Monday, August 26, 2019

கம்ப இராமாயணம் - கணவன் மனைவி உறவுச் சிக்கல்

கம்ப இராமாயணம்  - கணவன் மனைவி உறவுச் சிக்கல் 



கணவன் மனைவி உறவில் சிக்கல் வருவது இயல்பு. ஒவ்வொருத்தருக்கும் ஒரு எதிர்பார்ப்பு உண்டு. அது நிறைவேறாத போது, மன வருத்தமும், துக்கமும் வருவது இயற்க்கை.

சில சமயம், பேச்சு , வாதமாகி மாறி, தவறான சொற்கள் வந்து விழுந்து விடலாம். உணர்ச்சிவசப் படும்போது இவை நிகழ்வது ஒன்றும் புதிது அல்ல.

அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகள் சில சமயம் நம்மையும் மீறி வந்து விடுவது உண்டு.

சண்டை சச்சரவு என்று கூட வேண்டாம், நேரத்துக்கு வருகிறேன், சினிமாவுக்கு கூட்டிப் போகிறேன் என்று சொன்ன கணவன் வர முடியாமல் போய் இருக்கலாம். வீடு வாங்கலாம் என்று போட்ட திட்டம் வேறு ஏதோ ஒன்றினால் மாறிப் போய் இருக்கலாம்.

கோபத்தில், தாபத்தில் வார்த்தைகள் வந்து விழுந்து விட்டால் என்ன செய்வது.

பொதுவாக, மீண்டும் எப்படி பழைய நிலைக்கு வருவது என்ற தர்ம சங்கடம் இரண்டு பேருக்கும் இருக்கும்.

நான் என்ன தவறு செய்தேன் என்று இருவரும் மருகிக் கொண்டு இருப்பார்கள்.

எப்படி, அந்த மனக் கசப்பை மறந்து விட்டு இயல்பாக இருப்பது என்று இருவரும் மனதுக்குள் போட்டு  குழப்பிக் கொண்டிருப்பார்கள்.

அவர் பேசட்டும், என்று அவளும்.

அவளுக்கு என்ன அவ்வளவு அதப்பு , பேசுனா பேசட்டும், இல்லாட்டி கிடக்கட்டும் என்று அவரும்  ஆளுக்கு ஒரு மூலையை பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.

உறவில் விழும் விரிசல் இயல்பானதுதான்.

ஆனால், ஒரு முறை அப்படி விரிசல் விழுந்து விட்டால், அதையே நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது.

அன்னிக்கு அப்படி சொன்னாயே, என்று மீண்டும் மீண்டும் அதையே நினைத்துக் கொண்டிருந்தால்   வாழ்க்கை சுவைக்காது.


இராமன் சீதை வாழ்வில் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

இராவணன் இறந்த பின், சீதையை கொண்டு வருகிறார்கள்.

அவளை பேசக் கூடாத பேச்செல்லாம் பேசுகிறான் இராமன். எல்லோர் முன்னிலையிலும்.

சுடு சொல் தாங்காமல் சீதை தீக்குளிக்கிறாள். மீண்டு வருகிறாள்.

அக்கினிதேவன் அவள் கற்புக்கு சான்றிதழ் (Certificate) தருகிறான். சீதையை இராமன் ஏற்றுக் கொள்கிறான்.

யோசித்துப் பாருங்கள். சீதையின் மன நிலை எப்படி இருக்கும் என்று.

தன் கற்பை, தன் கணவனே சந்தேகப்பட்டான் என்றால் ஒரு பெண்ணின் மன நிலை  எப்படி இருக்கும்?

அந்த சம்பவத்துக்குப் பின், அவர்களுக்குள் உள்ள தாம்பத்யம் எப்படி இருக்கும்?

சீதை, அந்த சம்பவத்தை எளிதில் மறப்பாளா?  அது முள்ளாக அவள் மனதில் தைக்காதா?

அவள் எப்படி இராமனுடன் இயல்பாக குடும்பம் நடத்த முடியும்?

சீதை என்ன செய்தாள்? என்ன சொன்னாள் ? அவர்களுக்குள் ஊடல் நிகழ்ந்ததா? இராமன் சமாதானம் எதுவும் சொன்னானா?  இராமன் எதுவும் சொல்லிவிட்டுப் போகட்டும். சீதை என்ன சொன்னாள் என்பதுதான் முக்கியம்.

சீதை என்ன நினைத்தாள் / சொன்னாள் / செய்தாள் என்று சிந்தித்துக் கொண்டிருங்கள்.

நாளை சந்திப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_26.html

Sunday, August 25, 2019

திருவாசகம் - புறம் புறம் திரிந்த செல்வமே

திருவாசகம் - புறம் புறம் திரிந்த செல்வமே 


தேவாரம், திருவாசகம், பிரபந்தம், குறள் , கம்ப இராமாயணம் போன்ற நூல்களை படிக்கும் போது அவ்வளவு இனிமையாக இருக்கிறது. அதன் கருத்தாழம் பிரமிக்க வைக்கிறது.

