பெரிய புராணம் - உன்னால் எப்படி முடியும்?
மனிதன் நினைக்கிறான் தன் காரியங்களை தானே நிர்ணயம் செய்து அவற்றை செய்து முடிப்பதாக.
நான் என்ன சாப்பிட வேண்டும், எத்தனை மனைக்கு அலுவலகம் செல்ல வேண்டும், என்ன வேலை செய்ய வேண்டும், என்று தன் வாழ்வின் நொடிகளை தான் தீர்மானிப்பதாக மனிதன் நினைக்கிறான்.
அது சரியா?
அடுத்த நொடி எது பற்றி சிந்திக்கப் போகிறான் என்று ஒருவனுக்குத் தெரியுமா? அடுத்த நொடி எதைப் பார்க்கப் போகிறோம் என்று ஒருவனால் உறுதியாகக் கூற முடியுமா?
பேசும் போது ஒலி வருகிறது. அந்த ஒலி வருவதற்கு முன்னால் அது எங்கே எப்படி இருந்தது? நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் யோசித்து, தேர்ந்து எடுத்துத்தான் பேசுகிறீர்களா? எப்படி சொற்கள் வந்து கொண்டே இருக்கின்றன? யார் முடிவு செய்தது இந்த இந்த வார்த்தைகளை பேச வேண்டும் என்று?
இந்த பிரபஞ்ச வெளியில் அறிவு கொட்டிக் கிடக்கிறது. ஆங்கிலத்தில் Cosmic Consciousness என்று சொல்லுகிறார்கள். அந்த பேரறிவை எட்டிப் பிடித்து விட்டால் நமக்குத் தேவையானது எல்லாம் அங்கிருந்து கிடைக்கும் என்கிறார்கள்.
அசரீரி என்று சொல்கிறார்களே அது அதன் வெளிப்பாடு.
அறிவியல் உலகில் எத்தனையோ பெரிய பெரிய கண்டுபிடிப்புகள் தற்செயலாய், கனவில், ஒரு விபத்தின் மூலமாக வெளிப்பட்டு இருக்கின்றன. அதெல்லாம் அந்த பிரபஞ்ச அறிவின் வெளிப்பாடு என்கிறார்கள்.
பெரிய புராணம் பாடு என்று அநபாய சோழன் சேக்கிழாரிடம் கூறினான். சேக்கிழாருக்கு எப்படி பாடுவது என்று தெரியவில்லை. சிதம்பரம் சென்று, சிவனை வேண்டி தொழுதார். அசரீரி வெளிப்பட்டது "உலகெலாம்" என்று அடி எடுத்துக் கொடுத்தது.
முழுவதும் பாடி விட்டார். அரங்கேற்றம் செய்ய வேண்டும்.
"அடியார்கள் புராணத்தை பாடும் அளவுக்கு உனக்கு திறமை இருக்கிறதா என்று யாராவது கேட்டால் அவர்களுக்குச் சொல்லுவேன், இது என் கூற்று அல்ல. மெய் முதற் கடவுளான சிவனின் கூற்று...அவன் கூறித்தான் நான் இதைப் பாடினேன்" என்று அவை அடக்கம் சொல்கிறார்.
நானாக செய்தது ஒன்றும் இல்லை. இது எனக்குத் தரப்பட்டது. நான் அதை உங்களுக்குத் தருகிறேன் என்கிறார்.
பாடல்
அருளின் நீர்மைத் திருத்தொண் டறிவருந்
தெருளின் நீரிது செப்புதற் காமெனின்
வெருளின் மெய்ம்மொழி வானிழல் கூறிய
பொருளின் ஆகும் எனப்புகல் வாமன்றே .
பொருள்
அருளின் நீர்மைத் = அருள் தன்மை. அருள் ஒன்றையே இயல்பாகக் கொண்ட
திருத்தொண் டறிவருந் = திருத் தொண்டர்களை அறியும் திறம்
தெருளின் = மயக்கமற அறிவது
நீரிது = நீர் (சேக்கிழாராகிய நீர்) இதை
செப்புதற் காமெனின் = செப்புவதுற்கு + ஆம் + எனின் = சொல்லுவது எவ்வாறு என்று கேட்டால்
வெருளின்= மயக்கம் அற்ற
மெய்ம்மொழி = உண்மையான மொழி
வானிழல் = வான் + நிழல் = அசரீரி
கூறிய = கூறிய
பொருளின் ஆகும் = பொருளின் மூலம்
எனப்புகல் வாமன்றே = என்று சொல்வேன்
"அடியவர்களின் புகழை உம்மால் எப்படி சொல்ல முடியும் என்று கேட்டால், வானில் இருந்து வந்த அசரீரி சொல்லக் கேட்டதால், என்னால் முடியும்" என்கிறார் சேக்கிழார் பெருமான்.
எப்படி தொலைக் காட்சிப் பெட்டியில் ஒரு குறிப்பிட்ட நிலையத்தை (channel ) ரிமோட் கன்ட்ரோலில் அழுத்தினால் அந்த நிலையத்தின்ஒளி பரப்பாவது நம் பெட்டியில் தெரிகிறதோ, அது போல், இறை அருள் கிடைக்கும் போது, எந்த அறிவையும் அங்கிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.
அந்த அறிவு எந்நேரமும் வந்து கொண்டே தான் இருக்கிறது. தொலைக் காட்சிப் பெட்டியை ஆன் செய்ய வேண்டும், அந்த குறித்த நிலையத்தின் அலை வரிசையை பிடிக்க வேண்டும். பிடித்தால் வந்து விடும்.
No comments:
Post a Comment