Wednesday, March 12, 2025

திருக்குறள் - பொய்யாமை பொய்யாமை

 திருக்குறள் - பொய்யாமை பொய்யாமை 


பெண் வீட்டில் இருந்து ஒருவர் மாப்பிளையை சந்தித்து அவரைப் பற்றி விசாரிக்கச் சென்றிருந்தார். 


அவர் , வருங்கால மாப்பிளையிடம் "உங்களுக்கு இந்த மது, புகை பிடித்தல், இலஞ்சம் வாங்குதல், போன்ற கெட்ட பழக்கங்கள் எதாவது உண்டா" என்று மென்மையாக, நாசுக்காக கேட்டு அறிந்து கொண்டிருந்தார். 


எல்லாவற்றிற்கும் "இல்லை, இல்லை " என்றே பதில் சொல்லிக் கொண்டிருந்தார் அந்த மாப்பிளை. 


கடைசியில், "மனுஷன்னு இருந்தா, ஏதாவது ஒரு குறை இருக்கத்தான் இருக்கும், குறையே இல்லாத மனிதன் உண்டா...உங்களுக்கு என்ன குறை இருக்கிறது " என்று நேரடியாகவே கேட்டுவிட்டார். 


அதற்கு அந்த மாப்பிள்ளை "என்ன அப்பப்ப கொஞ்சம் பொய் சொல்லுவேன்"...என்றாராம். 


அப்படினா, இதுவரை சொன்னவை எல்லாம் உண்மை இல்லை என்று ஆகிவிடும். அதாவது எல்லா கெட்ட பழக்கமும் இருக்கு. ஆனால், இல்லை என்று பொய் சொல்லித் திரிகிறார். 


சிலர் பேர் "நான் பொய்யே பேச மாட்டேன்" என்பார்கள். அதுவே ஒரு பொய்யாக இருக்கும். 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


சில பேர் "நான் தீவிர உணவு கட்டுப்பாடோடு இருக்கிறேன்...இருந்தும் என் எடை குறையவே மாட்டேன் என்கிறது" என்பார்கள். 


அவர்கள் உணவு கட்டுப் பாடு எப்படி இருக்கும் என்றால், 


"அலுவலகத்தில் ஏதாவது பார்ட்டி என்றால் எல்லாம், எல்லோருடனும் சேர்ந்து என்ன இருக்கிறதோ அதை சாப்பிட்டுவேன்...மற்ற படி கட்டுப்பாடுதான் "


"தீபாவளி, பொங்கல் என்று ஏதாவது விசேடம் என்றால் அன்று செய்ததை சாப்பிட்டுக் கொள்வேன்...மற்றபடி கட்டுப்பாடுதான்"


"வெளியூருக்குப் பயணம் போகும் போது இந்த கட்டுப்பாடு எல்லாம் முடியாது, என்ன கிடைக்கிறதோ அதை சாப்பிட வேண்டியதுதான்...மற்ற படி தீவிர கட்டுப்பாடுதான்" என்பார்கள். 


உணவு கட்டுப்பாடு இருக்கிறார்கள். அது உண்மை; ஆனால் அதை விடாமல் கடைபிடிப்பது இல்லை. அவ்வப்போது ஏதாவது ஒரு தடை வந்து விடும். மனதுக்குள் நினைப்பது என்னவோ, பெரிய உணவு கட்டுப்பாடு இருப்பது மாதிரி. 


எதைச் செய்தாலும், அதை விடாமல் கடை பிடிக்க வேண்டும். விட்டு விட்டு செய்வது விரதம் ஆகாது. 


வள்ளுவர் சொல்கிறார் 


"பொய் சொல்லாமல் இருந்தாலே போதும். வேறு எந்த அறமும் செய்ய வேண்டாம்" 


என்று. 



பாடல் 


பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற

செய்யாமை செய்யாமை நன்று


பொருள் 


பொய்யாமை பொய்யாமை  = பொய்யாமை 


ஆற்றின் = செய்தால், அந்த வழியில் நடந்தால் 


அறம்பிற = பிற அறங்களை 


செய்யாமை செய்யாமை நன்று = செய்யாமல் இருந்தாலும் குற்றம் இல்லை. 


இருக்கிறதே ஏழு வார்த்தை. அதில இரண்டு வார்த்தையை இரண்டு தரம் போடணுமா?  


பொய்யாமை ஆற்றின் அறம் பிற செய்யாமை நன்று 


என்று சொல்லி இருக்கலாமே?


பொய்யாமை, பொய்யாமை என்பதற்கு, பொய்யாமை என்ற அறத்தை பொய்யாக்காமல் விடாமல் கடை பிடிக்க வேண்டும் என்று சில உரை ஆசிரியர்கள் உரை எழுதுகிறார்கள். பரிமேலழகர் "முதலில் வரும் பொய்யாமை உறுதி பற்றியும், இரண்டாவது வரும் பொய்யாமை உறுதியாக அதில் இருப்பதை பற்றியும் வருகிறது என்கிறார். 


அதாவது, எப்போதும் உண்மை பேசுவேன், ஆனால் தவிர்க முடியாத நேரத்தில் பொய்யும் பேசுவேன் என்று சொல்லக் கூடாது. அரிச்சந்திரன் உண்மை பேசிக் கொண்டிருந்தான். கடைசியில் விஸ்வாமித்திரன் "ஒரே ஒரு பொய் சொல்லு, நீ இழந்த நாடு, செல்வம் அனைத்தும் உனக்குத் தருகிறேன்" என்றான். அப்போது கூட பொய் சொல்ல மாட்டேன் என்று உறுதியாக இருந்தான். 


எனவே பொய்யாமையாகிய அறத்தை பொய்யாமல் (தவறாமல்) கடைபிடித்தால் 


மற்ற அறங்களை ஒரு போதும் செய்ய வேண்டாம். அதாவது, பொய்யாமையும் செய்து, மற்ற அறங்களையும் செய்ய வேண்டுமா, என்றால் வேண்டாம், பொய்யாமை ஒன்றே போதும் என்கிறார். 


மேலும், மற்ற அறங்களை எல்லாம் செய்து கொண்டு, நடுநடுவே பொய்யும் சொல்லிக் கொண்டிருந்தால் ஏனைய அறங்களால் பலன் ஒன்றும் இல்லை என்றும் பொருள் சொல்கிறார்கள். 




No comments:

Post a Comment