படித்ததை, இரசித்ததை பகிர்ந்து கொள்வோமே என்று நானும் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறேன்.

சில சமயம் பயமாகக் கூட இருக்கிறது.

பாடல்களின் ஆழம், நினைக்க நினைக்க போய் கொண்டே இருக்கிறது. ஏதோ சிறு பிள்ளையின் கிறுக்கல்கள் போல நானும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

பாடல்களின் கருத்தாழம் காணும் போது, ஒரு நடுக்கம் வருகிறது.  நாம் பேசாமல் இருப்பதே நலம் என்று தோன்றுகிறது.

எவ்வளவோ யோசித்து, அனுபவித்து, நாலு வரியில் எழுதி வைத்துவிட்டுப் போய் விட்டார்கள். அவர்கள் என்ன நினைத்து எழுதினார்கள் என்று தெரிந்து கொள்ள, அந்த அளவு அறிவும், ஞானமும் வேண்டும் என்றே நினைக்கிறேன்.

"பால் நினைந்து ஊட்டும்" என்ற திருவாசகத்தில், அந்த முதல் வரியிலேயே நின்று போய் இருக்கிறேன். அடடா, என்ன ஒரு வரி. குழந்தைக்கு பசிக்குமே என்று அது அழுவதற்கு முன் "நினைந்து" ஊட்டும் கருணையை எண்ணி வியந்திருக்கிறேன்.

அதை எப்படி மணிவாசகர் உணர்ந்து எழுதினார் என்று உருகி இருக்கிறேன்.

பின்னால் ஒரு வரி வருகிறது.

"புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!
யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே!"

என்று.


பாடல்

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!
யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே!

விளக்கம்

சிவன் ஏன் புறம் புறம் என்று திரிந்து கொண்டிருக்கிறான்?  அவனுக்கு ஒரு வேலை இல்லையா ?

அவன் திரிய வேண்டிய காரணம் என்ன? அவன் நினைத்தால் அவனுக்கு வேண்டியது அவன் இருக்கும் இடத்துக்கு வந்து சேராதா ?

பின் ஏன் திரிய வேண்டும்?

அப்படி திரியும் சிவனை, மணிவாசகர் கொஞ்சுகிறார்.....

"செல்வமே, சிவ பெருமானே" என்று.

அப்படி திரிந்த சிவனை, மணிவாசகர் தொடர்ந்து சென்று சிக் என்று பிடித்துக் கொண்டாராம்.  "இனி மேல் எங்க போவாய்" என்று சிவனை கேட்கிறார்.

இதற்கு என்ன அர்த்தம்?

யோசித்துப் பார்க்கிறேன்.

உயிர்கள், இறைவனை தேடி அலைகின்றன. அவன் இங்கு இருப்பானா, அங்கு இருப்பானா  என்று அலைகின்றன.

அவன் இருக்கும் இடத்தை விட்டு விட்டு எங்கெங்கோ அலைகின்றன.

சிவன், அந்த உயிர்களின் பின்னால் போகிறனான். "நான் இங்கே இருக்கிறேன், இங்கே இருக்கிறேன், என்னை பிடித்துக் கொள் " என்று ஒவ்வொரு   உயிரின் பின்னும் அவன் அலைகின்றான் .

வீட்டில், சின்ன குழந்தை கண்ணா மூச்சி ஆடும். "நீ ஒளிஞ்சுக்கோ, நான் கண்டு பிடிக்கிறேன் " என்று பத்து வரை எண்ணி விட்டு, அப்பாவை தேடும்.

அங்கும் இங்கும் பிள்ளை தேடும்.

ஐயோ, பிள்ளை அங்கே போகிறானே. அது மேலே ஏறி, கீழே விழுந்து விட்டால்  என்ன செய்வது என்று அப்பா மறைந்து நின்றாலும் தவிப்பார். பிள்ளை எங்கெல்லாம் போகிறதோ,  அங்கெல்லாம் அவரும் பின்னாலேயே போவார். பிள்ளைக்குத் தெரியாமல்.  பிள்ளை விழுந்து விடும் என்று தெரிந்தால், ஓடி வந்து தாங்கிக் கொள்வார்.

அது போல, ஒவ்வொரு உயிரும் ஆண்டவனை தேடி அலைகின்றன.  ஆண்டவன்   உயிர்களைத் தேடி அழைக்கின்றான்.

பிள்ளை கலைத்துப் போகும் போது , அப்பா தன்னை வெளிக் காட்டுவார். பிள்ளை ஓடி வந்து அப்பாவின் காலை கட்டிக் கொள்ளும்.  "நீ அவுட்டு..இப்ப நீ என்னை  கண்டு பிடி" என்று சந்தோஷமாக விளையாட்டைத் தொடரும் அல்லவா.

