Wednesday, March 30, 2022

திருக்குறள் - நடுவு நிலைமை - தகுதி

திருக்குறள் - நடுவு நிலைமை - தகுதி 


செய்நன்றி அறிதலின் பின் நடுவு நிலைமை என்ற அதிகாரத்தை வைக்கிறார். அது ஏன் என்று முந்தைய ப்ளாகில் சிந்தித்தோம். 


நடுவு நிலையில் நிற்றல் என்ற ஒரு அறத்தை கடைபிடித்தால் போதும். மற்றதெல்லாம் தானாகவே வரும் என்கிறார் வள்ளுவர். 


அது எப்படி வரும் ?


முதலில் குறளைப் பார்ப்போம்.


பாடல் 


 தகுதி எனஒன்று நன்றே பகுதியால்

பாற்பட்டு ஒழுகப் பெறின்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_30.html


(pl click the above link to continue reading)


தகுதி = தகுதி 


எனஒன்று நன்றே = என்ற ஒன்று நன்று 


பகுதியால் = பகுதியால் 


பாற்பட்டு = அதன் பால் 


 ஒழுகப் பெறின் = ஒழுகப் பெறின் 


எதாவது புரிகிறதா? ஒன்றும் புரியாது. 


பரிமேலழகர் உரை இல்லை என்றால் இதை எல்லாம் புரிந்து கொள்ளவே முடியாது. 


"தகுதி" என்றால் இங்கே நடுவு நிலைமையில் நிற்கும் தகுதி என்கிறார். அது எப்படி சொல்ல முடியும்? தகுதி என்றால் நடுவு நிலைமை என்று எங்கே சொல்லி இருக்கிறது என்று கேட்டால் எங்கேயும் சொல்லவில்லை. இந்த அதிகாரம் நடுவு நிலைமை என்ற அதிகாரம், எனவே இங்கே தகுதி என்பது நடுவு நிலையில் நிற்கும் தகுதி என்று கொள்கிறார். 


அடுத்து, 


"என ஒன்று நன்றே" என்பதை சொற்களை மாற்றிப் போட்டு பொருள் கொள்கிறார். "ஒன்று நன்றே" என்பதை "நன்றே ஒன்று" என்று கொள்கிறார். அதாவது, அது ஒன்றுதான் நல்லது, அல்லது உயர்ந்தது அல்லது சிறந்தது என்று கொள்ள வேண்டும் என்கிறார். 


அடுத்து, 


"பாற்பட்டு" என்றால் அதன் பால் ஒழுகி என்று பொருள். எதன் பால்?  உறவு, பகை, நொதுமல் என்ற மூன்றின் தன்மை அறிந்து அதன் பால் ஒழுகுதல் என்கிறார்.


"ஒழுகப் பெறின்" என்றால் அப்படி அந்த மூவருள்ளும் நடுவு நிலைமையாக இருக்க முடியுமானால் என்று அர்த்தம். 


பெறின் என்றால் அது மிகக் கடினம் என்று கொள்ள வேண்டும். 


"நல்லா படித்தால் நிறைய மதிப்பெண் பெறலாம்" என்றால் என்ன அர்த்தம்? படிப்பது கடினம் என்று பொருள். 


செஞ்சால் நல்லது என்றால் செய்வது கடினம் என்று பொருள். 


"நடுவு நிலைமை என்ற ஒரு அறமே சிறந்தது, அது நட்பு, பகை, நொதுமல் என்ற மூன்று பகுதியுள் அதற்கு ஏற்ப நடக்க முடியுமானால்" 


என்று விரியும். 


அது இருக்கட்டும், நடுவு நிலைமை எப்படி சிறந்த அறமாகும்?

 

ஒருவன் நடுவு நிலைமையில் இருக்கிறான் என்றால், அவனுக்கு எது சரி, எது தவறு என்று தெரிந்திருக்க வேண்டும். 


அடுத்ததாக, உறவு, நட்பு, பகை என்பவை எல்லாம் தாண்டி எது சரியோ அதன் படி நிற்கும் மன உறுதி இருக்கும் அவனிடம். 


