திருக்குறள் - எல்லா அறமும்
https://interestingtamilpoems.blogspot.com/2025/03/blog-post.html
நான் அற வழியில் வாழ விரும்புகிறேன். எப்படி வாழ்ந்தால் அது அற வாழ்வு ஆகும் என்று ஒரு பட்டியல் தாருங்கள் என்று கேட்டால் யாராலும் தர முடியாது. இது தான் அறம் என்று வரையறுத்துக் கூற முடியாது.
சரி, அது போகட்டும்...எது அறம் அல்லாதது என்று ஒரு பட்டியல் தர முடியுமா என்றால் அதுவும் முடியாது.
பரிமேலழகரைக் கேட்டால், 'மனு முதலான நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழித்தலும் ' என்று கூறுவார்.
அந்த நூல்களின் பட்டியலைப் போட்டு, அதில் விதித்தன எது விலக்கியன எவை என்று கண்டு பிடிக்க ஒரு வாழ்நாள் போதாது.
இப்படி சிக்கல் நிறைந்த ஒரு வழிமுறையைச் சொன்னால் அதன் படி எப்படி வாழ முடியும் ?
அது அங்கேயே நிற்கட்டும்.
நீங்கள் புதிதாக ஒரு வேலையை செய்ய ஆரம்பிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்...சைக்கிள் ஓட்டுவது, கார் ஓட்டுவது, இசைக் கருவி வாசிப்பது, உடற் பயிற்சி செய்வது என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். முதலில் ரொம்ப கடினமாக இருக்கும். போகப் போக நாம், அதைப் பற்றிய சிந்தனையே இல்லமால் செய்துவிடுவோம். சைக்கிள் ஓட்டும் சிறுவனைப் பாருங்கள். அவன் எப்படி ஓட்டுவது என்று சிந்திப்பதே இல்லை. இயல்பாக நடக்கும்.
அது போல நம் வாழ்க்கை முறையை ஆக்கிக் கொண்டால்? நம் இயல்பே அற வழியில் வாழ்வது என்று ஆகி விட்டால், ஒவ்வொரு முறையும் அது பற்றி யோசிக்கவே வேண்டாம்.
அதற்கு ஒரு வழி இருக்கா என்றால் இருக்கு, அதுவும் மிக எளிய வழி என்கிறார் வள்ளுவப் பேராசான்.
பாடல்
பொய்யாமை அன்ன புகழ்இல்லை எய்யாமை
எல்லா அறமும் தரும்.
பொருள்
பொய்யாமை = பொய் கூறாமல் இருத்தல்
அன்ன = அது போன்ற
புகழ்இல்லை = புகழைத் தருவது வேறு எதுவும் இல்லை
எய்யாமை = அறியாமை
எல்லா அறமும் தரும் = எல்லா அறமும் தரும்.
முதல் பகுதி புரிகிறது. பொய் சொல்லாமல், உண்மை மட்டுமே சொல்லவதைப் போல ஒருவன் நல்ல புகழ் அடைய வேறு ஒரு மார்க்கம் இல்லை.
புரிகிறது.
அது என்ன அறியாமை எல்லா அறமும் தரும்?
மிக நுணுக்கமான இடம்.
அதாவது, உண்மை சொல்வது என்ற ஒன்றை மட்டுமே ஒருவன் கடைபிடித்துக் கொண்டு இருந்தால், அவன் அறியாமலேயே அது மற்ற எல்லா அறச் செயல்களின் பலன்களையும் தானே கொண்டு வந்து சேர்க்கும்.
புத்தகம் படிக்க வேண்டாம், தான தர்மம் செய்ய வேண்டாம், பூசனை, பஜனை செய்ய வேண்டாம்...ஒன்றும் செய்ய வேண்டாம்.
உண்மை மட்டுமே பேசுவது என்று வைத்துக் கொண்டால், ஒருவனுக்கு அவன் அறியாமலேயே மற்ற அனைத்து அறங்களின் பலனும் கிடைத்து விடும் என்கிறார்.
அது எப்படி?
உண்மை மட்டுமே சொல்லும் ஒருவனால் ஒரு தவறும் செய்ய முடியாது. ஒரு தவறும் செய்யாவிட்டால் மனம் சுத்தமாக இருக்கும். மனம் சுத்தமானால் சொல்லும், செயலும் சுத்தமாகும்.
மனம், மெய், மொழி சுத்தமானால் வேறு என்ன அறம் செய்ய வேண்டும்?
மனிதன் செய்யும் பல தவறுகளுக்குக் காரணம், செய்ததை மாத்தி ஏதாவது பொய் சொல்லி சமாளித்துக் கொள்ளலாம் என்ற எண்ணமே. உண்மை மட்டுமே சொல்லுவது என்று வைத்துக் கொண்டால் தவறு செய்ய முடியாது.
ஒரு நாள். ஒரே ஒரு நாள் முயன்று பாருங்கள். இந்தக் குறளின் ஆழம் புரியும்