அது போல, மணிவாசகரும், ஓடி வந்து இறைவனை கட்டிக் கொண்டார். "இனி உன்னை விடமாட்டேன்...இனி மேல் நீ என்னை விட்டு ஒளிந்து கொள்ள முடியாது".

"எங்கு எழுந்து அருள்வது இனியே ?"  என்று கூறுகிறார்.

இதுதான் அர்த்தம் என்று நான் நினைக்கிறேன்.

தவறாகவும் இருக்கலாம்.

தமிழ் பக்தி பாடல்கள் பற்றி பேச/எழுத ஒன்று தமிழ் அறிவு இருக்க வேண்டும், இல்லை பக்தியாவது இருக்க வேண்டும். இரண்டும் இல்லாமல் எழுதினால்  இப்படித்தான் எதையாவது எழுத வேண்டி இருக்கும் என்று நினைக்கிறேன்.

பிழையிருப்பின் , பொறுக்க.

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_57.html

கம்ப இராமாயணம் - இராமாயணம் காட்டும் நெறி

கம்ப இராமாயணம் - இராமாயணம் காட்டும் நெறி 


இராமனுக்கும் இராவணனுக்கும் இடையே உள்ள முக்கிய வேற்றுமை என்று கம்பன் காட்டுவதை முன்னர் சிந்தித்தோம்.

இராமன் , ஏக பத்தினி விரதன்.

இராவணன், பிறன் மனைவிக்கு ஆசைப் பட்டான் என்று பார்த்தோம்.

அது மட்டும் அல்ல, இன்னும் ஒரு முக்கிய வேற்றுமையை கம்பன் காட்டுகிறான்.

இராமன், தன் மேல் அன்பு கொண்ட அனைவரையும் அனைத்துக் கொண்டு அவர்களை தம்பிகளாக, உடன் பிறப்புகளாக, சொந்தமாக கொண்டாடினான்.

இராவணனோ, உடன் பிறப்பையே எதிரியாக எண்ணினான்.

சேர்த்துக் கொள்வது இராமனின் குணம்.

பிரித்துக் கொள்வது இராவணனின் குணம்.

குகன் சொல்கிறான், "நானும் உன்னுடன் கானகம் வருகிறேன். என்னையும் கூட்டிக் கொண்டு போ" என்று.

அப்போது இராமன் சொல்லுவான்,


"துன்பம் இருந்தால் தானே இன்பம் இருக்கும். உறவு எப்போது இனிமையாக இருக்கும் என்றால் அதன் நடுவில் சிறு சிறு பிரிவு இருக்க வேண்டும். முன்பு நாங்கள் அண்ணன் தம்பிகள் நால்வர் இருந்தோம். இன்று உன்னோடு ஐந்து பேர் ஆகி விட்டோம்" என்கிறான்.



‘துன்பு உளது எனின் அன்றே
    சுகம் உளது; அது அன்றிப்
‘பின்பு உளது இடை மன்னும்
    பிரிவு உளது ‘என உன்னேல்;
முன்பு உளெம் ஒரு நால்வேம்,
    முடிவு உளது என உன்னா
அன்பு உள இனி நாம் ஓர்
    ஐவர்கள் உளர் ஆனோம். ‘

முன்ன பின்ன தெரியாத, பண்பாடு அதிகம் அறியாத, ஒரு கடைக் கோடியில் இருக்கும் குகனை தம்பி என்று ஏற்றுக் கொள்ள எவ்வளவு பெரிய மனம் வேண்டும்.

சரி, ஏதோ வாய் வார்த்தையாக சொன்னான் என்று இல்லை.

இந்த சீதை, உன்னுடைய உறவினள் என்று மனைவியை முன்னிறுத்திக் கூறுகிறான்.

பின்பு வீடணனுக்கு அடைக்கலம் கொடுத்து அவனுக்கு முடிசூட்டிய பின் இராமன் கூறுவான்

"குகனோடு நாங்கள் அண்ணன் தம்பிகள் ஐந்து பேராக ஆனோம். பின் குன்று சூழும் இடத்தில் உள்ள சுக்ரீவனோடு அறுவர் ஆனோம். அகத்தில் அன்பு கொண்ட உன்னோடு எழுவர் ஆனோம்...என்னை காட்டுக்கு அனுப்பியதன் மூலம் உன் தந்தை பெருமை கொண்டான்"



குகனொடும் ஐவர் ஆனேம்
    முன்பு; பின், குன்று சூழ்வான்
மகனொடும், அறுவர் ஆனேம்;
    எம் உழை அன்பின் வந்த
அகன் அமர் காதல் ஐய!
    நின்னொடும் எழுவர் ஆனேம்;
புகலருங் கானம் தந்து,
    புதல்வரால் பொலிந்தான் நுந்தை.

ஒரு வேடன் , ஒரு குரங்கு அரசன், ஒரு அரக்கன் என்று எல்லோரையும் தம்பியாக ஏற்றுக் கொண்டான் இராமன். ஒரு பாகுபாடு இல்லை.