மூன்றாவதாக, அப்படி சரி தவறு தெரிந்து, சரியான பாதையில் செல்லும் மன உறுதி உள்ள ஒருவன் தன் வாழ்விலும் சரியான ஒன்றையே தேர்ந்து எடுத்து அதன் பால் செல்வான் அல்லவா? 


எனவே, நடுவு நிலைமை என்பது சிறந்த அறம் என்று தெரியும் என்கிறார். 


சந்தேகம் இருந்தால் அடுத்த ஒரு வாரத்துக்கு இதை கடைப்பிடித்து பாருங்கள். எவ்வளவு மாரம் உங்களில் வருகிறது என்று தெரியும். 




Tuesday, March 29, 2022

நளவெண்பா - கடவுளை எங்கே காணலாம் ?

நளவெண்பா -  கடவுளை எங்கே காணலாம் ?


முந்தைய ப்ளாகில் திருமாலை எங்கு காணலாம் என்று புகழேந்திப் புலவர் கூறினார். 


அதாவது,


மூலப் பழமறைக்கு முன்னேயும் காணலாம்

காலிக்குப் பின்னேயும் காணலாம் - மால்யானை

முந்தருளும் வேத முதலே எனஅழைப்ப

வந்தருளும் செந்தா மரை.


பழமையான வேதங்களுக்கு முன்னேயும் காணலாம். ஆநிரைகளுக்கு பின்னேயும் காணலாம், யாரைக் காணலாம் என்றால், "ஆதி மூலமே" என்று அலறிய யானைக்கு அன்று அருளிய திருவடிகளை என்றார். 


சரி, திருமாலை அங்கு காணலாம், சிவ பெருமானை எங்கு காணலாம் ?


அடுத்து சொல்கிறார், 


"நெறிகளின் உறைவிடமாக உள்ள, கையில் மானை ஏந்திய சிவனை எங்கு காணலாம் என்றால், திருநீறு அணிந்த அடியவர்களின் உள்ளத்தில்"


என்கிறார். 


பாடல் 


போதுவார் நீறணிந்து பொய்யாத ஐந்தெழுத்தை

ஓதுவார் உள்ளம் எனஉரைப்பார் - நீதியார்

பெம்மான் அமரர் பெருமான் ஒருமான்கை

அம்மான்நின் றாடும் அரங்கு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_29.html


(Pl click the above link to continue reading)



போதுவார் = எந்நேரமும் 


நீறணிந்து = திருநீற்றை தரித்து 


பொய்யாத ஐந்தெழுத்தை = பொய் இல்லாத 'நமச்சிவாய' என்ற ஐந்து எழுத்தை 


ஓதுவார் = தினம் பாராயணம் செய்வார் 


உள்ளம் எனஉரைப்பார்  = உள்ளத்தில் என்று சொல்லுவார்கள் 


நீதியார் = நெறிமுறைகள் நிறைந்த 


பெம்மான் = பெம்மான் 


அமரர் பெருமான் = தேவர்களின் தலைவன் 


ஒருமான்கை = ஒரு மானைக் கையில் கொண்ட 


அம்மான் = அந்த சிவன் 


நின் றாடும் அரங்கு. = நின்று ஆடும் அரங்கு 


கோவிலுக்கு எல்லாம் போக வேண்டாம். திருமாலும், சிவனும் கோவிலில் இல்லை என்கிறார். 


நாம் எங்கே கேட்கப் போகிறோம். அவர் பாட்டுக்கு சொல்லிவிட்டுப் போகட்டும். 




Monday, March 28, 2022

திருக்குறள் - நடுவு நிலைமை - முன்னுரை

திருக்குறள் - நடுவு நிலைமை - முன்னுரை 


கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறத்தல், இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணை நலம், புதல்வர்களைப் பெறுதல், விருந்தோம்பல், இனியவை கூறல், செய்நன்றி அறிதல் வரை சிந்தித்தோம்.


வீட்டுக்கு வரும் உறவினர்களிடம் இனியவை கூறினால் அவர்கள் நம்மிடம் அன்போடு இருப்பார்கள். நமக்கு உதவிகள் செய்வார்கள். அந்த உதவிகளை மறக்கக் கூடாது என்பதற்காக செய்நன்றி அறிதல் என்ற அதிகாரத்தை வைத்தார். 


