக்கு ஏற்படும் தொடர்புகள் நம்மால் முடிவு செய்யப் படுபவை அல்ல. அவை அப்படி நிகழ்ந்து விடுகின்றன.
அப்படி நிகழ்ந்தவைகள், அந்த உறவுகள் நமக்கு நன்மை பயக்கும் என்று எப்படிச் சொல்வது?
நம் நண்பர்களில், நம் உறவினர்களில் நம்மை விட மிக மிக அதிகம் படித்தவர்கள், அறிந்தவர்கள் எத்தனை பேர்? அப்படி ரொம்ப அறிந்தவர்கள் இருந்தாலும், நாம் அவர்களை விட்டு கொஞ்சம் தள்ளியே இருப்போம்.
நமக்குத் தேவை, அரட்டை அடிக்க ஆள், whatsapp போன்றவற்றில் வெட்டிப் பேச்சு பேச, துணுக்குகள் அனுப்ப, கதை பேச, அரசியல் நையாண்டிகள் வாசிக்க , பகிர ஆட்கள்.
சரி, எப்படியோ உறவும், நட்பும் அமைந்து விடுகிறது . அதில் சில நமக்கு நன்மை பயக்காவிட்டாலும் தீமை பயப்பவை என்று அறிந்தும் அவற்றை விட முடிகிறதா?
இருந்து விட்டுப் போகட்டும். அந்த whatsapp குரூப் இல் இருந்து விலகினால் தப்பா நினைப்பாங்க, அந்த association மீட்டிங்குக்கு போகாட்டி நல்லா இருக்காது, என்று தேவை இல்லாத, தீமை பயக்கும் உறவுகளை தூக்கிச் சுமந்து திரிகிறோம்.
அந்த உறவு எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். கணவன், மனைவி, உற்றார், உறவினர், ஆசிரியர், ஆச்சாரியார், என்று எந்த உறவும், தீமை பயப்பதாக இருந்தால், அது தேவையா என்று சிந்திக்க வேண்டும்.
விடுவது கடினம்.
"கல்யாணம் ஆயிருச்சு, இனிமே என்ன பண்றது...ஒண்ணா வாழ்ந்து தொலைக்க வேண்டியதுதான் " என்று உழலும் எத்தனை உறவுகள் நமக்குத் தெரியும்.
அபிராமி பட்டர் துணிந்து முடிவு எடுக்கிறார்.
"தீய வழியில் செல்லும், நரகத்துக்கு செல்லும் மனித உறவுகளை வெறுத்து, அவற்றில் இருந்து பிரிந்து வந்து விட்டேன்"
என்கிறார்.
அது மட்டும் அல்ல, "தீயவர் தொடர்பை விட்டது மட்டும் அல்ல, நல்லவர்கள் நட்பை, உறவை தேடி கண்டு பிடித்து ஏற்றுக் கொண்டேன்" என்றும் சொல்கிறார்.
அற்புதமான பாடல்.
சறுக்குப் பலகையில் வழுக்கிக் கொண்டு செல்வது போல, கை பிடித்து அழைத்துச் செல்லும் பாடல்
பாடல்
அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே! - வெருவிப்
பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்குறவாய மனிதரையே!
பொருள்
அறிந்தேன் = நான் அறிந்து கொண்டேன். எதை அறிந்து கொண்டேன் என்கிறார் ?
எவரும் அறியா மறையை = யாரும் அறியாத ஒரு மறைவான, இரகசியமான பொருளை
அறிந்துகொண்டு = அறிந்து கொண்டு.
செறிந்தேன் = நெருங்கி வந்தேன். நெருங்கி எங்கே வந்தார்?
உனது திருவடிக்கே = உன்னுடைய திருவடிக்கே. உன்னுடைய என்றால் யாருடைய என்ற கேள்வி வரும் அல்லவா?
திருவே! = திரு என்றால் சிறப்பு, செல்வம், உயர்வு, மதிப்பு என்று பல பொருள் உண்டு. சிறந்தவளே என்று பொருள் கொள்ளலாம்
வெருவிப் = வெறுத்துப் போய்
பிறிந்தேன் = பிரிந்தேன். பிரிந்து விட்டேன். எதை விட்டு பிரிந்தார்?