ஆனால், இராவணனோ, உடன் பிறந்த தம்பிகளையே சொந்த சுகத்துக்காக விரட்டி விட்டான்

சீதையை விட்டு விடு என்று வீடணன் எவ்வளவோ அறவுரை கூறினான். இராவணன் மண்டையில் ஒன்றும் ஏறவில்லை. கடைசியில் பல சுடு சொற்கள் கூறி, வீடணனை "உடனே இங்கிருந்து போய் விடு" என்று விரட்டி விடுகிறான்.

"என் கண் முன்னே நிற்காதே . உடனே போய் விடு" என்று உடன் பிறந்த தம்பியை விரட்டினான்.

‘பழியினை உணர்ந்து யான் படுக்கிலேன் உனை;
ஒழி சில புகலுதல் : ஒல்லை நீங்குதி;
விழி எதிர் நிற்றியேல் விளிதி “ என்றனன்
அழிவினை எய்துவான் அறிவு நீங்கினான்.


கும்பகர்ணனையும் அப்படியே சுடு சொல் கூறினான். ஆனால், கும்பன் போக வில்லை.

எல்லோரையும் சேர்த்து அணைத்துக் கொள்வது, உறவு பாராட்டுவது, நட்பாகக் கூட இல்லை, குடும்பத்தில் ஒருவராக அன்யோன்யம் பாராட்டுவது இராமன் காட்டும் வழி.

என் இன்பம், என் சுகம், அது தான்  முக்கியம்.  அதற்கு யார் ஒத்து வரவில்லையோ, அது தம்பியாக இருந்தால் கூட அவர்களை விலக்கி விடுவது இராவணன் காட்டிய வழி.

எது நம் வழி என்று நாம் தீர்மானித்துக் கொள்ளலாம்.


மேலும் சிந்திக்க இருக்கிறோம்.

(rethin@hotmail.com)

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_25.html



Saturday, August 24, 2019

ஐங்குறுநூறு - புகுந்த வீட்டு பெருமை

ஐங்குறுநூறு - புகுந்த  வீட்டு பெருமை 


பிறந்த வீட்டு பெருமை பேசாத பெண் யார் இருக்கிறார்கள். ஒன்றும் இல்லாவிட்டாலும், "எங்க வீட்டுல ...." என்று ஆரம்பித்தால் எளிதில் முடிக்க மாட்டார்கள்.

என்ன செய்வது ? எல்லாவற்றையும் விட்டு விட்டு வந்த பெண், பெருமையையாவது பேசி விட்டுப் போகட்டும் என்று விட்டு விட வேண்டியதுதான்.

ஐங்குறுநூறு இதை வேறு ஒரு கோணத்தில் காட்டுகிறது.

ஒரு பெண். திருமணம் ஆகி, கணவன் வீட்டுக்குப் போய் சிறிது நாள் இருந்து விட்டு பின் தாய் வீட்டுக்கு வருகிறாள்.

அம்மாவுக்குத் தெரியும் , அங்கே ஒண்ணும் பெரிய சிறப்பு கிடையாது என்று. ஏதோ காதல், கத்தரிக்காய் என்று இந்தப் பெண் திருமணம் முடித்து போய் விட்டாள்.

தாய் கேட்டிருப்பாள் போல இருக்கு , "உன் புருஷன் வீடெல்லாம் எப்படி இருக்கு" னு.

அவளுக்கு கணவன் வீட்டை வீட்டுக் கொடுக்க முடியவில்லை. ஆனால், அது ஏழ்மையான வீடு என்ற உண்மையையும் மறைக்க முடியவில்லை.

அந்தப் பெண் சொல்கிறாள்

"அவங்க வீட்டு கொல்லை பக்கத்துல குப்பை கூளம் நிறைந்த தோட்டம் ஒன்று இருக்கிறது. சரியாக பராமரிக்காமல் விட்ட தோட்டம்தான். அதில் உள்ள குழியில் கொஞ்சம் நீர் தேங்கி இருக்கிறது. அது கலங்கிய நீர். சேரும் சகதியுமாக இருக்கும். அந்த நீரை மான்கள் பருகும். அந்த நீரானது, நம் வீட்டு தோட்டத்தில் நீ தரும் தேன் கலந்த பாலை விட சிறந்தது" என்கிறாள்.

பாடல்


அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் படப்பைத் 
தேன்மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு 
உவலை கூவல் கீழ 
மான் உண்டு எஞ்சிய கழிலிநீரே 

பொருள்

அன்னாய்  = அன்புத் தோழியே (தோழியிடம் சொல்வது போல அமைந்த பாடல்)

வாழி வேண்டு = நீ நீண்ட நாள் வாழ வேண்டுகிறேன்

அன்னை = நம் அன்னை

நம் படப்பைத் = நம் தோட்டத்தில்

தேன்மயங்கு = தேன் கலந்து தரும்

பாலினும் = பாலை விட

இனிய = இனிமையானது

அவர் = அவர் (என் கணவர்)

நாட்டு  = நாட்டில் (அவரது வீட்டில்)

உவலை = சருகுகள்

கூவல் = நீர் கட்டிக் கிடக்கும் குழி

கீழ = அதில்

மான் உண்டு எஞ்சிய கழிலிநீரே  = மான் உண்டது போக மிஞ்சிய கலங்கிய நீர்

 இங்க தேனும் பாலும் இருக்கு. ஆனால், அவளுக்கு கணவன் இருக்கும் இடம்தான் பெரிதாகத் தெரிகிறது.