அடுத்து என்ன?


நமக்கு பல நட்பும், சுற்றமும் இருக்கும். அவர்கள் செய்த நன்றியை மறக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் செய்யும் தவறுகளை கண்டிக்காமல் இருக்கக் கூடாது. எப்போதும் நீதியின் பால், அறத்தின் பால் நிற்க வேண்டும். வேண்டியவன், வேண்டாதவன், நமக்கு உதவி செய்தவன் என்றெல்லாம் பார்க்கக் கூடாது. எப்போதும் நடுவு நிலைமையாக இருக்க வேண்டும். 


நடுவு நிலைமை என்ன பெரிய அறமா? அது நீதிபதிகளுக்கு வேண்டுமானால் இருக்கட்டும் எல்லோருக்கும் அது தேவையா என்ற கேள்வி வரும். 


சிந்திப்போம். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_28.html


(pl click the above link to continue reading)



ஒரு வீட்டில் பெற்றோர் மற்றும் இரண்டு அல்லது மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் ஒரு பிள்ளைக்கு நல்ல சோறு, துணிமணி, தின்பண்டம் என்று கொடுக்கிறார்கள். மற்ற பிள்ளைகளுக்கு அவ்வாறு கொடுப்பதில்லை என்றால் அது நடவு நிலைமை பிறந்ழ்த ஒன்றாகத்தான் இருக்கும். 


அந்தக் கொடுமைகள் நமது நாட்டில் நிகழ்ந்து இருக்கிறது.  ஆண் பிள்ளைகளுக்கு நல்ல உணவு, உடை எல்லாம் இருக்கும். பெண் பிள்ளைகளுக்கு சரியான உணவு கூட கொடுப்பதில்லை. நடுவு நிலைமை தவறிய குற்றம் அது. 


ஒரு நீதிபதி தன்முன் குற்றம் சாட்டப்பட்டவர் தனக்கு வேண்டியவர் என்று அவருக்கு சாதமாக தீர்ப்பு சொல்லக் கூடாது. அது நடுவு நிலைமை பிறழ்ந்த குற்றம் 


மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஒரு அரசு, மக்களில் ஒரு சாராருக்கு நன்மையும், இன்னொரு சாராருக்கு தீமையும் செய்யுமானால், அதுவும் நடுவு நிலை பிறழ்ந்த குற்றமே. 


ஒரு வீட்டில், உறுப்பினர்களுக்கு இடையே வேறுபாடு வரலாம். வீட்டுக்கு பெரியவர், மூத்தவர் என்று ஒருவர் இருப்பார். அவர் நடுவு நிலைமை மாறாமல் தீர்புச் சொன்னால் அதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். 


அம்மாவுக்கும், மனைவிக்கும் நடுவில் கருத்து வேறுபாடு இருந்தால் அந்தக் கணவன்/மகன் நடுவு நிலை காக்க வேண்டும். இல்லை என்றால் குடும்பத்தில் குழப்பம் தான். 



ஊருக்கும் அப்படித்தான். நாட்டாமை, பஞ்சாயத்து தலைவர் என்று ஒருவர் இருந்தால், அவர் நடு நிலை மாறாமல் எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும். அவர் தவறினால், அந்த சமுதாயம் அழியும். 


இன்றும், நீதிபதிகளுக்கு ஏன் அவ்வளவு மரியாதை? நாட்டின் பிரதம மந்திரியாக இருந்தால் கூட நீதிக்கு கட்டுப் பட்டுதான் ஆக வேண்டும். 


ஆண்டியையும் அரசனையும் ஒரு தராசில் வைத்து நிருப்பது நீதி பரிபாலனம். 


நடுவு நிலை தவறும் இடத்தில் எல்லாம் அழிவு ஆரம்பமாகும். 


உலக அளவிலும் சரி. வீட்டு அளவிலும் சரி. நிர்வாகத்திலும் சரி. அதுதான் விதி. 