நின் அன்பர் = உன்னுடைய அன்பர்களின்
பெருமை எண்ணாத = பெருமையை நினைக்காத
கரும நெஞ்சால் = வினைப் பயனால், அதை அறிய மாட்டாத என்னுடைய மனதால்
மறிந்தே = மறித்தல் என்றால் தடுத்தல். மறியல் என்றால் strike. தடுமாறி
விழும் = விழும்
நரகுக்குறவாய = நரகத்துக்கு உறவான
மனிதரையே! = மனிதர்களையே
ஆழ்ந்து கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்றால் ?
முதலாவது, "அறிந்தேன்" . அறிய வேண்டும். எது நல்லது, எது கெட்டது , நமக்கு எது நன்மை பயக்கிறது, எது நமக்கு தீமை பயக்கிறது என்று அறிய வேண்டும்.
இரண்டாவது, "அறிந்து கொண்டு"...அறிந்தால் மட்டும் போதாது. நம்மிடம் உள்ள பெரிய குறையே அது தான், அறிந்து கொண்ட பின் அதன் படி நடப்பதே இல்லை. சர்க்கரை உடலுக்கு நன்மை பயக்காது என்று அறிவோம். இருந்தாலும் இனிப்பு பண்டங்கள், ஐஸ் கிரீம் என்று ஒன்று விடாமல் சாப்பிடுவோம். நொறுக்குத் தீனி கெடுதல் என்று அறிவோம். உடற் பயிற்சி நல்லது என்று அறிவோம். என்ன பலன். அறிந்து கொண்டு, ஒன்றும் செய்வது கிடையாது.
கற்ற பின் நிற்க அதற்கு தக
என்பார் வள்ளுவப் பேராசான்.
கற்றால் மட்டும் போதாது. கற்பது மிக எளிது. அதன் படி நிற்பது மிகக் கடினம்.
மூன்றாவது "கரும நெஞ்சால்". நாம் நம் நண்பர்களை, நாம் சார்ந்த உறவினர்களை எவ்வாறு தேர்ந்து எடுக்கிறோம்? இவர் நமக்கு பிடித்தமானவர் என்று எவ்வாறு முடிவு செய்கிறோம்? நம் மனம் சொல்கிறது. நம் மனதுக்கு எப்படி தெரியும்? அனுபவ வாசனை. நாம் பெரிய ஆராய்ச்சி எல்லாம் செய்வது இல்லை. ஏதோ ஒன்றினால் உந்தப்பட்டு, இயந்திர கதியில் செய்கிறோம். அதை பட்டர் , வினைப் பயன் என்கிறார். நம் அறிவு, உணர்ச்சிகள், விருப்பு வெறுப்பு எல்லாம் நாம் விரும்பி தேர்ந்து எடுப்பது இல்லை. அவை நம்முள் ஏற்கனவே இருக்கின்றன.
நான்காவது, "நின் அன்பர் பெருமை எண்ணாத". நல்லவர்களின் சிறப்பை அறியாமல். உலகில் எத்தனை நல்லவர்களை, உயர்ந்தவர்களை நமக்குத் தெரியும்?
ஐந்தாவது, "வெருவிப் பிரிந்தேன்". தீயவர்களின் உறவை வெறுத்துப் பிரிந்தேன் என்கிறார். ஐயோ, இவர்களின் உறவை விட்டு விட்டுப் போகிறோமே என்று வருத்தம் அல்ல. "இவ்வளவு நாளா இவர்களோடு இருந்து எவ்வளவு நேரத்தை வீணாக்கி விட்டேன் " என்று வெறுத்துப் பிரிந்தேன் என்கிறார்.
சிந்தியுங்கள்.
தேவை இல்லாத உறவுகளை உதறுங்கள்.
நன்மை தரும் உறவுகளை தேடிக் கண்டு பிடியுங்கள்.
இது யாரும் அறியாத இரகசியம் ("எவரும் அறியா மறை"). பட்டர் நமக்குச் சொல்லித் தருகிறார்.
வினைப்பயன் இருந்தால் அறிந்து கொண்டு முன்னேறுவோம்.
இல்லை என்றால் , இருக்கவே இருக்கிறது "...இது எல்லாம் சரி தான்...நடை முறைக்கு ஒத்து வருமா " என்று பெரிய ஞானி போல பேசி விட்டு, whatsapp , youtube , facebook, டிவி ல் என்ன இருக்கிறது என்று பார்க்கப் போகலாம்.
https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_30.html