மான் எல்லாம் வந்து தண்ணி குடிக்கும் என்றால், அவ்வளவு அன்பும் அரவணைப்பும் அங்கே   இருக்கிறது என்று அர்த்தம்.

செல்வம் அல்ல மகிழ்ச்சியைத் தருவது, அன்பும் அரவணைப்புமே இன்பம் தரும்.

எங்கோ இருந்து வந்த மான்கள் பயம் இல்லாமல் அவங்க வீட்டு தோட்டத்தில்  நீர்  குடிக்கும் என்றால், எனக்கு அங்கு ஒரு பயமும், கவலையும் இல்லை என்று  சொல்ல வருகிறாள்.

கணவனின் அன்பு  மட்டும் இருந்துவிட்டால் போதும், ஒரு பெண் எந்த இடத்திலும்  இனிமையாக குடும்பம் நடத்துவாள் என்பது செய்தி.

பிறந்த வீடு பெருமை பேசி, புகுந்த வீட்டை மட்டம் தட்டும் பெண்களுக்கு இது ஒரு  பாடம்.

அந்தக் காலத்தில் நம் பெண்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று காட்டும் பாடல் இது.

முடிகிறதோ இல்லையோ, எப்படி எல்லாம் வாழ்ந்தார்கள் என்று தெரிந்து கொள்வதில்  ஒன்றும் தவறில்லையே.....

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_24.html


Friday, August 23, 2019

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கூனே சிதைய

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கூனே சிதைய 


இரத்த அழுத்தம் கூடிவிட்டது. இரத்தத்தில் சர்க்கரை அளவு கூடி விட்டது. உடல் எடை கூடிவிட்டது. மருத்துவர் தினமும் உடற் பயிற்சி செய்யச் சொல்கிறார். உணவு கட்டுப்பாடு வேண்டும் என்கிறார்.

உடற் பயிற்சி செய்தால் உடம்பெல்லாம் வலிக்கிறது. மூச்சு வாங்குகிறது. முட்டு வலிக்கிறது. வேர்த்து விருவிருத்து உடம்பெல்லாம் கசகச என்று வியர்வை உப்பு எரிச்சல் தருகிறது.

போதா குறைக்கு அதைச் சாப்பிடாதே, இதைச் சாப்பிடாதே என்று கட்டுப்பாடு வேறு.

வாழ்க்கையே வெறுத்துப் போகிறது.

என்ன மருத்துவர் இவர். மனுஷனை பாடாய் படுத்துகிறாரே என்று அவர் மேல் கோபம் வருகிறது. ஒரு மருந்து மாத்திரை கொடுத்து சரி செய்யக் கூடாதா. மனுஷனை இப்படியா போட்டு வறுத்து எடுப்பது என்று எரிச்சலும் கோபமும் வருகிறது.

ஒருவழியாக ஒரு ஆறு மாதம் இதை எல்லாம் செய்து வந்த போது , உடல் இளைத்து, சர்க்கரை அளவு குறைந்து, இப்போது மிக சுகமாக இருக்கிறது.

ஆறுமாதம் துன்பம்தான். கோபம்தான். எரிச்சல்தான்.

முடிவு, இன்பம்.

அது போல, வாழ்வில் சில சமயம் துன்பம் வரும். சோகம் வரும். ஏமாற்றம் வரும்.  இந்த கடவுளுக்கு என் மேல் கருணையே இல்லையா என்று கோபம் வரும்.

சிந்திக்க வேண்டும்.

இராமன் கூனியின் மேல் மண் உருண்டையை வைத்து அம்பால் அடித்தான்.

அது அவளை கேலி செய்யவோ, துன்புறுத்தவோ இல்லையாம்.

நம்மாழ்வார் சொல்கிறார், "அது அவளின் கூன் நிமிரும் பொருட்டு இராமன் செய்த வேலை" என்று.

கூனிக்கு அது அவமானமாகப் பட்டது. இராமன் மேல் கோபம் கொண்டாள். அவனை பழி தீர்க்க வேண்டும் எண்ணினாள் .

இராமன் செய்ததோ, அவளுக்கு உதவி.  அவளின் அறிவு எட்டவில்லை.

துன்பம் வரும் போது, இந்த துன்பம் நம்மை ஏதோ ஒரு விதத்தில் உயர்த்தும் என்று நினைக்க வேண்டும்.