நடுவு நிலைமை என்பது பெரிய விஷயம். நாம் அதை சரியாக புரிந்து கொள்வதில்லை. பெரிதாக நினைப்பது இல்லை. 


அந்த நடுவு நிலைமையை பற்றிக் கூறுவது இந்த அதிகாரம். வேலை மெனகெட்டு ஒரு அதிகாரம் செய்கிறார் என்றால் அது எவ்வளவுவ் பெரிய விடயம் என்று புரிந்து கொள்ளளலாம். 


தொடருவோமா?





Sunday, March 27, 2022

சிவ ஞான போதம் - இரண்டாம் சூத்திரம் - ஆணை வழி

 சிவ ஞான போதம் - இரண்டாம் சூத்திரம் - ஆணை வழி 


இந்த பிறத்தல், இருத்தல், அழிதல் என்ற முத்தொழில் இருக்கிறதே, அதை யார் செய்கிறார்? 


பிரம்மா, விட்டுணு, உருத்திரன் என்று நாம் பெயர் வைத்து இருக்கிறோம். கடவுளுக்கு இது தான் வேலையா? ஏன் இதை அவர் செய்ய வேண்டும்? பேசாமல் இருந்து விடலாம்தானே? 


வேலை மெனக்கெட்டு தோற்றுவிப்பானேன், பின் அதை காப்பானேன், பின் அழிப்பானேன்? இது ஒரு வெட்டி வேலையாக தெரியவில்லையா?  


ஒரு குயவன் அவனே குடம் செய்து, அதை பாதுகாத்து பின் தூக்கிப் போட்டு உடைபானா? அது அறிவுள்ளவன் செய்யும் வேலையா? எந்த பெற்றோராவது தங்கள் பிள்ளைகளை கொல்வார்களா? பின் ஆண்டவன் மட்டும் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்?


அது மட்டும் அல்ல, காப்பதற்கு ஒருவர், அழிப்பதற்கு ஒருவர் என்றால் அவர்களுக்குள் சண்டை வராதா?  இவர் அழிக்க வேண்டும் என்பார், அவர் காக்க வேண்டும் என்பார். யார் வெல்வார்கள் இதில்? 


இதெல்லாம் ஒரு மாயை. 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_27.html


(Pl click the above link to continue reading)


அப்படி எல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது. தெரியவில்லை, புரியவில்லை என்றால் மாயை என்று சொல்லி தப்பித்து கொள்ளக் கூடாது என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. 


நாம் தெருவில் வண்டி ஓட்டிக் கொண்டு போகிறோம். காவல் அதிகாரி நம்மை நிறுத்தி "ஏன் வண்டியை வேகமாய் ஒட்டினாய்? அபராதம் கட்டு "என்கிறார். "நீ யார் அதைக் கேட்க?  என் வண்டி, நான் வரி கட்டுகிறேன், எப்படி வேண்டுமானாலும் ஓட்டுவேன்" என்று சொன்னால் என்ன சொல்வார்?


நான் சாலை விதிகளை மக்கள் ஒழுங்காக கடை பிடிக்க நியமிக்கப் பட்டவன் என்பார். 


உன்னை யார் நியமித்தது என்றால் , உயர் அதிகாரியின் பெயரைச் சொல்வார்.


அவரைக் கேட்டால் அவருக்கு மேலே உள்ள ஒருவரைச் சொல்வார். இப்படியே போனால், முதல் மந்திரி, குடியரசு தலைவர், பிரதம மந்திரி என்று போகும். அவர்களை கேட்டால் "இல்லையே நான் இவரை நியமிக்கவில்லையே" என்பார்கள். 


பின் யார் தான் நியமித்தது என்றால் "இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்".  அதன் கீழ் உண்டாகிய பல சட்டங்கள், சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்த தோற்றுவிக்கப்பட அமைப்புகள், பாராளுமன்றம், சட்ட சபை, நீதி மன்றம்,  காவல் துறை எல்லாம் அந்த அரசியல் அமைப்பு சட்டத்தில் இருந்து வருவது. 


அது ஒரு புத்தகம் அவ்வளவு தான். 


ஆனால், அந்த ஒரு புத்தகம் ஒரு நாட்டை நிர்வாகம் பண்ணுகிறது.


அது போல, இறைவனின் ஆணையில், சந்நிதியில் இந்த பிறப்பு, இறப்பு, இருப்பு என்பதெல்லாம் நிகழ்கின்றன. 


அவர் நேரடியாக ஒன்றும் செய்ய மாட்டார். ஆனால் செயல் நிகழும். 


இன்னொரு உதாரணம் பார்ப்போம். 


காலையில் சூரியன் எழுகிறது. 


வெளிச்சம் வருகிறது. சூடு வருகிறது. நீர் ஆவியாகிறது. செடி கொடிகள் வளர்கின்றன. புழு பூச்சிகள் சில இறக்கின்றன.


சூரியனுக்கு இதெல்லாம் வேலையா? இன்னைக்கு அந்த குளத்தை வற்றச் செய்ய வேண்டும், இந்த செடியை வளர்க்க வேண்டும், இந்த பூச்சியை கொல்ல வேண்டும் என்று அது நினைத்து வருவது இல்லை. ஆனால், அதன் சந்நிதியில் இவை நிகழ்கின்றன. 


இன்னொரு உதாரணம் பார்ப்போம்.


ஒரு அலுவலகம். அங்கே வேலை பார்ப்பவர்கள் சும்மா அரட்டை அடித்துக் கொண்டு, சிரித்துக் கொண்டு இருக்கிறார்கள். முதலாளி வருகிறார். எல்லோரும் கப் சிப் என்று அவரவர் இடத்துக்குச் சென்று தங்கள் வேலையை செய்யத் தொடங்கி விடுகிறார்கள். முதலாளி ஒன்றும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் அவருக்கு அந்த வேலையெல்லாம் நடப்பதே கூடத் தெரியாது. ஆனால், அவர் முன்னிலையில் அவை ஒழுங்காக நடக்கின்றன. 


சூரியன் செய்வது, பிரதம மந்திரி செய்வது, முதலாளி செய்வது என்பதெல்லாம் ஒரு மாயை. ஒரு பிரமை. ஆனால் அங்கே நிகழ்கிறது அல்லவா?


அது போல் இந்த உலகம் என்று அடுத்த சூத்திரம் சொல்ல வருகிறது. 


அது என்ன என்று நாளை பார்ப்போம்.


(பின் குறிப்பு - சற்று நீண்டு விடுகிறது. சுருக்கிச் சொன்னால் புரியாமல் போய் விடலாம். நீட்டிச் சொன்னால் ஒரு அலுப்பு வந்து விடலாம். எனவே முடிந்த வரை பிரித்து பிரித்து பொருள் சொல்கிறேன். 


உங்கள் எண்ணம் என்ன?)


Thursday, March 24, 2022

திருக்குறள் - செய்நன்றி அறிதல் - தொகுப்புரை

திருக்குறள் - செய்நன்றி அறிதல் - தொகுப்புரை 


இதுவரை செய்நன்றி அறிதல் பற்றி சிந்தித்தோம்.


என்ன படித்தோம்?  எவ்வளவு நினைவில் நிற்கிறது?  என்ன சொல் வந்தார்? நமக்கு என்ன புரிந்தது? 


இவற்றை ஒரு தொகுப்பு உரையாக பார்ப்போம். 


திருக்குறள் மொத்தமுமே ஒரு அறநூல். அறத்தை இரண்டாகப் பிரித்துக் கொள்கிறார். 


இல்லறம், துறவறம் என்று. 


முதலில் இல்லறத்தை எடுத்துக் கொள்கிறார். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_24.html



(Please click the above link to continue reading)


அதில், முதலில் உலகம் தோன்றக் காரணமான இறைவனை வாழ்த்தி கடவுள் வாழ்த்துப் பாடினார். 


பின், இல்லறமும், துறவறமும் இனிது நடக்க வேண்டும் என்றால் மழை வேண்டும். மழை இல்லை என்றால் சிறப்பொடு, பூசனை செல்லாது என்பதால் அனைத்து அறங்களுக்கும் ஆதாரமான மழை பற்றி வான் சிறப்பு கூறினார். 