துன்பத்தைப் பொறுப்பதுவே தவம் என்பார் வள்ளுவப் பெருந்தகை.

பாடல்

மானேய் நோக்கி மடவாளை* மார்வில் கொண்டாய். மாதவா.*
கூனே சிதைய உண்டைவில்* நிறத்தில் தெறித்தாய். கோவிந்தா.*
வானார் சோதி மணிவண்ணா.* மதுசூதா. நீ அருளாய்* உன்-
தேனே மலரும் திருப்பாதம்* சேருமாறு வினையேனே

பொருள்

மானேய் = மான் போன்ற

நோக்கி  = கண்களை உடைய

மடவாளை = திருமகளை

மார்வில் = மார்பில்

கொண்டாய். = கொண்டாய்

மாதவா = மாதவா

கூனே சிதைய = கூன் அற்றுப் போகும்படி

உண்டைவில் = உண்டை வில்லால்

 நிறத்தில் = வடிவில்

தெறித்தாய் = எறிந்தாய், அம்பு விட்டாய்

கோவிந்தா. = கோவிந்தா

வானார்  = தேவர்களுக்கு

சோதி  = ஜோதி

மணிவண்ணா. = வடிவான மணி வண்ணா

மதுசூதா = மதுசூதனா

நீ அருளாய் = நீ அருள் செய்வாய்

உன் = உன்னுடைய

தேனே  = தேன்

மலரும் = சொரியும்

திருப்பாதம் = திருப்பாதங்களை

சேருமாறு = வந்து அடையுமாறு

வினையேனே = வினை கொண்ட என்னை


சற்று ஆழமாக சிந்திக்க சில விஷயங்கள்.

முதலில், துன்பம் வரும்போது, அது துன்பம் மட்டும் அல்ல. ஒரு வேளை நம்மை உயர்த்த வந்த  சோதனை என்று நாம் சிந்திக்கப் பழகிவிட்டால், துன்பம் பெரிதாகத் தெரியாது.  நன்றாக படிக்கும் மாணவனை ஆசிரியர் தேர்வு எழுத வைத்து சோதனை செய்வது போல. தேர்வு கடினம் தான். அதற்காக ஆசிரியரை கல்லால் அடிப்பதா?

இரண்டாவது, உண்டி வில் அடித்தது இராமன். நம்மாழ்வாருக்கு இராமன் மேல் குற்றம் சொல்ல  மனம் வரவில்லை. கிருஷ்ணன் மேல் பல குற்றங்கள் உண்டு. பத்தோடு பதினொன்றாக, இந்த குற்றத்தையும் கிருஷ்ணன் மேல் சுமத்தி விடுகிறார் ஆழ்வார்.

"கூனே சிதைய உண்டைவில்* நிறத்தில் தெறித்தாய். கோவிந்தா.*"

கோவிந்தன் இங்கே எங்கே வந்தான். அது அடுத்த அவதாரம். இராமனை அப்பழுக்கற்ற  அவதாரமாக காட்ட விழைகிறார் ஆழ்வார்.

மூன்றாவது, எனக்கு அருள் செய் என்று அவர் கேட்பது, பணம் காசு இல்லை. உன் திருவடிகளை அடைய எனக்கு அருள் செய் என்கிறார்.   ஏன், அவருக்குத் தெரியாதா ? போய் சரண் அடைய வேண்டியதுதானே? அதுக்கு எதுக்கு அருள்?

நமக்குத்தான் தெரியும். இந்த உலகம் நிரந்தரம் இல்லை. செல்வம் நிரந்தரம் இல்லை.  வாழ்நாள் கொஞ்ச நாள் தான் என்று. இறைவனை அடைய வேண்டும் அல்லது உண்மையை கண்டறிய வேண்டும் என்றெல்லாம் நினைக்கிறோம்.

முடிகிறதா ?  ஏதோ ஒரு வேலை. முனைப்பு. அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விடுகிறோம்.

அவன் அருள் இருந்தால் ஒழிய அவனை அடைய முடியாது என்பது ஆன்றோர் வாக்கு.

"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்பார் மணிவாசகர்.

பொய் என்று தெரிந்தும் அவற்றின் பின் போய் கொண்டிருக்கிறோம்.

விட முடிவதில்லை.

பாசம் ஒரு புறம். ஆசை ஒரு புறம்.

நம்மால் விட முடியாது. அதுவாகப் போனால் தான் உண்டு. அது எப்படி போகும்.

"பொய்யாயின எல்லாம் போயகல வந்தருளி" என்பதும் மணிவாசகம்.

அவை போவதற்கு எனக்கு அருள் புரி என்று வேண்டுகிறார்.

இன்னமும் விரித்துச் சொல்லலாம். "ரொம்ப பெருசா இருக்கு...நேரம் இல்லை...அப்புறம் படிக்கலாம் " என்று படிக்காமல் விட்டு விடுவார்களோ என்று அஞ்சி, சுருக்கமாக சொல்லி பலவற்றை விட்டு விடுகிறேன்.