பின், அறங்கள் நிலைக்க வேண்டும் என்றால் அதை யாராவது உள்ளபடி எடுத்துச் சொல்ல வேண்டும். அவ்வாறான முனிவர்களை சிறப்பித்து "நீத்தார் பெருமை" பற்றிக் கூறினார். 


பின், அந்த நீத்தார் கூறும் அறத்தின் வலிமை பற்றி "அறம் வலியுறுத்தல்" என்று கூறினார். அறம் என்பது இம்மை, மறுமை, வீடு பேறு என்ற மூன்றிற்கும் வழி கோலும் என்பதால் அதன் சிறப்பு பற்றிக் கூறினார். 


பின்,  இரண்டு அறங்களில் இல்லறம் முதலில் வருவதால், அதன் சிறப்பு பற்றி "இல் வாழ்க்கை" என்ற அதிகாரத்தில் கூறினார். 


பின், இல்லறம் நடத்த மனைவியின் துணை இன்றி முடியாது என்பதால், "வாழ்க்கை துணை நலம்" என்று மனைவியின் பெருமை பற்றிக் கூறினார். 


பின், கணவனும் மனைவியும் சேர்ந்து நடத்தும் இல்லறத்தின் பலனாக அவர்கள் பெறும் பிள்ளைகளின் சிறப்பு கூற "புதல்வரைப் பெறுதல்" என்ற அதிகாரம் கூறினார். 


பின், கணவன், மனைவி, பிள்ளைகள் என்ற இல்லறத்தின் அடி நாதமான அன்பு பற்றி  "அன்புடைமை" பற்றிக் கூறினார். 


பின், இல்லறம் என்பது கணவன், மனைவி மற்றும் பிள்ளைகள் மட்டும் அல்ல. அந்த அன்பு வீடு தாண்டியும் விரியும் , விரிய வேண்டும் என்பதால் என்பதால் "விருந்தோம்பல்" பற்றிக் கூறினார். 


பின், விருந்தோம்பலை சிறப்பாகச் செய்ய இனிய சொற்கள் அவசியம் என்பதால் "இனியவை கூறல்" என்ற அதிகாரம் செய்தார். 


பின், இனியவை கூறி, உறவினர் தம்பால் வந்து தமக்கு ஒரு உதவி செய்தால், அதை மறக்கக் கூடாது என்பதைச் சொல்ல "செய்நன்றி அறிதல்" என்ற அதிகாரம் செய்தார். 


அந்த செய்நன்றஅறிதல் என்ற அதிகாரத்தில் ,


செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்றல் அரிது.


காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது.


பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

நன்மை கடலிற் பெரிது


என்ற முதல் மூன்று குறள்களில் செய்யாமல் செய்த உதவி, காலத்தால் செய்த உதவி, பயன் கருதாமல் செய்த உதவி என்று உதவியின் சிறப்பு பற்றிக் கூறினார். 


அடுத்தது, 


தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன்தெரி வார்.


உதவி வரைத்தன்று உதவி உதவி

செயப்பட்டார் சால்பின் வரைத்து.


என்ற அடுத்த இரண்டு குறள்களில் மேலே சொன்ன மூன்று மட்டும் அல்ல, உதவியின் தரம் அதைப் பெற்றுக் கொண்டவரைப் பொருத்தும் சிறக்கும் என்று கூறினார். 


அடுத்தது, 


மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க

துன்பத்துள் துப்பாயார் நட்பு.


செய்நன்றி அறிதலின் இம்மை, மறுமை பலன்கள் பற்றிக் கூறினார்.


 அடுத்தது, 


எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்

விழுமம் துடைத்தவர் நட்பு.


நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று.


என்ற இரண்டு குறள்களில் நன்றி மறப்பதும், மறவாமை பற்றியும் கூறினார். 


அடுத்தது, 


கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த

ஒன்றுநன்று உள்ளக் கெடும்.



எப்படி நன்றியை மறக்கக் கூடாதோ, அதே போல் நல்லது அல்லாததை மறப்பது பற்றிக் கூறினார். 



அடுத்த கடைசிக் குறளில், 


எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு.


நன்றி கொன்ற பாவம் பற்றி கூறி முடிக்கிறார். 


இந்த தொகுப்பு இது வரை படித்ததை ஒரு முறை நினைவு படுத்தும் முயற்சி. 


உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.




Wednesday, March 23, 2022

சிவ ஞான போதம் - முதல் சூத்திரம்

 சிவ ஞான போதம் - முதல் சூத்திரம் 


என்ன முதல் சூத்திரம் இன்னும் முடியவில்லையா என்று கேட்கிறீர்களா? 


எவ்வளவோ இருக்கிறது அதற்குள். 


இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். ரொம்ப போர் அடித்தால் சொல்லுங்கள். நிறுத்திவிட்டு அடுத்த சூத்திரத்துக்கு போவோம். 


இந்த உலகம் எப்படி படைக்கப்பட்டது, யார் படைத்தார்கள், ஏன் படைக்கப் பட்டது அல்லது படைக்கப் படவே இல்லை, அதுவே அப்படித்தான் இருந்ததா என்றெல்லாம் நம் முன்னவர்கள் மிக மிக ஆழமாக யோசித்து இருக்கிறார்கள். 


பல்வேறு கொள்கைகள், சிந்தாந்தங்கள், வாதங்கள் எல்லாம் இருக்கின்றன.  அவற்றின் சாரம் என்ன என்று மட்டும் பார்ப்போம்.


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_23.html


(click the above link to continue reading)


முதல் வாதம். மண்ணில் இருந்து பானை வருகிறது. பானை தானே வருமா? யாரோ ஒருவர் அந்த மண்ணை எடுத்து குழைத்து, சக்கரத்தில் இட்டு சுழற்றி, அழகான பானை செய்ய வேண்டும் அல்லவா?  பானை செய்ய மண் வேண்டும். மண் இல்லாமல் குயவன் என்ன முயன்றாலும் பானை செய்ய முடியாது. வெறும் மண் மட்டும் பானையாக முடியாது.  ஒரு பொருள் உண்டாவதற்கு இரண்டு காரணம் வேண்டும் என்று சொல்கிறார்கள். 


முதலாவது உபாதான கரணம். மற்றொன்று நிமித்த காரணம். 


பானை உண்டாவதற்கு மண் உபாதான காரணம். குயவன் நிமித்த காரணம். இரண்டும் இல்லாமல் பானை உண்டாகாது. 


அது போல, இந்த உலகம் உண்டாக அணுக்கள் அல்லது அடிப்படையான பொருள் ஒன்று வேண்டும். அதைக் கொண்டு இந்த உலகை ஒருவர் (குயவன் மாதிரி) செய்ய வேண்டும்.  


இதற்கு ஆரம்ப வாதம் என்று பெயர். இதைஅசத் காரிய வாதம் என்றும் சொல்லுவார்கள். 


சத் என்றால் பொருள். அசத் என்றால் பொருள் இல்லாதது. மண்ணுக்குள் பானை இல்லை. இல்லாத பானையை மண்ணில் இருந்து குயவனார் கொண்டு வருவதைப் போல இல்லாத உலகை, இறைவன் அணுக்களைக் கொண்டு செய்தான் என்று ஒரு வாதம் இருக்கிறது. 


இது சரியல்ல என்று மற்றொரு வாதம் இருக்கிறது. 


அது என்ன என்பதை நாளை பார்ப்போம்.

Tuesday, March 22, 2022

திருக்குறள் - செய்நன்றி அறிதல் - உய்வில்லை

திருக்குறள் - செய்நன்றி அறிதல் - உய்வில்லை 


செய்நன்றி அறிதலின் முக்கியம், அதன் இம்மை மறுமை பயன்கள், அதை எப்படிச் செய்வது என்றெல்லாம் சொல்லித் தந்தார்.


இனி, கடைசிக் குறள்.