பாசுரத்தைப் படித்துப் பாருங்கள்.

நாக்கில் தேன் தித்திக்கும். மனதுக்குள் எங்கேயோ சில அழுக்குகள் விலகுவது தெரியும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_97.html

திருக்குறள் - சொற்குற்றம் - சீர்மை சிறப்பொடு நீங்கும்

திருக்குறள்  - சொற்குற்றம்  - சீர்மை சிறப்பொடு நீங்கும்


நல்ல  பெயர் எடுப்பது என்பது மிகக் கடினமான செயல். அப்படி முயற்சி செய்து நல்ல பெயர் எடுத்தாலும், அதை கட்டிக் காப்பது அதனினும் கடினமான ஒன்று.

அப்படி முயன்று பெற்ற நல்ல பெயரும் புகழும், பயன் இல்லாத சொற்களை சொல்வதனால் , அப்படி பேசுபவர்களை விட்டு நீங்கும் என்கிறார் வள்ளுவப் பேராசான்.

பாடல்

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இல
நீர்மை உடையார் சொலின்

பொருள்

சீர்மை  = மேன்மை, உயர்வு

சிறப்பொடு = சிறப்பான பெயர், புகழ், மதிப்பு

நீங்கும் = ஒருவரை விட்டு நீங்கும். எப்போது என்றால்

பயன்இல = பயன் இல்லாதவற்றை

நீர்மை = நீரின் தன்மை

உடையார் = உடையவர்

சொலின் = சொன்னால்

சீரும் சிறப்பும் போய் விடும் என்கிறார்.

அப்படி என்றால் நல்ல பெயர் எடுக்க வேண்டும், எடுத்த பெயரை காக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

பயன் இல்லாத சொற்களை பேசக் கூடாது என்பது தெரிகிறது அல்லவா.

சரி, அது என்ன நீர்மை உடையார்?

நீர்மை என்ற சொல்லுக்கு பல பொருள் சொல்லுகிறார்கள்.

நீர் இன்றி அமையாது உலகு என்று சொல்லுவார்கள். நீர் அவ்வளவு உயர்ந்தது. இன்று கூட வெளிக் கிரகங்களில் உயிரினங்கள் இருக்கிறதா என்று ஆராயும் போது , முதலில் அங்கே நீர் இருக்கிறதா என்று ஆராய்கிறார்கள்.

நீர் இருந்தால் உயிரினம் இருக்கும் என்பது ஒரு எதிர்பார்ப்பு.

நீர் உயிர் காப்பது.

நீர்மை உடையார் என்றால், உயிர் காப்பதைப் போன்று அருள் உள்ளம் கொண்டவர்கள், பெரியவர்கள், சான்றோர் என்று பொருள்.



நைவாய எம்மேபோல் நாண்மதியே நீயிந்நாள்,
மைவான் இருளகற்றாய் மாழாந்துதேம்புதியால்,
ஐவாய் அரவணைமே லாழிப்பெருமானார்,
மெய்வாசகம் கேட்டுன் மெய்ந்நீர்மை தோற்றாயே.

என்று பிரபந்தம் பேசும்.

நிலவே, உன் உயரிய தன்மையை இழந்து விட்டாயா என்று கேட்கிறது அந்தப் பாசுரம்.

பயன் தரக்கூடியவற்றை எப்படி பேசுவது?

அதற்கு முதலில் பயன் தரக்கூடியவற்றை படிக்க வேண்டும். கேட்க வேண்டும்.

எது உள்ளே போகிறதோ, அது தானே வெளியே வரும்.

அரட்டைகளும், நையாண்டிகளும், துணுக்குகளும்,  பொய் செய்திகளும் உள்ளே போனால், அதுதானே வரும்.

நல்லவற்றை உள்ளே அனுப்புங்கள்.

கிழியும்படியடற் குன்றெறிந்தோன் கவிகேட்டுருகி
யிழியுங் கவிகற்றிடாதிருப்பீரெரி வாய்நரகக்
குழியுந்துயரும் விடாய்ப்படக் கூற்றுவனூர்க்குச் செல்லும்
வழியுந் துயரும் பகரீர் பகரீர் மறந்தவர்க்கே.

(கந்தரலங்காரம்-56)

என்பார் அருணகிரிநாதர்.

"இழியும் கவி கற்றிடாதிருப்பீர் "...மோசமான கவிதைகளை கற்காமல் இருங்கள் என்கிறார்.

கண்டதையும் படிக்கக் கூடாது.



நல்லதைப் படித்தால், நல்ல சிந்தனை வரும்.

நல்ல சிந்தனை வந்தால், நல்ல சொல் வரும்.

நல்ல சொல் வந்தால், சீரும் சிறப்பும் தானே வந்து சேரும்.

குப்பைகளை படிப்பதை நிறுத்த வேண்டும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_23.html


Thursday, August 22, 2019

திருக்குறள் - சொற்குற்றம் - பாரித்து உரைக்கும் உரை

திருக்குறள் - சொற்குற்றம் - பாரித்து உரைக்கும் உரை 


சிலபேர் ஒண்ணும் இல்லாததை ஏதோ பெரிய விஷயம் போல விரித்து விலாவாரியாக சொல்லுவார்கள்.

முதலில், பயனில்லாத சொல்லை சொல்லவே கூடாது.  அதையும், விரித்து, பெரிதாக்கி சொல்லுவது அதனினும் கொடுமை.

இப்போது வரும் டிவி சேரியல்களைப் பார்த்தால் தெரியும்.

முதலில் அதில் ஒரு கருத்தும் இருக்காது. ஒன்றும் இல்லாத அந்த கருத்தை 300 அல்லது 400 வாரமாக இழுத்துக் கொண்டே போவார்கள். கொடுமையான விஷயம்.

செய்தித்தாள்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவன் ஒரு கெடுதல் செய்தான் என்றால் அதை விலாவாரியாக விளக்குகிறார்கள்.

ஒரு பெண்ணை சிலர் கெடுத்து விட்டார்கள் என்றால், அதை பக்கம் பக்கமாக விளக்குகிறார்கள்.

எதற்கு?

பெண்ணின் மேல் அமிலம் வீசிவிட்டார்கள், வெட்டி விட்டார்கள், யாரையோ யாரோ கொலை செய்து விட்டார்கள் என்றால் எப்படி செய்தார்கள் என்று தத்ரூபகமாக விளக்குகிறார்கள்.

இப்படி எல்லாம் செய்யக் கூடாது என்கிறது குறள்.

ஒருவன் பேசுவதை வைத்து ஒருவன் நல்லவனா அல்லது கெட்டவனா என்று அறிந்து கொள்ளலாம் என்கிறார்.

யாராவது உங்களிடம் எதையாவது பேசுகிறார்கள் என்றால் கூர்ந்து கவனியுங்கள். அது எந்த விதத்தில் உங்களுக்கு பயன் தரும் என்றும் அதை அவர்கள் எவ்வளவு விரிவாக சொல்கிறார்கள் என்று.

வள வள என்று சொல்லிக் கொண்டே போனால், சொல்பவர் சரி இல்லை என்று குறித்துக் கொள்ளுங்கள்.

பொதுவாக இந்த புரணி பேசுபவர்கள், புறம் சொல்லுபவர்கள், போட்டுக் கொடுப்பவர்கள், வஞ்சனை செய்பவர்கள், பொய் சொல்பவர்கள் போன்றவர்கள்தான்  பெரிதாக பேசிக் கொண்டே போவார்கள்.


மௌனம் , ஞான வரம்பு  என்பது தமிழ் கோட்பாடு.

சில அரசியல்வாதிகள் பேசுவதைக் கேட்டால் இது புரியும். ஒன்றும் இல்லாததை ஒரு மணி நேரம்  பேசிக் கொண்டு இருப்பார்கள். அப்படி பேசுபவர்கள்  நல்லவர்கள் இல்லை என்பதை அவர்கள் பேச்சே காட்டிக் கொடுத்துவிடும்  என்கிறார் வள்ளுவர்.


பாடல்

நயனிலன் என்பது சொல்லும் பயனில 
பாரித்து உரைக்கும் உரை


பொருள்


நயனிலன் = நயன் +  இலன். நயன் என்ற சொல்லுக்கு நீதி, நேர்மை, தர்மம், அறம் என்று பல பொருள் உள்ளது. இங்கே நல்லவன் இல்லை என்று நாம் எடுத்துக் கொள்ளலாம்.

 என்பது = என்பது

சொல்லும் = நமக்கு எடுத்துச் சொல்லும். எது எடுத்துச் சொல்லும் என்றால்

பயனில = பயன் இல்லாதவற்றை

பாரித்து = விரிவாக்கி

உரைக்கும்  = சொல்லும்

உரை = பேச்சு  (எழுத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்).

எவன் ஒருவன் பயனில்லாதவற்றை விரித்துச் சொல்லுகிறானோ, அவன் ஏதோ கெடுதல் செய்யப் போகிறான்   என்று அறிந்து கொள்ளவேண்டும்.

நாமும், பயனில்லாதவற்றை பேசுவதை தவிர்ப்பது நலம். முடியாவிட்டால், சுருக்கமாக சொல்லிவிட்டு நகர்ந்து விட வேண்டும்.


அடுத்தமுறை யாராவது, அல்லது ஊடகங்கள் டிவி, whatsapp , youtube , facebook , செய்தித்தாள்கள், தேவையில்லாதவற்றை விளக்கமாக சொல்லிக் கொண்டிருந்தால், சட்டென்று அந்த இடத்தை விட்டு விலகுங்கள்.

அது மட்டும் அல்ல, நீங்களும், பயனில்லாதவற்றை நீட்டி முழக்கி பேசாதீர்கள்.

செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_22.html