இந்த செய்நன்றி மறந்தால் என்ன ஆகும். எனக்கு ஒருவர் செய்த நன்றியை மறந்தால் அது ஒண்ணும் சட்டப்படி குற்றம் இல்லையே? அதற்காக தண்டனை ஒன்றும் தர முடியாதே. அப்படி என்றால் எதற்கு இவ்வளவு துன்பப் படவேண்டும்? 


ஏதோ அவரால முடிந்தது செய்தார். முடியலேனா செய்யவா போறார் என்று துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு போக வேண்டியது தானே? 


அப்படி அல்ல.


எந்த பாவத்தைச் செய்தாலும் அதற்கு ஒரு கழுவாய், பிரயாசித்தம் உண்டு. ஆனால், ஒருவர் செய்த நன்றியை மறந்தவருக்கு எந்தக் காலத்திலும் பிர்யாசித்தமே கிடையாது என்கிறது வள்ளுவம். 



பாடல் 


எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_22.html


(Please click the above link to continue reading)



எந்நன்றி  = எந்தப் பெரிய அறத்தை 


கொன்றார்க்கும் = சிதைதவர்களுக்கும் 


உய்வுண்டாம் = பிரயாசித்தம் உண்டு 


உய்வில்லை = தப்பிக்க வழியே இல்லை 


செய்ந்நன்றி = ஒருவர் பெற்ற உதவியை 


கொன்ற மகற்கு = சிதைத்தவனுக்கு 


இதில் பரிமேலழகர் மிக நுட்பமாக உரை செய்கிறார். 


"எந்நன்றி" என்ற சொல்லுக்கு பெரிய அறங்கள் என்று சொல்கிறார். நன்றி என்ற சொல்லுக்கு அறம் என்று பொருள் கொள்கிறார். எவ்வளவு பெரிய அறம் பிழைத்த காரியங்களை செய்தாலும், அதாவது எவ்வளவு பெரிய பாவத்தை செய்தாலும் என்று பொருள் சொல்கிறார். 


"செய் நன்றி கொன்ற மகற்கு" என்ற இடத்தில் ஒருவன் செய்த நன்றியை சிதைத்த மகனுக்கு என்கிறார். மறத்தல் என்ற பொருளில் கூறவில்லை. 



மறப்பது பெரிய குற்றம் இல்லை. ஆனால், நமக்கு உதவி செய்தவனுக்கு தீமை செய்யலாமா? அது பெரிய குற்றம் இல்லையா? யார் நமக்கு உதவி செய்தார்கள், யார் செய்யவில்லை என்று எப்படித் தெரியும்? அவர்கள் செய்த உதவியை மறவாமல் மனதில் நிறுத்தி வைத்து இருந்தால் அல்லவா அவர்களுக்கு தீமை செய்யாமல் இருக்க முடியும்? எனவே, செய் நன்றி மறக்கக் கூடாது. 


மற்றவர்களுக்கு தீமை செய்யலாமா என்றால் அதுவும் கூடாது. ஒருவேளை செய்து விட்டால், அதற்கு ஒரு பிரயாசித்தம் உண்டு. உதவி செய்தவனுக்கு தீமை செய்தால் பிரயாசித்தமே கிடையாது. 


ஏன் அப்படிச் சொன்னார்?


ஒருவற்கு ஒருவர் செய்த நன்றியை மறந்து செயல்படத் தொடங்கினால், சமுதாயமே ஒரு காட்டு மிராண்டி கும்பலாகி விடும். ஒரு சமுதாயப் பிடிப்பு இருக்காது. நட்பு, உறவு என்பதெல்லாம் இல்லாமல் போகும். மற்றவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற சிந்தனையே அந்த சமுதாயத்தில் இருக்காது. வாழ்கை நரகமாகி விடும். 


மாறாக, ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து, அப்படி உதவி பெற்றுக் கொண்டவர் அதை வாழ்நாள் எல்லாம் நினைவில் நிறுத்தி நன்றி உடையவராக இருந்தால், அந்த சமுதாயம் எப்படி இருக்கும் ? அது ஒரு உன்னத சமுதாயமாக இருக்கும் அல்லவா?


எனவே செய் நன்றியை ஒருபோதும் மறக்கக் கூடாது.